தலைப்பு

ஞாயிறு, 19 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 7 | உங்கள் பாபா - நமது பாபா


நான் இதற்கு முந்தைய பக்கங்களில் விவரித்தவாறு, திருச்சி தில்லைநகர் ஸ்ரீ சத்யசாயி பஜனா மண்டலி நிகழ்வுகள் நல்ல வகையிலே நடைபெற்று வந்தன. பகவானது 42வது பிறந்த தின விழா ஏற்பாடுகள் நிமித்தமாக, விழா தலைமை பொறுப்பேற்க, ஒரு மாவட்ட அரசு அதிகாரி என்ற முறையில், திருச்சி டிஎஸ்பி திரு. உன்னிகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்கச் சென்ற சென்றேன். முன்கூட்டியே நான் வந்திருப்பதாக அவருக்குச் சொல்லி அனுப்பி, அவரும் என்னை உள்ளே வர அனுமதித்ததால், நான் அவரது அறை நுழைவாயில் அருகே சென்றேன்.
அவரது அலுவலக குமாஸ்தா ஒருவரிடம், கடுமையாக பேசிய அதே சமயம், என்னைப் பார்த்ததும், "உள்ளே வாருங்கள்" என்றார் .நான் அருகில் சென்று அவர் அனுமதித்த நாற்காலியில் அமர்ந்து அவரை கவனித்த போது, அவர் அதற்கு முன் அவ்வளவு கோபித்த எந்த முகபாவமும் அவரிடம் தெரியவில்லை. மாறாக சிரித்த வண்ணம் என்னிடம் ,நான் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்? என்று கேட்டார்.

பகவானை பிரார்த்தித்தபடியே, நான் அவரிடம் திருச்சி தில்லைநகர் ஸ்ரீ சத்திய சாயி பஜனா மண்டலியில், நிகழவிருக்கும் பகவான் பாபாவின் பிறந்த நாள் விழாவில், அவர் தலைமை தாங்க அவரது இசைவு பற்றி அறியவே வந்து இருப்பதாக சொன்னேன் .அவர், "உங்கள் பாபாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது ,ஆனால் அவரைப் பற்றிய சில செய்திகள் நானறிவேன். அவர் சம்பந்தமாக ஏதாவது விபரங்கள் எனக்கு கிடைக்குமா"? என்று கேட்டவுடன், நான் கையில் தயாராக வைத்திருந்த பாபாவைப் பற்றிய, ஓரிரு புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன். அப்புத்தகங்களை அப்படியும் இப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு, அவர் நீங்கள் கொடுத்துள்ள இந்த புத்தகங்களை இரண்டு மூன்று நாட்களில் படித்து விட்டு, பிறகு நாம் சந்தித்து மற்றதை முடிவு செய்யலாம், உங்கள் விலாசம் கொடுத்து விட்டு போங்கள், உங்களுக்கு நான் செய்தி சொல்லி அனுப்புகிறேன், என்று சொல்லிவிட்டார். விழாவிற்கு இன்னும் இருபது நாட்கள் இருந்ததால், எப்படியும்  முயற்சித்து முடிவு செய்து கொள்ளலாம் ,எல்லாம் பாபாவின் சித்தம் என்று எண்ணியபடியே, நான் அவரிடம் விடை பெற்று திரும்பி விட்டேன்.

சரியாக இடையே 2 நாட்கள் சென்றன. மூன்றாவது நாள், ஒரு காவல் பணியாளர் என் அலுவலகம் வந்து, என்னை சந்தித்து, "டிஎஸ்பி அழைத்துவரச் சொன்னார்; வாருங்கள்" என்று கூப்பிட்டார். அவரது இரு சக்கர வண்டியிலேயே நான் அழைத்து செல்லப்பட்டேன். டிஎஸ்பி யின் அலுவலகத்திற்கு நான் சென்றதும், அவரது அறைக்கு நான் மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டேன். "வாருங்கள்" என்று எழுந்து நின்று கூறிய அந்த ஆஜானுபாகுவான அழகான டிஎஸ்பி திரு. உன்னிகிருஷ்ணன் நானும் உட்கார்ந்து, அவரும் உட்கார்ந்த பிறகு, "நீங்கள் அன்புடன் கொடுத்த புத்தகங்களை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன், தெய்வீகமாய் இருந்தது .எனக்கு பாபாவை நேரில் பார்த்து ஏதும் அனுபவம் இல்லாவிட்டாலும், புத்தகத்தைப் படித்த அளவில் அவரது மகிமை ஓரளவிற்கு புரிகிறது, நான் உங்கள் மண்டலி விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த போதிலும் ,அதற்கு தடங்கலாக இப்போது ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது .மாநில அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ள, அவசரமான அரசாங்க அலுவல்கள் பற்றி தெளிவு காண, எல்லாம் மாவட்ட அதிகாரிகளும், செங்கல்பட்டில் கூடி விவாதிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அவ்வாறான கூட்டம் நீங்கள் நடத்தும் விழா நாளன்று தான் ஏற்பாடாகி உள்ளது. நான் உங்கள் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைக்கு வருந்துகிறேன்.. எதிர்பாராத விதமாக ஏதாவது நேர்ந்தால் தான் நான் உங்கள் விழாவில் பங்கேற்க முடியும். ஆனால் அது சாத்தியமே இல்லை என்பது நிச்சயம்" என்று சிறிது வருத்தம் கலந்த குரலில் சொன்னார். ஒன்றும் தோன்றாத குழப்பமான முகபாவத்தோடு இருந்த என்னை கவனித்த திரு. உன்னிகிருஷ்ணன், அவருக்கு என்னை சமாதானம் செய்ய வேண்டும் என்று தோன்றியதோ என்னவோ, "சரிபார்க்கலாம், சாய் மோகன் ,உங்கள் பாபா கடவுள் சக்தி உள்ளவரானால்,ஏற்பாடு செய்யப் பட்டுள்ள அந்த அரசு கூட்டம் ரத்தாகட்டுமே!! என்று கூறியபடி தமது வலக்கை கட்டை விரலை நிமிர்த்தி காட்டி,எனக்கு விடை கொடுக்கும் பாணியில், நாற்காலியில் இருந்து எழுந்திருந்தார்.

எனக்கு "நமது பகவானின் அருள் மகிமைக்கு அவர் சவால் விடுகிறார் "என்று தோன்றிற்று .சிறிது உணர்ச்சி வேகமும் கொண்டேன். உடனே சரி சார்," உங்கள் பாபா என்று சொல்லிவிட்டீர்கள் ,நமது பாபா" என்று குறிப்பிட்டு நீங்களே பேசும்படியாக அந்த விழாவில் உங்களையே தலைமை ஏற்க பாபா ஆவன செய்வார் ,என்று சவாலுக்கு சவால் விட்டு விடைபெற்று திரும்பினேன். பகவானின் அருள் சக்திக்கு ஈடு இணை உண்டோ? மறுநாளே மறுபடியும் ஒரு காவல் துறை பணியாளர் என்னை தேடி என் அலுவலகம் வந்தார். எனக்கு டி எஸ் பி யின் அழைப்பு, என்பதை சொன்னார் .அவருடன் சென்றேன் .டிஎஸ்பி அவரது அலுவலக அறை வாயிலிலேயே நின்ற வண்ணம் ,என்னை கை கொடுத்து வரவேற்றபடி நீங்கள் உங்கள் சவாலில் ஜெயித்து விட்டீர்கள், பாபாவின் அருளால் அந்தக் கூட்டம் அரசியல் காரணங்களுக்காக அந்தத் தேதியில் இல்லாமல் ஒத்தி போடப்பட்டுள்ளது, "பாபா அவதார புருஷர் தான்" என்று பெருமிதத்துடன் சொல்லி, நான் கண்டிப்பா அவரது பிறந்தநாள் விழாவிற்கு வருகிறேன், அழைப்பிதழ் அச்சிடுங்கள் என்றார்.. அவரும் நானும் கைகோர்த்தபடியே, சிறிது உணர்ச்சிவசப்பட்டு நின்றோம். பிறகு விடைபெற்று திரும்பினேன்.

விழா நாளன்று திருச்சி தில்லைநகரில், ஒரு போலீஸ் ஜீப்புடன் காவலர்கள் சிலர் பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். எங்கள் விழா துவங்க இன்னும் 15 நிமிடங்கள் இருக்கையில் ,போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கிய திரு. உன்னிகிருஷ்ணனையும், மற்றும் அவரது மனைவியாரையும் வரவேற்றேன் .சிற்றுண்டி அருந்த கேட்டபோது, மறுத்துவிட்டார். தனி அறை உள்ளதா? என்று கேட்டார் .அழைத்து சென்றேன். உள்ளே சென்று வெளியே வந்த அவரை பார்த்து என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. போலீஸ் உடுப்பில் உள்ளே சென்றவர், பட்டு வேட்டி மேல் அங்கவஸ்திரத்துடன்  வெளியே வந்தது, எனது ஆச்சரியத்திற்கு காரணம்.! அவர் மலையாள தேசத்தை சேர்ந்தவர், தெய்வ காரியங்களில் ஈடுபடும் போது, நாங்கள் இம்மாதிரி உடைகள்தான் உடுத்துவது வழக்கம், கடவுளுக்குச் செலுத்தும் மரியாதை.. என்று சொன்னார். எனக்கு அவரிடம் மரியாதை அதிகரித்தது.

அந்த விழா சுவாமியின் 42 வது பிறந்தநாள் விழா. பிறந்த தின விழாவுக்கு முதல் நாள் மாலை, சுவாமியின் திருவுருவப்படம் ஒரு அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு, புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊர்திக்கு முன்னும், பின்னும் முறையே, தேவாரம் மற்றும் வேத கோஷங்களுடன், திருச்சி, தென்னூர் பகுதியிலிருந்து, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்தில் இரண்டு யானைகள் முன்னே செல்ல ,அதன் பின்னே ஒரு லாரியில், பெஞ்சுகள் போடப்பட்டு, அதன் மேல் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் அமர்ந்தவாறு, ஒலிபெருக்கி மூலம் இசை வழங்கிடவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாணவேடிக்கைகள் நிகழ்ந்த வண்ணம், பகவானது திருவுருவப்படம், ஊர்வலமாக திருச்சி தில்லைநகரில் உள்ள 'மக்கள் மன்றம்' என்ற கட்டிடத்தை அடைந்தது. பகவானது திரு உருவப் படத்தினை ,அந்த ஊர்திகள் இருந்து இறக்கி ,அந்த கட்டிடத்தின் உட்புற மேடையில் வைத்து, பஜனை வழிபாடு  நிகழ்த்தி, கற்பூர ஆரத்தியும் செய்து, அன்றிரவு ,முதல் நாள் விழா பூர்த்தி செய்யப்பட்டது. மறுநாள், அதாவது பகவானது பிறந்தநாளன்று, பகவானின் திருவுருவப்படத்தை வெகு விமரிசையாய் அலங்கரித்து, பலவண்ண ஜோடனைகள் செய்து, மேடைக்கு கீழே 42 குத்துவிளக்குகள் வைக்கப்பட்டு, ஐந்து முகங்களும் ஏற்றப் பட்டு ஜொலித்தன. அவை முறையே, இரு முனைகளிலும் , உயரமான குத்து விளக்குகள் என ஆரம்பித்து, தொடர்ந்து உட்புறமாக ,இரு புறமாயும் , சிறியது மற்றும் அதற்கு சிறியது , என்ற வகையில் நிறுத்தப்பட்டு, நடுவில் மிக சிறிய குத்துவிளக்கு என்று இருக்குமாறு வைத்து ,யாவையும்  ஒளி ஏற்றப்பட்டு இருந்ததால், தூரத்திலிருந்து பார்க்கும்போது, மேடையில் உள்ள நமது பகவான் திருவுருவ படத்திற்கு, தீப மாலை போட்டது போன்ற தோற்றம் ஏற்படுவதாய் அமைந்தது. பார்த்தவர் யாவரும் பிரமித்தனர்.

நமது விழாத் தலைவர் மக்கள் மன்றத்தின் உள்ளே நுழைந்ததும், தீப அலங்கார ஜோதி மாலையையும், பகவானது திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மேடையில்  வைக்கப்பட்டுள்ளதையும், பிரமித்த வண்ணம் பார்த்தவாறு ,' ஆலயம் போன்றுள்ளது" என்று கூறி, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளில், அவருக்கென போடப்பட்டிருந்த நாற்காலியில் சுட்டிக்காட்டி, அமரும்படி நான் கூறியபோது, அவர் சொன்னார்..." பாபாவின் முன் நாற்காலியில் உட்கார வேண்டாம் உங்கள் யாவருடனும் நானும் கீழேயே அமர்கிறேன்" என்று கீழேயே அமர்ந்தார். ஒருமுறை கூட புட்டபர்த்தி சென்று அந்த நேரம் வரை பகவானை பார்த்திராத அவரது பக்திப் பெருக்கு, யாவருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. அகங்காரமற்ற, அவரது குணப்பண்பை, அன்று அங்கு வந்திருந்த யாவரும் பாராட்டினர்.

பிறகு விழா தொடங்க, நான் திரு. உன்னிகிருஷ்ணன் அவர்களை, பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போது, இன்றைய தினம் நாம் யாவரும் பகவான் பாபாவின் 42 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறோம், அவருடைய அருளாலே இன்றைய இந்த பொன்னான விழாவிற்கு, அருமை, பெருமை மிக்க ஒரு விழா தலைவர் வந்துள்ளார். அவர் ஒரு நற்பண்பாளர்.. அவர் நற்பண்பை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள இங்கே அவர் தரையிலே அமர்ந்த காட்சியே போதுமானது!! மேலும் சொல்லவேண்டுமானால், அவர் காவல்துறையில் பணியாற்றும் ஒரு மாவட்ட அதிகாரி என்ற சிறப்பை உடையவராயினும், அவர் தம்மை நான் அதிகாரி அல்ல, ஒரு நிர்வாகி தான்! என்று கூறிக் கொள்கிறார். இது போதாதா... நாம் அவர் பண்பு பற்றி அறிய!? என்றேன். விழாத் தலைவர் என்ற முறையில் திரு .உன்னி கிருஷ்ணன் அவர்கள் பேசுகையில், எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட அறிமுகம், அவரது விழா தலைமை பற்றி நான் கூறியது ,அவர் கூறிய அரசாங்க கூட்ட விவரம், அவர் தமாஷாக உங்கள் பாபா என்று சொல்லி அவர் மகிமைக்கு சவால் விட்டது, பிறகு எனது சவால் முடிவாக நடந்தவை யாவற்றையும் விளக்கிப் பேசினார்.. மேலும் அவர் பேசுகையில்," நமது பாபா தெய்வம் தான், "நமது பாபா என்று நான் சொன்னது, திரு. சாய் மோகனது சவாலுடன் கூடிய விருப்பத்தை நிறைவேற்ற மட்டுமல்ல, தெய்வாம்சம் நிறைந்த ஸ்ரீ பாபாவை ,"உங்கள் முன் நமது பாபா" என்று சொல்வதில் பெருமிதமும் புளகாங்கிதமும் கொள்கிறேன், என்று சொன்னபோது, கூட்டத்தினர் தமது கரவொலி மூலம் அவர்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சுவாமியின் தொடர்புடைய எனது சொந்த வாழ்வு முறையில் மட்டுமல்லாது,எனது சமூக பணி சம்பந்தமான வாழ்வு முறையிலும்  கூட, நமது பகவான், பக்தி பரவசமூட்டும் அதிசயங்கள் செய்துள்ளார் என்பதை மேலே விவரித்துள்ள சம்பவம் புரிய வைக்கிறது.

நமது பகவானின் அவ்வாறான மகிமையை, நான் எழுதி, நீங்கள் படித்து, ஆனந்திக்கும் இந்த தருணத்தில் ,அந்த உங்கள் ஆனந்தத்தால் உண்டாகும் அதிர்வலைகள்( vibrations) என்னையும் வந்தடையும், என்பது தானே விஞ்ஞான மற்றும் ஆன்மீக ஒப்புதல்.! ஜெய் சாய்ராம்.

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக