தலைப்பு

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

பூமியில் பிறந்த எல்லோருமே சாதகர்களா? அப்படி உருமாற்றும் பாபாவுக்கு நாம் என்ன கைமாறு செய்ய வேண்டும்?

"சுவாமி நான் உபதேசிப்பது உங்களை சன்மார்க்கத்தில் சாதனா மார்க்கத்தில் அழைத்துச் சென்று ஆன்ம நிறைவை அடைவிப்பதற்குத் தான்!"

'சாதனையா , அது நமக்கு எதற்கு? நாம் என்ன சாதகராக விரும்புகிறோமா?' என்று எவரும் எண்ண வேண்டாம்! பிறவி எடுத்தவர்களில் எவர் தான் சாதகர் இல்லை?! 

சாதகர் என்பதாகக் கொம்பு முளைத்து எவரோ பிறக்கிறார்களா என்ன? 

ஒவ்வொருவருமே சாதகராகி ஆன்ம சாதனை செய்தே தீரவேண்டியவர்கள் தான்! அனைத்து மனிதருமே இன்றோ என்றோ ஒருநாள் ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியை இன்றே தொடங்க வேண்டியவர்கள் தான்! இந்த முயற்சியை விடாமல் ஒரு நெறிப்படி செய்வதே ஆன்ம சாதனை என்பது...

'ஆண்டவனுக்கு முதலிடம்... உயிர்க்குலம் அடுத்தபடி... கடைசியாகவே நான்!' என்று வரிசைப்படுத்தி வாழ்வதே ஆன்ம சாதகன் லட்சணம்! நடைமுறையிலோ இது தலைகீழாகி 'முதலிடத்தில் நான்... பின்னர் உயிர்க்குலம்... இறுதியாகவே ஆண்டவன்' என்று உள்ளது. ஆகவே இறுதியாக (last) வைக்கும் ஆண்டவனை இழந்ததாகவே (lost) ஆகியிருக்கிறது! 

இப்போதுள்ள நிலையில் நாள்தோறும் உருக்குலையும் இந்த உடம்பாலும் சிதையும் மனதாலும் 'பரம்பொருளே நாம்' என உணர்ந்து அதன் கரையற்ற ஆனந்தத்தை பெற்றுத் தாங்க முடியுமா? என்று தோன்றலாம்! ஆயினும் ஆன்ம சாதனை என்பது இதை சாதிக்கவே ஏற்பட்டது!

"சுவாமி நான் உபதேசம் செய்கிறேனே.. இதனால் நீங்கள் ஆனந்தம் அடைகிறீர்கள்! ஆமாம் என்று ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா? நல்லது! அதற்குப் பிரதியாக என்ன தரப் போகிறீர்கள்? சுவாமி கேட்கும் பிரதி, எனது உபதேசப்படி நீங்கள் நடந்து காட்ட வேண்டும் என்பதுதான்! சுவாமி எதை பிரச்சாரம் செய்கிறேனோ அதை உங்கள் ஆச்சாரமாக (கடைப்பிடித்தல் - அதன்வழி வாழ்தல்) கொள்ள வேண்டும்!"


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 7/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

1 கருத்து: