அந்த மாட்டு வண்டியில் ஏறி எனது வீடு நோக்கி போகும்போது அந்த வண்டிக்காரன் எனது தமையனின் உடல்நிலை மோசமாகி இறந்து விட்டதாகவே எல்லோரும் கருதியதாகச் சொன்னான். பொறுப்பில்லாமல் யாரோ ஒரு சந்நியாசியை காண ஆந்திரா சென்று விட்டதாக என்னைப்பற்றி ஊரில் பலரும் கோபத்துடன் பேசிக் கொள்வதாகவும் சொன்னான்.
அதைக் கேட்ட நான் பகவான் நேர்காணலில் எனது அண்ணன் நிலைமை பற்றி விவரித்து, உடனே ஊருக்குச் சென்றுவிடு என்று சொன்னதும் எவ்வளவு சரியானது என்று எண்ணி வியந்தேன்.
அவர் அறியாதது யாதொன்றும் இல்லை என்பதையும் தெளிந்து மெய்சிலிர்த்துப் போனேன். மனதுக்குள்ளேயே சாயிராம் சாயிராம் என்று துதித்தவாறு சென்றேன்.
வீடு அடைந்ததும் என் சகோதரிகள், தாயார் உட்பட யாரும் என்னுடன் பேசவில்லை. அவர்களுக்கு என்னிடத்தில் வருத்தம். எனது அண்ணனை முழுமையாகப் போர்த்தி வாயில்பக்கத்து முன்னறையில் படுக்க வைத்திருந்தார்கள். வீடே சோகமயம். அவர்கள் அளவில் நான் ஒரு பொறுப்பற்ற ஊர்சுற்றி.. ஆனால் என்னளவில் நான் அங்கு அதுவரை இல்லாவிட்டாலும் அங்கு நடந்த எல்லா அசாதாரண நிலைமைகளையும் பகவான்மூலம் முன்கூட்டியே அறிந்து கொண்டு விட்ட ஒரு புண்ணியசாலி!
காலைக்கடன்களை முடித்து, குளித்து, சுவாமியை ஸ்மரித்துவிட்டு உணவருந்தும் போதுதான் எனது தாயார் நடந்தவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் அவர்களைக் கையமர்த்திவிட்டு எல்லா விவரங்களையும் படபடவென்று சொன்னேன். வண்டிக்காரனோ அல்லது ரயிலடியில் வேறு யாரோ உனக்குச் சொல்லியிருப்பார்கள் என்று கூறினர் என் உறவினர். நான் உடனே பகவான் ஸ்ரீ பாபா அவர்கள் நம்மீது அன்புகொண்டு எனக்கு இங்கு நடந்தவற்றைச் சொல்லி உடனே ஊர் திரும்பவும் கட்டளை பிறப்பித்தார் என்று கூறி, சுவாமியின் சங்கல்பத்தினால் திருப்பதியில் எவ்வாறு எனக்கு தரிசனம் கிடைத்தது என்பதை விளக்கி எனக்குக் கிடைத்த பிரசாதங்களை அவர்களுக்கு வினியோகித்த போது அவர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. எல்லோரும் கண்ணீர் சொரிந்து பகவானுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தினர்.
அவர்களுக்கு இங்ஙனமான இறையனுபவ நிலை ஏற்பட்ட பிறகுதான் எனது அண்ணன் உடல்நிலை சரியாவதற்காக பகவான் சிருஷ்டித்துக் கொடுத்த மாத்திரை பற்றிச் சொல்லி அதைக் காண்பித்தேன். அவர்கள் மெய்சிலிர்த்தனர். பிறகு அண்ணன் படுக்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது நினைவிழந்த நிலையில் 103 டிகிரிக்கு மேல் உடல் வெப்பம் இருந்ததையும் உணர்ந்தோம். பற்கள் இறுகி இருந்தன, நினைவே இல்லை. “கடந்த இரண்டு தினங்களாக வே நினைவு இல்லாத நிலையில்தான் அவர் இருக்கிறார்” என்றும் “மருத்துவ சிகிச்சை ஏதும் பலனளிக்கவில்லை” என்றும் சொன்னார்கள்.
ஒரு கடினமான உலோகத்தால் இறுகியிருந்த பல்வரிசைகளை மெதுவாக விலக்கியவாறு, சாயிராம் சாயிராம் என்று கூறியபடி பகவான் கொடுத்த மாத்திரையை எனது அண்ணன் வாயில் போட்டு தண்ணீர் ஊற்றினேன். சுவாமி அருளிய விபூதியை உடல்பூராவும் தடவி வாயிலும் போட்டேன். சில நிமிடங்கள் தாம்! பகவான் சொன்னது போலவே உடல் நிலையில் மாற்றம் கண்டது. அசைவும் ஏற்பட்டது. மெதுவாக மறுபக்கம் திரும்பிப் படுத்தார். சற்று நேரத்தில் கண்விழித்து எங்களைத் தெளிவற்ற நிலையில் பார்த்தபடியே சிறிது காப்பி கொடுங்கள் என்று அவர் பேசியபோது எங்கள் உணர்வு எவ்வாறு இருந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? ஆச்சர்யம், உடலிலே அதுவரை இருந்த வெப்பம் இல்லவே இல்லை!
சற்று நேரத்தில் அவரே எழுந்து அமர்ந்துகொண்டார். காபியை வாங்கி அவரே கைநடுங்கக் குடித்தார். அதனைக் கண்ட அங்கிருந்த யாவருக்கும் இறையுணர்வு தாண்டவமாடியது.
பகவானின் திருவாக்கின்படி அண்ணனின் உடல் உபாதை மாற்றம் கண்டது. அவருக்கு உடல்பூராவும் அம்மை வார்த்திருந்ததை நாங்கள் பார்த்தபோது எங்களுக்கெல்லாம் ஏற்பட்ட ஸ்ரீ பாபாவின் இறைத்தன்மை பற்றிய உணர்வு எல்லை கடந்ததாயிற்று!
அன்றைய தினம் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவை இறை அவதாரமாக போற்றி ஏற்றுக்கொண்ட எனது உறவினர் யாவரும், அவர்தான் யாவும் என்ற சரணாகதி நிலையில் உள்ளதற்கு அவர் அருளே காரணம். இன்றும் எனது சகோதரி வேப்பத்தூர் கிராமத்தில் வியாழக்கிழமை தோறும் மாலை ஒரு மணி நேரம் சாயி பஜனை செய்து அங்கு வரும் 30 ,40 குழந்தைகளுக்குப் பிரசாத விநியோகம் செய்து பகவானை வழிபடுகிறார். அவ்வூரில் அவள் வீட்டுக்கு "பாபா வீடு" என்றுதான் பெயர். அவள் எது தயாரித்தாலும் பகவானுக்கு நைவேத்தியம் செய்வாள். விடியற்காலை அவளும் அவள் கணவரும் அருந்தத் தயாரிக்கும் காபியைகூட பகவானுக்கு அர்ப்பணம் செய்தபிறகுதான் அவர்கள் குடிப்பார்கள்.
1966 ஆம் ஆண்டு பகவான் திருச்சிக்கு வந்து இருந்தபோது பகவானது நேர்காணலில் பகவானை கட்டியணைத்து “ஹே சாய் கிருஷ்ணா ,ஹே சாயி ராமா, பகவானே பரமேஸ்வரா” என்றெல்லாம் கண்ணீர் மல்கியவாறு துதித்து, பரவசத்தால் பகவானை முத்தமும் கொடுத்த எனது தாயாரை, நான் தடுக்க முயன்றபோது சுவாமி என்னை அப்புறம் போகச்சொல்லி “நீ இந்த கமிட்டிக்குத் தான் செகரட்டரி பகவான் பக்தி விஷயங்களுக்கு அல்ல” என்றார். கைகட்டி வாய் புதைத்து நகர்ந்து வந்துவிட்டேன். யாவும் அவர் சங்கல்பமும் லீலையும்!
(இத்துடன் உயிர் காத்தளித்தல் நிறைவு பெறுகிறது...)
ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக