தலைப்பு

செவ்வாய், 14 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 2 | எல்லாம் அறிந்தருளல்


சுவாமி 1966ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ,17, 18, தேதிகளில் திருச்சிக்கு விஜயம் செய்தது திருச்சி பக்தர்கள் ஆற்றிய தவப்பலன். அந்தத் தவம்தான் திருச்சி பக்தர்கள் செய்த பலதரப்பட்ட சாயி சேவா பணிகள்.
முக்கியமாக, திருச்சியிலே பல பாகங்களிலும் நிகழ்த்தப்பட்ட நகர சங்கீர்த்தனங்கள், வீடுதோறும் பஜனை வழிபாடுகள், நாராயண சேவை, கோயில் போன்ற பொது இடங்களில் சிரத்தையுடன் செய்யப்பட்ட பலவாறான ‘சிரம தான்’ போன்ற பணிகள், அருள் நிறைந்த பகவானது திருவுருவப்பட ஊர்வலம், கோடி அர்ச்சனை மற்றும் பல சாயி சேவைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

திருச்சியில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16, 17, 18 தேதிகளில் ‘பிரசாந்தி வித்வன் மகாசபா’ வைபவங்களை நிகழ்த்த பகவான் அருள்கூர்ந்து ஆசி வழங்கியதால் சுமார் 50,000 பேர் அமர பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டது. காய் பூங்கொத்தோடு கூடிய சுமார் 100 வாழை மரங்கள் மற்றும் அலங்காரத் தோரணங்கள் கட்டப்பட்டு, பந்தல் அழகூட்டப் பட்டது. முக்கியமாகப் பலவகையான பகவானின் வண்ண உருவங்கள் ஆங்காங்கே பந்தலில் வைக்கப்பட்டிருந்தது கண்கொள்ளா இறைக்காட்சியாக அமைந்தது.

பகவான் 15 .12 .66 இரவு திருச்சி வந்தார். பிரபல கிளாரினெட் வித்வான் திரு. ஏ .கே .சி. நடராஜன் வீட்டில்தான் தங்கினார். மேலே வர்ணிக்கப்பட்ட பந்தல் அந்த வீட்டுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை சுவாமி பந்தல் முதலான ஏற்பாடுகள் பற்றியும், வரவிருக்கும் மூன்று நாட்கள் நடைபெற வேண்டிய விழா ஏற்பாடுகள் பற்றியும் கேட்டார். நாங்கள் எல்லா விவரங்களும் சொன்னதும் பந்தல் இடத்துக்குச் சென்று பார்க்க அவரே இசைந்தார். எங்களில் முக்கியமான சிலர் உடன் சென்றோம்.

சுவாமி பந்தலைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன் அவரது உருவ கட்-அவுட்டுகளைப் பார்த்ததும் பாராட்டினார். “இவற்றைப் பார்க்கும்போது நான் இதற்கு முன்பே இங்கு வந்து விட்டாற் போல் தோன்றுகிறது.. அவ்வளவு தத்ரூபமாக நீங்கள் எல்லோரும் நல்ல பக்தியுடன் நிர்மாணப் பணிகளைச் செய்திருக்கிறீர்கள்” என்று திருவாய் மலர்ந்து அருளினார். என்னை அருகில் அழைத்து, “இந்த விழா முடிந்ததும் இந்த கட்-அவுட்டுகளில் ஏதாவது இரண்டை எடுத்துக்கொண்டு சென்னை ஆழ்வார்பேட்டை வேங்கடமுனி வீட்டுக்கு வா” என்று ஆக்ஞாபித்தார். குறிப்பிட்ட ஏதாவது இரண்டு கட்-அவுட்டுகளைப் பற்றி சுவாமி ஆக்ஞாபிக்கிறாரா என்று அறிய முற்பட்டபோது, “உனக்குப் பிடித்த இரண்டு கட்-அவுட்டுகளைக் கொண்டுவா” என்றார்.

3 நாட்கள் விழா கோலாகலமாக நடந்தது. ஒரு லட்சம் பக்தர்கள் பகவானை தரிசித்தனர். ஒரு லட்சம் பக்தர்களும் பின் பாட, பகவானின் முன் அமர்ந்து பாடும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அவருடன் நான் காரில் சென்றபோது சுவாமி எனது பாட்டை மிகவும் பாராட்டினார்.

விழா முடிவுற்றதும் இரண்டு கட்-அவுட்டுகளை நன்றாக பேக் செய்து, நானும் எனது நண்பரும் ரயிலில் பார்சல் வேனில் புக் செய்து ,சென்னைக்கு எடுத்துச் சென்றோம். விடியற்காலை வேளை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பல் துலக்கி காபி அருந்திவிட்டு ஒரு வாடகைக் காரின் மேலே கட்-அவுட்டுகளை நன்றாகக் கட்டிப் பொருத்திவிட்டு  ஆழ்வார்பேட்டைக்குப் பயணித்தோம்.

காரில் சென்று கொண்டிருக்கையில் எனது நண்பர் “சுவாமி பணக்கார சுவாமிதான், பெரிய மனிதர்களுக்குத்தான் அவர் அருள் கூர்கிறார்” என்று பொதுவாகப் பலருக்கும் இருக்கும் குறுகிய மனப்பான்மையோடு கூடிய சஞ்சல வார்த்தைகளைப் பேசினார். நான் “ஏன் அப்படிச் சொல்கிறாய்? நீயும் நானும் சர்வ சாமானியர் தானே, நான் கடந்த மூன்று, நான்கு நாட்கள் பகவான் அருகிலேயே இருக்கவும், அவருக்கு உணவு பரிமாறவும் கூட வாய்ப்புகள் பெறவில்லையா? ஒரு ஏழை ஊமைப் பையனுக்கு, சுவாமி பேசும் பாக்கியத்தை அளிக்கவில்லையா? அப்படி இருக்க  வசதி படைத்தவருக்கு  மட்டும்தான் சுவாமி அருளுகிறார் என்று நம்மைப் போன்றவர் சொல்வது சரிதானா?” என்று பதில் சொன்னதும், “நீ இந்த விழாக் கமிட்டியில் உப-காரியதரிசி, நான் உன்னுடைய உற்ற நண்பன், அதனால் நமக்கு உரிமையுடன் கூடிய இந்த பாக்கியம் கிடைத்ததே தவிர, நாம் வெளிமனிதர் என்றால் நமக்குச் சுவாமியின் அருள் கிடைப்பது என்பது நான் எண்ணிப் பார்க்க முடியாதது தானே?” என்று விடாப்பிடியாக அவர் பேசியது ஒருவேளை சரியோ என்று எனக்கும் எண்ணத் தோன்றியது. நான் எனக்குள்ளேயே சில ஐயப்பாடுகளுடன் மௌனித்தேன். அதற்குள் ஆழ்வார்பேட்டை வெங்கடமுனி வீட்டையும் நாங்கள் சென்றடைந்தோம்.

அப்போது விடிகாலை மணி 5.45. இரண்டு கட்-அவுட்டுகளைக் காரிலிருந்து இறக்கும் முயற்சியில் நானும் எனது நண்பனும் ஈடுபட்டிருக்கையில் ஒரு ‘சேவாதள்’ உள்ளேயிருந்து வந்து எங்களிடம் கட்-அவுட்டுகளை உள்ளே ஹாலில் வைத்துவிட்டு உங்கள் இருவரையும் வெளிப்புற மாடிப்படி வழியாக அங்கே உள்ள அறைக்குச் செல்லுமாறு பகவான் ஆக்ஞாபித்துள்ளார் என்றார். அதைக் கேட்டதுமே எனக்குச் ‘சுர்’ என்றது. “காரில் பேசிக்கொண்டு வந்த விதம் தவறுதானே” என்பது போன்ற உறுத்தல் எனக்கு ஏற்பட்டது.

கட்-அவுட்டுகளை ஹாலில் வைத்துவிட்டுப் பின்புற மாடி அறைக்குச் சென்றோம். அந்த அறைக்கு இரண்டு வாயில்கள். ஒன்று நாங்கள் நுழையவேண்டியது, திறந்து இருந்தது. உள்ளே நுழைந்ததும் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அதில்தான் நாங்கள் நிற்க வேண்டும். வேறு இடம் இல்லை, நின்றோம். சுவரின் ஓரமாக ஒரு சோபா இருந்தது. எதிர்ப்புறம் மற்றொரு வாயிற்படி; உள்ளே இருந்து திறக்கப்பட வேண்டியது, அது தாழிடப் பட்டிருந்தது. நாங்கள் நுழைந்த அறையில் யாரும் இல்லை, நாங்கள் மட்டும்தான். கமகமவென்று நல்ல மணம், மார்கழி மாத விடியற்காலை ஆதலால் உள் நடுக்கலுடன், புற நடுக்கங்களும் சேர்ந்து கொண்டன. ஒரு சில நிமிடங்கள் பேரமைதி!

மற்றொரு வாயில் திறக்கப்பட்டது! சுவாமியின் விஸ்வரூப தரிசனம்! பின்புறமாக கைகளைக் கட்டியவாறு எங்களையே உற்றுப் பார்த்த பகவான் “நீங்கள் இருவரும் பெரிய மனிதர்கள்! அதனால்தான் உங்களுக்கு இந்தக் கம்பள அறை வரவேற்பு! நிற்காதீர்கள், சோபாவில் உட்காருங்கள், உங்களுக்காகத்தான் இந்த சோபா போடப் பட்டிருக்கிறது” என்று சொல்லவே, நாங்கள் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தவர்கள், செய்வதறியாமல், “சுவாமி மன்னித்து விடுங்கள்” என்று கூறிய வண்ணம் பகவானின் பொற்பாதங்களில் வணங்கினோம். சுவாமி எங்களை எழுந்திருக்கச் செய்து, விபூதி வரவழைத்துக் கையில் கொடுத்து, தனது பொற்கரத்தால் நெற்றியிலும் இட்டுவிட்டுச் சொன்னார் “யார் யாருக்கு எவ்வாறு அருள் வழங்க வேண்டும் என்று சுவாமிக்குத் தெரியும். இதுபோன்ற உங்கள் சிந்தனையற்ற பேச்சுகள் உங்கள் பக்தியின் தரத்தையே குறைத்துவிடும். இந்தச் சஞ்சல புத்திதான், பக்திக்கு ஹானியை ஏற்படுத்தும்” என்று சொல்லி அருளினார். மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்து எழுந்து, “இனிமேல் இவ்வாறு தவறு செய்ய மாட்டோம்” என்று சொல்ல பகவானும் எங்களுக்கு விடையளித்தார்.

பகவானின் சர்வவியாபகத் தன்மையை நான் சிறிதளவேனும் எனது அனுபவத்தில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் இச்சம்பவம் மூலம் எனக்கு அருள் பாலித்திருக்கிறாரே தவிர, திருச்சியிலிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர் ஏற்கும் அளவுக்கு அந்த இரண்டு கட்-அவுட்டுகள் அவருக்குத் தேவையா? அவர் சங்கல்ப மாத்திரத்தில் ஆயிரமாயிரம் கட்-அவுட்டுகள் அவர் முன்னே நிறுத்தப்படும் என்ற நிலை இருக்கும்போது, என்னைப் போன்ற மிகச் சாதாரணமான ஒருவன் மூலம் இரண்டு கட்-அவுட்டுகள் கொணரச் செய்ததன் பொருளென்ன? என்னிடம் பரிவுகொண்டு அவரது  சர்வவியாபகத் தன்மையை நான் அறிந்திடச் செய்து என்னிடம் மேலும் இறைச் சிந்தனையை வலுப்பெறச் செய்தல் அவரது சங்கல்ப விசேஷமே அன்றி வேறென்ன?
     
ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக