தலைப்பு

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

மாத்ருஸ்ரீ அனசுயா தேவி அம்மையார் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

Matrusri Anasuya Devi Amma (1923 – 1985) 

எவ்வாறு ஒரு பெண்மகான் பாபாவை உணர்ந்து ஒரு பக்தரிடம் பேசுகிறார்...? பாபா யார்? அதற்கு முன் அந்த பெரும் பேருண்மையை முன்மொழிந்த அந்த பெண்மகான் யார்? ஆழக்கிணற்றின் தண்ணீருக்குள் 3 நாட்கள் தியான சமாதியில் இருந்து வெளியே வந்த அப்பேர்ப்பட்ட அந்த பெண் மகான் யார்? சுவாரஸ்யமாக இதோ...!

மாத்ருஸ்ரீ அனசுயா தேவி 1923 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி பிறந்தவர்... ஆந்திரப்பிரதேச குண்டூரில் மன்னவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர்... கிராம அதிகாரி சீதாபதி ராவுக்கும் ரங்கம்மாவுக்கும் குழந்தையாகப் பிறக்கிறார்... அதற்கு முன் அந்த ஆதர்ஷ தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் பிறந்து இறந்த துயரம்... மீண்டும் கருவுற்ற தாய்க்கு பெரும் கவலை... அந்த கர்ப்ப காலத்தில் ஒருநாள் இரவு தந்தைக்கு கனவு வருகிறது ... கனவில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ஒரு முதிர் வயது பெண்மணி நெற்றி நிறைய பெரிய ஆரஞ்சு சிகப்பு நிற குங்குமத்தோடு தரிசனம் தருகிறார்..

"யார் நீங்கள்?" இது சீதாபதி 

"நான் தான் தாய்!"

யாருடைய தாய்? இது மீண்டும் சீதாபதி

இந்தப் பிரபஞ்சத்திற்கே தாய் என்கிறார் அந்த அம்மையார்...மாதம் கடக்க குழந்தை பிறக்கிறது.... பிரசவிக்கும் போதே பேரானந்த நிலையில் இருக்கிறது குழந்தை.. பாலுக்காக அது அழவே இல்லை...

2 வயது இருக்கையில் மாதுளை மர அடியில் பத்மாசனத்தில் அமர்ந்து தன்னை மறக்கிறது குழந்தை.. 1 மணிநேரம் கடந்து எழுந்திருக்கையில்... அந்த நிலை என்ன? என கேட்டதற்கு குழந்தை "இது சாம்பவி முத்ரா!" என்கிறது! அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர்... தாய் ரங்கம்மா இறந்தபிறகு .. குண்டூர் பகுதிகளில் உறவினர்கள் வீட்டில் வளர வளர குழந்தையின் சாந்த நிலையை... இரக்க சுபாவத்தை உணர்கிறது ஊர்... 

ஆன்மீக வாழ்க்கைக்கு எதற்கு திருமணம்? என சிலர் வினவிய போதும்.. ஆன்மீகத்திற்கு திருமணம் தடையில்லை... கணவனை கடவுளாக உணரவும்... மனைவியை தெய்வமாக கணவன் போற்றவும் வேண்டி.. அதை உலகத்திற்கு உணர்த்தவே திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என அனசுயா தேவி மணம் புரிகிறார்.. ஜில்லாலமுடியில் கிராம அதிகாரியாக பிற்காலத்தில் உருவான பிரம்மாண்டம் நாகேஷ்வரராவை 1936 ல்... ஒரு பெண் ஆண் குழந்தை...!

மாத்ருஸ்ரீ அம்மாவின் சேவை பற்பல... பஞ்சபூதமும் அவர் அன்புக்கு அடங்கி இருந்தது... கிணற்றில் மூழ்கி சமாதியில்

3 நாள் இருந்தபோதும் ஏதும் ஆகாத நிலை என பல இறை ஆற்றல்களைப் பெற்றிருக்கிறார்... அவர்களின் பிரதான சேவை யார் தனது ஆசிரமத்திற்கு வந்தாலும் உணவு வழங்காமல் அவர்களை திருப்பி அனுப்புவதில்லை.. சதா அணையா நெருப்பாக இருக்கிறது அவரது சமையற்கட்டு! எக்கட்டையும் நீக்கும் அவரது சமையற்கட்டு... அம்மாவிடம் உணவு உண்பவர்கள் தங்கள் நோய் தீர்ந்து குணமாகி இருக்கிறார்கள்... ஒருமுறை ஒரு விவசாயி அம்மா தியானிப்பதை பார்க்கிற போது... ஊரில் உள்ள பறவை எறும்புகள் எல்லாம் அம்மா மேல் தஞ்சம் அடைய திகைத்துப் போயிருக்கிறார்...

அம்மா உடல் கடந்த நிலைக்கு (trans) அடிக்கடி செல்பவர்... ஒருமுறை அப்படி செல்வதற்கு முன் மருத்துவர் சீதாச்சலத்தை அழைத்து தனது உடலை 11 நாட்கள் காத்திடும்படி சொல்லிவிடுகிறார்... ஊரே கூடுகிறது.. இறந்துவிட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.. உடலை எரிப்பதா? புதைப்பதா? என வாதம் நடந்து கொண்டிருக்க... அம்மா சொல்லிய வார்த்தையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்... சரியாக 11 ஆவது நாள் தூக்கத்தில் எழுந்திருப்பதைப் போல் எழுந்து கொள்கிறார்‌...

இதுவே ஆன்மீக உலகத்தில் ஒரு மகான் அதிகமான trans சில் இருந்ததாக குறிக்கப்படுகிறது!

"நீங்கள் உணவில்லை என்றால் சோர்ந்து விடுவீர்கள்... அம்மா நான் உணவு பரிமாறவில்லை எனில் சோர்ந்து விடுவேன்!" என அடிக்கடி சொல்பவர்... "நீங்கள் எப்படிப்பட்ட குணமாயினும் எனக்கு அது பெரிய பொருட்டில்லை என்கிற போது நீங்கள் எந்த ஜாதியாக இருந்தால் எனக்கு என்ன?" என்று அம்மா சொல்வது சமுதாயப் புரட்சிக்கான ஞான மொழி! 

அம்மாவை கொல்வதற்கு வந்த ஒருசிலர் அம்மாவின் பேரன்பினால் அகமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்!


அப்பேர்ப்பட்ட மாத்ருஸ்ரீ அம்மாவிடம் தான் பெற்ற அனுபவத்தை விளக்குகிறார் பேரா. அனில்குமார் காமராஜு! பல ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் பிறந்த நாள் வைபவத்திற்காக பேச அழைக்கப்படுகிறார் பேராசிரியர்... அவர் அப்போது பாபாவின் சேவா நிறுவன துணைத் தலைவராக இருக்கிறார்.. அதை பத்திரிகையில் குறிப்பிடப்பட வேண்டும் என்கிறார்.. பிறகு அம்மாவின் ஆசிரமம் செல்கிறார்.. அம்மா ஒரு ஆசனத்தில் சயனித்தபடி இருக்கிறார்... அருகே பேத்தி விளையாடுகிறாள்... அனில்குமார் அவர்களை பார்த்ததும் "மகனே வந்துவிட்டாயா? மிகுந்த மகிழ்ச்சி... உடனே சென்று மகன் வீட்டில் உணவருந்தி விட்டு வா!" என கருணையோடு மொழிகிறார்.. "மாதாஜி ! என் பேச்சில் அடிக்கடி பாபா என்ற பெயர் வரும்... அது ஒன்றும் உங்களுக்கு பிரச்சனை இல்லையே! அதற்காகத்தான் முன்பே சொல்லிவிடுகிறேன்!" என்கிறார்... அதற்கு அம்மாவோ "தாராளமாக பேசுங்கள் மகனே... பாபாவை பற்றி பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே உங்களை அழைத்திருக்கிறேன்!" என்கிறார்...! 

விழா வைபவம் ஆரம்பிக்கிறது... அனில்குமார் பேசுகிறார்...திரண்ட ஜனம் திவ்யமாக கேட்கிறது... பேச்சு நிறைகிறது... அம்மா ஒரு சாயி பஜன் பாடலை பாடும்படி அவரை கேட்க.. அவரும் மனம் உருகிப் பாட... பாடலின் முடிவில் அம்மாவோ "நீங்கள் மிகச் சரியான கடவுளை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்! எனக்கு மிகவும் மகிழ்ச்சி!" என்கிறார்.. அனில் குமார் அவர்களின் இதயம் குளிர் புனல் குமாரமாய் ததும்பி பூரிக்கிறது! ஒரு வாழைப்பழத்தின் தோலை உரித்து அம்மா அனில்குமார் அவர்களுக்கு ஊட்டி விடுகிறார்... அகம் கனிந்து தரப்பட்ட பிரேம பழம் அது! கண்கலங்குகிறார் அனில்ஜி! 

அப்போது நிறுவன அலுவலர் "அம்மா ... நாங்கள் காயத்ரி மந்திர ஜபத்தை ஒருகோடி முறை ஜபம் செய்வதாக இருக்கிறோம்... நான்கு திசையில்!" என்று தெரிவிக்கிற போது... உடனே அம்மா "நான்கு திசையா? அது எங்கே இருக்கிறது? ஒரே ஒரு திசை தான் இருக்கிறது... அதுதான் கடவுளின் திசை!" எனும் சத்தியப் பேருண்மையை பகிர்கிறார்! 

என்னால் அம்மாவின் வழி பாபாவை உணரமுடிந்தது.. ஒவ்வொரு அசைவிலும்.. அவரது அன்பிலும்... அருளிலும்.. "ஓ சுவாமி எவ்வாறெல்லாம் நீ உன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாய்!" என பூரித்துப் போகிறார் அனில்குமார் அவர்கள்! 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 169) / Author : Jantyala Suman babu / Eng.Translation : Pidatala Gopi Krishna / Source: Article written by Anilkumar in sanathana sarathy) 


11 நாட்கள் அம்மா டிரான்ஸ்'சில் இருக்க... உடல் இறந்து போய் இருந்தது.. பாபா ஏன் அத்தனை நாட்கள் டிரான்ஸ்'ஸில் இல்லை... அவர் கடவுள் என்கிறீர்களே? மகான்களே அத்தனை நாள் சென்ற பொழுது... பாபா ஏன் செல்லவில்லை..? என்ற கேள்வி எழலாம்... பாபாவுக்கு அது அவசியமில்லை.. இறைவன் பாபா டிரான்ஸ்'சில் இருந்தபடி தான் ஒவ்வொன்றும் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை... சகல உலகையே நிகழ்த்தி நிர்வகிக்கும் பாபா ஒவ்வொரு நிகழ்விற்கும் டிரான்ஸ்'சில் செல்வதாக இருந்தால் அவர் அவதரிக்க வேண்டிய‌ அவசியமே இல்லை...! காரணம் ரூபத்தில் மட்டுமில்லை... அரூபத்திலும் அவரே நிறைந்திருக்கிறார்... ஒரே நேரத்தில் ரூப/அரூபமாய் பாபாவால் செயலாற்ற முடியும்! காரை ஓட்டிக் கொண்டே... பாடல் கேட்டுக் கொண்டே... மனைவியிடம் பேசிக் கொண்டே... ஒருவன் ஒரே நேரத்தில் இத்தனையும் செய்கிற போது... இறைவன் பாபாவால் எதுதான்? எதன்வழிதான்? எந்த பரிமாணத்தில் தான்? செயல் மகிமையை புரிய முடியாது!!! காரணம் பாபா என்பவர் மனிதரல்லர் அதுவே என்றும் நீங்கா நிலையான பரிபூரண பரப்பிரம்மம்!


  பக்தியுடன் 

வைரபாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக