தலைப்பு

வெள்ளி, 24 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 9 | அமிர்தவர்ஷினி


ஒரு தடவை நான் புட்டபர்த்தி சென்றிருந்த போது, அன்று யுகாதிப் பண்டிகை. முன்பெல்லாம் விசேஷ தினங்களில் சுவாமி அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு, அவர்களது பக்தி வழியில்  உற்சாகமூட்டும் ஒரு தெய்வீக லீலையைப் புரிந்து பரவசப்படுத்துவார். அவ்வித தினங்களில், சுவாமி தெய்வீகச் சிறப்பு வாய்ந்த சொற்பொழிவு மூலம், பக்தர்களுக்கு அந்த விசேஷ தினத்தின்  சிறப்பை விளக்கி, நமது பாரத பூமியின் பாரம்பரிய புனிதத் தன்மையையும் புகழ்ந்துரைத்து, மனிதப் பண்புகள் எப்படிப் பேணிக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்.
அன்று யுகாதிப் பண்டிகை சிறப்பு வழிபாட்டு பஜனை நிகழ்ந்தது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக இசை பாடுவதில் மிகவும் பிரபலமாக விளங்கிய, ராதா - ஜெயலட்சுமி சகோதரிகளும் பஜனையில் பங்குகொண்டார்கள். பஜனை முடிந்ததும், அங்கே சிம்மாசனத்தில் வீற்றிருந்த பகவான், யுகாதியின் சிறப்புபற்றிக் குறிப்பிட்டு, அன்று அங்கு வந்துள்ள எல்லா பக்தர்களுக்கும், யுகாதிப் பிரசாதமாக, "அமிர்தம்" தரப் போவதாகச் சொன்னார். மந்திருக்குள்ளும், வெளியிலும் அன்று பக்தர்கள் கூட்டம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். சுவாமி சொன்னதைக் கேட்டு பக்தர்கள் மட்டிலா உற்சாகமும் பக்திப் பரவசமும் கொண்டனர். சுவாமி கஸ்தூரியிடம் ஒரு டம்ளர் கொணரும்படிச் சொன்னார். உடனே மந்திருக்குள் ஒரு மேஜை கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதன்மேல் திரு கஸ்தூரி எடுத்து வந்த வெள்ளி டம்ளரும்  ஒரு உத்தரணியும் வைக்கப்பட்டன.

சுவாமி தனது ஜிப்பா கைப்பகுதியை மடக்கிவிட்டவாறே மேஜையின் அருகே சென்று, அந்த டம்ளரின் வாயருகே தனது இரு உள்ளங்கைகளையும் சேர்த்து பிழிவதுபோல் போன்ற சைகை செய்தார். என்ன ஆச்சரியம்! அந்த மந்திர் பகுதி பூராவும் ஒரு தெய்வீக மணம் பரவியது. அங்கிருந்த எல்லா பக்தர்களும் அந்த நறுமணத்தை நுகர்ந்து மகிழ்ந்தனர். அதனை நுகர நுகர, உடல் பூராவும் அலாதியானதொரு புத்துணர்ச்சி ஏற்பட்டதை அங்கிருந்த எல்லா பக்தர்களும் உணர்ந்தோம். அத்தகையதொரு  ஆனந்தமிகு நறுமணமது! சுவாமியின் திருக்கரங்களிலிருந்து, அந்த அமிர்தம் வெளிப்பட்டபோது அத்தகைய நறுமணம் அங்கெல்லாம் பரவியது! அந்த நறுமணம் பற்றி ஓரளவு மற்றவர்கள் அறிந்து கொள்ளுவதற்காகச் சொல்ல வேண்டுமென்றால், சாக்லேட்  தொழிற்சாலைக்குள் சென்றால் எவ்வாறு ஒரு நறுமணத்தை உணர்வோமோ அது போன்றது என்று சொல்லலாமே தவிர, அந்த நறுமணம் இப்படித்தான் இருந்தது என்று எவராலும் விவரிக்க இயலாது. அவ்வாறான தெய்வீக மணம்!

எங்கும்  அந்த மணம் பரவிய அதே நேரத்தில், பகவானுடைய பிழிவது போன்ற உள்ளங்கைகளிலிருந்து கெட்டியான பாகு போன்ற திரவம் வழிந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த டம்ளரில் பாதியளவு அந்த  மணக்கும் திரவம் நிரம்பியதும், சுவாமி பிழிவது போன்ற தமது உள்ளங்கைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரால் நன்றாக கழுவிக்கொண்டார். பிறகு பக்கத்தில் இருந்த திரு கஸ்தூரி அவர்களிடம் சுவாமி ஏதோ கூறி, கூடியிருந்த பக்தர்களுக்கு அறிவிக்குமாறு பணித்தார்.

திரு கஸ்தூரி “இப்புனிதமான யுகாதி தினத்தில் இங்கு பகவானின் சன்னிதானத்தில் கூடியிருப்பவர்கள் பெருத்த பாக்கியசாலிகள்.  கருணையின் அவதாரமான நமது பகவான் அந்தக் கருணையின் காரணமாகவே இங்கு உங்களுக்கெல்லாம் கொடுப்பதற்காக தேவலோகத்திலிருந்து தனது சங்கல்பத்தால் அமிர்தம் வரவழைத்துள்ளார். அந்த அமிர்தம் வந்ததை நீங்கள் எல்லோரும் பார்த்தீர்கள். சுவாமியின் திருக்கரங்களிலிருந்து அது வெளிவந்தபோது இங்கு அருமையான நறுமணம் பரவி நம்மை எல்லாம் பரவசத்தில் ஆழ்த்தியது என்பதனையும் அனுபவித்தீர்கள். நமதெல்லோருடைய பாக்கியமே பாக்கியம்! இப்போது அந்த தேவலோக அமிர்தத்தை பகவான் தமது திருக்கரத்தினாலேயே உங்கள் யாவருக்கும் வழங்கத் திருவுள்ளம் கொண்டுள்ளதால், நீங்கள் வரிசை வரிசையாக உட்கார்ந்து, உங்களிடையே சுவாமி சவுகரியமாக நடந்து செல்ல வழி அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிவித்தார். உடனே குதூகலத்தின் உச்சநிலைக்கே சென்றுவிட்ட பக்தர்கள், உட்கார்ந்தவாறே நகர்ந்து நகர்ந்து, சுவாமி நடந்துசெல்ல வழிவிட்டு, வரிசை வரிசையாகத் தங்களைச் சரி செய்து கொண்டனர்.

சுவாமி புன்முறுவலித்தபடியே, தமது திருக்கரம் ஒன்றில் வெள்ளி டம்ளரையும், மற்றொரு கரத்தில் வெள்ளி உத்தரணியையும் பிடித்தவாறு பெண்கள் வரிசையிலும், ஆண்கள் வரிசையிலும் ஒவ்வொருவரிடமும் சென்று, அவரவர் வாயைத் திறக்கச் சொல்லி ,முழுமையாக ஒரு உத்தரணி அமிர்தத்தை ஊற்றினார்! ருசித்த ஒவ்வொருவரும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. சுவாமி பிழிந்த அரை டம்ளர் அமிர்தம், அங்கிருந்த சுமார் 2000 பக்தர்களுக்கும் வழங்கப்பட்ட பிறகு, சுவாமி மேஜையருகே சென்று, டம்ளரைத் தாழ்த்தி, பக்தர்களிடையே காண்பித்தபோது, அந்த டம்ளரில் முன்பு சுவாமி பிழிந்தெடுத்த அதே அளவு அமிர்தம் இருப்பதை பக்தர்கள் கண்டு “சாய்ராம், சாய்ராம்” என்று பரவச மிகுதியால் போற்றித் துதித்துக் கொண்டிருக்கும்போதே சுவாமி அங்கிருந்து தமதறைக்குச் சென்றுவிட்டார்.

சுவாமி தமது திருக்கரங்களினால் எடுத்த அமிர்தத்தின் அளவு சுமார் நூறு மில்லி இருக்கும். அவர் அதனைக் கொடுக்க, கொண்டுவரச் சொன்ன உத்தரணியின் கொள்ளளவு சுமார் 50 மில்லி. ஆனால் அங்கிருந்த 2000 பக்தர்களுக்கும் அமிர்தம் வினியோகிக்கப்பட்ட பிறகும், சுவாமி முதலில் எடுத்த அளவே டம்ளரில் அமிர்தம் மீதமிருந்தது என்றால், சுவாமியின் கைபட்ட அந்த வெள்ளி டம்ளர் அந்தக்கணமே "அட்சய பாத்திரம்" ஆயிற்று என்பது அன்று அற்புதத்திலும் அற்புதம்! அன்றைய   யுகாதி தினத்தில் எங்களுக்கு சுவாமியின் திருக்கரங்களால் அளிக்கப்பட்ட அந்த அமிர்தத்தின் ருசி, என்னைப் பொறுத்தவரை இதுவரை நான் ருசித்த, வேறெதன் மூலமும் நான் உணர்ந்ததில்லை. சுவாமியின் திருக்கரங்களால் வாயில் ஊற்றப்பட்டு ,அதனை ருசித்து, உள்ளே விழுங்கியபோது உடல் பூராவும் சொல்லொணா உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது. அவ்வுணர்ச்சி இப்படித்தான் இருந்தது என்பதை விவரிக்க, கேவலம் நாமறிந்த சொற்கள் பயன்படாது என்பதால், அதனை அனுபவித்திருந்தவர்கள் பெரும் பாக்கியசாலிகள் என்பதனை மட்டும் சொல்லி திருப்தி கொள்கிறேன். ஜெய் சாய்ராம்!

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக