தலைப்பு

சனி, 24 செப்டம்பர், 2022

பூஜ்யஸ்ரீ ராம்லால் பிரபுஜி மகராஜ் |சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

முற்றும் துறந்த மகான் ஒருவர் தனது சீடரிடம் பாபாவை குறித்து பகிர்ந்த பேருண்மை விசித்திரமானது... ஆச்சர்யம் பூக்கிற வண்ணம் அதிசயமாகிட என்றென்றும் இதயத்தில் நிறைந்திருக்கும் படியானது... அப்படி என்ன அந்த இமய மகான் பாபாவை பற்றி விவரித்தார்... சுவாரஸ்யமாக இதோ...


ஆந்திர பிரதேசத்தில் யோக ஞானத்தை பரப்பிடும் ஸ்ரீ ஒருகன்டி நரசிம்ம யோகி காக்கிநாடாவை தனது பூர்வீகமாகக் கொண்டவர்... ஸ்ரீமத்பாகவத சொற்பொழிவு புரிந்து மக்களுக்கு ஸ்ரீ கிருஷ்ண பக்தியை ஊட்டுகிறவர்! ஒருமுறை அவருக்கு இமாலய தரிசனம் காண வேண்டும் என எண்ணம் மேலோங்குகிறது... ஞானப் பாதையில் நடந்து தியானத்தில் உறைந்து போகிறவர்க்கு இமாலயமே தாய் மடி... அந்த தாயிடம் ஞானப்பால் பருகி பனியில் தவ உறைவு பெறாத ஒரு பாரதீய யோகியர் கூட இல்லை...! அப்படி அவர் இமயம் நோக்கி பயணிக்கிற சமயத்தில் அவர் ஒரு மாபெரும் அவதூதரை சந்திக்கிறார்! அது யார்?

அவதூதர்கள் திரிலோக சஞ்சாரிகள்... சுற்றும் பூமியை சுற்ற வைப்பது பாபா.. அந்த பூமியோடு சேர்ந்து தனது மனதை நிற்க வைத்து உடலை மட்டும் சுற்ற வைத்துக் கொண்டிருப்பது அவதூதர்கள்.. அவர்கள் நதியைப் போல்... விதி கூட தேங்குகிறது ஆனால் நதி தேங்குவதே இல்லை.. அது போலவே அவதூதர்கள்... உலகக் கனவுகளில் சுகமில்லை என விழிப்படைந்தவர்கள்... அப்படி ஒரு அவதூதர்.. அவர் பெயர் சரவாணாநந்த அவதூதர்..! அவரை தரிசிக்கிறார் ஸ்ரீ நரசிம்ம யோகி! அவர் சாதாரணமானவர் அல்ல.. ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மன்னர் அரண்மனையில் ஆஸ்தான பண்டிதராக சபையை அலங்கரித்தவர்...  ஒருமுறை சிம்ஹகாட் கோட்டையை வீரசிவாஜியின் தளபதி தானாஜி முற்றுகையிடும் போது மாண்டு போகிறார்... அந்த ஆஸ்தான பண்டிதர் மனம் உடைந்து போகிறது... விதை மண்ணுக்கடியில் உடைந்தால் தான் செடியாகி தனது மொட்டுக்களை உடைத்து பூப்பூக்கும்... அது போல் உடைந்து சன்யாசியாகி சரவணாநந்த அவதூதராகிறார்! உலகத்தவர்க்கு மாறி மாறி வரும் இன்பம் மட்டுமே சொந்தமாகிறது... நிரந்தர ஆனந்தம் வரவேண்டுமெனில் துறக்க வேண்டும்... துறவே ஆனந்தம் தரும்.. அத்தகைய அகத்துறவே ஆனந்தம் என்கிற உண்மையை உணர்ந்த அந்த அவதூதர் தன்னை சந்தித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் ஸ்ரீ நரசிம்ம யோகியை  தனது குருவின் குருவை தரிசிக்கச் சொல்கிறார்... அவர் யார்?

அமிர்த்ஸரில் 1888 ஆம் ஆண்டு பகவந்தி கந்தாராமுக்கு பிறந்த ஒரு சித்தயோகியையே அவர் குறிப்பிடுகிறார்! 51 வருடம் ஓருடம்பில் வாழ்ந்து.. ஒரே சமயத்தில் பல உடம்பை எடுக்கும் வல்லமை பெறும் யோகசித்தியை அடைகிறார்... அவரே ஸ்ரீ ராம்லால்பிரபு! சிறு வயதிலேயே ஆதி சங்கரர் போல் துறவியாகிவிடுகிறார்! ஒரு ஆலமரம் தனது பூக்களாலா நிலைபெற்றிருக்கிறது? இல்லை.. அதன் அகண்ட வேரும் விழுதுமே காரணம் அதன் நிலைப்பிற்கு... அந்த வேர் போல் பாபா... விழுதுகள் போல் இத்தகைய மகான்கள்.. பாரதம் மகான்களின் பூமி.. மனிதர்கள் வெறும் சுற்றுலா பயணிகளே! அப்படியே இந்த மகான் பல்வேறு வகையான தவநிலையில் முன்னேறுகிறார்.. இமயப் பனியில் இன்னொரு பனியாய்... தவமே பணியாய் உறைந்து போகிறார்...சுத்த பிரம்ம சைதன்ய ரூபம் அவர்... சித்த புருஷர் அவர்...! அவரோடு சிலகாலம் தங்கி அவருக்கு சேவையாற்றுகிறார் ஸ்ரீ நரசிம்ம யோகி... பாபாவை பற்றி என்ன சொன்னார் அந்த மகான் ? என்பதை விளக்குவதற்கு முன்.. அவர் எத்தகையவர் ? என விளக்கினால் மட்டுமே.. அவரின் மொழி மனித மொழி அல்ல.. கங்கையின் புனித மொழி என்பதை நம்மால் உணரமுடியும்! 


பலர் நோய்களை வெறும் மலரின் இதழ் கொடுத்தே தணித்திருக்கிறார்.. பல்வேறு விதமான சீடர்கள் அவருக்கு சேவை சாதித்திருக்கிறார்கள்... அதில் ஸ்ரீ நரசிம்ம யோகிக்கும் பெரும்பாக்கியம் அமைகிறது! ஒரு


சமயத்தில் ஸ்ரீ ராம்லால் மகானின் உத்தரவின் பேரில் ஸ்ரீ நரசிம்ம யோகி புட்டபர்த்திக்கு வருகிறார்...
 ஒரு பறவையை நூலில் கட்டி அனுப்புவது போல் அந்த மகான் இங்கே அனுப்பி வைக்கிறார்... அது ஆரம்பகாலம்... பக்தர் கூட்டமும் குறைவாகவே இருக்கிறது... யோகியும் பாபாவை தரிசிக்கிறார்! தரிசன வரிசையில் அவரை அருகே அழைத்து பேசுகிறார் பாபா... பேசவும் சொல்கிறார்... சில நாள் தங்கி பாபாவை ஆன்மா குளிர அனுபவிக்கிறார் யோகி... இமயக்குளிரோ ஆன்மாவின் குளிரை தன்னிடம் அழைக்கிறது... ஆகையால் பாபாவின் அனுமதியோடு இமயம் நோக்கி பயணிப்பதற்காக விடை பெறுகிறார்! 


அங்கே யோகி தனது குருவான ஸ்ரீராம்லால் பிரபுவை வெகு சிரமத்திற்கு பிறகு சந்திக்கிறார்... ஆமாம் நீ எங்கிருந்து வருகிறாய் எனக் கேட்கிறார்...அவருக்கு தெரியாததில்லை... ஆயினும் அப்படியே பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கிறார்... யோகியும் "புட்டபர்த்தியில் இருந்து வருகிறேன் குருநாதா!" என்கிறார்! நாங்கள் அனைவரும் கடவுளின் தரிசனத்திற்காக தவம் இயற்றுகிற சமயத்தில் நீ அங்கே சென்று வந்திருக்கிறாய்?" ஏன் புரிகிறதா? என வினவுகிறார் அந்த மகான்... ஒன்றும் புரியாதது போல் குருநாதரின் வார்த்தையில் ஆச்சர்யப்பட்டு நிற்கிறார் யோகி... 


ஸ்ரீ சத்ய சாயி பாபா யார் என்று உனக்கு தெரியுமா?" என ஒரு கேள்விக் கேட்கிறார்... யோகி பாபாவை அனுபவித்தாரே அன்றி அவரால் அதனை விளக்க முடியவில்லை... அதற்கு இமய மகான் ஸ்ரீ ராம்லால் பிரபுவே "ஸ்ரீ சத்ய சாயி திரிமூர்த்தாத்மக பராசக்தி (The Powerful Trinity)... அவரே பராசக்தி சத்குரு (Very Powerful Universal Master)... ஏனெனில் சத்குருவுக்கு எல்லாம் பாபா அப்பாற்பட்டவர்!" என விளக்குகையில் ஸ்ரீ நரசிம்ம யோகி கண்கலங்குகிறார்... இத்தகைய பரப்பிரம்மத்தையா தரிசித்தேன் என மெய்சிலிர்த்துப் போகிறார்!


ஒருமுறை யோகி ஸ்ரீ குளம் மாவட்ட நரசன்னபேட் ஸ்ரீ சத்ய சாயி சமிதியில் தனது பாபா அனுபவத்தோடு அவரின் குருநாதர் பாபாவை பற்றி விளக்கிய சத்தியத்தையும் பகிர்ந்து சாயிராம் என இருகரம் கூப்பி வணங்குகிறார்! 

"நீங்கள் உங்களைப் புனிதமாக்கிக் கொள்வதற்கே அவதாரபுருஷனை (பாபாவை) தரிசிக்கிறீர்கள்! இதற்கு உங்களின் பூர்வீக புண்ணியமே காரணம்... எனது இந்த தரிசனத்திற்காகத் தான் மகான்களும் துறவிகளும் தவமியற்றுகிறார்கள்! ஆகவே நீங்கள் உங்களின் இந்த நேரத்தை ஒரு நொடி கூட வீணடிக்காமல் என்னோடு இணையுங்கள்... எனது தெய்வீகத்தை அனுபவியுங்கள்!" என்கிறார் பரப்பிரம்ம பாபா! இந்த சத்திய மொழியும் இமயப்பெரும் மகானான ஸ்ரீ ராம்லால் பிரபு பகிர்ந்த சத்திய மொழியும் எத்தனை பரவச பொருத்தத்தை கொண்டிருக்கிறது!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 59 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ Reference: Narasimha Yogi garu- Residents of Kakinada- Had taken Sanyas. Had established his ashram at Kakinada. He was the son of a Sanskrit Panditand details are as mentioned by him and recorded)


இப்படித்தான் உண்மையான மகான்களும் யோகிகளும் கடவுளிடம் தனது சீடர்களை ஆற்றுப்படுத்துவார்கள்... சரியான நெறியை காட்டுவார்கள்! பாபாவை ஓரளவுக்கு உணர்வதற்கே தியான நிலையில் உச்சம் பெற வேண்டி இருக்கிறது! பாபாவை திரிமூர்த்தாத்மக பராசக்தி என்கிறார் இந்த மகான்... Trinityயோடு கூடிய அதாவது திரிசக்தியோடு கூடிய பராசக்தியே பாபா என்கிறார்! அந்த சக்தியின் பக்தர்களாகிய நாம் நமது சக்தியை உலகியலுக்காக வீணடிப்பது என்பது அமிர்தத்தை எடுத்து பருகி பரமானந்தம் அடையாமல் வாயை மட்டும் கொப்பளிப்பது போல்...!


  பக்தியுடன் 

வைரபாரதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக