தலைப்பு

திங்கள், 13 மே, 2019

மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!


1978 ஆம் ஆண்டு சரோஜா முரளீதரன் தம்பதியர் திருநெல்வேலியில் இருந்தனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டில் பஜனை நடுத்துவார், சரோஜா. பஜனை முடிந்த பிறகு சுவாமி வந்து சென்றதன் அடையாளமாக, ஆங்காங்கு, ஐயனின் பாதங்கள் பதிந்த சுவடுகள் தெரியும்.

சரோஜாவின் அண்ணனுக்குத் திருமணம் ஏற்பாடாகியது. முரளிதரனின் தம்பிக்குத் திருமணம் நிச்சியமாகியது. மைத்துனர் திருமணம் பிப்ரவரி ஒன்றாம் தேதி. அண்ணனின் திருமணம்  பிப்ரவரி ஒன்பதாம் தேதி. எனவே, இரண்டும் அடுத்தடுத்து வந்தமையால், 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டிலும் கலந்துகொள்ளலாம் என்று முடிவு செய்தனர் . அங்ஙனமே புறப்பட  ஆயத்தங்களும் செய்ய பெற்றன.  

இரண்டு நாட்களில் புறப்பட வேண்டும். சரோஜாவிற்கு மனதில் சொல்லொணா ஒரு வேதனை. ''சுவாமி ! நாளை மறுநாளிலிருந்து, யார் பதினைந்து நாட்களுக்குப் பால், நைவேத்யம் வைப்பார்கள்? ஊதுவத்தி  ஏற்றி வழிபடுவார்கள், அம்மா! '' என்று மனமுருக வருந்தினார். சரோஜா சுவாமி யை  'அம்மா ' என்றுதான் அழைப்பது வழக்கம். அப்போது அவ்வூரில் திருட்டுப் பயம் சற்று அதிகமாக இருந்தது. அதனால் அவர்கள் ஊருக்குச் செல்லும் செய்தியை யாருக்கும் தெரிவிக்காமலேயே இருந்தார்கள்.

சரோஜாவின் வீட்டிற்கு நேர் எதிரில், ஒரு சிவன் கோவில் இருந்தது. சிவனாருக்கு அன்றாடம் வழிபாடு செய்யச் சுமார் 80 வயதுள்ள ஒரு பெரியவர் இருந்தார். வயதில் பெரியவராயினும் மனதில் பக்குவம் பெறாதவர். சரோஜா ஸ்வாமியை வழிபடுவது, பஜனை செய்வது எல்லாம் அவருக்கு கட்டோடு பிடிக்காது. '' பரட்டை தலையனைப் பூஜை செய்கின்றனர்!'' என்று ஏளனமாகப் பேசுவார்.

சரோஜா, ''நாளை மறுநாள் உனக்கு யார் வழிபாடாற்றுவார்கள் !  அம்மா !'' என்று கவலையோடு வருந்திய மறுநாள், சிவன் கோவில் பூசாரி சரோஜா வீட்டினுள் வந்தார். கூடத்தில் மூன்றடி உயரத்திலுள்ள சுவாமியின் படம் வைக்கப்பெற்றிருந்தது. அதன் அருகே சென்றார் பூசாரி. ''இவருக்கு தினமும் நீ என்ன நைவேத்யம் வைக்கிறாய்?'' என்று திடீரென சரோஜாவிடம் ஒரு கேள்வி கேட்டார். ஏன் கேட்கிறார் என்று மலைத்த சரோஜா, ''பால் காய்ச்சிச் சக்கரை போட்டு வைக்கிறேன்,'' என்றார்.

அடுத்து ''நீ பதினைந்து நாட்களுக்கு ஊரிலிருக்க மாட்டியே?'' என்று வினவினார் பெரியவர். யாருக்குமே அறிவிக்காதிருக்கும் போது இவருக்கு எப்படி தெரிய வந்தது என்று வியந்த சரோஜா, ''ஆமாம்'' என்றபடி தலையசைத்தார். பிறகு ''நேற்று இதே சுவாமி என் கனவில் வந்தார். சரோஜா ஒரு பைத்தியம். அவள் ஊருக்கு போவதால் பதினைந்து நாட்களுக்கு நான் பட்டினி கிடப்பேனாம். நான் இந்தக் கோயிலில் நீ வழிபடும் சுயம்பு லிங்கத்திலும் இருக்கிறேன். சரோஜா என்ன நைவேத்யம் வைக்கிறாள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து, இந்த லிங்கத்தின் முன் வைத்து வழிபடு, என்று கூறினார், என்று அப்பெரியவர் இயம்ப, விவரிக்க இயலாத ஓர் உணர்வில் நெகிழ்ந்து உருகினார் சரோஜா.

மறுநாளிலிருந்து பால்காரனிடம் சொல்லிக் கோயில் பூசாரியிடம் தினமும் 100 மில்லி பால் தரும்படி ஏற்பாடு செய்தார் சரோஜா. சுவாமிக்கு யார் பால் வைப்பார்கள் ? யார் ஊதுவத்தி தூபம் காட்டுவார்கள் என்ற சரோஜாவின் ஏக்கத்திற்கும் வழி செய்து. தம்மை ஓர் உருவில் வழிபட்டு, ஓர் உருவில் நிந்தித்தும் வந்த பூசாரியையும் ஈர்த்து ஆட்கொண்டு விட்டார், மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராகிய பகவான் !

ஆதாரம்: புத்தகம்- பவழம் அத்தியாயம் 28

சாய்ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக