சாயிபாபா என்றால் ஏதோ ஆயுள் ஆரோக்கியம் தருவார், தேர்வில் 'பாஸ்' ஆக்கி வேலை கிடைக்கவும், வேலை உயர்வு கிடைக்கவும், பிறகு திருமணம் நடைபெற , வாரிசு உண்டாக அருள் புரிவார் என்பதற்காகவே நீங்கள் இங்கே என்னிடம் வந்து கொண்டிருந்தால்...
நீங்கள் என்னை உரியபடி பயனாக்கிக் கொள்ளவில்லை என்றே அர்த்தம்! சுவாமி உங்களுடைய இந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்றால் அதற்குக் காரணம், இதன் மூலம் உங்களுடைய அன்பைப் பெற்று, அதன்பின் நீங்கள் உங்களின் அன்பை பயன்கருதாத உண்மையான அன்புணர்வாக உயர்த்திக் கொண்டு ஆன்ம சாதனையில் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வதற்குத் தான்!
நீங்கள் மட்டும் உண்மையான ஆன்ம சாதகர் ஆவதற்கு உறுதி கொண்டு விட்டீர்களாயின், அதன்பின் இப்போது போல் "கிருபை செய்யுங்கள்- கிருபை செய்யுங்கள்" என்று புலம்ப வேண்டியதே இல்லை! ஏனெனில் உண்மையான ஆன்ம சாதகருக்கு எனது கிருபையை பொழியச் செய்வதைத் தவிர வேறென்ன எனக்கு காரியமிருக்கிறது?!
பிறகு எனது தரிசனம் - ஸ்பரிசனம்- சம்பாஷனம் ஒவ்வொன்றாலும் எனது கிருபையில் நீங்கள் பங்கு கொள்ளலாம்!
இரண்டு பொருட்கள் திடமாக இருந்தாலோ ஒன்று திரவமாக மற்றொன்று திடமாக இருந்தாலோ சாத்தியப்படாதது.. இரு பொருட்களும் திரவமாக இருந்தாலே ஒன்றோடு ஒன்று கலந்து ஐக்கியமாக முடியும்! அதுபோல் உலக விஷயங்களுக்கான வேண்டுதல்களோடு மட்டுமே நீங்கள் நிற்கும்போது திட பதார்த்தமாகவே கெட்டிப்பட்டே நிற்கிறீர்கள்! அப்போது உங்களின் கர்மாவையும் அனுசரித்தே சுவாமி எனது கிருபையை அளவுப்படுத்திக் கொண்டு வழங்க வேண்டியிருப்பதால் , சுவாமியும் கூட கெட்டிப்பட்டது போலத்தான் காட்டிக் கொள்கிறேன்! ஆனால் நீங்கள் ஆன்ம சாதனையால் - சகல சாதனைக்கும் உயிர்ச்சாறாக உள்ள பேரன்பால் நீங்கள் உங்கள் இதயத்தை உருக்கிக் கொள்ளத் தொடங்கினால், அப்போது சுவாமியின் இதயமும் உருகுகிறது... பிறகு திரவமாகிய உங்கள் இதயமும் எனது இதயமும் ஒன்று கலந்துவிடுகின்றன...!
எங்கோ எட்டத்தில் இருப்பவராக சுவாமியை நீங்கள் வைத்துவிடாதீர்கள்! உங்களுக்கு அருகினும் அருகே இருப்பவராக என்னை நடத்துங்கள்! மறந்தாற் போல் நானே சற்று விளையாட்டுக் காட்டினால் கூட... எனது கிருபை வேண்டி என்னை உயர்த்திப் புகழ்ந்து , இழிய முறையில் கிருபைக்காகக் கெஞ்சிக் கொண்டிருக்காதீர்கள்!
"என் கிருபை உங்கள் உரிமை!" என்ற நிச்சயத்துடன் அதை வற்புறுத்தி டிமான்ட் செய்து கேட்டுப் பெறுங்கள்!
கொண்டு வாருங்கள் உங்கள் இதயங்களை... வென்று செல்லுங்கள் என் இதயத்தை...!
"செய்கிறேன் சுவாமி இப்படியிப்படி" என வாக்குறுதிகள் வழங்குங்கள்! சுவாமியும் உங்களுக்கு மேலும் மேலும் இன்ன இன்ன உங்களுக்கு அருள் செய்கிறேன் என்று அடித்து சத்தியம் செய்து தருகிறேன்! (இவ்விடத்தில் பாபா தனது கையால் கையை அடித்தே காட்டுகிறார்)
ஒன்று மாத்திரம் கவனித்துக் கொள்ளுங்கள்! எனக்கு பொய் வாக்குறி கொடுத்துவிடாதீர்கள்!
உங்கள் வாக்கு உண்மையாகவும் , இதயம் நிர்மலமாகவும் இருந்துவிட்டால் அதுவே போதும் சுவாமிக்கு...!
(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 21/ ஆசிரியர்: அமரர் ரா.கணபதி)
சாயியே சரணம்!
பதிலளிநீக்கு