தலைப்பு

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

குரு பிரம்மா குருவிஷ்ணு எனும் மந்திரத்தில் குருவே சாக்ஷாத் பரப்பிரம்மா என வருகிறதே... குரு தான் பரப்பிரம்மமா?

குருவை பரப்பிரம்மமாக (பரம்பொருளாக) வழிபட வேண்டும்! எல்லாமே பிரம்மம் தான்! நீங்களும் பிரம்மம் தான்! இப்படி உணர முடியாதவர்கள் குருவையேனும் அப்படி உணர வேண்டும்! 

"குரு: சாக்ஷாத் பரபிரம்ம" (குருவே பரம்பொருள்) என்றாலே போதும்! அவர் தான் படைப்பு- காப்பு - அழிப்பு கடவுளான பிரம்மா-விஷ்ணு-சிவன்... இது எப்படிப் பொருந்தும்? எனில்

சம்சார விடுதலைக்கான விஷயங்களை சீடனுக்குள் விதைத்து...அவன் ஆத்மீக வாழ்வில் முளைவிடும்படியாக அவனைப் புதிதாகப் படைப்பவர் குருவே!

எனவே குரு பிரம்மா! 

முளை வீணாகாமல் அவன் ஆத்ம வாழ்வில் பயிராக வளர்ச்சி காணுமாறு அவனைப் பேணிக் காப்பவரும் அவரே... எனவே குரு விஷ்ணு!

பயிர் தழைத்து வளரமுடியாதபடி களைகள் சேர்வதுபோல, தவறான போக்குகள் சீடனைச் சேரும்போது அவனை எச்சரித்து அவற்றைக் களைந்து அழிப்பவரும் குரு ஆதலால்.. குரு மகேஷ்வரர்! 

அப்படி குரு எவ்வளவு தான் உபதேசித்தாலும் அனுகிரகம் செய்தாலும் சீடனேதான் உறுதியான வைராக்கியம் பூண்டு உபதேச வழியில் நடந்து காட்ட வேண்டும்! எழுத்தெழுத்தாக வார்த்தை வார்த்தையாகத் தாயார் தான் குழந்தைக்குப் பேச்சுக் கற்பிக்கிறாள்! ஆயினும் அவள் தன்னுடைய நாக்கையே குழந்தையின் வாயில் புகுத்திவிடுவதில்லையே... அதனுடைய நாக்கால் அதுவே தான் பேசியாக வேண்டும்! 

குருவின் நடவடிக்கையையே சீடன் உதாரணமாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்பதால் சமயோஜித அறிவை உபயோகிக்காமல் அவர் செய்வதையே 'காப்பி' அடிக்க வேண்டும் என்பதல்ல...

உதாரணம்: ஒரு குருநாதர் வந்திருந்த ஒரு அடியவரிடம் "உனக்கு திருமணமாகிவிட்டதா?" எனக் கேட்டதற்கு.. "ஆம்!" என்கிறார் அடியவர்... அதற்கு குரு "சரி...எத்தனை குழந்தைகள்?" எனக் கேட்கிறார்.. விசாரித்துவிட்டு ஓய்வெடுக்கச் செல்கிறார் குரு.. யாராவது வந்தால் என்னைப்போல் பரிவோடு குசலம் விசாரி என சீடரிடம் சொல்லிவிட்டு ஓய்வெடுக்கிறார்..

இன்னொரு அடியவர் வருகிறார்...

சீடனோ குரு கேட்ட அதே கேள்விகளின் முதலாவது கேள்வியைக் கேட்கிறார்..

"உனக்கு திருமணமாகிவிட்டதா?" இது அந்த சீடன்... "இல்லை" என்கிறார் அடியவர்... "சரி.. எத்தனை குழந்தைகள்?" என குரு கேட்ட இரண்டாவது கேள்வியையும் சீடன் கேட்கிறார்...

இது தான் சமயோஜித புத்தி இன்றி காப்பி அடித்தல்!

முறைப்படி நடைமுறை போதனை கொடுக்கத் தவறிய சில குருமார்கள் சீடருக்கு சில மனப்பாடங்களை கற்றுக் கொடுத்து உலகத்திற்கு தாங்கள் கற்பித்தவர் போல் காட்டிக் கொள்கின்றனர்... விஷயத்தின் பொருளை விளங்காத சீடரும் இருக்கின்றனர்... வெறும் மனப்பாடத்தால் பெயரெடுக்கப் பார்க்கும் சீடரும் உண்டு‌... ஆனால் இப்படிப்பட்ட 'சாமர்த்தியங்கள்' என்றேனும் ஓர்நாள் வெட்ட வெளிச்சமாகிவிடும்!


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 2/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக