தலைப்பு

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

யோகினி ஹில்டா தரிசித்த ஸ்ரீ இமாலய யோகி!!

ஆன்மீகத்திற்கு வழியற்றிருந்த ஒரு வெளிநாட்டு பெண்மணியை ஒரு இமாலய யோகி எங்கே வழிகாட்டினார்? அவர் சொன்னது என்ன? அதன்பிறகு என்ன ஆனது ? என்பவை மிகவும் சுவாரஸ்யமாக இதோ...!


ஹில்டா எனும் பெயரை அறியாத பாபா பக்தர்களே இல்லை! சில சாதாரணர்கள் போல் பாபாவிடம் லௌகீக வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிரார்த்தனை செய்தவர் அவர் இல்லை... ஆன்ம முக்தி ஒன்றே இலக்கென இறைவன் பாபாவிடம் சரணாகதி அடைந்தவர் அவர்! ஆனால் அது அவ்வளவு சாதாரணமாக நிகழவில்லை... குந்தியும் காந்தாரியும் ஒரே ராஜவம்சத்தில் தான் வாக்கப்பட்டவர்கள்...ஆனால் குந்திக்கு இருந்த பக்தி காந்தாரிக்கு இல்லை! அது போல் பக்தி உணர்வு ஓர் அரிய குறிஞ்சி மலர்! பாபாவின் மேல் ஹில்டாவுக்கு பக்தி வருவதற்கு முன்பே முக்திக்கான பாதையில் நடை போட வேண்டும் எனும் எண்ணம் இமாலய ஐஸாய் இறுகுகிறது!


யோகினி ஹில்டா வந்து சேர்ந்த இடமோ இமாலயம்... அதுவே முக்தர்களை தயாரிக்கும் யோக உற்பத்தி சாலை... பனி புகையாக மேகங்களுக்கு வஸ்திராபரணம் தந்து கொண்டிருக்கும் யாக சாலை...! தியான நிமிடங்களில் உறையும் உடலை எதுவும் செய்யாமலேயே உறையச் செய்துவிடும் பனி அது... அப்பனியே தவம் ஒன்றே மனித ஆன்மாவின் பணி என உணர்த்துகிறது... ஒரு நாள் ஹில்டா மிகுந்த கலக்கமுடன் தன்னை யார் முக்திப் பாதையில் நடக்க வைப்பர்? என உள்ளே உருகுகிறார்... இமாலய மலையைப் பார்க்கிறார்... அந்த நிசப்தம் பிரபஞ்ச ரகசியங்களை தனக்குள்ளே பொதிந்து வைத்தும் பேசா தவம் புரிகிறது... குகைகளைப் பார்க்கிறார்... இங்கே யார்? யார்? எனக்கு முக்தி பாதையைக் காட்டுவர்? ஹில்டா மனம் முணுமுணுக்கிறது... ஆன்மா ஏகதேசம் தனது கடைசிப் பிறவிகளுக்குள் கால் பதிக்கும் போதே பக்தி- முக்தி - யோகம் - ஆன்மீகம் போன்ற பெயர்களை எல்லாம் கேள்விப்படுகிறது! அதற்கான அர்த்தங்களும் காலப்போக்கில் உதயமாகிறது! ஹில்டாவிற்கு யாரிடம் அணுக வேண்டும்? எனும் தடுமாற்றம்! யார் தன்னை கடவுளிடம் வழிகாட்டுவர்? எனும் ஒரு உறுத்தல் வினா...!


அப்போது ஒரு குரல் ஹில்டாவிடம் "எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிடு...! நீ விரைவிலேயே ஒருவரை சந்திக்கப் போகிறாய்! அவரை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்! உன் உள்ளார்ந்த ஆன்ம உணர்வை அவர் மட்டுமே உணர்ந்து கொள்வார்.. அவரால் மட்டுமே உனக்கு முக்தி சாத்தியம்!" என்கிறார்... அந்தக் குரல் மிகவும் தெளிவாகக் கேட்கிறது.. எந்தப் பிசிறும் இல்லை... ஹில்டாவோ கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்... தனக்குத் தானே பேசிக் கொள்கிறோமா? என நினைக்கிறார் ஆகையால் படார் என கண்களைத் திறந்து கொள்கிறார் ஹில்டா! அவர் முன் ஒரு இமாலய யோகி நின்று கொண்டிருக்கிறார்... புன்னகை பூத்த படி... சில நிமிடங்களில் அப்படியே சென்றுவிட்டு மறைந்து விடுகிறார்! தன் பெயரைக் கூட அவர் சொல்லவில்லை... அவசியமும் இல்லை.. தபால்காரர் தன் பெயரைச் சொல்லியா தந்தியை தருகிறார்? யோகிகள் சுவாமியின் கைக்கருவிகள்! இரண்டு கால்களால் நடந்து போகும் தூய கங்கை நதி அவர்கள்! தனக்கு நிகழ்ந்த சம்பவத்தால் பேராச்சர்யப்படுகிறார் ஹில்டா... அப்போது காற்றலைகள் கங்கையில் மோத பிரணவ மந்திரம் கேட்கிறது ஹில்டாவிற்கு... இமயத்தில் தவம் செய்வது போக இமயமே தவம் செய்வதாக உணர்கிறார் ஹில்டா... மாலை மசங்குகிறது..ஆனால் அதற்குள் ஹில்டா இதயத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டுவிடுகிறது! வந்து சொன்ன யோகி யார்? யாரை தான் சந்திக்கப் போவதாகச் சொன்னார்? அப்போது ஹில்டாவுடைய இந்தக் கேள்விக்கான விடைகளை எதிர்காலம் எனும் அமானுஷ்ய பொழுது மடித்து வைத்துக் கொண்டு புன்னகை செய்து கொண்டிருந்தது...!


அந்த எதிர்காலம் என்பது இரண்டே இரண்டு வாரம் தான்.. ஹில்டா பிரசாந்தி நிலையத்தில் இருக்கிறார்! பாபாவின் தெய்வீக அருகாமையில் பேரானந்தப் படுகிறார்! இமயத்தில் அந்த யோகியை தரிசித்த அதே குளிர்ப் பரவசம் பாபாவிடம்! அந்த இமாலய யோகி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கண்முன் காவி உடுத்தி கதிரொளியாய் நடப்பதை ஹில்டாவினால் உணர முடிகிறது! அப்போதே இமய யோகி பெயரைச் சொல்லி இருந்தால் இந்தக் கூடுதல் பரவசம் ஹில்டாவிற்கு சாத்தியப்படாமல் போயிருக்கும்... எல்லாமே முன்கூட்டியே மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை... பரவசமும் இல்லை... அப்படித் தெரிய வந்தால் மனிதன் யோகியே ஆகிவிடுவானே!


ஆழ்ந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஹில்டா அனுபவிக்கும் போதே பாபா அருகே வந்து "என்ன வேண்டும்?" எனக் கேட்கிறார்... நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என நன்றாகத் தெரிந்தே கேள்வி கேட்பது பூவுலகில் இறைவன் பாபா ஒருவரே! உடனே ஹில்டா "கடவுளை உணர வேண்டும்!" என கடவுளிடமே கேட்கிறார்! அதற்காகத் தானே ஹில்டா பாபாவால் வரவழைக்கப்பட்டிருக்கிறார்! "எவர் ஒருவர் ஆன்மீக வாழ்வில் தீட்சை அளிக்கப்படுகிறாரோ... எவர் ஒருவர் அதுமுதல் ஆன்ம சாதனையை தடையின்றி தொடர்கிறாரோ... கடவுளை உணர்தல் எனும் பேரனுபவம் அனிச்சை செயலாய் நிகழ்கிறது!" என பதில் அளிக்கிறார் பாபா!


பிறகு பாபா மேடையில் உரையாற்றுகிறார்.. தெலுங்கில் ஒரு வரிகூட புரியவில்லை ஹில்டாவிற்கு.. மொழி புரிய வேண்டிய அவசியமே இல்லை.. வழியே புரிந்துவிட்டது அவருக்கு... நமக்கே வீட்டு முகவரி தெரிந்தால் நாம் ஏன் இன்னொருவரை கேட்கப் போகிறோம்?! அது போல் பரவசமாக பாபாவின் தரிசன அணுக்கத்தை ஆன்மதாகம் தீரத்தீர அனுபவிக்கிறார் அவர்! அவரோ வெளிநாட்டு மாது- அங்கு வாழ்க்கையே வேறு விதம் - அந்தக் கோமாளித்தனங்களின் நிலையாமையை உணர்ந்து கடல் கடந்து பாபாவிடம் முக்திக்கு தஞ்சம் அடைகிறார் எனில் ஹில்டா யோகினி அல்லாமல் வேறு யார்? 


ஒருமுறை பாபா தரிசன வரிசையில் ஹில்டாவிடம் வந்து ஒரு இனிப்பை சிருஷ்டித்து "உன்னுடைய யோக சாதனையால் உனக்கு உள்சூடு நிறைய ஏற்பட்டிருக்கிறது... இதோ இந்த இனிப்பைச் சாப்பிடு... சூடு கட்டுப்பட்டுவிடும்!" என்கிறார் பாபா! உள்மாற்றங்களை உற்று கவனித்துக் கொண்டே வரும் பாபா... தக்க சமயத்தில் அந்தந்த யோக நிலைக்கு ஆன்ம சாதகர்களை அழைத்துச் செல்கிறார்! பாபாவின் பூரண அனுகிரக வழிகாட்டுதல்களால் "அன்பின் ஆனந்தத்தின் வடிவமாகிவிட்டேன் நான்" என்கிறார் ஹில்டா இதயம் திறந்து! ஆம் அது நிகழும் தானே! நெருப்பிடம் செல்லும் குப்பையே நெருப்பாகிற போது.. நெருப்பிடம் சென்ற ஹில்டா எனும் கற்பூரம் பற்றி எரிந்து சைதன்ய ஜோதியை உள்ளே தரிசிக்காமலா போயிருக்கும்?!

ஆன்ம சாந்தியோடு பிரசாந்தி நிலையம் விட்டு நகரும் ஹில்டாவிடம் பாபா மெல்லிய குரலில்.. "ஆம்... பெயர்களையும் கடந்து... வடிவங்களையும் கடந்து... எங்கும் நிறைந்திருக்கும் சுவாமிக்கு பெயரும் வடிவமும் இருக்கிறதா என்ன?" என்கிறார்... இமய Hill லிலிருந்து ஆரம்பித்த Hilda இதயம் கங்கையாய் பொங்கி வழிகிறது! பிறகு அமெரிக்க நியூயார்க்கில் தியான மையம் ஆரம்பித்த ஹில்டா அனைவருக்கும் ஆன்மீக வழிகாட்டுகிறார்!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 81/ Author : Jantyala Suman babu / Translation : Eng Pidatala Gopi Krishna) 


"சுவாமி ஒரு பெயருக்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டவர் அல்ல... சுவாமி எல்லோருக்கும் சொந்தமானவர்... நீங்கள் என்னை எந்த பெயர் கொண்டும் அழைக்கலாம்... எனக்கும் இந்த உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! மனித இனத்திற்காகவே சுவாமி மனிதனாய் நடித்துக் கொண்டிருக்கிறேன்! உங்களின்  ஒட்டுமொத்த மனித இனமே ஒன்று சேர்ந்து 1000 வருடம் சேர்ந்தார்ப்போல தவம் இயற்றினாலும் சுவாமியை உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது!" என்கிறார் பாபா! இதை விட தெள்ளத்தெளிவாக யாராலும் சொல்லவே இயலாது! பாபா உலகத்திற்கே பொதுவான இறைவன்... அவரை எந்த ஒரு அமைப்பும் தனக்கே என உரிமை கொண்டாடி ஆக்கிரமிக்க முடியாது அது நிகழவும் நிகழாது...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக