தலைப்பு

வியாழன், 29 செப்டம்பர், 2022

இடியைத் தலையிலும்.. இல்லறத்தைத் தோளிலும்.. பாபாவை இதயத்திலும் சுமந்த சிவகாசி M.R பிரகாசம்!

வாழ்க்கையில் கஷ்டமா? வியாபாரத்தில் நஷ்டமா? இந்த பாபாவை வழிபட்டு என்ன பயன்? பாபாவால் தான் இத்தனை கஷ்டங்களும்... எனது எல்லா இன்னல்களுக்கும் பாபாவே காரணம் என குறை சொல்பவர்களுக்கு பெரும் பக்தர் பிரகாசம் வாழ்க்கை ஒரு பகவத்கீதைப் புத்தகம்... அத்தனை இடியையும் தலையில் சுமந்தபடி இதிகாச பாபாவை இதயத்தில் சுமந்த ஒரு உன்னதமானவரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


நியாயமாக பிரபலங்களின் லிஸ்டில் சேர்க்க வேண்டிய பக்தர் எம்.ஆர்.பிரகாசம்! நாம் கற்பனை செய்வது போல் பணத்தால்/புகழால் / பதவியால் வருவது அல்ல நிஜமான பிரபல்யம்! நாம் இறைவன் பாபாவை நம் இதயத்தில் வைத்திருப்பது அத்தனை பெரிய விஷயமல்ல.. ஆனால் பாபாவே தன் இதயத்தில் வைத்திருந்த ஒரு பக்தர் இவர்.. அவரின் வாழ்வை நீங்கள் வாசிக்கும் போதே உணர்வீர்கள்! 


சேலத்தில் தான் பிரகாசம் விளைகிறது.. பிறகு உசிலம்பட்டிக்கு மாற்றம்.. மாற்றம் வந்ததே தவிர பொருளாதார முன்னேற்றம் வரவில்லை.. எப்படி வரும்? 10 பேர் கொண்ட குடும்பம்! அதிர்ஷ்டமோ தனியாக வரும்... ஆனால் கஷ்டமோ சேர்ந்தே வரும்..... 4 தங்கைகளை கரைசேர்க்கும் பொறுப்புக்காரராகிறார்! அப்போதே பெரிய முருக பக்தர்.. ஐயப்பனுக்கு விரதம் இருப்பார்... வயதோ வறுமையைப் போலவே முதுகில் அதிகரிக்கிறது! சரி இனிமேல் நமக்கு எதற்கு திருமணம்? என நினைக்கிறார்... ஞானத் துறவிகளின் வாசத்தில் இருப்பது பிரகாசத்திற்கோ மிகவும் பிடித்தமான விஷயம்... திருமணம் இல்லாமல் இப்படியே இருந்துவிடுகிறேனே என கேட்கிற போது..

பார்வையற்ற ஒரு ஞானி.. உனக்கு என் இனத்திலேயே பெண் கிடைக்கும் எனக் கூற... திருமணமாகிறது.. குணவதி சுலோச்சனாவுடன் திருமணம்... பிறகு தான் தெரியவருகிறது அந்த ஞானிக்கும் தன் மனைவிக்கும் ஒரே கோத்திரம் என.. ஞானியின் திருச்சொல் என்றைக்கு பொய்த்தது!

உசிலம்பட்டியில் நடத்திய அதே பாலாஜி எலெக்ட்ரிக் ரிப்பேர் கடை, சிவகாசிக்கு ஶ்ரீதேவி எலக்ட்ரிகல்ஸ் என்ற பெயரில் மாற்றலாகிறது. குறைந்த வருமானமே...! மூன்று மணியான குழந்தைகள்! வளர்க்க வேண்டும்...

பெற்றுவிட்டோம் சில பெற்றோர் போல் செல்லம் கொடுத்து கெடுப்போம் என்ற எண்ணம் இல்லை அவருக்கு.. சிவன் கோவிலில் சிறுவர் சங்கத்தில் குழந்தைகளைச் சேர்த்தும்.. இந்து மதம் மட்டுமல்லாமல் பிற மதங்கள் பற்றியும் அறிய வேண்டும் தன் வாரிசுகள் என அவர் அதற்குரிய இடத்தைத் தேடுகிறார்.. இதுவே அவரின் இதய விரிவுக்கான முதல் உதாரணம்! மத வழிபாடு பிரகாசத்திற்கு இருந்ததே தவிர மதவெறி இருந்ததே இல்லை!       தன் வாரிசுகளுக்காக ஆன்மீகமாய் அப்படி தேடுகிற போது ஒரு உறவினர் தெரிவித்த இடமே... சிவகாசி ஸ்ரீ சத்ய சாயி சமிதி!


சகஜானந்தா சுவாமிஜி (சின்மயானந்தர் சீடர்) "ஸ்ரீ சத்ய சாயி பாபா ஒரு மாபெரும் அவதாரம்.. அவரை எந்த ஒரு மனிதனாலும் அளவிட முடியாது!" என்று சிலாகித்து சொல்லியதை அந்த உறவினர் தெரிவிக்க... ஸ்ரீ கிருஷ்ணரை தேடிய நண்பர் குசேலராய் நடக்கிறார்... 

அது ராமநவமி... பாபா சமிதியை பார்க்கிறார்.. செருப்பு அடுக்கி வைத்திருக்கிற ஒழுங்கு, மலர் அலங்கார நேர்த்தி, ஆண்வரிசை தனி, பெண் வரிசை தனி என்கிற ஒழுக்கம், பஜனையின் அமுதம் எல்லாவற்றையும் உள்வாங்கி பாபா சாதாரணமானவர் அல்ல என்பதை முதலில் உணர்கிறார்... First impression Best impression! 

விழுதுகளுக்காகத் தேடிப்போய் ஒரு போதிமரத்திடம் வந்த புத்தர் எம்.ஆர்.பிரகாசம்!


தான் செய்து வந்த வியாபாரம் சரிவர நிகழவில்லை... நஷ்டம்...ஏற்கனவே தங்கைகளுக்கு நிகழ்த்திய திருமணத்தில் கடன்... சிவகாசிவாசிகளுக்கு வெய்யில் கொளுத்தும்.. ஆனால் அவரே பிரகாசம் அல்லவா... ஆக கடன் மட்டுமே அவரைக் கொளுத்தியது! உறவினர் அவமரியாதை... சுற்றத்தார் அவமானம்... 

பாபாவிடம் பக்தனாய் வந்த பொழுதிலேயே எவருக்காவது இப்படி நேர்ந்திருந்தால் பழியைத் தூக்கி பாபாவிடம் போட்டுவிட்டு ஃபோட்டோவை தூக்கி வீசி எறிந்திருப்பர்... ஆனால் பிரகாசம் கலங்கவில்லை... தன் கர்மாவே காரணம் என உணர்கிறார்... இந்த சத்தியத்தையே தனது வாரிசுகளுக்கும் போதிக்கிறார்! 

"கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்கிற இராவணன் அல்ல பிரகாசம்... அனுமனாய் இதயத்தில் பாபாவை அவர் பதிந்து வைத்தாரா? இல்லை.. பாபாவே அவர் இதயம் தேடி அமர்ந்துவிடுகிறார்! 

அது தான் சத்தியம்!


1991 /1992 காலகட்டம்... முதன்முதலில் பாபா தரிசனம்... சமிதியினரோடு கொடைக்கானலில்... முதல் தரிசனம்.. பாபா பிரகாசத்தை உற்றுப் பார்க்கிறார்... சூரியன் தன் பிரகாசத்தைப் பார்க்கிறது... உலகமோ பிரகாசத்தின் வறுமை இருட்டையே பார்த்த காலகட்டம் அது... பாபா பக்தரின் ஆன்மாவையே பார்க்கிறார்! பாபாவை தரிசித்து அவர் தனது வாரிசுகளிடம் சொன்ன வார்த்தை தான் அந்த வாரிசுளின் வாழ்க்கைக்கு விளக்கை ஏற்றி விடுகிறது ... 

"பாபா கடவுளே தான்...அவதாரம் எடுத்திருக்கிறார்.. உலகமே வந்து கொண்டிருக்கிறது" என்ற அவரின் முதல் தரிசன அனுபவம் அவரது குடும்பத்திற்கு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது!

பாபாவுக்கு முன் அவர் தரிசிக்காத மகான்களும் இல்லை... செல்லாத ஆன்மீக மையங்களும் இல்லை... வாசிக்காத புத்தகங்களும் இல்லை... அந்த கங்கை கடைசியில் பாபா எனும் சிவத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டது.. "பாபாவை தாண்டித்தான் மற்ற தெய்வங்கள்" என்கிற சத்தியத்தை உணர்ந்தது! அதை உரைத்தது!


பாபாவிடம் பக்தரான உடனே கோடீஸ்வரராகிவிட வேண்டும்... வெள்ளை உடை அணிந்த உடனே பதிவு உயர்வு கிடைத்துவிட வேண்டும் என்ற எந்த கோரிக்கையும் பிரகாசத்திற்கு இல்லை... முந்தைய வியாபாரம் நஷ்டம் என்று தீப்பெட்டி உருவாக்கும் தொழில் செய்கிறார்.. மழை வந்து அதிலும் நஷ்டம்... ஊருக்கோ மழை... அவர்

தலையில் மட்டும் இடி... ஆனால் அவர் கலங்கவே இல்லை... தைரியம் இழக்கவே இல்லை.. மலை ஏற்றம் இந்த மனித வாழ்க்கை... பாபா தன்னையே ஊன்றுகோலாக்கி தருகிறார்... சிறகுகள் வேண்டும் அப்போதே மலை உச்சியை சீக்கிரம் அடைந்துவிட முடியும் என்கிற பேராசை அவருக்கு இல்லை! வறுமையிலும் நேர்மை... கஷ்டத்திலும் நெஞ்சுறுதி, நஷ்டத்திலும் பாபா வழிபாடு.. பிரகாசம் வேறு பஜனை வேறல்ல.. இறுதி மூச்சு வரை அவரின் உள்மூச்சும் வெளி மூச்சும் பஜனையிலேயே கலந்திருந்தது... அவர் பாடினால் துக்காராம் பாடுவது போல்... பிறர் மெய் சிலிர்ப்பர்... துக்காராம் வாழ்க்கை போலவே அவரது வாழ்க்கையும்...  


தான் வாங்கிய முன்னூறு ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாமல் நேர்மையாளர் பிரகாசம் சில நாள் தவணை கேட்கிறார்... இப்படி ஆகிவிட்டதே என வருந்திய படி சைக்கிள் மிதித்து வருகையில்

பத்ரகாளி அம்மன் கோவில் வாசல் அருகே 300 ரூபாய் சுருண்டு கிடக்கிறது.. அப்போது பத்து ரூபாய் கிடந்தாலே பாக்கெட்டில் போட்டுவிட்டு வரும் சூழ்நிலைதான்.... அவருக்கு அந்த 300 ரூபாய் கடன் அடைப்பதற்கு அவசியத் தேவையே...ஆனால் பிரகாசம் பாபா பக்தர்.. அதை எடுத்து சிறிதும் சலனமில்லாமல் கோவில் உண்டியலில் போட்டுவிட்டு இல்லம் வருகிறார்... பசியோடு விருந்தளிப்பது என்பது பக்தியின் உச்சபட்ச நிலை! அதுவே பிரகாச நிலை!

இத்தகைய நேர்மையாளரிடம் கள்ளநோட்டை மாற்றி கொடுங்கள் நிறைய பணம் கிடைக்கும் என்று சிலர் ஆலோசனை சொல்கின்றனர்... அந்தப் பாவப்பணம் தேவையில்லை என்கிறார்! பெயருக்கு தகுந்தாற் போல் வாழ்வது ஒரு சிலரே அதில் ஒருவர் பிரகாசம்! 


தீப்பெட்டித்தொழில் மூழ்கியவுடன் ரஸ்னா கலக்கும் தொழில்... அதிகாலை எழுந்து பாபாவுக்கு சுப்ரபாதம் பாடி..
அடிபம்பில் நல்ல நீர் நிரப்பி... ஒருவர் இருவர் அல்ல அவரின் ஐந்துபேர் கொண்ட குடும்பமே வேலை செய்கிறது... ஆம் உழைத்து உழைத்து அவர் வடித்த வியர்வை எல்லாம் இப்போது ரஸ்னாவாய் வாரிசுகளின் வாழ்வில் இனித்துக் கொண்டிருக்கிறது! 

தனது மகன்களை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கிறார்.. வெறும் படிப்பு மட்டுமா? பாபா பற்றிய தனது அனுபவம்... ஞாயிறு என்றாலே படம் அல்ல பஜனை தான்.. அது தூர்தர்ஷன் காலம்.. வாரம் ஒருமுறை தான் சினிமாவும்.. அதுவும் அவர்களுக்கு இல்லை... டி.வியில் மீரா படம் போட்டால் தெருவே வெளியில் பேசிக் கொண்டிருக்கும் ஆனால் பிரகாசம் குடும்பமோ மீரா படத்தை கண்ணும் கருத்துமாகப் பார்க்கும்... பார்க்க வைத்தார் பிரகாசமே வாரிசுகளை பக்தியில் ஈர்க்க வைத்தார்!

ஒருமுறை அந்த ரஸ்னா தொழிலிலும் பிரச்சனை‌.. பிரகாசம் வாழ்வில் முக்கிய இடம் பிடித்தது பாபா அர்ச்சனை பிறகு தொழில் பிரச்சனை..‌ ஆம் அந்த அர்ச்சனையே இந்தப் பிரச்சனையிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது! போலீஸ் வரை உரிமம் சார்ந்த பிரச்சனை சென்றது.. கைதாகும் சூழ்நிலை .. எப்படி பிரகாசம் கைதாவார்? அவர் தான் ஏற்கனவே பாபாவிடம் கைதாகி இருக்கிறாரே...! பாபா அருகில் படுத்து துயின்றதைப் போல பிடிமான பக்தி.. அந்த பக்திக்கு பாபா கனவில் வருகிறார்... ஆரம்ப கால சமிதி வாழ்வில் பிரகாசம் எழுதிய பஜன்களில் ஒரு பாடலை வைத்தே பாபா அழைக்கிறார்.. "ஓ மேரே சாயி இங்க வா!" என.. பிரகாசத்தின் தலையைத் தடவிக் கொடுக்கிறார்... கர்மாவெல்லலாம் உதிர்கிறது.. கையில் ஒரு envelop கவர்.. பாபாவும் கிருஷ்ணரும் இருக்கின்ற பிரின்ட்... பாபா கொடுக்க... வாங்கிச் சிலிர்க்கிறார்... அடுத்த நாள் சமிதியில் வரவிருந்த கோகுலாஷ்டமி குறித்த ஒரு நோட்டீசை பார்க்க... அதில் சுவாமி கனவில் கொடுத்த envelop கவரில் பதிந்திருந்த அதே பிரின்ட் அந்த நோட்டீசிலும் இருப்பதைப் பார்த்துவிட்டு பாபா வரும் கனவு சத்தியக் கனவு என ஊர்ஜிதப்பட்டு மெய்சிலிர்க்கிறார்! 


தான் உண்டு தன் குடும்பம் உண்டு.. தன் குடும்பத்திற்காக பாபா தினசரி நிறைய செய்ய வேண்டும் என்றே சுயநலமாக நினைக்கும் பக்தர்களின் மத்தியில் பாபாவுக்கு நாம் என்ன செய்யலாம்? என்ற பாபா சிந்தனை தான் சதா பிரகாசத்திற்கு... நாளை பஜனைக்கு இன்றே என்னென்ன செய்யலாம்.. என்னென்ன பாடலாம் என தயார் ஆவார்! இன்றைக்கு பாபாவுக்கு நாம் எவ்வகை வழிபாடு நடத்தலாம்.. என்னென்ன செய்யலாம் என்றே யோசிக்கிறவர்.. அந்த பக்திச்

செயல்முறையை தன் வாரிசுகளிடமும் இட்டு நிரப்பியவர்... ஒவ்வொரு இரவும் சாயி பஜன் கேட்டே குடும்பம் சகிதமாக உறங்கியவர்.. அதே பழக்கம் இப்போது அவரின் வாரிசுகளுக்கும்... இதுவரை பாலவிகாஸ் குழந்தைகள் நாடகம் நடத்தியதை கண்டிருக்கிறோம்.. சமிதியில் பெரியவர்களை ஒன்று திரட்டி 'நாரத கர்வபங்கம்' நாடகம் நடத்தி.. தானே நாரதராகவும் நடித்தவர் பிரகாசம்! தனது வீட்டு வாசல் பலகையில் தினசரி பாபாவின் ஞானமொழிகளை (Thought for the day) தன் கையாலேயே எழுதி அதைப் பிறர் படித்து உணரும்படிச் செய்தவர்!


தமிழ் மேல் அத்தனை பிரியம் பிரகாசத்திற்கு... அவர் படிக்காத புத்தகமே இல்லை... கம்யூனிஸ்ட் புத்தகமும் படித்த முதல் பாபா பக்தர் இவர் என்றே தோன்றுகிறது!

சிவகாசியில் தனது வாடகை வீட்டையே பஜனை மண்டலி ஆக்குகிறார்... ஒவ்வொரு வாரமும் கட்டாய பஜனை... இடுப்பு வலியே எடுத்தாலும் குடும்பத்தினர் கட்டாயம் பஜனையில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற கண்டிப்பு... அதே சமயம் வாரிசுகளின் மேல் பொங்கித் ததும்பிய பேரன்பான அரவணைப்பு... இப்படி ஒரு தந்தை வாய்ப்பது அபூர்வம்!

தானே பாபாவுக்கு மாலை கட்டுவார்... 

"சுவாமிட்ட நாம எப்போதும் நன்றியா இருக்கணும்... நன்றி மறக்கவே கூடாது!" இதுவே அவர் தன் வாரிசுகளுக்கு முக்கியமாக போதித்த ஞானம்!


பாபாவை தரிசிக்கிற போதெல்லாம் பிரகாசம் அடிக்கடி சொல்வது "கண்கொள்ளாக் காட்சி... கண் கொள்ளாக் காட்சி" என்பதே... பாபாவோ துவாபரயுகத்தில் விடாத மழையிலும் மந்தர மலையை தன் சுண்டு விரலில் சுமந்தார்... பாபாவின் பிரிய பக்தரோ தன் குடும்ப சிகரத்தையே விடாத வறுமையிலும் தனது தோளில் சுமந்தார்...இப்போது இருமகன்களுக்கும் பெரிய வேலை..முனீஷ்குமார், ஸ்ரீராம்‌... இருவரும் ஒற்றுமையில் ராம லட்சுமணர்கள்! மகளோ தமிழில் டாக்டர்... பேராசிரியை ஸ்ரீதேவி...

ஒரு சமயம் நீண்ட நெடிய கடிதம் எழுதி பாபாவுக்கு கொடுக்கும்படி தர.. மூத்த மகனும் அதை வழங்க... பாபா அதை ஏற்று ஆசீர்வதித்திருக்கிறார்... ஆக அந்த கடிதத்தை பாபா ஏற்ற பிறகு பாபாவின் சங்கல்பத்தால் யாரும் எதிர்பாராத இடத்தில் நல்ல சம்பந்தம் மகளுக்கு ஏற்பாடாகிறது... குணவான் பிரசாத்.. அதிர்ந்து கூடப் பேசத் தெரியாதவர் அவர்... அதுபோல் இரண்டு மகன்களுக்கும் குணவதிகளை பாபா திருமணம் புரிந்து வைத்திருக்கிறார்! மருமகள் மாமியாராக இன்றி தாய் மகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்... அப்படி பிரகாசத்திற்கு ஏற்ற குடும்பத் திருவிளக்கு சுலோச்சனா அம்மையார்! இருவரின் வழிகாட்டு வளர்ப்பு தான் வாரிசுகளுக்கான பாபா பக்திக்கும் பணிவுக்கும் தொழில் உயர்வுக்குமான முக்கிய காரணமும்! "நீங்க சுவாமி புள்ளைங்க!" என சொல்லிச் சொல்லி வளர்த்தவர் தாய்! ஆக ஸ்ரீ சத்ய சாயி யுகத்திலும் இன்றைக்கு தன் சேவைகளை ஆற்றி வருகிறது பிரகாசத்தின் வெளிச்ச வாரிசுகள்! 


எந்த ஊரில் அவர் அவமானப்பட்டாரோ அவமரியாதை அடைந்தாரோ அதே சிவகாசி ஊரில் அவர் வறுமையை எள்ளி நகையாடியவர்கள் முன்னிலையில் பாபா அவரை உயர்த்துகிறார்..

சொந்தமாக பெரிய வீடு கட்டுகிறார்... "சாயி நிவாஸ்" வீட்டின் பெயர்... தன் விழுதின் விழுதுகளான பேத்திகளுக்கும் பாபா பக்தியை ஆழமாக பதித்து விட்டவர் பிரகாசம்! பேரன் பேத்திகள் எல்லாம் பிரகலாதன் போல் கர்ப்பத்தில் இருக்கும் போதே சாயி பஜன் கேட்டு வளர்ந்தவர்கள்!

 உடல் தள்ளாமை பிரகாசத்திற்கு... பிரேமையோடு குடும்பத்திலும் சமிதியிலும் தொழிலும் நடந்தவர் பிரேமையோடே கலந்து போக வேண்டிய காலக்கட்டம்... அது ஐ.சி.யு... "செல்ஃபோன் கொடுத்தா ரேடியோ சாயி கேப்பேன்'பா" இது பிரகாசம்..

"ஐசியூல ஃபோன் அனுமதிக்க மாட்டேங்கறாங்க.. மனசுக்குள்ளேயே பஜன் பாடுங்க அய்யா" இது மூத்தமகன்!

"இவ்வளோ நேரம் நான் என்னப்பண்டிருந்தேன்னு நெனைக்கிற?" எனக் கேட்கிறார் கலங்கரை விளக்க பிரகாசம்...

வறுமையிலும் சிறுகச் சிறுக சுந்தரம் பஜன் கேசட்டை சேகரித்த அவர் விரல் ஓய்வாகிறது...

பஜன் பாடிக் கொண்டே சைக்கிள் மிதித்த அந்த கால் நீட்டிப் படுத்திருந்தது...

ஒரு Second Hand TVS50

வாங்கிய போதும் "இந்த வண்டீல தஸ்புஸ்னு சவுண்ட் வருது .. நிம்மதியா பஜன்பாடிட்டே பயணிக்க முடியல" என்று பரம பக்தியோடு பேசிய உதடு மௌனிக்கிறது...

பாபா கனவில் காட்சி தருகிறார்...

அந்தப் பிரகாசம் சைதன்ய ஜோதியில் கலந்து போகிறது! பௌதீகத் தந்தை பிரிய ஆன்மீகத் தந்தையான பாபாவே அந்தக் குடும்பத்திற்கு அணுக்கத் தந்தையாகிறார்! அதை அவர்களும் உணர்ந்து பாபாவின் கருணையை அனுபவித்து வருகின்றனர்...

எந்த கஷ்டத்திலும் பாபாவை குறை கூறாமல் தன்னை மேலும் பக்தியால் பக்குவப்படுத்திக் கொண்டவர் பிரகாசம்! வறுமையிலும் அதே பக்தி.. வசதி வந்த பிறகும் அதே பணிவு.. அதே பக்தி! இது ஒரே பிறவியில் வாய்ப்பதல்ல... ஜென்மாந்திரத் தொடர்பு! எப்படி பாபாவிடம் நாம் பக்தியோடிருக்க வேண்டும் என்பதை அவர் வாழ்வே நமக்குக் கற்றுத்தருகிறது!


பாரதியின் மகிமை உணராதவர்கள் கடந்து போனார்கள்... கடந்து போனவர்கள் கடந்தே போனார்கள்... ஆனால் பாரதி தான் இப்போதும் வாழ்கிறார்... பக்த மீராவின் கணவர் ஒரு மகாராஜா... அவர் பெயர் நினைவிருக்கிறதா? பக்தி ஒன்றே நிலைக்கும்... உண்மையான பக்தர் மட்டுமே நிலைப்பர்...

பணக் காகிதம் காற்றடித்தால் பறந்தோடி விடும்.. ஆனால் பக்தியே திருவண்ணாமலையாக நிலைத்திருக்கும்... தன் வாழ்வையே பாபாவின் போதனையாக வெளிப்படுத்திய பெரும்பக்தர் சிவகாசி பிரகாசம் தனது மூன்று வெளிச்சக் கீற்றுகளை விட்டுச் சென்றிருக்கிறார்... அவர் வெளிச்சம் அவர்களின் வழி தொடரும்...! 


  பக்தியுடன் 

வைரபாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக