தலைப்பு

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

ஸ்ரீ வித்யானந்த கிரி சுவாமி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

வியாச ஆசிரமத்தின் தூய துறவி ஸ்ரீ வித்யானந்தகிரி சுவாமிகள் பாபாவை எவ்வகையில் உணர்கிறார் வியக்கிறார் அதை எவ்வாறு பதிவு செய்திருக்கிறார் என்பவை சுவாரஸ்யமாய் இதோ...


வியாச ஆசிரமம் ஆந்திரா ஏர்பேடு பகுதியில் இருக்கிறது... இந்த ஆசிரமத்தின் குருபரம்பரை ஸ்ரீ மலையாள சுவாமிகளிடம் இருந்து துவங்குகிறது... ஸ்ரீ கிருஷ்ண சரண் எனும் இளைஞன் பெனாரஸில் மேல்படிப்பு படித்து 1962 ல் வியாச ஆசிரமத்திற்கு பீடாதிபதியாக நியமிக்கிறார் ஸ்ரீ மலையாள சுவாமி... 

ஸ்ரீ மலையாள சுவாமி

அவரே ஸ்ரீ விமலானந்த கிரி சுவாமிகள்.. அந்த விமலானந்த கிரியே தனது சீடராக ஸ்ரீ வித்யானந்த கிரியை தேர்ந்தெடுக்க ஜனவரி 1973 ல் ஆசிரமத்தின் தலைமை பொறுப்புக்கு வருகிறார் சுவாமிகள்! குழந்தை பருவம் முதற்கொண்டே வித்யானந்தகிரி சுவாமிகள் மலையாள சுவாமிகளின் பக்தர்... 6 வருடம் கடும் தவமும் வேதாந்த ஞானமும் பெறுகிறார்! இங்கிலாந்து முதல் அமெரிக்க வரை ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்! சித்தூர் சிவகிரி ஆசிரமத்திற்கு இதற்கு முன் சேவையாற்றியும் 18 வருடம் தவத்திலும் இருந்திருக்கிறார்! அனைவருக்கும் புரியும்படியாக ஞானத்தை உரையாக்குவதில் பிரசித்தி (புகழ்) பெறுகிறார்! ஆறுமாதம் காக்கிநாடா கடற்கரைப் பகுதியில் உத்தராயண மகா யக்ஞத்தை நிகழ்த்துகிறார்! 1976ல் வியாச ஆசிரமத்தின் பொன்விழா ஆண்டை கோலாகலமாக கொண்டாடுகிறார்!  

ஒரே வரியில் அவர் பாபாவை பற்றி குறிப்பிடுகையில் "பாபா உண்மையில் கடவுளே!" என்கிறார்!

"தனிப்பட்ட வகையில் கேள்விப்படுகிற போதும்... வந்து கண்ணோட்டமிடுகிற போதும்... பள்ளியிலும் பல்கலைக்கழக கல்லூரியிலும் பாபா செய்து வருகிற இலவச கல்வி மற்றும் மாணவர்களின் நடத்தையை உற்று நோக்குகிற போதும் பாபாவே அவர்களுக்கு தாயாக ,தந்தையாக, குருவாக, கடவுளாக திகழ்கிறார்! வேத விற்பன்னர்கள் பாபாவை வேதபுருஷர் என வியந்து போற்றுகிறார்கள்! நவராத்திரி யக்ஞத்தில் பாபா ஜொலிக்கிறார்... முடிவுறா வகையில் வஸ்திர தானம் அளிக்கிறார் பாபா... எத்தனை லட்சம் பேர்களுக்கு இலவச மதிய உணவு... ! ஒரு நொடிக்குள் எத்தனை பேர்களை பாபா நோயிலிருந்து குணமாக்கியிருக்கிறார்! இந்தியா மற்றும் கடல் கடந்தம் பக்தர்கள் திரள பாபாவால் பரமானந்தம் அடைகிறார்கள்... இப்படி ஒரு சர்வ வியாபியை... சந்வாந்தர்யாமியை என்னால் எப்படி வெறும் வார்த்தைகளால் விளக்கிட முடியும்?! பகவான் பாபா அவதார புருஷரே! என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை! என இதயம் திறக்கிறார் சுவாமிகள்!

ஆன்மீக மையமாக பிரசாந்தி நிலையம் புலர்ந்து வருகிறது... படித்த மக்களோடும்... இலவச மருத்துவ சேவைகளோடும் அது மலர்ந்து வருகிறது... பிரசாந்தி நிலையம் புனிதமான தளம்... திவ்ய தெய்வீக ஷேத்திரம்... பக்தர்களை காப்பாற்றி கரைசேர்க்க வந்திருக்கும் பகவான் பாபா ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளே! உலக ஆன்மீகமோ தெய்வீகமோ பாபாவுக்கு ஈடு இணை எதுவுமில்லை! இது மிகைப்படுத்துதலே அல்ல... இந்தியாவின் ஆன்மீகத்திற்கும் மனித சமூகத்திற்கும் பாபாவே கலங்கரை விளக்கம் என மேலும் வியந்து விவரிக்கிறார் சுவாமிகள்!

வியாச ஆசிரமம் - முகப்புத் தோற்றம்

ஒருமுறை பாபா ஏர்ப்பேடு வியாச ஆசிரமத்திற்கு சென்றிருந்த போது "சிலர் சுவாமியின் (பாபா) அற்புதங்களை வெறும் டிரிக், மேஜிக் (கண்கட்டி வித்தை) என்கிறார்கள்... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துவாபர யுகத்தில் சுவாமி (ஸ்ரீ கிருஷ்ணர்) கோவர்தன மலையை சுமந்தது... அது மேஜிக்கா? அதற்கு முன் சுவாமி(ஸ்ரீ ராமர்) திரேதாயுகத்தில் கடல் நடுவே பாலம் அமைத்தது மேஜிக்கா...? தெய்வீக அவதாரங்கள் தனது தெய்வீக சக்தியை உணர்த்த அற்புதங்கள் புரிகிறார்கள்...! அப்போது தான் சராசரி மனிதர்களால் தெய்வீக நிலையை ஓரளவுக்காவது உணர முடியும்! சுவாமியின் (பாபாவின்) அற்புதங்கள் எனது தெய்வீகப் பேரன்பையே உணர்த்துகிறது... அவை சாதாரண கண்கட்டி வித்தைகள் அல்ல! உலகத்தவரை தெய்வீகத்தை நோக்கி...ஆன்மீகத்தை நோக்கி இழுப்பதற்கான கருவியே சுவாமியின் அற்புதங்கள்... அதில் இம்மி அளவிற்கு கூட சுயநலம் இல்லை!" என பட்டவர்த்தனமாய் பாபா தனது பேரிதயம் திறந்து மொழிய.. சுவாமிகளின் கண்கள் உட்பட கேட்டவர் அனைவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிமொழிய... ஒரு திரிவேணி சங்கமமே நிகழ்கிறது! 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 36 / Author : Jantyala Suman babu / Eng Translation : Pidatala Gopi Krishna/ Source: Eternal Charioteer (Trust Publication) - Pg29) 


மனமற்ற நிலையில் இருக்கும் தூய துறவிகள் கண்ணாடிகள் போல்... எது எவ்வாறு இருக்கிறதோ அதை அவ்வாறே வெளிப்படுத்துபவர்கள்... துறவிகளுக்கு தந்தாலும் தராவிட்டாலும் தெய்வம் தெய்வமே! எந்தவித எதிர்பார்ப்புமில்லா பாரதத்தின் பொக்கிஷங்கள் தூய துறவிகள்... ஒரு சராசரி மனிதர்  எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு துறவிகளின் வாழ்க்கையே! துயரமில்லா உயர வாழ்வுக்கும்... யோகமான தியாக வாழ்வுக்கும் மனிதர்களுக்கு துறவிகளின் வாழ்க்கையே உதாரணமாக இருக்கிறது! அதுவே மனித இனத்திற்கு இலக்காக அமைதல் அவசியம்!


  பக்தியுடன்

வைரபாரதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக