தலைப்பு

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

தினசரி கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக சாதனைக்கான அட்டவணை (Timetable) என்ன?

தினமும் காலையில் டிஃபன், நண்பகல் உணவு, பிற்பகல் சிற்றுண்டி, இரவு உணவு, படுக்கும் முன் பழமும் பாலும் உண்கிறீர்கள் அல்லவா? ஆத்மாவுக்கும் இப்படி ஓர் அன்றாட விதிமுறையை இதோ தருகிறேன்!


⌛அதிகாலை:

வைகறையில் எழுந்ததும் செய்யும் ஞான மயமான ஓம்கார காயத்ரி ஜப தியானமே ஆன்மாவுக்கு இட்லி-சாம்பாராகட்டும்!

நாம ஜபமோ , நகர சங்கீர்த்தனமோ இட்லிக்கு பின் குடிக்கும் காபியாகட்டும்! 


⌛மதியம்:

அபிஷேக அர்ச்சனைகளுடன் பூஜை செய்யுங்கள் இதுவே ஆன்மாவுக்கு மதிய உணவு!

⌛பிற்பகல்:

எப்போது முடிந்தாலும் அலுவலகத்திலிருந்தும் கூட இடைவேளைகளிலும் சிறிது லிகித ஜபம் (திருநாமங்களில் ஒன்றை எழுதுவதே லிகித ஜபம்) எழுதுங்கள்...ஆன்மீக  சத்-விஷயங்களை கொஞ்சமேனும் (உதாரணம்: ஸ்ரீ சத்ய சாயி யுகம் பிளாக் பதிவுகள்) படியுங்கள்! இவையே பிற்பகலில் ஆன்மாவுக்கான சிற்றுண்டியான மிக்சரும் டீயும்...


⌛இரவு:

சூரிய அஸ்தமனத்துக்குப் பின் குடும்பத்தினருடனோ , பக்தர் குடும்பத்தினருடனோ சற்று விரிவாகவே பஜனை செய்யுங்கள்... அதுவே ஆன்மாவுக்கான இரவுச் சாப்பாடு! 


⌛நித்திரைக்கு முன்:

தூங்குவதற்கு முன் கனியும் பாலும் சாப்பிடுவது போல ரூபத் தியானயமும் அரூபத் தியானமும் செய்து "ஓம் சாந்தி சாந்தி சாந்தி" என்று சாந்தமயமாக என்னோடு (பரமாத்மாவோடு)  ஒடுங்குங்கள்! 


⌛அதிகாலை துயில் கலைந்த பிறகு துதிக்கும் பிரார்த்தனை:

தினமும் விழித்து எழுந்து உடன் இப்படி வேண்டுங்கள்...

"ஹே சாயி பிரபோ! உறக்கத்தின் கருப்பையிலிருந்து இதோ பிறந்திருக்கிறேன்! இன்றைய பணிகளை எல்லாம் உனக்கே அர்ப்பணமாகச் செய்ய உறுதி கொள்கிறேன்! என் மனக்கண் முன் எப்போதும் உன்னையே கண்டே இன்றைய அலுவல்களை ஆற்றுவேனாக! என் சிந்தனை, சொல், செயல் யாவற்றையும் தூய்மை செய்து பவித்திரமாக்குவாய்! இன்று நான் எந்த உயிருக்கும் துயரம் தராமலிருப்பேனாக! நானும் இன்று எவ்வுயிராலும் துயருறாமல் காப்பாய்! கணந்தோறும் இந்நாள் நான் செல்ல வேண்டிய வழியை எனக்குக் காட்டி அதில் என்னை நடத்தி , உடன் துணை வருவாய்!


இரவு தூங்கும் முன் துதிக்கும் பிரார்த்தனை:

இரவு நித்திரையின் வாயிலில் நிற்கையில் இவ்வாறு வேண்டிக் கொள்ளுங்கள்

"ஹே சாயி பிரபோ! உன் பாதத்தில் சமர்ப்பித்ததால் இன்றைய அலுவலின் சுமை எல்லாம் தீர்ந்தது! என்னை நாள் முழுதும் எண்ண வைத்ததும், பேச வைத்ததும், நடக்க வைத்ததும், செயலாற்ற வைத்ததும் நீயே! அதனால் தான் அந்தச் சிந்தனை , சொல், செயல்கள் யாவும் உன் திருவடிக்கே  ஆனது! இன்று என் காரியம் முடிந்தது! உன்னிடம் மீண்டும் வருகிறேன்... என்னை எடுத்துக் கொள், சாயி பகவானே!" 


(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 19/ ஆசிரியர்: அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக