தலைப்பு

சனி, 10 செப்டம்பர், 2022

எடுத்த எடுப்பிலேயே ஒருவர் தீவிரமான ஆன்மீகப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?

முதலில் கொஞ்சம் கூட கடினமான பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்! மனம் ஆன்ம சாதனையில் செல்லாமல் திரும்பத் திரும்ப உலகியல் இன்பத்துக்கே தான் சுருளுமாயினும் அதற்காக அதை ஆன்ம சாதனையால் நேர்மைப்படுத்தாமல் சுருண்டே கிடக்க விடக்கூடாது! அதே போதில் அவசரப்பட்டு கடினப் பயிற்சிகளால் உடனே நிமிர்த்த முயன்றாலும் விபரீதமே ஆகும்!

சுருண்டு வளைவது புடலங்காய்ப் பிஞ்சின் இயற்கை! அது வளைந்து சுருண்டுவிட்டால் வளர்வது எப்படி? அதனால் கல்லை அதன் அடியில் கட்டிவிட்டு , அந்த கனத்தில் அது வளையாமல் நேராக நன்கு நீண்டு வளரச் செய்வார்கள்! ஆயினும் அது மிக இளசான பிஞ்சாய் உள்ள போது சற்று கனமான கல்லைக் கட்டினால் கூட என்ன ஆகும்? பிஞ்சே பளு தாங்காமல் உடைந்துவிடும் அல்லவா! அதனால் எந்தெந்த நிலைகளில் அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு பளு தாங்க முடியுமோ அவ்வளவேயான கற்களை மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்டே போவார்கள்! ஒரு சமயத்திலும் கல்லை எடுக்கக் கூடாது! எடுத்தால் வளைய ஆரம்பித்துவிடும்! அதற்காக ஒவ்வொரு சமயத்திலும் அதனால் தாங்கக் கூடியதற்கு மேலாக அதிகக் கல்லும் கட்டிவிடக் கூடாது! இவ்விதமே தான் அயராமல் சிறுசிறு லேசான ஆன்மீகப் பயிற்சிகளில் ஆரம்பித்து, நாள்தோறும் உள்ளத்து உறுதி வளர வளர பயிற்சிகளைத் தீவிரமாக்கி... ஒருபோதும் ஆன்ம சாதனையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே போனால் மனத்தின் கோணல் வளைவு எல்லாம் நீங்கி அது செழிப்பாக பெரிதாக நேர்மையில் வாழ வளர்ச்சி காணும்!

Slow and steady wins the race... ஓட்டப்பந்தயத்தில் நிதானமாகவும் சற்றும் தளர்ந்து விடாமலும் சென்றே வெற்றியடைவது போலத்தான் இதிலும்...!

எந்த ஒரு சமயத்திலும் எவ்வளவு உணவு அருந்தினால் தான் செரிமானம் ஆகுமோ அதற்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனை உண்டாகும் அல்லவா!? 

மனத்தின் ஜீரண சக்திக்கு அதிகமாக சாதனை உணவை அதற்கு ஒருபோதும் திணிக்க வேண்டாம்! குழந்தையாக இருப்பதில் இருந்து ஜீரண சக்திக்கு ஏற்ற வகையில் தான் உணவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து அது மேலும் மேலும் உணவை ஜீரணிப்பதற்கான வலுவைப் பெற்று, திரவமான பாலில் ஆரம்பித்து கெட்டியான பருப்புகள் வரை ஜீரணித்துக் கொள்ளும் சக்தியைப் பெறுகிறது! அதுபோல் இன்றைய குறைந்த ஆன்ம சாதனை நாளைக்கு பெரிய ஆன்ம சாதனை ஆற்ற சக்தி ஊட்டும்!


(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 13/ ஆசிரியர்: அமரர் ரா.கணபதி) 


அதே சமயத்தில் குறைந்த சாதனையையும்(தியானம்/ மூச்சுப் பயிற்சி/ ஜபம்) தினந்தோறும் விடாப்பிடியாக வைராக்கியத்தோடு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது! கொஞ்சம் கொஞ்சமாக தோண்டினாலும் ஒரே இடத்தில் தான் தோண்ட வேண்டும்...அதை ஒவ்வொரு நாளும் தோண்ட வேண்டும்... அப்போது தான் நீர் மட்டுமல்ல ஆன்ம சாதனையில் ஆன்ம அமுதமே சுரக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக