தலைப்பு

வெள்ளி, 24 மே, 2019

ஓ சாயி! ப்ரேமையே உருக்கொண்டவரே!

65. ஓம் ஸ்ரீ சாயி ப்ரேம மூர்த்தயே நம:
ப்ரேம – ப்ரேமை, 
மூர்த்த – மூர்த்திக்கு

பால சாயி பெங்களூர் நகரில் ஒரு மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.அம்மாளிகைக்கு எதிர்ப்புறச் சாலை ஓரத்தில் ஹரிஜனர் ஒருவர் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தார். எண்ணற்ற மக்கள் அம்மாளிகைக்கு ஊர்திகளில் வந்துபோய்க் கொண்டிருந்தனர்.அவர்கள் மலர்களையும் கனிகளையும் எடுத்துக்கொண்டு போவதை அவர் கண்டார். உள்ளிருந்து வருபவர்கள் முகங்களில் மகிழ்ச்சி நிரம்பி இருப்பதைக் கண்டார்.
வெளியே வந்தவர்கள் “இவர் ஒரு அவதாரமே, ஷிர்டி பாபாவோ? க்ருஷ்ணபரமாத்மாவோ” எனப் பேசியபடி செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஹரிஜனர், தானும் அம்மகானைக் காணவேண்டும் என்று ஆவலுற்று, மாளிகையினுள் சென்றார். உள்ளே பாபா ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒரு பக்கம் ஆண்களும் மற்றொரு பக்கம் பெண்களும் குழுமியிருந்தனர். செருப்புத் தொழிலாளி பாபாவைப் பார்த்தார்.அதே சமயம் சுவாமியும் இவரை நோக்கினார். அவரது அன்பை உணர்ந்த பாபா நாற்காலியிலிருந்து எழுந்து அவர் நின்று கொண்டிருந்த வாயிற்படிக்கு மெல்ல மெல்ல வந்து அவர் கையில் வைத்திருந்த வாடிய மாலையை அன்புடன் எடுத்துக்கொண்டு “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். உடனே அவர் தயங்காது “என் குடிசைக்குத் தாங்கள் வந்து நான் தரும் நைவேத்தியத்தை ஏற்கவேண்டும்” என்று கேட்டான். பாபாவும் அவனைத் தட்டிக்கொடுத்து, ”ஆகட்டும்! நான் வருகிறேன்” எனக் கூறிவிட்டு மீண்டும் தமது ஆசனத்தில் சென்று அமர்ந்துகொண்டார். 

தன் குடிசை இருக்கும் இடத்தை அவருக்குத் தெரியப்படுத்தி விட்டு, எப்போது வரப்போகிறார் என்று கேட்பதற்காக காத்திருந்த அவரைக் கூட்டத்தார் வெளித்தள்ளினர். அங்கு உள்ளவர்களிடம் பாபாவிடம் இதுபற்றி கேட்டுச் சொல்லுமாறு வேண்டிக் கொண்ட போதும், அவர்கள் இவரைக் கேலிபேசிச் சென்றனர். மனம் சோர்ந்து தன் வேலையைக் கவனிக்க சென்றார் அவர். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் பகல் ஒரு பெரிய கார் ஒன்று எதிர்பாராமல் அவர்முன் வந்து நின்றது! உள்ளே பாபா! அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு அந்தக் கார் போகும் தூரம்வரை அதில் சென்றுவிட்டு, பிறகு காரை ஒரு பக்கம் நிறுத்திவிட்டு, அந்த சேரியின் சந்து வழியே நடந்து சென்று செருப்புத் தொழிலாளியின் குடிசையை அடைந்தார்! மிட்டாய்கள், இனிப்புப் பொருள்களை வரவழைத்து பாபா அந்த எளிய குடும்பத்திற்கு வழங்கினார். ஒரு பலகையின் மீது அமர்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டார்! ஹரிஜனர் வாங்கித் தந்த வாழைப்பழங்களைப் பிரியமாக எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பத்துக்கு நல்லாசி வழங்கிய பின் குடிசையைவிட்டு மீண்டார். என்னே இறைவனின் பிரேமை!

ஓ சாயி! ப்ரேமையே உருக்கொண்டவரே!
உமக்கு எனது வணக்கம்.


ஆதாரம்: பக்தியில் கோத்த நல்முத்துக்கள்

1 கருத்து: