தலைப்பு

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ஸ்ரீ வித்ய பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் | சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஆந்திர சித்தூர் காளஹஸ்தியில் சுக பிரம்மாஷ்ரம் நிறுவிய சுவாமிகள் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றி பகிர்ந்த சத்திய வாக்கும்...அவர் அடைந்த சுவாரஸ்ய அனுபவமும் இதோ...


ஏப்ரல் 13 1914 ல் ஆனந்த வருடத்தில்  பிறந்தவர் சுவாமிகள்...ஆனந்த மோகன் இயற்பெயர்... விஜயவாடாவில் பள்ளி படிப்பு...பிறகு பி.ஏ வரை படிக்கிறார்... ஒருமுறை ரிஷிகேஷ் கங்கையில் மூழ்கிய போது பூக்கள் நிரம்பிய சமஸ்கிருத கீதை புத்தகம் இவர் கைகளில் தோன்றியதே ஆன்ம திருப்புமுனையாக அமைந்துவிடுகிறது! 

1936 ல் தனது 23 ஆவது வயதில் குருகுல கல்வி... மலையாள சுவாமிகளே இவரது குரு... சமைக்காத உணவை உட்கொண்டு 12 வருடம் தியானமும்.. 1 வருடம் காஷ்ட மௌனமும் (நீள் மௌனம்) இவர் மேற்கொள்கிறார்! 34 ஆவது வயதில் சன்யாச தீட்சை பெறுகிறார்!


ஒருமுறை தர்மாவரத்தில் கீதை உபன்யாசம் இவர் புரிகிற போது.. புட்டபர்த்தி ஷேத்திரத்தை பற்றி கேள்விப்படுகிறார்... அங்குள்ளவர்கள் சிலர் ஆன்மீகக் கேள்விகளை இவரிடம் கேட்க... நீங்கள் ஸ்ரீ சத்ய சாயி எனும் கல்ப விருட்ச நிழலிலேயே குடியிருக்கிற போது.. அந்த பேரதிர்ஷ்டமே போதுமானது என்கிறார்! சர்வ வல்லமை வாய்ந்த பரப்பிரம்மமே ஸ்ரீ சத்ய சாயி வடிவம் இந்த பூமியில் எடுத்திருக்கிற போது அடியேன் உங்களிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?! என்கிறார்!


சுவர்ணமுகி நதி அருகே அமைந்திருக்கும் சுவாமிகளின் ஆசிரமத்தில் சுவாமிகளின் தாயாரான சுசீலம்மா தங்கி இருக்கிற சமயத்தில்... புயல் மையம் கொண்டு பெருமழை பீடிக்கிறது... சுவர்ணமுகி "சந்திரமுகி"யாக ஆர்ப்பரிக்கிறாள்! தாழ்ந்த பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன...! சுவாமிகள் முதல் தளத்தில் இருக்கிறார்... அபயம் தேடி பலர் ஆசிரமத்திற்குள் தஞ்சம் அடைகிறார்கள்...! பெரும் புயலும் வெள்ளமும்... சுவாமிகளின் தாயோ பூஜையறையில் "எந்த சேதாரமும் விளையக் கூடாது இறைவா!" என வேண்டுகிறார்... அடுத்த நாள் காலை வெள்ளம் வடிந்தோடுகிறது... பூஜை அறை கொலுவிருக்கும் ஹாலிற்கு வருகிறார்... அங்கே பார்க்கிற போது பேராச்சர்யப்படுகிறார்... முந்தைய நாள் அடித்த மழையில் பிற இறை திருப்படங்களில் களிமண் படர்ந்திருக்கிறது.. ஆனால் ஒரே ஒரு இறை ரூப படத்தில் மட்டும் எந்தவிதமான சேதாரமும் இல்லை... ஆச்சர்யப்படுகிறார்.. அது வேறு யார் படமும் அல்ல... இறைவன் ஸ்ரீ சத்ய சாயி திருப்படமே! பாபாவின் கருணையே என சுவாமிகளும் வழிமொழிகிறார்!

"ஸ்ரீ சத்ய சாயியுடைய தரிசனமும் அவரது தெய்வீக மொழிகளை கேட்டபிறகே பலர் மேன்மையான மனிதர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்... இன்னமும் பலர் ஆன்ம முன்னேற்றம் அடைவார்கள்... இது தான் தர்ம சமஸ்தாபனம் (Re-Establishment of Dharma) பாபா பலரை அதர்ம வழியில் இருந்து தர்ம வழிக்கு அழைத்துச் செல்கிறார்! இது நாட்டின் மேன்மையையும் உள்ளடக்கி இருக்கிறது! மேலும் இது உலக அமைதியை முன்னெடுத்துச் செல்கிறது! பாபாவின் ஆசீர்வாதங்களினால் பலர் உடல் நலம் - மன நலம் - ஆன்ம நலம் ஆகிய மூன்றிலும் ஆரோக்கியமாக திகழ்கிறார்கள்... துன்பத்திலிருந்து பேரானந்தத்திற்கு சுவாமி அழைத்து வருவது மனித இனத்திற்கே மாபெரும் சேவையாக அமைகிறது! பாபாவின் அவதாரம் என்பது தெய்வீகப் பேராற்றலைத் தவிர வேறெதுவும் அல்ல... என் வாழ்க்கையே என் செய்தி என்கிறார் பாபா... எவர் ஒருவர் பாபாவின் வாழ்க்கையை பின்பற்றினாலும் அவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடுகிறது! 

சாது பரிஷத் என்கிற சாதுக்களின் கூடல் புட்டபர்த்தியில் நிகழ்கிற போது பாபா சுவாமிகளை அழைத்து நன்றாக கவனித்துக் கொள்கிறார்... சுவாமிகள் இயற்றிய கீதா மகரந்தம் எனும் குருநூலை வெகுவாக பாராட்டிய அன்பையும் கருணையையும் சுவாமிகளின் மேல் பொழிகிறார்... புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்! அந்த சுவர்ணமுகி நதி சித்ராவதி நதியோடு கலந்து பேரானந்தம் அடைகிறது!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 15 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ Source: Sri Sathya Sai Divya Leeamrutham Part 2 & Eternal Charioteer (Trust Publication) - Pg46 ) 


துறவிகள் தூயப்பிறவிகள் அவர்கள் போதிமரக்கிளையில் ஞானகானம் இசைக்கும் குருவிகள்! அப்படி கானம் இசைக்கையில் பாபாவின் பரிபூரண காற்று தவழ்ந்து அந்தக் கிளையை தாலாட்டுகிற போது... அந்த காவிய கான குருவிகளின் மொழிகளில் "சத்ய சாயி சத்ய சாயி" எனும் திருநாமம் இடம் பெறாமல் போவதே இல்லை! காவிகளின் அரைகூவலிலேயே பிரேம காவியங்களின் உதயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக