தலைப்பு

வெள்ளி, 31 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 13 | சித்த சோரன்


சுவாமி நிகழ்த்தும் லீலா அற்புதங்கள் பலவகைப் பட்டவை. அவைகளில் பல, எல்லோரும் பார்க்கும் வண்ணம் நிகழலாம். மற்றும் சில, ஒரு சில பக்தர்களுக்கு மட்டும் அவர் அருள்வதாக இருக்கும். வேறு சில, தனியான ஒருவருக்கு மட்டும் அருளுவதாக அமையும். அதுபோன்று அவர் ஆற்றும் லீலா வினோதங்கள்
எந்தச் சட்ட திட்டத்திற்கும் உட்பட்டவைவையாகவும் இருக்காது என்பது அவரது பக்தர்கள் யாவரும் அறிந்ததே!

ஒருமுறை நான் பிரசாந்தி நிலைய வளாகத்தில் அச்சகப் பணியாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திரு. கஸ்தூரி அவர்கள் குடை பிடித்து வர, சுவாமி புன்முறிவலித்தவாறு அங்கு வந்தார். திரு. கஸ்தூரி பிடித்து வந்த குடையைப் பெற்றுக்கொள்ளுமாறு சுவாமி என்னை ஆக்ஞாபித்தார் .நானும் திரு. கஸ்தூரியிடம் இருந்து குடையைப் பெற்று சுவாமிக்குப் பிடித்தேன். சுவாமி அங்கிருந்து நகர்ந்து சென்றதால், நானும் அவரைப் பின்தொடர்ந்தேன் .என் குடும்ப சம்பந்தமான விவரங்களைக் கேட்ட சுவாமியிடம், நானும் பதிலளித்த வண்ணம், சிறிது உயரமான பகுதிக்கு நடந்து சென்றோம்.

அந்த உயரமான பகுதிக்குச் சென்றதும், ஓர் அகலமான பாறையை நெருங்கிய சமயத்தில், சுவாமி அதில் அமர்ந்தபடியே, கண்களை மூடிய வண்ணம், திடுமென்று சாய்ந்துவிட்டார். பதைபதைத்துப் போன நான், சுவாமியின் புனித சரீரத்தை என் மடியில் தாங்கியபடி என்ன செய்வதென்று அறியாமல், “பாபா, பாபா” என்றும், “சாய்ராம்” என்றும் கதறினேன். அங்கிருந்து பார்த்தபோது என் கண்களுக்கு எவரும் தென்படவில்லை. அப்போதைய நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் அங்கு இருக்க மாட்டார்கள். மேலும் நானும் சுவாமியும் இருந்த பகுதியில், நடமாட்டம் அதிகம் இராது. மாலை வேளை. மலைக்காற்று சர்சர்ரென்று வீசியது. எனக்கு ஏற்பட்ட பீதியால், எனக்கு உடல்பூராவும் வியர்த்துவிட்டது. சுவாமியின் அவ்வாறான நிலைபற்றி எனக்கு அப்போது ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. 30 வயதுகூட நிரம்பாத எனக்கு, சுவாமியின் மூச்சுப் பேச்சற்ற நிலைக்குக் காரணமும் தெரியவில்லை. மடியிலேயே சுவாமியைத் தாங்கிய வண்ணம் இருந்த எனக்குப் பலப்பல மனப்போராட்டங்கள்!

‘சுவாமி இறந்துவிட்டாரோ’ என்ற ஒருவித ஐயப்பாடு தோன்றவே, நான் போலீசிடம் மாட்டிக்கொள்வேனோ என்ற பயமும்கூட என்னைப் பற்றிக்கொண்டது. மேற்கொண்டு யாரைக் கூப்பிடுவது, என்ன செய்வது என்று தடுமாறிய நிலையில், கண்ணீர் சிந்தியவண்ணம் “சாய்ராம், சாய்ராம்” என்று புலம்பியபடியே திண்டாட்டமான நிலைமையில் தவித்தேன். சுவாமியின் உடலைத் தாங்கி இருந்தமையால், அவரைக் கீழே தரையில் படுக்க வைத்திடவும் மனமில்லை. சுமார் 25 நிமிடங்களுக்கு மேலாக இவ்வாறான தடுமாற்ற நிலையில் தவித்துக் கொண்டிருந்த எனக்கு, ஆறுதலும், ஆச்சரியமும் ஏற்படும்படியாக பகவான் திடுமென்று கண்களைத் திறந்தவாறே எனது மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்! என்ன அற்புதம்! ஆனந்தம்!

என்னைக் குறிப்பாகப் பார்த்தவண்ணம் பகவான், “என்ன ரொம்பவும் பயந்து விட்டாயா?” என்றார். தடுமாற்றம் மற்றும் ஆச்சரிய உணர்வுகளிலிருந்து இன்னும் விடுபடாத நான் “சுவாமி, பயந்து விட்டாயா என்று கேட்கிறீர்களே? இதோ பாருங்கள். பயத்தால் என் உடம்பெல்லாம் வியர்த்திருப்பதை...” என்றபடி நான் வியர்த்து விறுவிறுத்துப் போனதைக் காண்பித்தேன். புன்முறுவலித்த சுவாமி, “நான் இருக்கும்போது என்ன பயம்?” என்று கேட்ட உடனேயே நான் “சுவாமி, நீங்கள் இங்கு கொஞ்ச நேரத்துக்கு இல்லவே இல்லையே?” என்றேன்.

சுவாமி திருவாய் மலர்ந்தருளினார் “சுவாமி எது செய்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக அது இருக்கும். நான் இப்போது இந்த உடலை விட்டுக் கொஞ்சநேரம் சென்றதற்கு ஒரு காரணம், கல்கத்தாவில் ஒரு பக்தன் உயிர்பிரியும் தருவாயில் மருத்துவமனை ஒன்றில் இருக்கிறான். அவனுக்கு 80 வயது. நான் ஒரு நர்சாக அங்கு சென்று அவனுக்கு விபூதிப் பிரசாதம் கொடுத்து, அவன் நோயைக் குணப்படுத்தி, ஆயுளையும் இன்னும் மூன்று வருடங்களுக்கு நீட்டி, அவனைப் பிழைக்கச் செய்துவிட்டேன். அவன் கல்கத்தாவில் சுவாமியின் காரியங்களை பக்தியுடன் மிக நேர்த்தியாகச் செய்பவன். சுவாமிக்குக் கல்கத்தா சென்றுவர 25 நிமிடங்கள் ஆனது” என்று குறும்புச் சிரிப்புடன் விளக்கியனார். “மற்றுமொரு காரணம், நீ ஆறு மாதத்துக்கு முன் புட்டபர்த்தி வந்திருந்தபோது, ராமு உன்னிடம் சுவாமி மூன்று நாட்கள் தமது உடலை விட்டுச் சென்றிருந்தார், நாங்கள் அவர் உடலை மூன்று நாட்கள் பத்திரமாகப் பாதுகாத்தோம். பிறகு உடலுக்குத் திரும்பிவிட்டார் என்று சொன்னான் அல்லவா? அதைப்பற்றி அப்போது உன் எண்ணம், அவ்வாறு நடந்திருக்காது என்பதுதானே? அதுபோன்ற சுவாமியின் லீலையை அனுபவபூர்வமாக அறிந்து கொள்ளத்தான் சுவாமி இவ்வாறு ஒரு அரிய சந்தர்ப்பத்தை உனக்கு அளித்தேன். எனக்கு நீ மிக நெருக்கமானவன் என்பதால், மற்றவர்களுக்கல்லாமல், தனியே இங்கு வந்து உனக்கு இந்த அனுபவத்தை அளித்தேன்” என்றார் நமது அருமை பெருமை மிக்க பகவான். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தவாறே, சுவாமியைத் தொழுது எழுந்தேன். அங்கிருந்து வேகமாக இறங்கி நடந்த சுவாமியைப் பின்தொடர்ந்தேன்.

சுவாமி திருவாய் மலர்ந்தருளியது போல், அன்று ராமு சொன்ன, சுவாமி மூன்று நாட்கள் உடலை விட்டுச் சென்றிருந்தார் என்ற செய்தியை, அன்று உண்மையிலேயே நான் நம்பவில்லைதான்! மாறாக என் மனதுக்குள்ளேயே, சுவாமியைச் சுற்றி ராமுவைப் போன்ற சிலர், புட்டபர்த்தியில் அதுமாதிரியான வதந்திகளை அங்கு வரும் பக்தர்களிடம் பரப்பி, விளம்பரம் தேடுகிறார்கள் என்று எண்ணினேன். ஆனால் அதுபற்றி நான் யாரிடமும் எதுவும் சொன்னதில்லை. என் மனதளவில் அன்று எண்ணியதை நான் யாரிடமும் சொல்லாமலிருக்கலாம். என் மனதில் இருப்பது ஒருவருக்கும் தெரியாது என்று நான் நினைத்திருக்கலாம். ஆனால் அந்த சாயி பரமனுக்குத் தெரியாதது எது? அதனால்தானே அவருக்கு சித்தசோரன் என்று பெயர். ஜெய் சாய்ராம்!

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக