சேவை உருவிலேயே பிரேமை (பேரன்பு) என்ற ஆன்மீக மார்க்கத்தில் உங்களுக்கு தீட்சை தர விரும்புகிறேன்! மற்ற எல்லாவற்றையும் மறந்து இப்போது சுவாமி நான் தரும் உத்தரவையே வழுவாமல் பின்பற்றுங்கள்!
"இதென்னடா? ஒரு செருப்புக் குவியலை பார்த்துக் கொண்டு நிற்பதாக நமக்கு சேவை வாய்த்திருக்கிறதே!" என்று சுணங்கி மனம் வாடாதீர்கள்! வெட்கப்படாதீர்கள்!
"காவல் நாய் போல வாசலில் நிற்பதா?"
"பானையைப் தூக்கிப் போய் தண்ணீர் தருவதா?" என்றெல்லாம் கூச்சப்படாதீர்கள்!
ஏதோ ஒரு விதத்தில் நம்மாலும் ஒருவருக்கோ,பலருக்கோ சேவா உதவி கிடைக்கிறது! என்ற நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொண்டீர்களானால் எந்தவித சேவை வாய்ப்பினும் "ஆஹா நாம் எப்பேர்ப்பட்ட சலுகை உயர்வு (ஆன்ம மேன்மை) பெற்றிருக்கிறோம்!" என்று சந்தோஷத்தைத் தான் அடைவீர்கள்!
"சுவாமிக்காக தொண்டு செய்ய மாட்டோமா? "என்று தவிக்கிறீர்கள் அல்லவா! சுவாமி நான் சொல்கிறேன்... கேட்டுக் கொள்ளுங்கள்!
என் அடியாருக்கு நீங்கள் ஒரு சிறு தொண்டு செய்தாலும் அதுவே எனக்கு நீங்கள் செய்த தொண்டு என மகிழ்ந்து ஏற்றுத் திருப்தி கொள்கிறேன்! அதோடு மட்டுமல்ல...
அடியார் என்போராக சாயியை வழிபடுவோர்க்கு மட்டுமல்ல; எந்த உயிருக்கு நீங்கள் புரியும் சேவையும் ஸாயிக்கே செய்யும் சேவைதான்!
எங்கே எந்த நோயுற்றோருக்கும் துயருற்றோருக்கும் நீங்கள் ஆறுதலும் ஆனந்தமும் அளித்தாலும் அவை என்னை வந்தே அடைகின்றன...!
இறைவனுக்கு யாரால் என்ன ஆக வேண்டும்? தொண்டனுக்கே சக்தி தரும் இறைவனுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன உள்ளது?
எனவே இறைவனுடைய படைப்பினத்துக்கே உங்கள் தொண்டை ஆக்கி, அதையே இறைவன் தொண்டாக உணருங்கள்!
தாஸானுதாஸனாக, அடியார்க்கு அடியாராக அடங்கி சேவைப் புரிந்தே உயர்வில் பேருயர்வு பெறுங்கள்!
சேவையிலேயே தன்னைக் கரைத்துக் கரைத்து உயிர்க்குலம் தழுவும் விஷ்வ வியாபகத்தைப் பெறுங்கள்!
உங்கள் அன்புத் தொண்டுள் அகிலமும் ஒன்றி வர, அந்த அனைத்தும் ஒன்றே, அந்த ஒன்றே நீங்கள் எனும் ஞானத்தை பெறுங்கள்!
(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 40/ ஆசிரியர்: அமரர் ரா.கணபதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக