தலைப்பு

வியாழன், 23 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 8 | கருணாமூர்த்தி


1968ஆம் ஆண்டு பகவான் பாபா முதலாவது அகில உலக சாயி மாநாட்டை மும்பையில் (பவன்ஸ் கேம்பஸில்) நடத்தினார். அதற்கான சுற்றறிக்கைகள் எல்லா சமிதிகளையும் சென்றடைந்தன. எங்கள் திருச்சி சமிதிக்கும் ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில் மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும் என்றும், அதில் கலந்துகொள்ள ஒவ்வொரு சமிதியில் இருந்தும், ஒரு தலைவர், ஒரு செயலாளர் ஆக  இருவர் மட்டும் வரலாம் என்றும்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எங்கள் சமிதியைப் பொறுத்தவரை ஒரு தலைவர், ஒரு உப-தலைவர், ஒரு செயலாளர் தவிர இரண்டு இணைச் செயலாளர்கள் என்ற செயல்முறை இருந்ததால், குழப்பம் ஏற்பட்டது. இரு இணைச் செயலாளர்கள் என்பது நானும் மற்றொருவரும். பிரபல கிளாரினெட் வித்வான் ஏ.கே.சி. நடராஜன் செயலாளராகப் பணியாற்றினார். அவரைப் பொறுத்தவரை மாநாடு துவக்கத்தின் போது, கிளாரினெட் இசை வழங்க முன்பே சுவாமியால் தேர்வு செய்யப்பட்டு விட்டதால், சமிதியின் காரியதரிசி என்ற முறையில் அவருடைய அனுமதிப் படிவத்தை அவர் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆதலால் அகில உலக சாயி மகாநாட்டில் பங்குகொள்ள வேறொருவர் செல்ல முடியாத நிலைமை உருவாயிற்று.

மாநாட்டில் பங்கேற்க நான் விருப்பம் தெரிவித்தும், எனக்கு அனுமதி வழங்க மாவட்டத் தலைவர் மறுத்துவிட்டார். மேல்முறையீடு என்ற விதத்தில், மாநிலத் தலைவருக்கு எழுதிக் கேட்டோம் .அவரும் உதவி செய்வதாக இல்லை என்பதால் திரு. கஸ்தூரிக்குக் கடிதம் எழுதிக் கேட்டோம். சுற்றறிக்கையின் விதிமுறைகளின்படி தான் எல்லாம் பின்பற்றப்பட வேண்டும் என்று கஸ்தூரி எழுதிவிட்டார். என்ன ஆனாலும் சரி, பகவான் விட்ட வழி என்று மும்பைக்குப் பயணமானேன்.

எனக்கு முன்பே சென்று மும்பையில் தங்கியிருந்த, திரு. ஏ.கே.சி. நடராஜனை நான் அங்கு சென்றதும் சந்தித்தேன். எனது மற்ற ஓரிரு நண்பர்களும் வந்திருந்ததால், திரு. நடராஜன் உட்பட எல்லோரும், சுவாமியைத் தரிசிக்க அந்தேரி சென்றோம் .அதற்குச் சில தினங்கள் முன்பாகதான், அந்தேரி பகுதியில் உள்ள ‘சத்யம்’ கட்டிடத்தைத் திறப்புவிழாச் செய்து, சுவாமி அதில் தங்கியிருந்தார். நாங்கள் அங்கு சென்றபோது, அப்போதைய மத்திய அரசின் உதவிப் பிரதமராக இருந்த திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள் வந்திருந்தார். அவருடன் சுவாமி தனித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, நாங்கள் வெளியே நின்றுகொண்டிருந்தோம்.

சுவாமிக்கு திரு. மொரார்ஜி  அவர்கள் குடை பிடித்தபடி பின்னே வர, சுவாமி புன்முறுவலித்தவாறு, வெளியே வந்தார். எங்களைப் பார்த்ததும் சுவாமி மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, "திருச்சி இங்கு வந்துவிட்டதா?" என்று கேட்டபடி, திரு. மொரார்ஜி தேசாய்க்கு எங்களை, 'திருச்சி பக்தர்கள்' என்று அறிமுகப்படுத்தினார். உதவிப் பிரதமரும் எங்களுடன் கைகுலுக்கி வாழ்த்தினார்.

சிறிது நேரத்தில் திரு.மொரார்ஜி அவர்கள் விடைபெற்றுச் சென்றுவிட்டதால், சுவாமி  என்னையும், ஏ.கே.சி.யையும்  புதிதாகத் திறப்புவிழா செய்திட்ட  ‘சத்யம்' கட்டடத்திற்குள் அழைத்துச் சென்று, மூன்று அடுக்குகளையும் காண்பித்து, பல விவரங்களைச் சொன்னார். ஓர் அடுக்கில் தொங்கவிடப்பட்டிருந்த வெள்ளித் தொட்டிலில் ஏறி உட்கார்ந்துகொண்ட சுவாமி, என்னை ஒருபுறமும், ஏ.கே.சி.யை மற்றொரு புறமும் தொட்டிலைப் பிடித்து ஆட்டும்படிச் சொன்னார். ஏ.கே.சி. என்னைவிட உயரமும், வலுவும் உள்ளவர். நான் சாதாரண வடிவுள்ளவன். தொட்டிலை ஆட்டும்போது, ஏ.கே.சி. பிடித்துக்கொண்டிருக்கும் பக்கம் வேகமாகச் செல்வதும், என் பக்கம் கொஞ்சம் தொய்வு ஏற்படுவதாயும் இருந்ததால், சுவாமி  என்னைக் கிண்டல் செய்தபடியே, என்னிடம் ,"எனக்குத் தெரியாது, என் கால் கட்டைவிரல் கட்டடத்தின் மேல்சுவரில் இடித்தால்தான் நான் இறங்குவேன்,  உம்... ஆட்டு" என்றார். என் பலம் முழுவதும் கூட்டி வெகுவாக முயற்சித்து வேகமாக ஆட்டினேன். அப்பா! முடிவாக சுவாமியின் கால் கட்டைவிரல்கள் மேல்சுவரில் தட்டின. எனக்கு மார்பு இறைப்பு அடங்கச் சில நிமிடங்கள் ஆகின! சுவாமி இறங்கினார். அவரை வைத்து ஊஞ்சலை ஆட்டும் பாக்கியம் ஏ.கே.சி.க்கும், எனக்கும் கிட்டியதை எண்ணிப் பூரித்தோம். என்னை பொறுத்தவரை, நான் ஏழேழு ஜென்மங்களில் செய்த தவம், கடவுளை ஊஞ்சலில் ஆட்டியது!

சுவாமியுடன் நானும் ஏ.கே.சி.யும் கீழே வந்தோம். வெளியே காத்திருந்த நண்பர்களுட்பட யாவருக்கும் ஐஸ்கிரீம் வழங்கச் சொன்னார் பகவான். அந்தச் சமயத்தில்தான், நான் மகாநாட்டில் பங்குகொள்ள முடியாத சூழ்நிலை பற்றிச் சுவாமியிடம் தெரிவித்தோம். சுவாமி அதில் ஏதும் சிரமம் இல்லை என்றும், மறுதினம் மொரார்ஜி பேசவிருக்கும் பொதுக்கூட்டத்தில் தம்மைப் பார்க்கும் படியும், தாம் ஆவன செய்வதாகவும் வாக்களித்தார். சுவாமி அவ்வாறு சொன்ன நாளுக்கு மறுதினம்தான், அகில உலக சாய் மகாநாடு ஆரம்ப தினம்.

பிறகு எங்கள் எல்லோரையும் ஒரு ஜீப்பில் ஏறச்செய்து, மும்பையின் முக்கியப் பகுதிக்கு யாவரும் செல்ல சுவாமி ஏற்பாடுசெய்தார். எவ்வளவு கருணை பாருங்கள்! அவருக்கு இருக்கும் மகோன்னதமான அலுவல்களுக்கிடையே, இந்த மாதிரி சாதாரண காரியங்களில்கூட மிகுந்த அக்கறை காட்டி, எங்களைப் போன்ற மிகச்சாதாரண மனிதர்களிடமும் அளவற்ற அன்பினைப் பொழியும்  மகானுபாவன் நமது சுவாமி!

மறுதினம் திரு. மொரார்ஜி தேசாய் பேசும் பொதுக்கூட்ட மைதானத்திற்கு நான் சென்றேன். நான் செல்லுமுன்பே, பல ஆயிரம் பேர் அங்கு கூடிவிட்டதால், பகவான் இருந்த மேடைக்கு வெகுதூரத்தில் நான் நிற்கும்படி ஆகிவிட்டது. அந்தக் கூட்டத்தில் பகவானை எங்ஙனம் சந்திப்பது? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 'சரி, சாயி மகாநாட்டில் பங்குபெற முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது; மும்பையி்ல் வேறு சில இடங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட வேண்டியதுதான்' என்று தீர்மானித்தேன். திடீரென்று ஒரு சபலம்! பொதுக்கூட்டம் முடிந்ததும் சுவாமி நான் இருக்கும் பகுதி வழியாகத்தான் காரில் வரவேண்டும் என்று பலர் சொன்னார்கள். 'ஆம்! அப்போது சுவாமியை எப்படியாவது பார்த்து மாநாட்டில் பங்கு கொள்வதற்கான வழிமுறைகளைக் கேட்டுப் பெறலாம் என்று காத்திருந்தேன். பொதுக்கூட்டம் முடிந்து 20 நிமிடங்கள் ஆகியும் சுவாமியின் கார் அந்தப் பக்கம் வருவதாகத் தெரியவில்லை. பெருத்த ஏமாற்றம்! துக்கம் தொண்டையை அடைத்தது. கலைந்து கொண்டிருக்கும் கூட்டப் பகுதியினூடே, அங்குமிங்குமாக முட்டி மோதி மேடையை நோக்கிப் போன நான், அங்கே இருந்தவர்களைக் கேட்டபோது ,எப்போதும் வெளியே போகும் வழியில் மிகுந்த ஜன நெருக்கமாதலால் பொதுக்கூட்ட அமைப்பாளர்கள் மேடைக்குப் பின்புறமாகப் பாதை உண்டாக்கிக் கொடுத்ததால், சுவாமி அவ்வழியே சென்று விட்டார் என்றார்கள். தலைமேல் இடி விழுந்தது போல் இருந்தது எனக்கு.

அன்று மாலை பவன்ஸ் கேம்பஸில், மாநாட்டில் பங்கு கொள்ள வந்திருந்தோருக்கு, அடையாள அட்டைகளும், மற்ற விவரங்கள் அடங்கிய புத்தகக் குறிப்பேடுகளும் தருவதாகச் சொன்னார்கள். நாலு பேரிடம் வழி கேட்டுத் தெரிந்துகொண்டு, பவன்ஸ் கேம்பஸ் வாயில்பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள வாயிற்காப்போன், அனுமதிச்சீட்டு உள்ளவர்களை மட்டும் உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான். என்னை வெளியிலேயே நிறுத்திவிட்டான். மேலும் அவனிடம் பலவாறாகப் பேசி, எப்படியாவது உள்ளே செல்ல அனுமதி கேட்கலாம் என்றால் எனக்கு மராட்டியோ, இந்தியோ தெரியாது; அவனுக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. தர்மசங்கடமான நிலைமை!

அந்தக் கேம்பஸின்  அமைப்பு, நான் இருக்கும் இடத்திலிருந்து அந்த காம்பவுண்டுக்குள் இருப்பவர்களை பார்க்கலாமே தவிர, நான் கூப்பிட்டு யாரும் வாயிற்பகுதிக்கு வர முடியாது. வாயிற்பகுதிக்கும், உள்ளே உள்ள கட்டடத்திற்கும் இடையே அவ்வளவு தூரம்! இடைப்பகுதி பூராவும் புல்வெளி. அந்தப் பகுதி மற்றும் கட்டடத் தரைப்பகுதிகளில், மாநாட்டுக்கு வந்திருக்கும் அந்தந்த சமிதி பிரதிநிதிகளுக்கு மேற்சொன்ன அடையாள அட்டைகளும் மற்றவைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதை நான் வாயிற்புறத்திலிருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. ஆயினும், அங்கிருப்பவர் எவரும் என் பக்கம் பார்ப்பவர்களாய்  இல்லை. ஓரிருவர் பார்ப்பதாக நான் பார்த்தபோதும், நான் அவர்களுக்குக் காட்டிய சமிக்ஞைகளை யாரும் புரிந்து கொள்பவராகத் தெரியவில்லை! அதாவது, நுழைவாயில் பகுதி பக்கம் பார்ப்பவர்களைப் பார்த்து நான் காட்டும் சமிக்ஞை, "இந்த வாயில் பகுதிக்கு வாருங்கள்" என்பது! என் பரிதவிப்பு என்னவென்றால், ஒருவேளை நான் காட்டும் சமிக்ஞையைப் பார்த்து யாராவது வாயிற்பகுதிக்கு வந்தால், அவர்களிடம் "சுவாமி எனக்கு வாக்களித்தபடி நான் உள்ளே வர அனுமதி கோருவதாக சுவாமியிடம் சொல்ல எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்" என்று கேட்கலாம் என்ற அங்கலாய்ப்பு! கடலில் முழுகுபவன் ஒரு துரும்பு கையில் அகப்பட்டால் கூடக் கெட்டியாகப் பிடிப்பான் என்பார்களே, அதே போன்ற அவலநிலை தான் அன்று எனக்கு! பலர் வாயிற்பக்கம் பார்த்தாலும், ஒருவேளை யாருக்காவது என் சமிக்ஞை புரியுமாயினும், யாரும் என் பகுதிக்கு வருவதாயில்லை .இந்த வாயிற்காப்போன் என்னை உள்ளே விடுவதாயுமில்லை! மாறாக நான் அதிகநேரம் அங்கு நிற்க, நிற்க, 'போ, போ' என்று மிரட்டி விரட்டிய வண்ணம் இருந்தான் அவன்!

என்ன ஆச்சரியம்! உள்ளே புல்வெளிப் பகுதிக்கு சுவாமி வருவதை நான் பார்த்தேன்! அங்கிருந்தவாறே, வெளியே நிற்கும் என்னைப் பார்த்த சுவாமி, அகில உலக சாயி சேவா நிறுவனங்களின் தலைவர் திரு. இந்துலால் ஷா பின்தொடர, நேரே வாயிற்பகுதிக்கு வந்து, என்னைச் சிறைமீட்டு அழைத்துச் சென்ற காருண்ய கடாக்ஷத்தை என்னவென்று சொல்வேன்! மும்பையில் அனாதையாய், தெருவில் நின்றவனுக்கு, ஆனந்த வாழ்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே நான் கொஞ்சம் 'குசலோபாக்யானம்' படித்திருந்தது, என் மனதிற் பளிச்சிட்டது!  வாயிற்காப்போர்களால்,  உதாசீனப்படுத்தி  தள்ளிவிடப்பட்ட குசேலனை, உள்ளேயிருந்து ஓடோடியும் வந்து, தமது இரு பொற்கரங்களை விரித்து, குசேலனை வாரி எடுத்து அணைத்தபடி, தமது அரண்மனைக்குள் அழைத்துச் சென்ற ஸ்ரீகிருஷ்ண பகவானின் செயலும், குசேலனின் எண்ணப்பாடுகளும் தாம் அப்போது எனக்கு என் அனுபவங்களாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தன.

சுவாமி வாயிற்புறம் நோக்கி வந்தது பற்றி இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஏற்கனவே .ஏ.கே.சி. உள்ளே சென்றுவிட்டதால், ஒருவேளை நான் வெளியே காத்திருப்பதுபற்றி அவர் சுவாமியிடம் சொல்லி, சுவாமி வந்தாரா? அல்லது சுவாமியே வந்தாரா என்பது எனக்குத் தெரியாது. எது எப்படியாயினும் என்னிடம் அன்பு செலுத்தி, சுவாமி தானே ஏன் வாயிற்பகுதிக்கு வரவேண்டும்? திரு. ஏ.கே.சி. சொல்லியிருந்தால் கூட, வேறு யாரையாவது அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்லி இருக்கலாமே?அதுதான் சுவாமி! அவரது பிரேமைக்கு அளவே இல்லை! 'My life is my Message' என்று அவர் அடிக்கடி சொல்வதுபோல் இதுபோன்ற சாதாரண விஷயங்களில் கூட அவர் தம்மை ஈடுபடுத்தும் விதம் எவ்வளவு உயர்ந்த மனிதப் பண்பாட்டு விளக்கங்களை நமக்கு அளிக்கின்றன.. என்னைப் போன்ற எந்த முக்கியத்துவமுமற்ற சாதாரண ஒருவனை சுவாமியே நேரில் வந்து அழைத்துச் சென்றார் என்பது, நான் பல ஜென்மங்களில் செய்த தவப்பயனே அன்றி வேறில்லை!

நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட போது, சுவாமி திரு. இந்துலால் ஷாவிடம், "ஷா, இவருக்குச் சிற்றுண்டி அளித்த பிறகு ஸ்பெஷல் accommodation போன்ற வசதிகளுடன் கூடிய மற்ற எல்லாவற்றையும் கொடுங்கள்” என்று சொன்னார். அதேபோன்று,எனக்கு தித்திப்பு வகைகளுடன் கூடிய ஆகார வகைகள் அளிக்கப்பட்டன. எனக்கு அப்போது ஒரே பசி! எனது பசி உணர்வு  அறிந்து, "தாயினும் சாலப்பரிந்தூட்டும்" என்ற மெய்வாக்கு பொய்க்காத வகையில் எனக்கு உணவு அளிக்கச் சொன்ன  தாய்களுக்கெல்லாம் தாயான பரமனை எண்ணியெண்ணிக் கண்ணீர் சிந்தியவாறு உள்ளம் உருக நன்றி உணர்வினைக் காணிக்கையாக்கி அந்த அறுசுவை உணவினை இறைப் பிரசாதமாகவே உட்கொண்டேன். சுவாமி சொன்னபடியே இரு படுக்கை வசதி கொண்ட காற்றோட்டமான தனியறையும் கிடைத்து. தவிர, அடையாள அட்டைமுதல் யாவருக்கும் அளிக்கப்பட்ட மற்ற எல்லாமும் எனக்கும் அளிக்கப்பட்டன.

மூன்று நாட்கள் மாநாடு நடந்தது; தினமும் பல மேதைகள் பேசினார்கள். நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டன. செவிக்கு உணவு போன்றே, வயிற்றுக்கும் "இப்படியும் உண்டோ" என்று சொல்லும்படியாக, பலதரப்பட்ட ஆகார வகைகள் வேளாவேளைக்கு வாரி வழங்கப்பட்டன.

ஒருநாள், யாரும் எதிர்பார்க்காத வகையில், நான் சாப்பிட்ட இலைக்குப் பக்கத்து இலையில் சுவாமியே வந்து உட்கார்ந்து என்னுடன் சாப்பிட்டார்! எனக்கு ஏற்பட்ட பெருமிதத்திற்கு அளவே இல்லை! அது என்னிடம் சுவாமி காட்டிய அளவற்ற தெய்வீக அன்பைத் தவிர வேறில்லை. பலப்பல ஜென்மங்களில் நான் இயற்ற நேரிட்ட தவம் என்றே நான் கருதினேன்! அப்போது என்னிடம் சுவாமி, "நான் சவுத் ஆப்பிரிக்கா போகப்போகிறேன்; இதோ பார் பாஸ்போர்ட்" என்று சொல்லி நிஜமாகவே ஒரு பாஸ்போர்ட்டையும் காண்பித்தார். அன்று அருகிலிருந்து இதைக் கவனித்த பலருக்கு பரபரப்புடன் கூடிய குதூகலம்! அதே நேரத்தில் என் பக்கத்தில் சுவாமி உட்கார்ந்து சாப்பிட்டதைக் கண்டு, பலருக்கு என்னைப் பார்த்து பொறாமையாகவும் இருந்திருக்கலாம்.

மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில், மூன்றாம் நாள் என்று எண்ணுகிறேன், ‘ஜோதி தியானம்’ என்ற வகுப்பை சுவாமியே நடத்தினார். அங்கு ஒரு மூலையில் ஒரு ஜோதி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் இருந்த அவ்வளவு பேர்களில், என்னைச் சுட்டிக்காட்டி, எழுந்திருக்கச் செய்து, அந்த ஜோதிக்கு முன்னால் உட்காரச் செய்தார் நமது சுவாமி. அவர் 'ஜோதி தியானம்' பற்றி விவரித்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதற்கான செய்கைகளை ஜோதிக்குமுன் அமர்ந்துள்ள நான் செய்து கொண்டிருக்க வேண்டும். 40 நிமிடங்களுக்கு மேலாக சுவாமி நடத்திய அந்த வகுப்பு, அங்கிருந்த யாவருக்கும் அளவற்ற பெருமகிழ்ச்சியைத் தந்தது.. எல்லா வகுப்புகளுக்கும் சுவாமியே வந்தால் எவ்வாறு இருக்கும் என்று பலரும் பேசினர். மூன்று நாட்கள் முடிவடைந்த அந்தப் பெருவிழா முடிவில், பலப்பல புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

இந்த சாயி சகாப்தத்தில், பகவான் நடத்திய அந்த முதல் அகில உலக சாயி மகாநாட்டில் பங்குகொண்டவன் என்ற பெரும்பேறினை எண்ணி நான் ஆனந்திக்கும் அதே நேரத்தில், அந்த மகாநாட்டில் நான் பங்கு கொள்வதற்காக விதிமுறைகளைத் தளர்த்தி, அதில் பங்குகொள்ள என்னை அனுமதித்த பரம்பொருளின் அவதாரமாம்  பகவான் ஸ்ரீ சத்திய சாயி என்மேல் சொரிந்த அன்புடன் கூடிய அருள் பாங்கினை எண்ணியெண்ணி எனது இந்த வயோதிக நாட்களில் கண்ணீர் மல்கிய வண்ணமுள்ளேன்! இதைப் படிக்க நேரும் உங்கள் கண்களும் ஈரமாவதை உங்களால் கட்டுபடுத்த முடியாது என்பதுதான் சாயி பக்தரின் விசேஷத்தன்மை! ஜெய் சாயி ராம்.

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக