தலைப்பு

வியாழன், 15 செப்டம்பர், 2022

டாக்டர். ஜான் ஹிஸ்லாப் | புண்ணியாத்மாக்கள்


ஒரு ஓவியர் அவரது கலையால் அறியப்படுகிறார், ஒரு சிற்பி அவரது சிற்பங்களால் அறியப்படுகிறார். ஒரு ஆசிரியர் அவரது மாணவர்களால் அறியப்படுகிறார், ஒரு குரு அவரது சீடர்களால் அறியப்படுகிறார். அதேபோல ஒரு அவதாரம் அவரது பக்தர்களால் அறியப்படுகிறார். இறைவனை அல்லது ஒரு குருவைச் சரணடைந்து… அவருடைய வழிகாட்டுதலை/போதனைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு முழுமையான பக்தனில் இறைவனுடைய மகிமை அதிகமாகப் பிரதிபலிக்கிறது. அந்த பக்தர் ஒரு காரணியாக/கருவியாக மாறி, பலரை தெய்வீகப் பாதையில் கொண்டு வருகிறார். சத்யசாயி தெய்வத்தின், அப்படிப்பட்ட பக்தர்களில் ஒருவர் டாக்டர். ஜான் எஸ் ஹிஸ்லாப் ஆவார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மக்களிடையே... சுவாமியின் மேன்மையை சரியாக எடுத்துச் சொல்லி, வறண்ட மனங்களிலும் தெய்வீகம் பரவச் செய்தவர். அதிலும் குறிப்பாக, துன்பம் நீக்கல், வளம் சேர்தல் போன்ற ஆர்த்த அர்த்தார்த்த பக்திக்கான சாதாரண விதைகளைத் தூவாமல் ஞான மார்க்கத்தின் தூய விதைகளைத் தூவிசத்யசாயி அவதாரத்தின் சரியான அடையாளத்தை உலகிற்கு விவரித்தவர். சுவாமியின் அடுத்த அவதாரமான பிரேமசாயி, நம் மத்தியில் மறுபடி தோன்றவிருக்கும் நம் சாயிதெய்வமே என்பதை உறுதிசெய்யும் விதத்தில்... பிரேமசாயியின் உருவம் கொண்ட மோதிரம் இவருக்கு சுவாமியால் வழங்கப்பட்டது.

 🌷தெய்வீகத்திற்கான தணியாத தாகம்:


ஹிஸ்லாப்பினுடைய 16ம்  வயதில் தேவாலய நிகழ்ச்சி ஒன்றில்  பங்குபெறும்போது  பின்வருமாறு அவர் மனத்தில் தோன்றியது, " இந்த சர்ச் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே விளங்கவில்லை. இந்த உலகத்தின் ஏதோ ஒருமூலையில் சத்தியத்தை உணர்ந்து மற்றவர்க்கும் உணரும்படி உறைக்கக் கூடியவர் யாரேனும் இருக்கக்கூடும்". அன்று தொடங்கிய அத்யாத்மீக தேடலில் அவர் பலரை சந்தித்தார். ஆர்தர் டேவேரே ஆண்டர்சன், பிரிட்ஸ் குன்ட்ஸ், டாக்டர் அன்னி பெசன்ட், ஜே. க்ருஷ்ணமுர்த்தி, பரமஹம்ச யோகானந்தர்(யோகதா சத்சங் சொசைட்டி), சுவாமி விஷ்ணுதேவானந்தா (சுவாமி சிவானந்தரின் சீடர்), டாக்டர்.ரோமன் ஓஸ்டோயா ( ரஷ்ய வெள்ளை யோகி)மகரிஷி மகேஷ் யோகி(சித்தர் பிரம்மானந்த சரஸ்வதியின் பிரிய சீடர்) இவர்களெல்லாம் குறிப்பிடும் படியானவர்கள். பின்னர் ஹிஸ்லாப்பும் அவரது மனைவி விக்டோரியாவும், ஏறத்தாழ எட்டு வருடங்களாக பர்மா நாட்டின் த்ராய் சித்து ஊபாகின் குருவிடம் விபாசன தியானம் கற்று பயிற்சி செய்துவந்தார்கள்.

அதிகாலை 3 மணி தொடங்கி இரவு வரை தியானத்தில் ஆழ்ந்திருக்கக்கூடிய  அளவு தேர்ச்சி பெற்றிருந்தார். அந்த சமயங்களில் தன்னுள்ளே அளவில்லாத ஆனந்தத்தை உணர்ந்தார். இருப்பினும் அந்த அனுபவங்கள் மூளையினுடைய (உடலினுடைய) உணர்வுகள் என்றும்...  தெய்வீகம் என்பது இவற்றையெல்லாம் கடந்த (புலன்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட) ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்றும் சிந்தித்தார்.

 

உலகாயதமான வாழ்க்கை என எடுத்துக்கொண்டால், ஹிஸ்லாப் 1958ம்  ஆண்டு UCLA-ல் (யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்) டாக்டர் பட்டம் பெற்ற பின் பத்தாண்டுகள் கல்லூரி ஆசிரியப்பணியோடு வணிகம், பின்னர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துணை-தலைவர் என வெற்றிகரமான வாழ்க்கையே கொண்டிருந்தார். இருப்பினும் அனைத்தையும் துறந்து முழுநேரமும் இறைத்தேடலிலேயே செலவழிக்கும் தீராத எண்ணம் அவரிடம் எப்போதும் குடி கொண்டிருந்தது.

 

🌷இந்தியாவின் சத்யசாயி பாபா:

ஒரு சமயம், சுவாமியைப் பார்த்துவிட்டு இந்தியாவிலிருந்து திரும்பிய திருமதி. இந்திரா தேவி (யூஜீனி பீட்டர்சன் என்ற இயற்பெயர் கொண்ட பிரபலமான ரஷ்ய யோகினி) , பின்வருமாறு கூறியிருந்தார்."இந்தியாவில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒருவர் இருக்கிறார், அவர் மூலம் உங்கள் வாழ்க்கை மறுபடி உலகியலாக திரும்பாத வகையில் ஆன்மீக உயர்மாற்றம் பெற முடியும்". அந்த சமயத்தில், அவர்களுக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு... இந்தியாவில், பாபா தனது அங்கை அசைப்பினால் வரவழைத்துத் தந்த விபூதியையும் மோதிரத்தையும் அவர்கள் பார்க்கநேர்ந்தது. ஹிஸ்லாப்பால் தனது ஆர்வத்தை  தள்ளிப்போட முடியவில்லை.


தன் மனைவியையும் தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு வற்புறுத்தினார். ஆனால் அவரது மனைவி இந்தியா செல்லத்  தயங்கினார். ஏனென்றால் அதற்கு  முந்தைய வருடம் சுவிட்சர்லாந்தில் தத்துவ-சாஸ்திரி  ஸ்ரீ ஜே.கிருஷ்ணமூர்த்தியின் (JK) கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியே வரும்போது, ​​கூட்ட நெரிசலில் தள்ளப்பட்டு ஹிஸ்லாப்பின் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்தது. அந்தக் கால்முறிவு நிரந்தரமானது என்றும், இனி வாழ்நாள் முழுதும் கோலூன்றித்தான் நடக்கவேண்டும் என்றும் அமெரிக்க டாக்டர்கள் சொல்லியிருந்ததினால் அவரது மனைவி இந்தியா செல்ல விரும்பவில்லை. ஆனாலும்  “உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு மனிதர் அங்கே இருக்கிறார்”  என்று இந்திரா தேவி அவர்களே சொல்லியிருந்ததைக் கேள்விப்பட்டு , “ஒருவேளை அவர் என் காலை பழைய நிலைக்கு வரும்படி குணப்படுத்தலாம்" என்று எண்ணமிட்டபடி இந்தியா செல்ல சம்மதித்தாள்.

 

🌷முதல் தரிசனமும் உள்ளார்ந்த உணர்தலும்:

1968ம் ஆண்டு  ஜனவரியில், பிரசாந்தி நிலையத்தை அவர்கள் அடைந்தபோது  சில பழமையான கட்டிடங்கள், நாலைந்து  கொட்டகைகள் அதன் மத்தியில் மந்திர் கட்டிடம் இருந்தது.


வராந்தாவில் சில வெளிநாட்டவர்கள் உட்பட  குறைவான மக்களே இருந்தனர் . பெண்கள் ஒரு கொட்டகையில் ஆண்கள் ஒரு கொட்டகையில் என அமர்ந்திருக்க, ஹிஸ்லாப்பின் எதிர்பார்ப்புகள் பெருகியிருக்க...சுவாமி மெதுவாக அவர்கள் மத்தியில் நடந்து வந்தார். அனைவரின் கண்களும் அவர் மீது பதிந்திருந்தன. சுவாமி  மிகுந்த மென்மையானவராக.. அழகாகவும் கருணையுடனும் கனிவுடனும்  தரைமீது  மிதந்து வருவது போல் ஹிஸ்லாப்புக்குத் தோன்றியது. அழகான பெரிய புன்னகையுடன் மயக்கும் வசீகரத்தை கொண்டிருந்த சுவாமியை பார்த்துக் கொண்டிருந்த போதே ஹிஸ்லாப் உலக உணர்வை இழந்து தனக்குள்  ஆழமாக ஆழ்ந்தார். உள்ளார்ந்த அமைதியின் களத்தில் ஒரு நுட்பமான இயக்கத்தை தனக்குள் உணர்ந்தார். பட்டாம்பூச்சியின் சிறகுகளில் இருந்து காற்று வீசுவது போல, மிகுந்த நுட்மான அசைவு தனது இதயத்தினுள் நிகழ்வதை உணர்ந்தார். அந்த ஆழ்ந்த ஆன்மீக உணர்விலிருந்து மீண்ட அவர், சுவாமி கடவுளைத் தவிர வேறு யாராகவும்  இருக்க முடியாது என்று உறுதி கொண்டார். சுவாமியே கடவுள் என்றும், இறைவனின் அவதாரம் என்றும் தன்னுடைய சொந்த உள்ளனுபவத்திலிருந்தே  அறிந்துகொண்டார்.

அதே நாளில் சுவாமி, ஹிஸ்லாப்பின் மனைவி விக்டோரியாவின் முறிவேற்பட்ட கால்களைப் பார்த்துவிட்டு,“கவலைப்படாதே சரியாகி விடும்!” என்று சொன்னார். அடுத்த 6 மாதங்களில், அது தானாகவே குணமாகி விட்டது என்று சொல்லவும் வேண்டுமா ?

 

🌷தெய்வீக அனுபவங்களும் சம்பாஷணைகளும்:

ஹிஸ்லாப் நேரடியாகக் கண்ணுற்ற அதிசயங்களும் தெய்வீக அனுபவங்களும் கணக்கில் அடங்காதவை.  தர்மக்ஷேத்திராவில் சுவாமியின் நிராகரிப்பினால் ஏங்கி அழுத சேலைகள், நிலாவின் நுண்படிவப் பிரதி உருவாக்கிய லீலை, வால்டர் கோவன் உயிர்தெழுந்த அற்புதம் (சவம் ஆகும்வரை மட்டுமே அனைவருக்கும் பொதுவான அனுபவம்; அதன் பின்னர் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெவ்வேறு அனுபவங்கள் என்னும் பேருண்மையை, சுவாமி ஹிஸ்லாப்புக்கு விளக்கியது), கியூபா நாட்டின் ஹவானாவில், ஹிஸ்லாப்பின் மனைவி விக்டோரியா (சிறுவயதில்) இல்லத்தில்  ஷீரடி பாபாவின் ரூபம் தோன்றிய லீலையை  சுவாமி உறுதிப்படுத்தியது, 

பல முறை சுவாமியோடு காரில் பயணப்பட்ட அனுபவம், அந்தப் பயணங்களின்  போது நிகழ்ந்த தெய்வீக  உரையாடல்கள், ஒவ்வொரு முறையும் ஆழமான ஆன்மீகக் கேள்விகளுக்கு சுவாமி சளைக்காமல் விடையளித்தது, 1976ம் ஆண்டு  கலிஃபோர்னியாவில் ஹிஸ்லாப்பின் வீட்டை அழிவிலிருந்து காத்தமை, 1978ம் ஆண்டு இந்தப் பிறவியின் ஆயுள் முடிவுக்கு வந்த சமயத்தில், (பெங்களுருவில் நடந்த ஒரு ப்ரோஸ்டேட் ஆபரேஷனின் போது ) சுவாமி மறுவுயிர் தந்து ஹிஸ்லாப்பின் வாழ்க்கையை நீட்டித்தது, சுவாமியின் செல்லப்பிராணிகளுள் ஒன்றான யானை சாயி கீதா, அடுத்த பிறவியில் மனிதப்பிறவி எடுக்கப் போகும் ரகசியத்தை ஹிஸ்லாப்பிடம் வெளிப்படுத்தியது என்று தெய்வீகத்தின் பலவித அம்சங்களையும் உணரும் வகையில் எண்ணற்ற அனுபவங்களைக் கொடுத்தார்,  எண்ணற்ற நேர்காணல்களின் மூலம் சுவாமியிடம்,  ஈடில்லா நல்லணுக்கத்தைப் பெற்றிருந்தார் ஹிஸ்லாப்.

 

🌷பிரேமாவதாரத்தின் திவ்யமுகம்:

சுவாமியின் அன்பின் வெளிப்பாடாக பல மோதிரங்களைப் பெற்றிருந்தார் ஹிஸ்லாப். பின்னர் உடைந்து /பழுதாகி அதை பாபாவே சரிசெய்தது அல்லது முற்றிலும் வேறான புதிய மோதிரம் வரவழைத்தது என சர்வசகஜமாக ஹிஸ்லாப்பிற்கு நடந்தது. அதில் குறிப்பிடும்படியாக


ஒருமுறை சுவாமி, "இதில் உனக்கு சுவாமி வேண்டுமா? இல்லை பிரேமசாயி வேண்டுமா?” என்று கேட்டார். "உங்கள் விருப்பம் சுவாமி" என்று ஹிஸ்லாப் பதில்தர, "நல்லது... இது பிரேமசாயியாக இருக்கட்டும், உன்னிடம் ஏற்கனவே சுவாமி உள்ளார்" என்று கூறிவிட்டு கைக்குள் பழைய மோதிரத்தை வைத்து மூன்று முறை ஊதினார். வெள்ளி வர்ண மோதிரத்தில் பளபளக்கும் பழுப்பு நிறக்கல் பதித்து; அதில் பிரேமசாயியின் முகவமைப்பில் மூக்கின்தடம், இடது கண்ணின் வளைவு, தோளில் விழுமளவு கேசம், மீசை மற்றும் தாடி லேசாகத் தெரிந்தன. "அவரின் பிறப்பு  இன்னும் செயல்பாட்டில் இருப்பதால்.. இதற்கு மேல் காட்டவியலாது!. உலகத்திற்கு அவர் காட்டப்படுவது இதுவே முதல் முறை!" என்றார் பாபா.


அந்த அதிசய மோதிரம், ஹிஸ்லாப்பிற்குத் தரப்படும்போது… பிரேமசாயியின் உருவத்தில் அவருடைய கேசம் சாதாரணமாக காணப்பட்டது. ஆனால் நாளாக நாளாக அதே உருவத்தில் கேசமும் தாடியும் வளர்ந்து காணப்பட்டது. முக/உருவ அமைப்பின் தெளிவு வெகுவாக வெளிப்பட ஆரம்பித்தது. ஹிஸ்லாப்பின் மைத்துனர் (விக்டோரியாவின் சகோதரர் ஃப்ரான்ஸிஸ், ஒரு புகைப்பட மற்றும் ஓவிய நிபுணர் ) ஒரு சிறப்பு காமிராவில் பலமுறை அந்த மோதிரத்தைப் படம்பிடித்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஓவியம் தான் இன்று நாம் பொதுவாகக் காண்கின்ற பிரேமசாயி பாபாவின் படங்கள்.
பாபாவின் அற்புதச் செயல்களைக் குறித்து  கேள்விப்பட்டோ, ஒன்றிரண்டை நேரில் பார்த்தோ, அத்தகு மகிமைகள் நம்வாழ்விலும் நடந்திடாதோ? என்ற ஏக்கங்கொண்டு பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வந்தோர்/வருவோர்  பலர். ஆனால் சிலரோ... தங்கள் வாழ்க்கையின் தொடக்கம் முதலே, ஆழ்ந்த தெய்வீக தாகத்தின் காரணமாக பல புத்தகங்களைப் படித்து, ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு, மடங்களை, கோவில்களை, மலைகளைக் கடந்து ஞான,யோக மார்க்கத்தில் பயணிப்பவர்கள்.  பல மகான்களின் வார்த்தைகளை, மதங்களின் சாரங்களை,  ஆராய்ந்து... உண்மையான இறைத் தன்மையைக்  குறித்த தீவிரமான தேடலில் ஈடுபடுபவர்கள். மேலும் இறைவனை, அவருடைய மகிமைக்காக தேடாதவர்கள், இறைவனை ஒரு உருவமாக வெளியே தேடாமல் தனுக்குள்ளே உற்பத்தியாகும்  அன்பு/அமைதி/ஆனந்தம்/தெய்வீகம் மூலம் உண்மையான தெய்வீகத்தை இனங்கண்டு கொள்பவர்கள். அப்படிப்பட்ட ஜிக்ஞாசு/ஞான நிலையிலுள்ள மனிதர்கள், ஸ்ரீ சத்யசாயி பாபாவைக் கண்ணுறும்போது...  தங்களின் சுயத்திலேயே (தன்னுணர்விலேயே), அவர்  இறைவனின் மனிதவடிவம் என்று எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்கு, சுவாமி செய்கின்ற பொதுவான அற்புதங்கள் தேவைப்படுவதில்லை. உண்மையைச் சொல்வதானால், (சுவாமி பலமுறை சொன்னதைப் போல), அற்புதங்களெல்லாம்  வெறும் விசிட்டிங் கார்டுகள்! என்பதைத்  தெளிவாக உணர்ந்தவர்கள் அவர்கள்.

 

புண்ணியாத்மா டாக்டர் ஜான் எஸ் ஹிஸ்லாப் அப்படிப்பட்ட ஒரு மேன்மையான ஞானமார்க்கப் பயணி என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் சுவாமி அவரை எத்தனையோ அற்புதங்கள் காணச்செய்தார். ஹிஸ்லாப் அனுபவித்த தெய்வீக நிகழ்வுகளை வெறும் அற்புதங்களாகக் கணக்கில் கொள்ளாமல் அவைகளை ஆராய்ந்து அறியமுயலும் கடமை நமக்கு உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நான்கு அற்புதங்களை இதற்காக நாம் எடுத்துக் கொள்ளலாம். 1. கிருஷ்ண தரிசனம், 2. சிலுவை-இயேசு சிலை, 3. ஹிஸ்லாப்புக்கு தொடர்ந்து மூன்றாண்டுகள் எல்லோர் உருவிலும் சத்யசாயி பாபா தெரிந்தது, 4. பாபாவின் சிரசைச் சுற்றி ஏற்பட்ட இரட்டை ஒளிவட்டம்.


🌷நீல வண்ண தேவமுகம்:

ஒருமுறை ஹிஸ்லாப், பாபாவின் காரில் பயணம் செய்தார். இவர் முன்வரிசையில் ட்ரைவரோடு இருக்க, சுவாமி மேலும் இருவருடன்  பின் இருக்கையில் இருந்தார்.  பயணத்தின் ஒரு கட்டத்தில்... பாபா பேசிக் கொண்டிருக்க, ஹிஸ்லாப்  திரும்பி சுவாமியைப் பார்த்தபோது, கிட்டத்தட்ட மூச்சே நின்று போகுமளவு அதிசயத்தில் அதிர்ந்துபோனார். காரில் பாபா இல்லை! அதற்குப் பதிலாக, மிகவும் அசாதாரணமான நீலவண்ண ஒளிமுகம்  கொண்ட ஒருவர் இருந்தார்   -  மாறுபட்ட  வனப்புடன் மிகவும் பெரியதாகவும் வசீகரமாகவும் இருந்தது அம்முகம் - அந்த அதிசய முகத்தைக் கண்ட பிரம்மிப்பில் அவரது  இதயம் கிட்டத்தட்ட வலியில் இருப்பதைப் போல முறுங்கியது. அவருடைய வாழ்நாளில், புகைப்படங்களிலோ அல்லது ஓவியங்களிலோ அவ்வளவு நேர்த்தியான அழகான  முகத்தை அவர் பார்த்ததில்லை என்றும் உணர்ந்தார். கற்பனைக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்ட  பேரானந்த அனுபவமாக இருந்தது. மேலும் அந்த அதிசய தேவரூபத்தின் நிறம் வெல்வெட் போன்ற அடர் நீளமாக இருந்தது. பாபாவின் முகத்திலிருந்து ஹிஸ்லாப் தன பார்வையை திருப்ப முடியாதவராக வியப்பில் உறைந்துபோனார். 

சில மைல்களுக்குப் பிறகு, ஸ்ரீ விட்டல் ராவ் (பாபாவின் இடதுபுறம் அமர்ந்திருந்தவர்) இவரிடம், “ஹிஸ்லாப், ஏன் சுவாமியை அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தாய்?” என்று கேட்டார். விட்டல் ராவுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக, ஹிஸ்லாப் பாபாவிடம், “சுவாமி, அந்த நீல நிறம் என்ன?” என்றார். அதற்கு பாபா, “ஓ! அதுவா? புரிந்துகொள்ள முடியாத ஆழம் கொண்டவை, அடர் நீலமாகத் தோன்றும்" என்றார். அந்த தருணத்தில் அந்த அனுபவம் குறித்து ஆழமான விடை ஹிஸ்லாப்பிற்கு கிடைக்கவில்லை.

அதற்குப் பலகாலம் கழித்து அந்தப் புதிரான அனுபவத்திற்கான விடை, 1975 நவம்பரில் ஒரு நேர்காணலின்போது பாபா, “ஆம், அது கிருஷ்ணர் தான்; கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களால் கற்பனை செய்யப்பட்ட கிருஷ்ணர் அல்ல. நான் ஹிஸ்லாப்பிற்கு உண்மையான கிருஷ்ணரைக் காட்டினேன்" என்று தெய்வீக ரகசியத்தை வெளிப்படுத்தினார் சுவாமி.


🌷ஏசுநாதர் மரித்த அதே சிலுவையின் பாகம்:

சுவாமி ஹிஸ்லாப்பிற்கு அபூர்வமான தெய்வீகப் பொருட்களை உருவாக்கிக் கொடுத்தார், குறிப்பாக சிலுவை-இயேசுவின் சிலை. 1973ம் ஆண்டு மகாசிவராத்திரி தினத்தன்று ஒரு சிறிய குழுவுடன் சுவாமி கிளம்பி பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள பந்திப்பூர் சரணாலயம் சென்றார்.  ஒரு பாலத்தை கடக்கும்போது, ​​பாபா இது தான் இடம் என்று குறிப்பிட்டு ஹிஸ்லாப்புடன் ஆற்றின் தரைப்பகுதிக்கு நடந்தார். ஒரு புதரருகே, ​​சுவாமி இரண்டு மரக்கிளைகளை ஒடித்து, அவற்றை ஒன்றன்மீது ஒன்றாக வைத்து, "இது என்ன ஹிஸ்லாப்?" என்றார். “சுவாமி, இது ஒரு சிலுவை” என்று அவர் பதிலளிக்க, பாபா அதனை  மூடிக்கொண்டு, கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே, மெதுவாக மூன்று முறை ஊதினார். ஒரு சிறிய சிலுவையில் கிறிஸ்துவின் உருவத்துடன் கூடிய  சிலையாக மாறியது; அதை ஹிஸ்லாப்பிடம் கொடுத்தார். "இது கிறிஸ்து தனது உடலை விட்டு வெளியேறிய நேரத்தில் அவர் உண்மையில் இருந்ததைக் காட்டுகிறது, கலைஞர்கள் அவரை கற்பனை செய்தது போல் அல்ல. எட்டு நாட்களாக உணவின்றி அவரது வயிறு உள்ளே இழுக்கப்பட்டு அவரது விலா எலும்புகள் அனைத்தும் தெரிகின்றது". பேச்சற்றுப்போனார் இஸ்லாப்,   பின்னர் பாபா தொடர்ந்தார்: “கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட அதே சிலுவையிலிருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டால் ஆனது இந்த சிறிய  சிலுவை. 2000 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரத்தினைக் கண்டுபிடிக்க சிறிது நேரம் பிடித்தது!" என்றார். 


சில ஆண்டுகளுக்குப் பிறகு, சில அமெரிக்க பக்தர்கள் ஹிஸ்லாப்பிற்கு தரப்பட்ட சிலுவை பற்றி சுவாமியிடம் கேட்டார்கள். பாபா பதிலளித்தார்: "ஆம், நான் அவருக்காக அதை செய்தேன். நான் மரத்தைத் தேடச் சென்றபோது, ​​​​சிலுவையின் ஒவ்வொரு துகள்களும் சிதைந்து தனிம நிலைக்குத் திரும்பியிருந்தன. நான் அதற்கு உருக்கொடுத்து ஒரு சிறிய சிலுவைக்கு போதுமான பொருளை மீண்டும் கட்டமைத்தேன்" என்றார்.


🌷எல்லாம் சாயி மயம்:

ஒருமுறை சுவாமியை தரிசித்து விட்டு இந்தியாவிலிருந்து கலிபோர்னியா திரும்பிய ஹிஸ்லாப், அமெரிக்க ஏர்போர்ட்டில் தரையிறங்கிய கணத்தில் சுவாமியின் சிரசு தன்மேல்

இருப்பதாக உணர்ந்தார். சுவாமியின்  கேசம் தொடங்கி தலை மற்றும் சுவாமியின் தோள்களை தன்னுடைய தோள்களின் மேல் உணர்ந்தார். அந்தக்  கணமே அவர் புரிந்து கொண்டு "சுவாமி! அமெரிக்காவிற்கு வருக வருக!" என்று மனதினுள் வரவேற்றார். தன்னுடைய இருப்புணர்விலேயே சுவாமியை உணர்ந்த அவர் அன்று முதல் சுவாமியைத்  தன்னைச் சுற்றிலும் கூட காண ஆரம்பித்தார். அது தத்துவார்த்தமான மனதின் கற்பனையோ அல்லது சுவாமியை-எல்லோரிலும்-காண்பதாக எடுத்துக்கொண்ட உறுதிமொழியோ அல்ல . உண்மையில் அவர் பார்க்கும் திசையெங்கும் சத்ய சாயிபாபாவின் உருவம் தெரிந்தது. முதலில் சிறிது அதிர்ந்தாலும் அவருக்கு அது ஒரு தெய்வீக அனுபவம் என்று புரிந்தது. அவர் ஒரு கூட்டத்திற்குச் சென்றால், அங்குள்ள ஒவ்வொருவரின் பின்னும் சுவாமியின் உருவம் தெரிந்தது. அங்குள்ள சுவர்களின் அருகே சுவாமி நிற்பதாகத் தெரிந்தது. ஒரு வாரமோ மாதமோ வருடமோ அல்ல, மூன்று ஆண்டுகள் அந்த அனுபவம் நீடித்தது.


🌷இரட்டை ஒளிவட்டம்:

ஹிஸ்லாப் சுவாமியிடம் பல கேள்விகளைக் கேட்டும் , சுவாமி தரும் பதில்களைக் குறிப்பெடுத்தக் கொண்டும் இருப்பதென்பது இயல்பான ஒரு நிகழ்வு. அப்படியொரு கேள்வி-பதில் சந்திப்பின்போது தர்மக்ஷேத்திராவில் ஒருமுறை ஹிஸ்லாப்பின் கண்களுக்கு மட்டும் (ஈஸி ஷேரில்  அமர்ந்திருந்த ) சுவாமியினுடைய தலையிலிருந்து வெளிப்பட்டு தலையைச் சுற்றி 12 இன்ச் அளவிலான தங்கநிற ஒளிவட்டம் தெரிந்தது. கடவுள் வரைபடங்களில் உள்ளது போல் சரியான வட்டமாக அல்லாமல் அதன் விளிம்பு அலையலையாய் அசைந்தது. சுவாமியின் தலை அசைகின்ற போதெல்லாம், அவர்  தலையோடு சேர்ந்து அந்த தங்கநிற ஒளிவட்டமும்  அசைந்தது.  அதே சமயத்தில்  சுவாமியின் தலைக்கு பின்புறம் (தலையோடு சேர்ந்து அசையாமல்) இன்னொரு தங்கநிற ஒளிவட்டமும் தெரிந்தது. அந்த இரண்டாவது ஒளிவட்டம், மற்றதை விடவும் அளவில் கொஞ்சம் சிறியதாக இருந்தது. அதன் விளிம்போ சரியான வட்டத்தினுடைய விளிம்பு போல இருந்தது.

கேள்வி கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஹிஸ்லாப் பிரமிப்பில் உறைந்து போனாரெனினும் தொடர்ந்து சுவாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரின் கண்களில் தெரிந்த வியப்பை அங்கிருந்த மற்றவர்கள் தெளிவாகக் காண முடிந்தது. கேள்விகளெல்லாம் முடியும் தருவாயில், அங்கிருந்த ஒருவர் ஹிஸ்லாப்பை நோக்கி, "ஹிஸ்லாப்... நீங்கள் ஏன் சுவாமியை அப்படி உறுத்துப் பார்கிறீர்கள்?" என்றார். ஹிஸ்லாப் தனது தலையைக் கேள்வி கேட்டவரின் பக்கம் திருப்பாமல், தன்னுடைய பார்வையை சுவாமி மீதிருந்து  நீக்காமல், தான் கண்டுகொண்டிருந்த காட்சியை விளக்கினார். உடனே சுவாமி, "ஹிஸ்லாப் என்ன காண்கிறாரோ, அது சரி தான்!" என்றார். கேள்வி எழுப்பிய நபர், "அப்படியானால் எங்களுக்கு ஏன் தெரியவில்லை?" என்றார். அதற்கு பாபாவோ, "இந்த ஒளிவட்டம் எப்போதும் உள்ளது. யார்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். அதற்கு ஆர்வத்தின் தீவிரம் தேவை!" என்று விடையளித்தார்.


🌷ஏன் சிலர்க்கு மட்டும்?

மேற்கண்ட நான்கு அற்புதங்களின் போதும் அங்கே வேறுசிலரும்


இருந்தார்கள். ஆனால் இத்தகு வியப்பான காட்சிகளும் அனுபவங்களும், உடனிருந்த எல்லோருக்கும் ஏற்படாமல் ஹிஸ்லாப்பிற்கு மட்டும் ஏன் நடந்தது? - - - இன்னும் சொல்வதானால், ஏன் ஒரு சிலர்க்கு மட்டும் வியத்தகு அற்புதங்களும் அனுபவங்களும் ஏற்படுகின்றன? ஒருசிலர் மட்டும் ஏன் ஆன்மீகப் பாதையில் சுலபமாக நடைபோட்டு இறைவன் அணுக்கத்தை எளிதில் பெறுகின்றனர்? - - - இதெற்கெல்லாம் விடை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பல ஜென்மங்களாக இறைவனைத் தேடும் பயணத்தில் பண்பட்ட ஆன்மாக்கள் ஒரு குருவையோ/அவதாரத்தையோ/பூர்ணாவதாரத்தையோ கண்டவுடன் எளிதில் பற்றிக்கொள்ளும் கற்பூரங்களாக உள்ளார்கள். அப்படிக் கற்பூரங்களாகப் பற்றிக்கொள்ளாத மற்றவர்கள், இன்னும் தாம் அடைய வேண்டிய தொலைவு என்ன என்பதை உணர்ந்து அதி தீவிரத்துடன் செயல்பட வேண்டும். மாபெரும் அடைமழை பொழிந்தாலுங்கூட நம்மிடமுள்ள  பாத்திரத்தின் அளவே தான் நீரை நிரப்பிக் கொள்ள முடியும். ஆகையினால் ஹிஸ்லாப் போன்ற புண்ணியாத்மாக்களின் அனுபவங்களை அசைபோட்டு அதனால் வரும் உத்வேகத்துடன் மேலும் அதிதீவிரத்துடன் ஆன்மீகப் பாதையில் பயணிக்க இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை வேண்டிக்கொள்வோம்.


மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர், பர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக