பகவானது அருளாலும், என்னுடைய மற்றும் எனது நண்பர்களது விடாமுயற்சியாலும் திருச்சி தில்லைநகரில் ஸ்ரீ சத்ய சாயி பஜனா மண்டலி 1964ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பெற்றது. வியாழக்கிழமை தோறும் மாலை 6. 45 தொடங்கி 8 மணிவரை நாமசங்கீர்த்தனம் நடத்தப்பட்டதுடன் முக்கிய தினங்களான விநாயக சதுர்த்தி,
கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, குருபூர்ணிமா மற்றும் நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஷ பஜனை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.
வியாழக்கிழமைகளில் சுமார் 150 முதல் 200 பேர்களும், மற்ற விழா நாட்களில் 500க்கும் மேற்பட்ட பக்தர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். நாள் செல்லச் செல்ல அவ்வப்போது நகர சங்கீர்த்தனமும் நாராயண சேவை மற்றும் ஆலய உழவாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆர்வத்தோடு பலர் பங்கு கொள்வார்கள். பகவானுடைய பிறந்தநாள் விழா காலை தொடங்கி இரவுவரை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். நகரத்தில் பெரிய மதிப்பிற்குரிய ஒருவர் தலைமை தாங்க, சொற்பொழிவாளர் ஒருவர் ஆன்மீக கருத்துரை வழங்க விழாவில் சுமார் 1500 பேருக்கும் மேற்பட்டோர் பங்கு பெறுவர். பகவானது 42ஆவது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டபோது பகவானின் திருவுருவப்படம் ஓர் அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு முன்னே 2 யானைகள் செல்ல, அதன்பின் லாரியில் பெஞ்சுகள் போடப்பட்டு நாதஸ்வர, தவில் வித்வான்கள் அதில் அமர்ந்த வண்ணம், ஒலிபெருக்கி மூலம் இசை வழங்கிட, சுவாமியின் ஊர்தியருகே முன்பக்கம் தேவாரமும், பின்புறம் வேதபாராயணமும் ஓதப்பட வழிநெடுகிலும் சுமார் 100 முதல் 150 பக்தர்கள் சூழ்ந்துவர, வெகு விமரிசையாக விழா நடந்தேறியது.
திருச்சி உறையூர்வாழ் பக்தர்கள் தங்கள் பகுதியில் வாரந்தோறும் பஜனை வழிபாடு நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க உறையூரிலும், சாலைத் தெருவிலும் வாரந்தோறும் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடந்துவந்தது.
அந்த வகையில் எங்கள் பணிகள் பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டு வந்த சில மாதங்களுக்குள்ளேயே சுற்றுவட்டார ஊர்களிலும் பஜனா மண்டலி கள் ஆரம்பிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டி எங்களை அணுகியபோது நாங்களும் மனமுவந்து பஜனா மண்டலிகள் ஆரம்பிக்க உதவினோம். அவ்வாறாக லால்குடி, மாயவரம் அருகில் குற்றாலம், திருவாரூர், மற்றும் கும்பகோணத்தில் சுவாமியின் சங்கல்பத்தால் பஜனா மண்டலி எங்கள் முயற்சியின் பின்னணியில் துவக்கப்பட்டன.
இங்ஙனமாக பகவானின் அவதார மகிமையால் சதாசர்வ காலமும் நற்சிந்தனைகளும் நற்செயல்களிலும் ஈடுபாடு ஏற்பட ஏற்பட, பல பக்தர்கள் என்னிடம் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதுபற்றி அறிந்த எனது கிராமத்து பக்கத்து வீட்டுக்காரர், அந்தக் காலகட்டத்தில் அவரது குடும்ப வறுமைநிலை காரணமாக திருச்சி வாசியானதால், என்னைப் பார்க்க எனது அறைக்கு வந்தார். சுவாமியின் திருவுருவப்படம் ஒன்று எனது அறையில் நான் வைத்திருந்ததை பார்த்த அவர் சுவாமியைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். நான் சுவாமியின் அவதார மகிமை பற்றிச் சுருக்கமாக கூறி, “ஸ்ரீ ராம, கிருஷ்ண அவதாரங்களை பற்றிப் படிக்கிறோம்; ஆனால் இப்போது ஸ்ரீ சத்யசாயிராம அவதாரத்தை நேரில் காண்கிறோம்” என்றும் சொன்னேன் .கண்ணீர் மல்கிய அந்த பக்தர், தான் உடனே புட்டபர்த்தி செல்லவேண்டும் என்றும், அங்கு செல்வதற்கான வழிமுறைகள் பற்றித் தமக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டார். நான் எல்லா விவரங்களும் சொல்லி, அதற்கான குறிப்புகளையும் எழுதிக் கொடுத்தேன்.
அவரது குடும்பச் சூழ்நிலை திருப்தி அற்றதாகவும், வறுமையால் வாடுவதாகவும், மனநிம்மதி அற்றதாகவும் இருந்தது. அவர் ஓய்வூதியம் பெறுபவர். மாநில அரசுப் பணியில் இருந்தவர். அந்நாட்களில் அதாவது 1960களில், சுமார் 45 ரூபாய்தான் அவரது ஓய்வூதியம். வயதுவந்த ஒரு பெண் திருமணம் ஆக வேண்டிய சூழ்நிலை வேறு!
தமது இத்தகைய குடும்ப நெருக்கடி காரணமாகத்தான் அவர் புட்டபர்த்தி செல்ல முடிவு செய்திருந்தார். சுவாமியின் கோடானுகோடி பக்தர்களில் ஒரு சிலர்தான் அவரது அவதார நோக்கமும், மகிமையும் அறிந்துகொள்ளத் தக்கவராய் பூர்வபுண்ணிய பலனால் அவரைச் சரண் அடைந்து இருப்பார்கள். மற்ற எல்லோருமே உலகாயதமான ஆசைகளால் உந்தப்பட்ட மனப் போராட்டங்களுக்கு சுவாமியால் தீர்வு ஏற்படுமா என்பதற்காகவே சுவாமியுடன் செல்கின்றார்கள் என்பது எனது மிகத் தாழ்மையான, பாவத்தோடு கூடிய எண்ணம். அதன் காரணமாகவோ என்னவோ சுவாமி அடிக்கடி “நான் இன்னும் ஒரு உண்மையான பக்தனைச் சந்திக்கவில்லை” என்று சொல்கிறார்.
அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை அவரது மனைவி அவர்மீது அன்பற்றவராவும், அதிக ஆதிக்கம் செலுத்துபவராகவும், தெய்வப்பற்று அற்றவராகவும் இருந்தார். அதற்கு நேர்மாறாக நம்மவர் இளமைக் காலங்களில் தினமும் சூரிய நமஸ்காரம் போன்ற நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ததோடு அல்லாமல் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் பிராமணக் குடும்ப வழிமுறையிலான சூழ்நிலையில் தன்னை வளர்த்துக் கொண்டவர். மிகுந்த தெய்வ ஈடுபாடு கொண்டவர்.
ஆக புட்டபர்த்தி செல்ல முடிவு செய்த நமது கதாநாயகர், அதற்கான பயணச்செலவு மற்றும் அங்கு தங்கிச் சாப்பிடவும் இதர செலவுகளுக்கும் எவ்வளவு தேவைப்படும் என்று வினவினார். மூன்று நான்கு நாட்கள் சென்றுவர சுமார் 30 ரூபாய் ஆகலாம் என நான் சொல்லியிருந்தேன்.
அப்போதெல்லாம் விலைவாசி ஏற்றம் இல்லாமல் இருந்த நாட்கள் ஆதலால் திருச்சியில் இருந்து பெனுகொண்டா வரை செல்வதற்கே ரூபாய் ஆறு அல்லது ஏழுதான் ரயில் கட்டணம். புட்டபர்த்தி கேண்டினில் அந்நாட்களில் சுவாமி மிக மிகக் குறைந்த கட்டணத்தில் சிற்றுண்டி மற்றும் சாப்பாடு போடக் கட்டளையிட்டிருந்தார். இதுபற்றி எல்லாம் நான் எனது ஊர்க்காரரிடம் விவரித்து இருந்தேன். புறப்பட்டுச் செல்லத் துணிந்த அவருக்கு அந்த ரூபாய் முப்பதைத் தமது மனைவியிடமிருந்து எங்ஙனம் பெறுவது என்ற மனப்போராட்டம் ஒருபுறம், அதே சமயம் எப்படியாவது புட்டபர்த்திக்கு சென்று வரவேண்டும் என்ற உந்து அவா மற்றொருபுறம். அவரது அந்தப் பரிதவிப்பு நிலைக்குக் காரணம், அவரது குடும்ப வறுமை நிலையும், தெய்வப் பற்றேயற்ற மனைவியின் அரக்க சுபாவமும்தான்.
பலவாறு சிந்தித்து தமது பெண் கல்யாண விஷயம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு வருவதற்காக புட்டபர்த்தி சென்று வருவதாகச் சொன்னால் மனைவி சம்மதிப்பாள் என்று முடிவு செய்தார் நம்மவர். அவ்வாறே மனைவியிடம் எல்லா விவரங்களையும் சொல்லி செலவுக்காக ரூபாய் 30 தேவைப்படும் என்றும் கூறினார். “கல்யாண விஷயம் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள 300 மைல் சென்று ‘குறி’ கேட்க வேண்டுமா? திருச்சியிலும் அதனருகிலும் எவ்வளவு சாமியார்கள் அல்லது குறி சொல்பவர்கள் இருக்கிறார்கள்?” என்று மிகவும் ஆக்ரோஷமாக வாதிட்டார் அவர் மனைவி. பலவாறான சமாதான வார்த்தைகள் சொல்லி மன்றாடி முடிவில் அந்தப் பெண்மணியிடம் ரூபாய் 30 பெற்றுக்கொண்டார் நம்மவர். அதனை அவர் அம் மாதத்திற்குள்ளாக மற்றவர் வீடுகளில் இறந்தோர் திதி தினங்களில் சாப்பிட்டு தட்சணையாகப் பெறும் பணத்தை கொண்டுவந்து கொடுத்து கணக்கைத் தீர்த்துவிட வேண்டும் என்று உத்தரவும் போட்டுவிட்டாள் கெடுபிடி மனைவி.
நமது கதாநாயகர் புட்டபர்த்திக்குப் பயணமானார் .சுவாமி அவரை நேர்காணலுக்கும் அழைத்தார். சுவாமி அவர் தமிழர் என்பதால் அவரிடம் தமிழிலேயே “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “I come from Trichy” என்று ஆங்கிலத்தில் விடை பகர்ந்தார் நம்மவர். அவர் குடுமி வைத்திருப்பார், பஞ்சகச்சம் வேஷ்டி கட்டி இருப்பார். ஒருவேளை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான அவரது இந்த வகையான தோற்ற அமைப்பு அவருக்கே ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்து இருக்கலாமோ என்னவோ. தமக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சுவாமிக்குத் தெரியட்டும் என்று எண்ணி ஆங்கிலத்தில் பதிலளித்து இருப்பாரோ என்று தோன்றுகிறது. அவர் அவ்வாறு ஆங்கிலத்தில் பதில் பகர்ந்த உடனேயே நமது சுவாமி மற்ற அவரது வீட்டு விவரங்கள் யாவற்றையும் தெலுங்கில் மடமடவென்று சொல்லி முடித்துவிட்டார். நம்மவருக்கோ தெலுங்கு தெரியாது. ஒன்றுமே விளங்காத நிலையில் இருந்த அவருக்கு சுவாமி விபூதி வரவழைத்துக் கொடுத்து, கதவை திறந்து வெளியேயும் அனுப்பிவிட்டார்.
நம்மவருக்கு ஒரே குழப்பம். குழப்பத்தின் உச்சகட்டம் அவரது மனைவியிடம் என்னவென்று சொல்வது என்பதுதான். ஒன்றும் புரியாமல் அங்கு ஒருநாள் மட்டும் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டுத் திருச்சி வந்து சேர்ந்தார். விடியற்காலை அவர் வந்ததும், “என்ன சொன்னார் அந்தச் சாமியார்? நமது பெண்ணுக்குக் கல்யாணம் எப்போது ஆகும் என்று ஏதாவது சொன்னாரா?” என்பது போன்ற சரமாரியான கேள்விகளைக் கேட்டார் அவரது மனைவியார்.
நம்மவர் கையைப் பிசைந்தவாரே “நான் என்ன செய்வது, அவர் தமிழில் என்னிடம் பேச ஆரம்பித்ததற்கு அதற்கு நான் ஆங்கிலத்தில் பதில் சொல்ல, அவர் மற்ற எல்லாவற்றையும் தெலுங்கில் கடகடவென்று சொன்னது எனக்கு எதுவும் விளங்கவில்லை. இடையே தெலுங்கு தெரியாது என்று நான் சொல்லியும் அவர் தொடர்ந்து தெலுங்கிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு என்னை வெளியே போகச் செய்துவிட்டார்” என்று சொன்னதும் அவர் மனைவி கோபத்தின் சிகரத்தில் ஏறி விட்டார். சரமாரியாக அவரை நிந்தித்ததோடு அல்லாமல் என்னையும் குறிப்பிட்டு, “அவன் ரயில்வேயில் வேலை பார்ப்பவன். அடிக்கடி பயணம் செய்யச் சலுகைகள் உண்டு, அவன் போகிறான் என்பதால் நீங்கள் இப்படி காசைச் செலவழித்து ட்டு, ஒரு உபயோகமும் இல்லாமல் ஊர் சுற்றி வந்து நிற்கிறீர்களே! எனக்குத் தெரியாது. இந்த மாதம் இன்னும் 15 நாட்கள்தான் உள்ளன, எப்படியேனும் இந்த முப்பது ரூபாய் சம்பாதித்து என்னிடம் தர வேண்டும்” என்று ஒரே கூச்சலிட்டபடி அவரைப் பலவாறு அவமதித்துப் பேசினாள். கணவருக்கு எந்த உபசரிப்பும் அன்று கிடையாது. நான் அவருக்குக் கொடுத்திருந்த சுவாமியின் சிறிய திருவுருவப் படத்தை ஒரு மேடையில் வைத்தபடி அவர் அதனருகே தலை வைத்து கண்ணீர் சிந்தியவாறே படுத்துக் கண்ணயர்ந்து விட்டார்.
மாலை மணி 5.30... அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருந்த ‘ராமகிருஷ்ணா’ சினிமா கொட்டகைக்கு அந்த அம்மாள் கிளம்பிவிட்டார். அவள் அடிக்கடி சினிமா பார்ப்பது வழக்கம். பெண்கள் வரிசையில் அந்தப் பெண்மணி நின்றிருந்தார். சினிமா கொட்டகையில் இன்னும் டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. திடுமென்று அந்த அம்மாளது இடதுகால் பெருவிரலில் பட்டென்று வந்து அடித்த ஒன்றைக் குனிந்து எடுத்தாள்.
அது 16 ஆக மடிக்கப்பட்ட ஒரு பத்து ரூபாய்த் தாள். பிரித்தவள் பக்கத்தில் இருந்த ஒரு சிலரை அவர்களுடையதா என்று கேட்க, அவர்கள் இல்லை என்று சொன்னவுடன் கையில் வைத்துக் கொண்டாள். மறுபடியும் அதே இடதுகால்! ஒரு ‘பட்’! பதினாறாக மடிக்கப்பட்ட மற்றொரு தாள்! பிரித்துக் கையில் வைத்துக் கொண்டதும், பதினாறாக மடிக்கப்பட்ட மற்றொரு பத்து ரூபாய்த் தாள்! ஆக ரூபாய் 30! புட்டபர்த்திக்கு செல்ல ஒரு பக்தன் கெஞ்சிக் கூத்தாடி பெற்றுச் செலவு செய்த அதே ரூபாய் 30. நல்ல காரியத்துக்கு என ஒரு சிறு தொகையைச் செலவு செய்ததற்காக மனைவியால் நிந்திக்கப்பட்டு, அன்று பூராவும் சாப்பிடாமல் கண்ணீர் சிந்தியவண்ணம், தம்முன் தன்னைக் கிடத்தியவாறிருந்த, நற்சிந்தனை மிக்க ஒரு பக்தனுக்காக தமது ‘எங்கும் நிறை’ தன்மையாலே அந்த அவலகுணம் படைத்த பெண்ணுக்கு ரூபாய் முப்பதைத் திருப்பி அளித்து “பொறுக்கி கொள்” என்று செய்திட்ட நமது சுவாமியின் லீலா வினோதம் எத்தன்மையது என்று சிந்தியுங்கள்! வினோதம்! வினோதம்!!
இந்த விஞ்ஞான உலகில் இத்தகையதொரு தெய்வீக லீலை நடைபெற்றுள்ளது. இது போன்ற ஆயிரமாயிரம் அற்புத லீலைகளைப் புரிந்துள்ள நமது சுவாமியிடம் இருந்து ஏதும் விளம்பரம் உண்டா? மாறாக இதுபோன்ற பிரமிக்க வைக்கும் செயல்கள்தாம் அவருடைய சர்வ சாதாரணத் தன்மை என்பது உண்மையிலும் உண்மை!
நிற்க ,அந்தப் பெண்மணி கையில் மூன்று 10 ரூபாய் நோட்டுகளை மடக்கி வைத்துக்கொண்டதும், அந்த சினிமா கொட்டகையில் டிக்கெட் கொடுக்கத் தொடங்கவே, டிக்கெட் கொடுக்கும் இடம்நோக்கிப் பெண்கள் நகர்ந்தார்கள், இந்த அம்மாளும் பின் நடந்தாள். சரியாக இந்த அம்மாள் கவுண்ட்டர் அருகே சென்றதும், ஹவுஸ்ஃபுல் பலகை தொங்கவிடப்பட்டது.
வீடு திரும்பிய அவள் தன் கணவன் அப்போதுகூட எதுவும் சாப்பிடாமல் படுத்துக்கிடப்பதைப் பார்த்தும், ஏதும் மனவருத்தம் கொள்ளாமல், அவர் கேட்கும்படி நீங்கள் “புட்டபர்த்தி சென்று ரூபாய் 30 இழந்தீர்கள். நான் சினிமா கொட்டகைக்குச் சென்று 30 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்துள்ளேன்” என்றார். உடனே அவர் உற்சாகத்துடன் எழுந்து நடந்ததைக் கேட்டறிந்ததும் “ஆ சாயி மோகன் சொன்னதுபோல் பாபா இறைவன்தான்! இல்லாவிட்டால் சினிமாக் கொட்டகையில் அவ்வளவு பேர் இருக்கையில் உனக்கு மட்டும் 30 ரூபாய் அதுவும் நான் புட்டபர்த்தி சென்றதற்காகச் செலவழித்தது திரும்பக் கிடைக்குமா? விந்தையிலும் விந்தை என்ன தெரியுமா? அந்த 30 ரூபாய்களும் முடிச்சுப் போன்று மடிக்கப்பட்ட பத்து ரூபாய் தாள்களாக, திரும்பத் திரும்ப மூன்று முறை உனது இடது கால் கட்டைவிரலிலேயே யாரால் அடிக்க முடியும்? பாபா சர்வவியாபி தான்! அதில் சந்தேகமே இல்லை! உனக்கு இதுபற்றி எதுவும் விளங்கவில்லையா? இது மாதிரி எங்காவது நடக்குமா என்றுகூட உன் உள்மனம் எண்ண வில்லையா?” என்று கூறிய வண்ணம் கண்ணீர் வடித்து நின்றார். அதற்கு அந்தப் புனிதவதி, “இதில் என்ன அதிசயம்? எப்போதாவது தெருவில் செல்லும்போது நமக்குப் பணமோ வேறு பொருளோ கிடைப்பதில்லையா? 300 மைலுக்கு அப்பால் இருக்கும் பாபாதான் கொடுத்தார் என்று எண்ணுவது உங்கள் முட்டாள்தனம்” என்று அவளுக்கே உரித்தான அகங்கார சுபாவத்தில் சொல்லிவிட்டு எப்போதும் போல் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் வம்படிக்கச் சென்றுவிட்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கமாக வார முடிவில் திருச்சியிலிருந்து நான் எனது கிராம வீட்டிற்குச் செல்வது வழக்கம். திடுமென்று நமது கதாநாயகர் என் வீட்டிற்கு வந்துவிட்டார். அகல விரிந்த கண்களுடனும், பதற்றத்துடனும் நடந்த யாவற்றையும் என்னிடம் விவரித்துக் கண்ணீர் வடித்தார். “ஸ்ரீ பாபா அவதார புருஷர்தாம்! அந்த மகானுபாவனை நேரில் கண்டு தரிசிக்கும் பாக்கியம் எனக்கு உன்னால் கிட்டியது” என்று கூறிய அவர், “சரி எனக்கு ஒரு சந்தேகம்” என்றார். “என்ன?” என்றேன்.
“ஸ்ரீ பாபா தமிழில் கேட்டதற்கு நான் ஆங்கிலத்தில் பதில் அளித்தபோது, பழி வாங்குவதுபோல் தெலுங்கில் மற்றதை ஒரு அவதார புருஷர் சொல்லலாமா? நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஆனால் இதில் ஏதோ தத்துவம் இருக்க வேண்டும் என்பதாக உள்மனம் எண்ணினாலும், எவ்வளவு யோசித்தாலும், விளக்கமாக ஏதும் புரியவில்லை. உனக்கு ஏதாவது விளங்குகிறதா?” என்று கேட்டார்.
நான், “சுவாமி எது செய்தாலும் அதில் தெய்வீகம் மிளிரும். அன்று சுவாமி எல்லாவற்றையும் தெலுங்கில் சொல்லாமல் தமிழிலேயே சொல்லியிருந்தால், ‘சினிமா கொட்டகை அற்புதம்’ நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டா? அந்த அற்புதத்தை அவர் நிகழ்த்தியது அவரை எவரும், ஏன் நீங்கள்கூட, பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.. உங்கள் பக்தியை மேலும் மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பது ஒரு சங்கற்பம் !அதே நேரத்தில் இந்த அற்புதம் மூலம், உங்கள் மனைவிக்கு நல்ல சிந்தனை ஏற்பட ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவளது கர்மா நற்சிந்தனைக்கு வழி ஏற்படுத்தவில்லை. உங்கள் பக்திநெறி மேலும் பன்மடங்காக வேண்டும் என்று பாபா சங்கல்பித்தது நீங்கள் இயற்றியுள்ள தவப்பலன்!” என்று நான் சொன்னதும் “ஆஹா! என்ன விளக்கம்! என்னைவிட வயதில் மிகச் சிறியவனாக இருந்தாலும், அவர் அருளால் உனக்கு உண்மை விளக்கம் சொல்லமுடிகிறது. நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கண்ணீர் சிந்தியபடியே சொன்னார். பிறகு அவர் திருச்சி சென்றுவிட்டார்.
சமுதாயத்தில் மிகவும் சாதாரணமான என்போன்ற ஒருவனுக்கு பகவான் தொடர்பான எனது அனுபவத்தில் இதுபோன்ற அவரது தெய்வீக அருள் லீலைபற்றி அறிய ஸ்ரீ பாபா வாய்ப்பளித்துள்ளார். இதுபோன்ற தவப்பயனான வாய்ப்புகளால், நாம் கற்கும் பாடம் அவரது பொற்பாதங்களைச் ‘சிக்’கென பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதானே! இதனைப் படிக்கும் உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். யாவரும் அப்பொற் பாதங்களை வணங்கி ஏற்போம். உய்யும் வழி அதுதான்! ஜெய் சாய்ராம்.
(ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக