தலைப்பு

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

பக்தர்களுக்கு கௌரி மாதாவாக காட்சி அளித்த பாபா!


பாபா என்றாலே, மேட்டுக்குடி மக்களையும், பிரபலங்களையும் வசீகரித்தவர் என்று, அறியாத சிலர், தவறான மேம்போக்கு கருத்துக்களைக் கூறுவதுண்டு. எண்ணற்ற தீனர் களையும் திக்கற்றவர்களையும், ஏழை எளிய மக்களையும் , தமது கரம் கொடுத்து மேலெழுப்பி , வரம் அருளி பாபா அவர்கள் வாழவைத்த நிகழ்வுகள் ஆயிரம் ஆயிரம்...


புக்கபட்டினம்... பர்த்திக்கு அருகில் உள்ள சிற்றூர். அங்கு வசித்து வந்த யாதாளம் குடும்பத்தில், பாபாவின் அருள் மழைச் சாரல் எப்படி புகுந்தது  என்பதை விளக்குகிறார், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார். யாதாளம் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் ஊர் புக்கப்பட்டினம். 


அந் நாட்களில் எனது தகப்பானர் உடல்நலம் சரியாக இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார். அவ்வப்போது ஷீரடி பாபா சம்ஸ்தானத்திலிருந்து உதியை வரவழைத்து அதை பிரசாதமாக தரித்துக் கொண்டிருந்தார். அச்சமயம எங்கள் ஊர் லக்ஷ்மி நாராயணர் கோயிலுக்கு வந்த ஒரு தம்பதிகள், எங்கள் குடும்ப நண்பரிடம், எங்கள் தகப்பனாரின் உடல்நிலையைப் பற்றி கூறியது ஆச்சர்யமாக இருந்தது. "அவர் உயிருக்கு ஆபத்தில்லை, அவர் பூரண குணம் அடைந்துவிடுவார். பொன்னால் ஆன பசு/ கன்றின் சிலையை 40 நாட்கள் பூஜை செய்தபின் ஒரு மஹாத்மாவிடம் ஒப்படைக்க வேண்டும்" என்ற பரிகாரத்தையும் அவர்கள் கூறினர். இந்த சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பாபா உரவுகொண்டாவிலிருந்து, மறுபடியும்  புட்டபர்த்திக்கு வந்த சமயம். அப்போது எங்கள் ஊரில்  நடக்கும் வாராந்திர சந்தைக்கு புட்டபர்த்தியில்  இருந்து வந்த சிலர். "எங்கள் ஊர் வெங்கப்பாவின் மகன், பல விதமான பொருட்களை வரவழைத்தும், துஷ்ட சக்திகளை விரட்டியும் அற்புதங்களைச் செய்துவருகிறான்" எனக் கூறினர். இதைக் கேட்ட என் தாத்தா, பாபாவிடம் கேட்க வேண்டிய 3 கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி எடுத்துக்கொண்டு புட்டபர்த்தி விரைந்தார். 


அன்று சனிக்கிழமை. பாபா அப்போது தன் தாயினும் மேலாக பாசம் காட்டி வளர்த்த, கர்ணம் சுப்பம்மா அவர்களின் வீட்டில் பின்கட்டில் தங்கி தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். ஏராளமானவர்கள் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் பாபாவை எப்படி தரிசிக்க இயலும் என எங்கள் தாத்தா கவலையுடன் இருந்த சமயம், உள்ளே அமர்ந்திருந்த பாபா ஒருவரை அழைத்து  "வெளியல் ஒருவர் வெள்ளை சட்டை அணிந்து, கைப்பை வைத்திருப்பார். அவரை அழைத்து வா" என்றாராம். பாபாவின் அழைப்பின் பேரில் உள்ளே சென்ற எங்கள் தாத்தா, ஸ்வாமியைக் கண்டவுடன் மெய் மறந்து சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து சேவித்தார். அவரை அருகில் அழைத்த பாபா "நீ எழுதி இங்கு கொண்டு வந்திருக்கும் 3 கேள்விகளில், ஒன்று உனக்கு சம்மந்தமில்லாதது, மற்ற இரண்டும் தான் உன் சம்பந்தப்பட்டது. உன் மகனுக்கு ஒன்றும் நேராது" என்றார். இதைக் கேட்ட என் பாட்டனார் ஊர் திரும்பினார். 

15 நாட்கள் கழிந்தன. ஒரு சனிக்கிழமை. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பாபாவின் தரிசனம் காண புட்டபர்த்தி சென்றோம். பாபா அணிவதற்கான ஆடைகளையும், பாதபூஜைக்கான திரவியங்களுடன், அந்த பொன்னால் ஆன பசு மற்றும் கன்றின் சிலை இவற்றையும் எடுத்துச் சென்றோம். அந்த காலத்தில் குக் கிராமமான புட்டபர்த்தியில் எதுவும் கிடைக்காது. ஆகையால் சாப்பிட உணவு வகைகளையும் எடுத்துச் சென்றோம். பாத பூஜையும் பாபாவை கௌரி அன்னையாக தரிசித்த பாக்கியமும் பாபாவை தரிசித்தபின் பாதபூஜைக்கு  அனுமதி பெற்றோம். பாபாவின் திருப் பாதங்களை நீர்விட்டு கழுவி, சந்தனம் குங்குமம் வைத்து , நமஸ்கரித்தோம். இதன்பிறகு, பாபா தமக்கே உரிய தாய் அன்புடன் "நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். சித்ராவதி சென்று உணவு அருந்திவிட்டு வாருங்கள்" எனக் கூறினார். பிறகு என் தாத்தாவை அழைத்து , "கவலைப் படாதே. உன் மகன் உடல்நிலை ஓரிரு ஆண்டுகளில் சரியாகி விடும்" எனக்கூறி, ஷீர்டி சாயி பாபா தலைக்கு அணியும் கப்னியை கை அசைவில் வரவைழத்து, விபூதி பிரசாதமும் கொடுத்தார். இச்சமயம் எங்கள் அன்னைக்கு, மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பெயரிடும் வைபவத்திற்கு வந்த பாபா 'சாயிலீலா' என்ற பெயரைச் சூட்டினார்.

ஸ்வாமியைக் காணவரும் பக்தர் கூட்டம் பெருகவே, கர்ணம் சுப்பம்மா தமக்கு சொந்தமான காலி நிலத்தை கொடுக்க, திருமலைராவ் என்ற எஞ்ஞினீயர் அதன்மீது ஒருஷெட் நிர்மாணித்தார்.  அதன் அருகே பூச் செடிகள் வைக்க பள்ளம் தோண்டியபோது ஒரு சிவ லிங்கம் கிடைத்தது. அது ஷீரடி பாபாவால் விழுங்கப்பட்ட லிங்கம் எனக் கூறிய பாபா, அதை தரிசிக்க எங்களை அழைத்துவரச் சொன்னார். அந் நாட்களில் நாங்கள் வாரம் ஓரிரு முறை பர்த்தி சென்று பாபாவைத் தரிசிப்போம்.அப்போது பாபா பலவித கதைகளைக் கூறுவது வழக்கம். கிருஷ்ண லீலா, ஆதி சங்கரர், அகத்தியர் ஆகிய கதைகளை பாபா ஸ்வாரஸ்யமாகக் கூறுவார். பிறகு பிரசாதங்களை சிருஷ்டித்து எங்களுக்கு அளிப்பார்.


பிறகு ஒரு சமயம் கஜகௌரி பூஜை செய்ய நாங்கள் ஏற்பாடு செய்தபோது,  ஸ்வாமி தாமே கௌரி தேவியாக , புடவை அணிந்த கோலத்தில், குட்டை ரவிக்கை அணிந்தவாறு, சகல ஆபரணங்கள் பூண்டு, ஜடை முடிந்து, குங்குமப் பொட்டுடன் காட்சி அளித்தார் . இதற்கும் மேலான பாக்கியமாக எங்கள் ஒவ்வொருவரிடமும், தமது வஸ்திரத்தை நீட்டி"வாயனம்" (கடவுளுக்கு அளிக்கப்படும் பிரசாதம்) வாங்கிக்கொண்டு எங்களையும் ஆசீர்வதித்தார்.


ஆதாரம்: 'Sri Sathya Sai Sandesha Jhari' யூடியூப் சேனலுக்கு அவர்கள் அளித்த நேர்காணல் வீடியோ

 தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


🌻வேண்டிக் கேட்டுக் கொள்பவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வடிவத்தில் காட்சி அளிக்கும் நம் பாபாவின் மகிமையை விவரிக்க, வானத்தையே காகிதமாக்கி எழுதினாலும் போதாது. எளிய பக்தர்களிடையே, அதனினும் எளிதாக இரங்கி வரமளிக்கும் கலியுக அவதாரராகிய பாபாவின் மெய் கீர்த்தி உணர்ந்து, அவரது பொற்பாதம் பணிந்து, உய்வோமாக. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக