தலைப்பு

புதன், 7 செப்டம்பர், 2022

மனித ஆன்மாவின் நிலையை விளக்க முடியுமா?

ஆன்மா எனும் நிலையைச் சொல்கையில் அது சச்சிதானந்தம் என்றும் சத்யம் சிவம் சுந்தரம் என்றும் விவரிக்கப்படுகிறது! அப்பேர்ப்பட்ட மிக உயரிய நிலையை அடைய முடியுமா என கலங்க வேண்டாம்!

நிலையற்ற மனிதன் நிலையான சத்'தாகவும்... அறிவற்ற மனிதன் அறிவான சித்'தாகவும்  துன்பம் மிகுந்த மனிதன் ஆனந்தமாகவுமே, பொய் நிறைந்த மனிதன் சத்தியமாகவும், தீமை நிறைந்த மனிதன் சிவம் என்ற பெருநலமாகவும் , அவலட்சண குணமுள்ள மனிதன் சுந்தரமாகவும் ஆக முடியுமா? என்று தளர வேண்டாம்! 

இப்போதும் கூட நீங்கள் சச்சிதானந்தமாக - சத்யம் சிவம் சுந்தரமாக இருப்பவர்கள் தான்! இத்தன்மைகள் உள்ள ஆன்மா தான் இப்போதும் உங்கள் உடம்புக்குள் இருக்கிறது! உங்களுக்குள் அது அடிப்படை உண்மையாக இருக்கிறது! அதுவே நீங்கள்!  மாயையினால் வந்து மூடியுள்ள எதிரிடைத் தன்மைகள் தான் உங்களின்  அந்த உண்மை நிலைக்கு மாறான செயற்கை வேஷமே! செயற்கை வேஷம் கலைந்து இயற்கையாக ஆக முடியுமா என்று சந்தேகப்படலாமா?

இப்போதும் நீங்கள் சச்சிதானந்த-சத்யம் சிவம் சுந்தரம் தான் என்பதற்கு சான்று தருகிறேன்... அது உங்கள் உள்ளனுபவமாகக் கொள்ளவே உள்ளூர இருக்கும் உங்கள் அவாவையும் இது நிரூபிக்கும்! 

உங்களுக்கு மரணமடைய விருப்பமே இல்லை! எவ்வளவு வயதாகி எத்தனை இன்னல்கள் பட்டாலும் உயிரை விடுவதற்கு மனம் வருவதே இல்லை! எப்படியேனும் உயிரைக் காத்துக் கொள்ளவே முயற்சி செய்கிறீர்கள்... 

உங்களை யாரேனும் செத்துப்போக வேண்டும் என திட்டினால் அதனை மிகப்பெரிய சாபமாகக் கருதுகிறீர்கள்! ஏதோ நீங்கள் என்றைக்கும் நிலையானவர் போலவே திட்டம் வகுக்கிறீர்கள்! இவ்வாறு என்றென்றும் இருக்க ஆர்வமாயிருப்பது அடிப்படையில் நீங்கள் என்றும் உள்ள சத்'தாக இருப்பதால் தான்!

உங்களுக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ.. பயன் இருக்கிறதோ இல்லையோ... எந்த விஷயமானாலும் அது உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. குழந்தையாக இருப்பதிலிருந்தே அது என்ன இது என்ன என்று தெரிந்து கொள்வதிலேயே உங்கள் மனம் இருக்கிறது! ஒரு ரயிலில் சென்றாலும் அந்த ரயில் உறவு நிலையே இல்லை என நன்கு தெரிந்திருந்தும் கூட பயணிப்பவர்களின் பெயர் /ஊர்/ பயண நோக்கம் என ஒன்றையும் விடாமல் அறிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் உங்களுக்கு அதிகம்... யாராவது நாசமாகப் போ என திட்டினாலும் பொறுப்பீர்கள்.. ஆனால் "நீ ஒரு முட்டாள்!" என்று உங்களை யாரேனும் வசைபாடினால் உங்களால் தாங்கவே முடியவில்லை... மிகப்பெரிய அவமானமாக அதை கருதுகிறீர்கள்! காரணம் நீங்கள் அடிப்படையில் அறிவே உருவான ஞானஜோதியான சித்'தாக இருப்பதால் தான்!

நீங்கள் வாழ்வது முழுக்க எதற்காக? நீங்கள் இன்பம் என்ற விஷயத்தை பெறுவதற்கும்... துன்பமே வரக்கூடாது இன்பமாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... அதற்காகவே உங்களின் ஒவ்வொரும் சொல்லும் செயலும் எண்ணமும் உள்ளது! இதற்குக் காரணம் நீங்கள் உள்ளூர இப்போதும் ஆனந்த ஸ்வரூபமாகவே இருப்பதால் தான்! தொட்டிலில் ஒரு குழந்தை சிரித்துக் கொண்டிருந்தால் தாய் தனது வேலையை இன்பமாகப் பார்ப்பாள்... ஆனால் அந்த குழந்தை அழுதால் ஓடி வந்து அதை ஆறுதல் படுத்துவாள்..சிரிக்க வைப்பாள்... காரணம் ஆனந்தமே உங்களின் ஒவ்வொருவர் இயல்பும் என்பதாலேயே! 


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 8/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக