தலைப்பு

சனி, 11 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 1| உயிர் காத்தளித்தல் (பாகம் 1)


எனக்கு 1958ல் திருச்சிராப்பள்ளியில் ரயில்வே பணி கிடைத்தது. தங்கும் வசதிக்கான   முயற்சியில் நான் ஈடுபட்ட போது இடவசதி ஒன்று கிடைத்து அதில் மூவர் தங்குவதாக அமைந்தது. ஒருவர் ரயில்வே பணியாளர், மற்றவர் வங்கிப் பணியாளர் நாங்கள் மூவருமே இறை அன்பு உடையவர்கள்.

வங்கிப் பணியாளர் விழுப்புரம் அருகிலுள்ள பெண்ணைவளம் என்ற கிராமத்தில் வசித்த ஒரு மிராசுதாரர் குடும்பத்தை சேர்ந்தவர். அவரும் நானும் இரவு நேரங்களில் படுக்கும்போது பல விஷயங்களைப் பேசுவோம். அவர் அடிக்கடி பகவான் சத்ய சாயிபாபா அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவார். எனக்கு பகவானைப் பற்றி  அப்போது எதுவுமே தெரியாது எனது நண்பரது பேச்சில் நான் ஆர்வம் காட்டவே அவர் பகவானைப் பற்றி பலப்பல விஷயங்கள் கூறினார்.

அவரும் அவரது  சகோதரர்களும் பெண்ணைவளம் கிராமத்து ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது அவர்கள் வீட்டின் ஓர் அறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த அச்சிறார்களின் மத்தியில் இருபது வயது நிரம்பிய நமது பகவான் திடுமென்று தோன்றுவாராம்.
அக்குழந்தைகளுக்கு  மிட்டாய்கள் பென்சில்கள் மற்றும் பேனாக்கள் சிருஷ்டித்துத் தருவாராம். ஆர்வமிகுதியால் அச்சிறுவர்கள் அவரைப்பற்றிக் கேட்டதற்கு தாமே ராமனாகவும் கிருஷ்ணனாகவும்  அவதரித்தவர் என்றும் தற்போது ஸ்ரீ சத்ய சாயிபாபா என்ற பெயரில் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் அவதரித்துள்ளதாகவும் சொல்லி மறைந்து விடுவாராம்.

இவ்வாறான நிகழ்வுகள் பலமுறை தொடர்ந்து நடந்தன. அந்த வீட்டுப் பெரியவர்கள் தீவிர விஷ்ணு பக்தர்கள். குழந்தைகள் மூலம் பாபாவைப் பற்றி அறிய நேர்ந்த விஷயங்கள் அவர்களுக்கு மன உளைச்சலை அளித்தன. வேற்று மதப் பெயருடைய ‘சாயிபாபா’ என்ற ஒருவர் வந்து போவதெல்லாம் வீட்டுக்கு நல்லதல்ல என்று மனச்சஞ்சலம் கொண்டனர். பீடா பரிகாரம் என்ற வகையில் வீட்டில் சுதர்சன ஹோமங்கள் மற்றும் பலவிதமான விஷ்ணு ப்ரீதியான வைதீக கர்மாக்கள் நிகழ்த்துவதில் ஈடுபட்டனர்.

அவ்வீட்டில் பகவான் அருள் பிரவேசம் செய்துள்ளதால் தான் அவர்கள் அவ்விதமாக யாக யக்ஞாதிகளை செய்ய ஆர்வப் படுகிறார்கள் என்பது அவர்கள் அப்போது அறிந்துகொள்ள முடியாத பரிதாப நிலை அல்லவா?

ஒருபுறம் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வேறொரு சம்பவமும் நடந்தது. அந்த மிராசுதாரிடம் பணி செய்த ஒருவரின் மகன் ஒருநாள் ஒரு கடிதத்தைக் கொணர்ந்து அவரிடம் கொடுத்தான். நிரம்ப முடியுடைய, கால்வரை ஜிப்பா அணிந்திருந்த ஒரு சாமியார் அக்கடிதத்தைக் கொடுத்ததாகச் சொன்னான். அவ்வூரில் வெளியூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் அந்த சாமியார் நின்றிருப்பதாகவும் அவன் கூறியதால் எல்லோரும் அவ்விடத்திற்குச் சென்று பார்க்கையில் யாரும் அங்கில்லை. கிராமம் பூராவும் தேடியும் சுவாமி எங்கும் இல்லை என்பது தெரிந்தது.
இவ்வாறாக பகவானது மகிமைகள் தொடர்ந்து நிகழ்ந்தன.  அவர்களது வீட்டில் இருந்த கிருஷ்ணன் விஷ்ணு போன்ற உருவப் படங்களில் திடுமென்று கடிதங்கள் உள்ளடங்கிய உறைகள் தோன்றி அவை மெதுவாக அசைந்து, அசைந்து கீழே விழுவதையும் அவர்கள் பார்த்தனர். பிறகு அவற்றைப் பிரித்துப் படிக்கையில் நிரம்ப விஷயங்களை பகவான் தமது திருக்கரங்களாலேயே தெலுங்கில் எழுதி இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

அக்கடிதங்களில்  கிருஷ்ணனாகவும் ராமனாகவும் தாமே அவதரித்ததாகவும் தற்போது புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாயிபாபாவாக அவதரித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த வீட்டில் உள்ளவர்கள் செய்துள்ள பூர்வபுண்ணியத்தால் தமது லீலைகள் அந்த வீட்டில் நிகழ்வதாகவும் புட்டபர்த்தி வந்தால் தம்மை தரிசிக்கலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தாராம்.

இதனிடையே அதே காலகட்டத்தில் திருச்சியில் இந்தப் பெண்ணைவள கிராமக் குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் இருந்தார். அவரது மனைவியாருக்குக் கழுத்தில் கண்டமாலை என்ற கொடியநோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் அளவற்ற துன்பத்துக்கு ஆளாகி இருந்தாள். அந்தக் காலத்தில் இந்த நோய்க்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை ஏதும் கிடையாது. கர்மவினை என்று கருதப்பட்டது. கழுத்தில் எதுவும் அணிய முடியாது. எப்போதும் சீழ் வடிந்து கொண்டிருக்கும், துர்நாற்றம் வீசும். அப்போதிருந்த மருத்துவ சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டும் குணமாகவில்லை.

அந்தப் பெண்மணி அவ்வாறு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒருநாள் அவர்கள் வீட்டு வாயில்கதவு தட்டப்பட்டது. கதவைத் திறக்காமலேயே ஜன்னல் வழியாக கதவைத் தட்டுவது யார் என்று பார்த்தாள் அந்த நோய்வாய்ப்பட்ட பெண்மணி. வாசலில் நின்றிருந்த நமது பகவான் அவளைப் பார்த்தவாறே அவளது பெயரைச் சொல்லி அழைத்து உனது நோயைக் குணப்படுத்தவே வந்துள்ளேன் என்றார். வாசலிலே நின்றிருப்பவருக்குத் தன் பெயர் தெரிந்துள்ளதோடு தனது நோய் பற்றியும் அறிந்து உள்ளாரே என்று கதவைத் திறக்காமலேயே சிந்தித்தாள் அந்தப் பெண்.  அக்காலத்து வழக்கப்படி ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது ஓர் ஆடவனை உள்ளே அழைத்துப் பேசமாட்டாள். தனது நோயைக் குணப்படுத்த வந்திருப்பதாக சொல்பவரை உள்ளே அழைக்க விரும்பிய அந்தப் பெண் கொல்லைப்புறமாகப் பக்கத்து வீட்டுக்குச் சென்று அந்த வீட்டுப் பையன் மூலம் தனது கணவரை அழைத்து வரச் செய்தாள்.

அவரும் வந்திடவே அவர் நமது பகவானை உள்ளே அழைத்து உபசரித்தார். பகவான் அந்தப் பெண்மணியின் கழுத்தில் இருந்த சீழைத் தமது திருக்கரங்களினால் வழித்தெடுத்து, துடைத்து அந்த கணத்திலேயே அந்த நோய் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டார். இந்த அதிசயச் சம்பவம்பற்றி அவளது உறவினர் பலரும் அறிய நேரிட்டது. பெண்ணைவள கிராம மிராசுதாரருக்கும் இச்செய்தி எட்டியது. அவர்கள் வீட்டில் ஏற்கனவே பகவான் செய்திருந்த  லீலைகளாலும் திருச்சிப் பெண்மணிக்கு இருந்த தீராத நோய் தீர்ந்த அதிசய சம்பவத்தாலும், மிராசு குடும்பத்தினரை புட்டபர்த்திக்கு பயணிக்க ஆர்வப் படுத்தியது. அவ்வாறு பல தடவைகள் அவர்கள் புட்டபர்த்திக்கு செல்ல நேரிட்டபோதெல்லாம் அவர்களுக்கு சுவாமியின் அருள் பலவாறு கிடைத்ததாக தெரிகிறது..

இப்படி எனது உடனுறை நண்பர் மூலம் பகவானைப் பற்றிய பல அற்புத செய்திகளைக் கேட்க நேர்ந்த எனக்கு புட்டபர்த்திக்கு சென்றுவர ஆர்வம் ஏற்பட்டது. இத்தகைய எனது ஆர்வத்துக்கும் ஒரு காரணம் இருந்தது. திருமண வயது கடந்துவிட்ட எனது மூத்த சகோதரிகளின் திருமணம் பற்றிய கவலை எங்கள் குடும்பத்தாரைப் பெரிதும் வாட்டி வதைத்தது. அது சம்பந்தமாக நான் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால் எவ்வாறேனும் அவர்கள் திருமணத்தை நடத்தி முடிக்க நான் முடிவு செய்தேன். அப்போது பகவானைப்பற்றி அறிய நேரிட்டதால் புட்டபர்த்திக்கு செல்ல முடிவு செய்தேன். பகவானது நேர்காணல் கிடைத்தால் ஒருவேளை எனது சகோதரிகளின் விவாகப் பிரச்சனை தீர்ந்து விடலாம் என்று எண்ணினேன். அவ்வாறே திருச்சியில் இருந்து புறப்பட்ட நான் திருவிடைமருதூர் என்ற எனது ஊர் சென்று எனது தகப்பனார், தாயார் மற்றும் அண்ணன் முதலியவர்களிடம் எனது பயண விவரம் சொன்னேன். அதாவது முதலில் சென்னை சென்று, அங்கு எனது உறவினர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு அங்கிருந்து குண்டக்கல் சென்று பிறகு பெனுகொண்டா சென்று புட்டபர்த்தி செல்ல நான் முடிவு செய்திருப்பதாகச் சொன்னேன்.

அவ்வாறு அன்றிரவு அங்கிருந்து புறப்பட்ட போது எனது அண்ணன் சோர்வாக இருப்பதை உணர்ந்த நான் அதுபற்றிக் கேட்டபோது இருமல், சளி தொந்தரவுதான், நீ  தீர்மானித்தபடியே பயணத்தை மேற்கொள் என்று சொல்லி எனக்கு விடை கொடுத்தார். நான் குறிப்பிட்டபடியே எனது பயணம் அமைந்தது. அந்நாட்களில் புட்டபர்த்தி செல்வது மிகவும் சிரமமான பயணம் ஆகும். புக்கபட்ணம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் நடந்து சித்ராவதி நதியையும் கடந்து புட்டபர்த்தி அடைய வேண்டும். சில நேரங்களில் சித்ராவதியில்  வெள்ளப்பெருக்கு இருக்கும். ஓரிரு முறை நானும் எனது நண்பனும் கழுத்தளவு நீரில் இறங்கி நடந்து செல்லும் படியான சோதனையும் ஏற்பட்டதுண்டு. நீருக்குள் கால்களில் பாம்புகள் சுற்றிக்கொண்ட அனுபவங்கள்கூட எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனது முதன்முறைப் பயணம் பிரசாந்தி நிலையம் நுழைவாயில்வரை பகவானைப் பற்றிய சிந்தனைகளிலேயே நிகழ்ந்தது.

அப்போதெல்லாம் 2 தூண்களுக்கு இடையில் பிரசாந்தி நிலையம் என்ற வளைவு அமைந்திருக்கும். நான் அதன் உள்ளே சென்றபோது மாலை சுமார் 4.30 மணி. பகவான் பாபா மந்திரின் பால்கனியில் நின்று கொண்டிருந்ததை என்னால் அந்த நுழைவாயில் பகுதியில் இருந்து பார்க்க நேர்ந்தபோது எனக்கு ஏற்பட்ட பக்திப் பெருக்குக்கு அளவே இல்லை. பகவான் நிற்பதையே பார்த்தவண்ணம் வேகமாய் நடந்து சென்றேன். முன்பு மந்திருக்குமுன் நிறுவப்பட்டிருந்த ஆத்மகமல ஸ்தூபி அருகே சென்றதும் பகவான் என்னை ஆசிர்வதித்தபடி “திருச்சியிலிருந்து வருகிறாயா? சந்தோஷம், சந்தோஷம்” என்று சொல்வதைக் கேட்ட நான் பெட்டி படுக்கைகளை விசிறி எறிந்தவாறு அழுதபடியே மணலில் விழுந்து நமஸ்கரித்தேன். கிருஷ்ணனே அவர்  ராமனே அவர் என்றெல்லாம் 300 மைல்களுக்கு அப்பால் எனது நண்பன் மூலம் நான் யாரைப்பற்றிக் கேள்விப்பட்டேனோ அவரை, அந்த தெய்வ உருவை, நான் அப்போது முதன்முதலாக நேரில் பார்க்க நேர்ந்தபோது அதுவும் அவரே என்னை வா என்று அழைத்தபோது எனக்கு எது செய்வது, என்ன சொல்வது என்று விளங்கவில்லை. பரபரப்புடன் எழுந்து பார்க்கையில் சுவாமி உள்ளே சென்றுவிட்டார்.

(தொடரும்...)

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக