தலைப்பு

செவ்வாய், 28 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 11 | மொட்டுக்குள் ஒரு மோதிரம்!


ஒருமுறை, எனது நண்பர் ஒருவருடன் நான் புட்டபர்த்தி சென்றிருந்தபோது ஓர் அபூர்வ நிகழ்வு நமது சுவாமியின் சங்கல்பத்தால் புட்டபர்த்தியில் நிகழ்ந்தது! அந்த நண்பர்தான், என்னிடம் சுவாமியைப் பற்றியும், அவரது லீலா
விநோதங்களையும் சொல்லி, சுவாமியின் அவதார அருள் சக்திப் பிரவாக எல்லைக்குள் நான் புகுவதற்குக் காரணமானவர்!
நான் முன்பே குறிப்பிட்டதுபோல்,  முன்பெல்லாம், பிரசாந்தி நிலையப் பகுதிகளில் சுவாமி அடிக்கடி வந்து போவார்
என்பதால், மேலே குறிப்பிட்ட எனது நண்பருடன் நான் பேசிக்கொண்டு நின்றிருக்கையில், அங்கே திடுமென்று வந்த சுவாமி, என் நண்பனின் தோளில் தட்டி, அவனது வீட்டு விஷயங்களைக் கேட்டவாறே, அங்கே ஒரு தொட்டியிலிருந்த மல்லிகைச் செடியிலிருந்து, ஓரிரு நாட்களில் மலர வேண்டிய ஒரு மொட்டைப் பறித்து, எனது நண்பனின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த மலராத புஷ்ப மொட்டைக் கையில் மூடிவைத்துக் கொண்டு, என்னிடம் வந்த என் நண்பன், “சுவாமி, ஒரு மலர்ந்த புஷ்பத்தைக் கொடுக்காமல், ஏன் ஒரு மொட்டைக் கொடுத்துள்ளார் என்று புரியவில்லை” என்று கூறி, அதை என்னிடம் காட்டியவாறு, அழுத்திப் பிசைந்த போது, அந்த மொட்டின் உள்பாகத்தில் கடினமான ஏதோ ஒன்று இருப்பதை அவன் உணர்ந்தான்.

அந்த மொட்டைப் பிரித்துப் பார்க்கையில், சுவாமியின் உருவம் பதித்த மோதிரம் ஒன்று அதனுள் இருந்தது! அவனும் நானும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தோம்!
மலராத மொட்டினுள்ளும், சுவாமி தமது தெய்வீக சங்கல்பத்தால், ஒரு பொருளை சிருஷ்டிக்க முடியும் என்பது, எவ்வளவு பெரிய அசாதாரணச் செயல் என்பதை இதன்மூலம் நாம் அறியலாம். நமது சுவாமியால் எதுவும் செய்ய இயலும் என்பது மட்டுமல்ல :அவரால் ஆகாதது எதுவுமில்லை என்பதனையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

ஆதாரம்: லீலா மோஹன சாயி, பக்கம் 84.
(ஆசிரியரின் அனுமதியுடன் இது வெளியிடப்படுகிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக