தலைப்பு

ஞாயிறு, 12 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 1| உயிர் காத்தளித்தல் (பாகம் 2)


அன்று காலை எனக்கு பகவானின் நேர்காணல் கிடைத்தது. நேர்காணல் அறைக்குள் சென்றேன். ஏற்கனவே நான் என்னுடன் எடுத்துச் சென்றிருந்த ஒருஆப்பிள் பழத்தை ஒரு கையில் மறைத்து வைத்துக் கொண்டு சிறிது தயக்கத்துடன் காணப்பட்டதைக் கண்ட சுவாமி, “சுவாமிக்குக் கொடுக்க ஆப்பிள் கொணர்ந்து இருக்கிறாய். அதை நறுக்க உன் சட்டைப் பையில் ஒரு கத்தியும் வைத்திருக்கிறாய்... உம் நறுக்கிக் கொடு, சுவாமி சாப்பிடுகிறேன்” என்றார்.
என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை உடனே சுவாமி சொன்னது போலவே எனது சட்டைப் பையில் நான் தயாராக எடுத்துச் சென்றிருந்த கத்தியை எடுத்து ஆப்பிளை நறுக்கி ஒரு துண்டை சுவாமியிடம் கொடுத்தேன். சுவாமி அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார். மறுபடியும் ஆப்பிளை நறுக்க நான் முனைந்தபோது “போதும், சுவாமிக்கு ரொம்பவும் சந்தோஷம், மீதமிருக்கும் ஆப்பிளை சுவாமியின் பிரசாதமாக நீ எடுத்துச் செல்” என்றார்.

கிருஷ்ண பகவானைப் பார்க்கச் சென்ற குசேலன் மிகவும் நைந்துபோன ஒரு துணியில் சிறிது அவலை கட்டி எடுத்துச் சென்றிருந்தார். குசேலனைத் தமது அரண்மனையில் சகல மரியாதைகளுடனும் வரவேற்று உபசரித்த கிருஷ்ணன் தமக்குக் கொடுப்பதற்காக குசேலன் என்ன எடுத்து வந்திருக்கிறார் என்று கேட்கிறார்! தான் ஒரு நைந்த துணியில் கட்டிக்கொண்டு சென்றிருக்கும் அவலைப் பிரிப்பதற்கே வெட்கப்பட்டுத் தாமதித்த குசேலனிடம் இருந்து சிறிதான அந்த அவல் மூட்டையைப் பிடுங்கி ஆர்வத்துடன் பிரித்து, அவலை ஆவலுடன் சாப்பிட்ட கிருஷ்ணரின் செய்கையைத்தான் பகவான் என்னிடம் இருந்த ஆப்பிளை அவராகவே கேட்டுச் சாப்பிட்ட சம்பவம் நினைவுபடுத்தியது. அவலை ஒரு நைந்த துணியில் முடிந்து எடுத்து சென்றிருந்த குசேலனின் நிலைமையைப் போலவே நான் எடுத்துச் சென்றிருந்த ஆப்பிளும் மிகவும் சிறிதான ஒன்றாய் இருந்தது. சுவாமிக்கு அதை எப்படிக் கொடுப்பது என்பதிலே எனக்குத் தயக்கமும் இருந்தது. சுவாமி அந்தத் தயக்கத்தை புரிந்துகொண்டு தான் “உம்... ஆப்பிளைக் கொடு, நான் சாப்பிடுகிறேன்” என்றார்.

நான் குசேலனை ஒத்ததோர் உன்னதப் பிறவி இல்லை என்றாலும் அந்தக் கிருஷ்ணனே நமது பகவான் என்பதை ஆன்மீக உலகம் புரிந்துகொண்டு வருகிறதே! என்னிடமிருந்து ஆப்பிளைப் பெற்று சாப்பிட்ட பிறகு சுவாமி “உன் ஊரில் உனது அண்ணனுக்கு நீ புறப்பட்ட போது இருந்த உடல்நிலை மேலும் சிக்கலாகி இறந்துவிட்ட நிலை ஏற்பட்டுவிட்டது. சுவாமி அவர் பக்கத்திலேயே இருக்கிறேன். உன் ஊரிலிருந்து நீ சென்னையில் தங்கிய உனது உறவினர் விலாசத்திற்கு இரண்டு தந்திகள் அனுப்பியுள்ளார்கள். நீ உனது ஊரில் புட்டபர்த்தி விலாசம் கொடுத்திருந்தால் தந்திகள் இங்கே வந்திருக்கும் ஆதலால் நீ உடனே உனது ஊருக்குத் திரும்பு” என்று கூறினார்.

நான் சற்றுத் தயங்கியவாறே “சுவாமி நான் ரயில்வே பணியாளன், ரயில்வே பாஸ் எனக்கு உள்ளது. தங்களைத் தரிசித்த பிறகு ஊர் திரும்பும் வழியில் பல தலங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்” என்று சொன்னதும், சுவாமி “நீ போக எண்ணிய எல்லா ஸ்தலங்களின் தெய்வங்களையும் இங்கேயே தரிசித்துவிட்டாய். ஆதலால் செல்லும் வழியில் திருப்பதி மட்டும் சென்று உன் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு உடனே ஊர் போகவும்” என்றார். நான் “சுவாமி இது மார்கழி மாதம். மேலும் நாளைய தினம் சனிக்கிழமை திருப்பதியில் தரிசன க்யூவில் தாங்கொணாக் கூட்டம் இருக்கும். நான் எப்படி உடனே ஊர் திரும்ப முடியும்?” என்று சொன்னதும் சுவாமி “நீ அங்கு செல், உனக்கு நல்ல தரிசனம் காத்திருக்கும்” என்று சொன்னார். எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. காரணம் முன்பெல்லாம் இப்போது போன்று பணம் கட்டி தரிசிக்கும் ஸ்பெஷல் தரிசனம் கிடையாது, தர்மசேவை மட்டும்தான் ஓரிரு நாட்கள் கூட க்யூவில் நிற்கவேண்டி இருக்கும். பிறகு சுவாமியிடம் நான் அவ்வாறே செய்கிறேன் என்றதும் சுவாமி தன் பொற்கரத்தை அசைத்து மஞ்சள் நிறத்திலான ஒரு மருந்து மாத்திரையை சிருஷ்டித்தார். அதை என்னிடம் கொடுத்தவாறு “ஊருக்குச் சென்றதும் இதை உன் அண்ணனுக்குக் கொடு, சிறிது நேரத்திலேயே அவர் உடல் உபாதை வேறுவிதமாய் மாறி, விரைவில் குணமாகி விடுவார்” என்று கூறினார்.

பயபக்தியுடன் நான் சுவாமி கொடுத்த மாத்திரையைப் பெற்றுக்கொண்டதும் சுவாமி விபூதி சிருஷ்டித்து எனக்கு இட்டுவிட்டு, வாயில் போட்டு உடனே ஊருக்குத் திரும்பு என்று மறுபடியும் கூறி என்னை வெளியே அனுப்பினார். நானும் உடனே திருப்பதி செல்லத் திட்டமிட்டு எனது பொருட்களுடன் பயணித்தேன். மறுநாள் காலை திருப்பதி சன்னிதியில் எனது வாழ்வில் முதன்முதலாக நான் நிற்க நேர்ந்த போது திரளான பக்தர் கூட்டத்தைப் பார்த்து பிரமித்து விட்டேன். விசாரித்ததில் க்யூ இருக்கும் நிலையில் குறைந்தது 20 முதல் 24 மணி நேரத்துக்குப் பிறகுதான் ஏழுமலையானைத் தரிசிக்க முடியும் என்றார்கள்.
 கொடிமரத்தடியில் நமஸ்கரித்துவிட்டு ஊர் திரும்பி விடவேண்டியதுதான் என்று முடிவு செய்து கொடிமரத்தடியின் பக்கம் சென்றேன். அப்போது ஒருவர் என்னிடம் வந்து வேறொரு இடத்தில் நின்று கொண்டிருந்த சிலரைக் காட்டி “தயவுசெய்து அங்கு வாருங்கள் எனது முதலாளி உங்களைக் காண அழைக்கிறார்” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடன் அங்கு சென்றேன். அங்கு சில ஆடவர்களும் பெண்டிரும் இருந்தனர்.

என்னை அழைத்துச் சென்றவர் அங்கிருந்த ஆடவர்களில் ஒருவரைச் சுட்டிக்காட்டி, அவர் தங்கள் முதலாளி என்றும், விஜயவாடாவில் சில கம்பெனிகள் நடத்துகிறார் என்றும் சொன்னார். அவரது முதலாளி வருடாவருடம் ஏழுமலையானுக்கு விசேஷ பூஜா கைங்கரியம் செய்பவர் என்றும் அந்த வருடமும் அன்றைய நாளில் அந்தப் பூஜை நடைபெற உள்ளது என்றும் விவரித்தார். அவர்கள் அழைத்து வந்த ஒரு பிராமணருக்கு வழியில் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரைத் தொடர்ந்து அழைத்து வர முடியவில்லை என்றும், அவருக்குப் பதிலாக நான் சம்மதித்தால் தங்களுடன் பூஜா கைங்கரியத்திற்கு அழைத்துச் செல்ல முதலாளி விரும்புவதாகவும் சொன்னார். அவர்களில் மற்ற எல்லோரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தமிழ் பேசத் தெரியாதவர்கள் என்றும் கூறினார்.

நான் எனக்கு அடித்த அதிர்ஷ்டத்தை எண்ணிய அதே நேரத்தில் பகவானது நேர்காணலில் அங்கு உனக்கு நல்ல தரிசனம் காத்திருக்கும் என்று அவர் சொன்னதன் சங்கல்ப விசேஷத்தை உணர்ந்து மெய் சிலிர்த்தேன். இருதுளிக் கண்ணீர் சிந்தினேன்.
அவர்களுடன் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். சன்னிதி சென்றதும் அவர்களுக்காகப் பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு மிக அருகில் அவர்களுக்கு முன்பாக நான் அமர்த்தப்பட்டேன். கோயில் பட்டர் ஒருவர் எனக்கு மரியாதைகள் செய்தார். தலையில் பரிவட்டம் கட்டினார், உடம்பில் சந்தனம் தடவினார், கழுத்தில் மாலை அணிவித்தார். விஜயவாடா புரோகிதர் வராததால் அவருடைய அந்தஸ்து எனக்குக் கிடைத்தது. அவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் எனக்குக் கிட்டின. மிகவும் அண்மையில் இருந்து ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதை என்னால் நம்பவே முடியவில்லை. நிஜம்தானா என்று அடிக்கடி என்னையே வினவிக் கொண்டேன். என்னே ஸ்ரீ பாபாவின் அருள் சங்கல்ப விசேஷம்!

பிறகு ஏழுமலையானுக்கு விசேஷ அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்யும் மார்பகப் பகுதியில் ஏற்கனவே இருந்த வாசனாதி பச்சைக் கற்பூரம் நீக்கப்பட்டு, புதியதாக பச்சைக் கற்பூர அலங்கார ஆராதனை நிகழ்த்தப்பட்டது. பிறகு கற்பூர ஆராதனைவரை சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து தரிசிக்கும் பேரும் மற்றபடி விசேஷமான மரியாதைகளும் பிரசாதங்களும் எனக்கு கிட்டின. வெளியே வந்தபிறகு எனக்குத் தனியாக நிரம்பப் பிரசாத வகைகளும் பழவகைகளும் பேக் செய்து ஒரு காரில் என்னை திருப்பதி ரயில்வே ஸ்டேஷனுக்கும் கொண்டு விட அந்த முதலாளி அவரது சிப்பந்திகளுக்கு ஆக்ஞாபித்து, நானும் அழைத்துச் செல்லப்பட்டேன்.

மறுநாள் விடியற்காலை எனது ஊரில் நான் ரயிலில் இருந்து இறங்கியதும் வண்டிக்காரர்கள் ஐயா வந்துவிட்டார் என்று சொல்லிய வண்ணம் என் மூட்டை முடிச்சுகளைப் பெற்று ஒரு வண்டியில் வைத்தனர்.

(தொடரும்...)

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக