🌷பர்த்தி மதுராவாகும்:
“ராமர், கிருஷ்ணர் மற்றும் சாயிபாபா ஆகியோர் வேறு வேறாகத் தோன்றுகின்றனர். ஏனெனில் அவர்கள் தரித்திருந்த வெளி ஆடைகள் வேறுபட்டுள்ளது. ஆனால் அனைவரும் ஒன்றே! என்னை நம்புங்கள்; எந்த தவறுக்கோ அல்லது இழப்பிற்கோ இட்டுச் செல்லப்படாதீர்கள்.
இங்கு அழைக்கப்படும் மக்களுக்கு இந்த அரங்கமோ, இனி வரும் பெரிய கட்டிடங்களோ மிகவும் சிறியதாக தோன்றும் காலம் வரும். எதிர்காலத்தில் இருக்கப் போகும் அரங்கிற்கு வானமே கூரையாக இருக்கும்….
புட்டபர்த்தி மதுரா நகரமாக மாறிவிடுவதற்கு நீங்கள் சாட்சியாக இருப்பீர்கள். இந்த வளர்ச்சியை நிறுத்தவோ, தாமதப்படுத்தவோ எவராலும் இயலாது.
- தெய்வீகப் பேருரை, 21.10.1961 (சத்ய சாயி அருளமுதம், தொகுதி 2)
🌷பிரபஞ்சமே நா இல்ல (பிரபஞ்சமே எனது மாளிகை!!
“பிரபஞ்சமே நா இல்லு”; (அகில உலகமே என்னுடைய மாளிகை) யாரால் இதைக் கூற முடியும்? அகில உலகத்துக்கும், அண்டசராசரத்துக்கும் தலைவனாக இருப்பவரால் தான் இதைக் கூற முடியும். குரு பெளர்ணமி தினம் பம்பாயில் தர்ம க்ஷேத்திரத்திற்கு பகவான் வந்திருந்தார். ஸ்வாமியின் தெய்வீக சொற்பொழிவை கேட்க 30,000 ஜனங்கள் கூடி இருந்தனர்.
சொற்பொழிவு ஆரம்பமாயிற்று “நான் எல்லா இடத்திலும் இருப்பவன்; எல்லாமே எனது இடம். ப்ரபஞ்சமே நா இல்லு” என்று கூறினார் பாபா. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லும் போது திரு.கஸ்தூரி “உலகமே எனது மாளிகை” என்று மொழி பெயர்த்தார். ஸ்வாமி உடனே ஒலி பரப்பியை ஒரு கையால் மூடிக் கொண்டே திரு கஸ்தூரியை நோக்கி ஆள்காட்டி விரலை ஆட்டியபடி, “இல்லை இல்லை” என்று கூறியவாறு திரு கஸ்தூரியை நோக்கி வந்தார். “ஏதோ தவறு செய்துவிட்டோம்” எனப் புரிந்துகொண்டு அழமாட்டாக் குறையுடன் ஸ்வாமியை நோக்கி கஸ்தூரி நடந்தார். தான் என்ன தப்பு செய்திருந்தாலும் ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்ற பயத்துடன் ஸ்வாமியின் அருகில் சென்றார். “உலகம் மட்டும் இல்லை, அகிலமே என்னுடைய மாளிகை” என்று ஸ்வாமி கூறினார். திரு. கஸ்தூரி தனது மொழிபெயர்ப்பில் உள்ள தவறை உணர்ந்து ஸ்வாமியின் பாதத்தில் நமஸ்கரித்தார். ஆம்! சகல உலகத்துக்கும் நாதனாகிய ஸ்வாமியால்தான் இதைக்கூற முடியும்.
- ஆதாரம், திரு. கஸ்தூரி அவர்களின் 'Loving God'
🌷என் ஆற்றல் அளவற்றது:
“எனது ஆற்றல் அளவற்றது; எனது சத்தியம் சொல்லுக்கடங்காதது, ஆழம் காண இயலாதது. அவசியம் ஏற்பட்டதால், என்னைப் பற்றி நானே கூறுகிறேன். இப்பொழுது நான் செய்வதெல்லாம், ‘விஸிட்டிங் கார்ட்’ எனப்படும் நன்கொடைதான் . அவதாரங்களால் தெரிவிக்கப்படும் சத்தியத்தைப் பற்றிய அழுத்தமான அறிவிப்புகள், தெளிவாகவும் சந்தேகத்துக்கிடமில்லாமலும் கிருஷ்ணனால் மட்டுமே கூறப்பட்டன என்று நான் கூற விரும்புகிறேன்.
அவ்வாறு அறிவித்த பின்னும் கூட, அதே கிருஷ்ணன்னின் வாழ்கையில் அவர் தனது முயற்சிகளிலும் பிரயாசைகளிலும் சில தோல்விகளைச் சந்தித்தார் என்பதை கவனித்திருப்பீர்கள். அவரே திட்டமிட்டு இயக்கிய நாடகத்தில் இந்தத் தோல்விகளும் ஒரு பகுதிதான் என்பதையும் நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக கெளரவர்களுக்கு எதிராக நடத்த இருந்த போரைத் தவிர்க்குமாறு பல அரசர்கள் கிருஷ்ணனிடம் மன்றாடிய போது, அவர் சமாதானம் பேச, கெளரவர்கள் சபைக்கு அவர் சென்ற முயற்சி ‘தோல்வியடைந்தது’ என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அது வெற்றி பெற வேண்டும் என்று அவர் திருவுள்ளங்கொள்ளவில்லை. போர் நடைபெற வேண்டுமென்றுதான் அவர் முடிவு செய்திருந்தார். கெளரவர்களது பேராசைக்காவும், அநீதிக்காவும் அவர்களைத் தண்டிக்க வேண்டும், உலகத்தின் முன் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்த சாயி அவதாரத்தின் போது, தோல்வி, அபஜெயம் போன்ற காட்சிகள் கொண்ட நாடகத்திற்கு இடமேயில்லை. நான் சங்கற்பித்தது நடந்தே தீரும்! நான் திட்டமிடுவது வெற்றி பெற்றேயாக வேண்டும். நானே சத்தியம்; சத்தியம் தயங்கவோ, அஞ்சவோ, வளையவோ தேவையில்லை!!
- தெய்வீக பேருரை, பிருந்தாவன், 19.06.1974 (சத்ய சாயி அருளமுதம், தொகுதி 12)
🌷திருத்தவே வந்த அவதாரம்:
“இந்த சாயி அவதாரம் ஜபமோ, தியானமோ, யோகமோ எதுவும் செய்வதில்லை, வாழிபாடுகள் எதுவும் செய்வதில்லை. சாயி யாரை நோக்கியும் பிரார்த்திப்பதில்லை. ஏனெனில், இவரே அனைத்திலும் உயர்ந்தவர். வழிபடவும், பிரார்த்திக்கவும் அவர் கற்பிக்கிறார் அவ்வளவே.
இந்த அவதார காலத்தில் கொடியவர்கள் அழிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் திருத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு, அறிவு புகட்டப்பட்டு, அவர்கள் எந்தப் பாதையில் இருந்து விலகினார்களோ, அந்தப் பாதைக்கு கொண்டு செலுத்தப்படுவார்கள். கரையான் பிடித்த மரம், வெட்டப்படாது, காப்பாற்றப்படும்”
- தெய்வீகப் பேருரை, மஹாசிவராத்திரி, 1955 (சத்ய சாயி அருளமுதம், தொகுதி 1)
🌷மானிட உருவும் – தெய்வீக ஆற்றலும்:
“நான்கு கரங்களோடு ஸ்ரீமன் நாராயணனாக நான் தோன்றியிருந்தால் என்னை காட்சிப் பொருளாக்கி, என்னை காண்பதற்கு, மக்களிடம் கட்டணம் வசூலித்திருப்பார்கள். மற்ற எல்லா மக்களையும் போல, நானும் ஒரு சாதாரண மனிதனாக பிறந்திருந்தால் நான் கூறுவதை யார் கேட்பார்கள்? அதனால் மனிதத் தன்மைக்கு மேலான சக்தியும் ஞானமும் உடையவனாய் மனிதவுருவில் வந்துள்ளேன்”
- சத்தியம் சிவம் சுந்தரம் (தொகுதி 3, அத்யாயம் 17)
🌷அனைத்து தெய்வீக தத்துவங்களும் இணைந்தது சாயி உருவம்:
“நான் உங்களோடு பழகுவதால், உங்களைப்போலவே உண்பதால், உங்களோடு பேசுவதால், இது ஒரு மானிட உருவமே என்ற மாயையில் நீங்கள் மூழ்கிக்கிடக்கிறீர்கள். நானும்கூட உங்களோடு ஆடிப்பாடி, சேர்ந்து பணி புரிந்து உங்களை மாயையில் ஆழ்த்துகிறேன். ஆனால் எந்த வினாடியிலும் என் தெய்வீகத்தன்மை உங்களுக்கு வெளிப்படுத்தப்படலாம். அதற்கு நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்…..
“எல்லா தெய்வீக உண்மைகளும், எல்லா தெய்விகத் தத்துவங்களும் நிரம்பிய வடிவம் இந்த என் மானிட வடிவம்! அதாவது மனிதன் கடவுளுக்கு இட்ட எல்லாப் பெயர்களையும், எல்லா உருவங்களையும் வெளிப்படுத்துகிறது இந்த உருவம். சர்வதேவதா சொரூபங்களைத் தரித்துள்ள மானிட உருவம் இது! (ஸர்வதேவதா சொரூபலனு தரின்ச்சின மான்வாகாரமே ஈகாரமு என்று பாபா தெலுங்கில் கூறினார்)."
- தெய்வீக பேருரை, 17.05.1968 (சத்ய சாயி அருளமுதம், தொகுதி – 8)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக