தலைப்பு

சனி, 25 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 10 | ஜோதிஸ்வரூபி!


1960களில் நான் அடிக்கடி புட்டபர்த்தி செல்வேன். ஒருமுறை நேர்காணலில், சுவாமி எனது ஒரு காதினைப் பிடித்துத் திருகியவாறே, "ரயில்வேக்காரன் உன் பாஸில் கையெழுத்துப் போடாததால் நீ அடிக்கடி இங்கு வந்து விடுகிறாய் அல்லவா?" என்று அன்புகலந்த கண்டிப்புடன் சொன்னார். ஆம்! அம்மாதிரியான பயணங்கள் நிகழுவதுண்டு! எவ்வாறாயினும் பகவான் அறியாதது என்பது ஏதேனும் உண்டா?
அந்தமுறை புட்டபர்த்தி சென்றிருக்கையில், சேர்ந்தாற்போல் கட்டப்பட்டிருந்த சிறிய சிறிய கட்டிட அமைப்புக்களின் ‘கிரகப்பிரவேசம்’ நிகழ்வதாக இருந்தது. அப்புனித நிகழ்ச்சிக்கு, சுவாமியே குத்துவிளக்கு ஏற்றி சிறப்பிப்பதாக ஏற்பாடாகியிருந்தது.

 அந்த நாட்களில், தினந்தினம், இதுபோன்ற சுபகாரியங்கள் நிமித்தம் சுவாமி ஏதாவதொரு அற்புதம் நிகழ்த்துவார். ஆதலால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, சுவாமியின் லீலையைக் கண்டு களிக்க, எங்களைப் போன்ற அக்காலத்து பக்தர்கள் ஆர்வமாக இருப்போம்!

ஆதலால் அந்தக் கட்டிட அமைப்புக்களின் கிரகப்பிரவேசம் நிகழவிருக்கிறது என்று அறிந்த நாங்கள் அங்கு ஒன்று கூடிவிட்டோம். சுவாமியின் திருவருகைக்காகக் காத்திருந்தோம்.

அந்நாட்களில், சுவாமி பிரசாந்தி நிலையத்தைச் சுற்றிலும் இருந்த இடங்களுக்கு சகஜமாக வந்து போவார். அவ்வாறு அடிக்கடி சுவாமி வந்து போவதால், அவரைப் பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பக்தர்களுக்குக் கிட்டுவதாய் அமையும்.

அவ்வாறே அந்த ‘கிரகப்பிரவேச’ நிகழ்ச்சிக்கு சுவாமி வருவதைப் பார்த்த நாங்கள் கைகளைக் கூப்பியவாறே, முண்டியடித்துக் கொண்டு நின்றோம். முதற்கட்டடத்தின் கிரகப்பிரவேசத்துக்காகக் குத்துவிளக்கு ஏற்றுகிற சம்பிரதாய நிகழ்ச்சிக்கென, ஒரு குத்துவிளக்கு ஐந்து முகங்களிலும் திரி போடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. சுவாமி அதனருகே சென்றபோது, அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவர் தீப்பெட்டியை சுவாமியிடம் எடுத்துத் தருவதற்காக, அதனைத் தேடினார்.

"தீப்பெட்டி இல்லையா? பரவாயில்லை" என்று புன்முறுவலித்தபடியே சொன்ன நமது சுவாமி, அந்தக் குத்துவிளக்கின் ஐந்து திரிகளுக்கும் மேற்புறமாகத் தமது திருக்கரத்தினை ஆசீர்வாதிப்பதுபோல் காட்டவே, குப்பென்று அந்தத் திரிகள் ஐந்திலும், தீ ஜ்வாலைபிரகாசித்தது! பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

உற்சாக மிகுதியுடன் இருந்த பக்தர்களைப் பார்த்துப் புன்முறுவலித்த சுவாமி, ஆசிர்வத்தபடியே சிறிது நகர்ந்ததும், அந்தக் கட்டிடத்தின் மற்றப் பகுதிகளின் கிரகப்பிரவேசங்கள் பற்றிச் சுவாமியிடம் ஒருவர் குறிப்பிட, சுவாமி, "அங்கெல்லாம் கிரகப்பிரவேசம் நடந்து விட்டதே, போய்ப் பாருங்கள்" என்று சொன்னார்! நாங்கள் எல்லோரும் விரைந்து போய்ப் பார்த்து ஆச்சரியத்தில் பிரமித்துப் போனோம்! ஆங்காங்கே, ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குகளெல்லாம் தாமே தீயூட்டப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. என்னே சுவாமியின் திருவிளையாடல்!

சுவாமியே நேரே வந்து, அவரது திருமுன்னர்தான் அவர் சங்கல்பித்தபடி எதுவும் நடைபெற வேண்டுமென்பதில்லை. அவர் எங்கிருந்தாலும், அவர் சங்கல்ப விசேஷத்தாலேயே தெய்வீக நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணமிருக்கும் என்பதான மெய்விளக்கத்தினை இதிலிருந்து நிதர்சனமாக நாம் புரிந்து கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக