தலைப்பு

சனி, 4 மே, 2019

அதே பாபாதான் இவர் - 7: டாக்டர் R.T. காகடேவின் அனுபவம்!


டாக்டர் R.T. காகடே ஷிர்டி சாயிபாபாவின் தீவிர பக்தர். மஹாராஷ்டிர மாநிலத்தில் சதாராவில் பிறந்த இவர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ராணுவத்தில் Emergency Commissioned Officerஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வெளிநாடுகளுக்குச் சென்று மேற்படிப்பு முடித்த பின் பாரதம் திரும்பிய காகடே ஹைதராபாதில் குடியேறினார். அங்கு மருத்துவராக இருந்த அவரிடம் பலர் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பற்றியும், அவர் ஷிர்டி சாயியின் மறு அவதாரம் எனக் கூறியும் ஏனோ அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவில்லை.

1973, ஏப்ரல் 3ஆம் தேதி, டாக்டர் காகடே பணி முடிந்து வழக்கமாக வீடு திரும்பும் வழியில் இல்லாமல் வேறு பாதையில் காரில் சென்று கொண்டிருந்த போது, வழியில் சிவலிங்க வடிவில் ஒரு கட்டிடம் கட்டப்படுவதைக் கவனித்தார். சிவ பக்தர்கள் யாரோ இப்படிக் கோயில் கட்டுகிறார்களோ என எண்ணினார். மறுநாள் ஆந்திரப் புதுவருடமான ‘யுகாதி’. வழக்கம்போல் மருத்துவமனைக்கு சென்ற காகடேயிடம் சிகிச்சை பெற வந்த திரு சேஷகிரி ராவ் விரைவில் தமக்கு வைத்தியம் பார்த்து அனுப்புமாறு அவசரப் படுத்தியதைப் பார்த்த காகடே, என்ன விஷயம் எனக் கேட்டார். அதற்கு சேஷகிரி ராவ், அன்று பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா ஹைதராபாத் வருவதாகவும், சிவலிங்க வடிவில் கட்டப்பட்டுள்ள மையத்தைத் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறினார். தான் சாயி சேவாதள அங்கத்தினன் எனவும், விரைந்து சென்று சேவைப் பணியில் ஈடுபட வேண்டுமெனவும் கூறி, டாக்டருக்கும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

பாபாவைப் பார்க்கும் ஆர்வமில்லாவிட்டாலும், லிங்க வடிவக் கட்டிடத்தை காணும் ஆசை மிகுதியால், மாலையில் அங்கு சென்றார் காகடே. எப்படியோ முதல் வரிசையில் அமர்ந்தார். பகவான் திறப்புவிழாவின் ஒரு பகுதியாகத் தேங்காயை உடைக்கும் போது ஒரு பாதி நேராக காகடேவின் கைகளில் வந்து விழுந்தது. அவர் மிகவும் பாக்கியசாலி எனப் பலர் கூறினர். அவரோ அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மறு நாள் ஹோவர்ட் மர்ஃபட் எழுதிய ‘Sai Baba - Man of miracles’ என்ற நூலை ஒருவர் கொடுத்துச் சென்றார். அதைப் புரட்டிய காகடே, அப்புத்தகத்தில்இரண்டு பாபாக்களும் ஒருவரே என்ற பகுதியைப் படித்துப் பார்த்தார். ஷிர்டி சாயி சத்சரிதத்தில் இது எங்கேனும் கூறப்பட்டிருக்கிறதா என எண்ணி அதைப் புரட்டினார். திரு G.R. தபோல்கர் அவர்கள் எழுதிய அந்த சத்சரிதத்தில் அத்தியாயம் 53ல், ஷிர்டி பாபா தமது மஹாசமாதிக்கு முன், பக்தர்களை சமாதானப்படுத்தும் வகையில் தான் மீண்டும் எட்டு வருடங்களுக்குப் பின் திரும்பி வருவேன் எனவும், தனது பக்தர்களைச் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பேன் எனவும் வாக்களித்ததாகக் காணப்பட்டது.
பலமுறை சத்சரிதத்தைப் படித்திருந்த போதும் இதைக் கவனிக்கத் தவறிய அவர், குழப்பமான நிலையில் இருந்தார். ஷிர்டி பாபாவிடமே அதற்கு விடை வேண்டினார். அவர்தான் இவர் எனில், தான் தரிசனத்திற்கு வரும் போது, தான் எங்கிருந்தாலும், தனக்குப் பாத நமஸ்காரம் கொடுக்க வேண்டுமென்றும், parthi தன்னிடமிருந்து கடிதம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். இதன்மூலம் இருவரும் ஒருவரே என உணர்த்த வேண்டினார்.

மறுநாள் காலை ‘சிவம்’ கோயிலுக்குச் சென்றபோது அரங்கம் நிறைந்து வழிந்தது. காகடேவுக்கு ஏதோ ஓரத்தில் இடம் கிடைத்தது. பஜனை துவங்கியது, பகவான் தரிசனத்திற்கு வந்தார். என்ன அதிசயம்! வழக்கமாகச் செல்லும் பாதையிலிருந்து விலகி நேராக இவரை நோக்கி வந்தார். அவர் முன் நின்று பாத நமஸ்காரம் எடுக்க வசதியாகத் தனது அங்கியைச் சிறிது உயர்த்திப் பிடித்தார். உடனே காகடே பகவானின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார். அதனைத் தடுக்க விழைந்த சேவாதளத் தொண்டரை பாபா தடுத்தார், குறைந்தது 10 வினாடிகளுக்குப் பின் எழுந்த அவரிடமிருந்து பகவான் காகடே ஏற்கனவே எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டார்! பேரானந்தமடைந்த காகடே ஷிர்டி பாபா தனது குழப்பத்தைத் தீர்த்து விடை கொடுத்ததை எண்ணி மகிழ்ந்தார்.

ஆதாரம்:  ஷிரடியில் இருந்து புட்டபர்த்திக்கு, எழுதியவர்: டாக்டர் R.T. காகடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக