தலைப்பு

புதன், 21 செப்டம்பர், 2022

ஒரு இஸ்லாமிய சிறுவனை அரவணைத்து அவனது தந்தைக்கு நல்வழி காட்டிய ஸ்ரீ சத்யசாயி அல்லா!

தன் தந்தையை திருத்த ஒரு இஸ்லாமிய சிறுவன் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனையும்... அதற்கு அல்லா எவ்வகையில் செவி சாய்த்தார் புட்டபர்த்திக்கு அழைத்தபடி எனும் உன்னத சர்வதர்ம அனுபவம் இதோ...!


நூலாசிரியர் தனது தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கையில் சீதா எனும் தோழி பகிர்ந்து கொண்ட ஒரு உன்னத அனுபவம் இது! ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் ஒரு பையன் போக்கிரியாகவும்  ரௌடியாகவும் இருக்கிறான்.. நிக்கா (திருமணம்) செய்து வைத்தால் திருந்துவான் என நினைத்து நிக்கா செய்து வைக்கிறார்கள் பெற்றோர்கள்.. ஆனால் அவன் திருந்திய பாடில்லை.. அவனுக்கு குழந்தை பிறக்கிறது... குழந்தையை பள்ளிக்கும் பள்ளிக்கும் அழைத்துப் போகிறார்கள்... 

பள்ளி அறையிலும் இறைவன் இருக்கிறான்... பள்ளி அறையிலும் இறைவன் இருக்கிறான் எனும் சத்தியத்தின் படி அந்தக் குழந்தை செல்கிற போதும்... ரௌடியின் மகன் என அவனை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள் தோழர்கள்...

பிஞ்சு மனம் அவர்கள் ஒதுக்கும் நிலையை பாரமாக நினைக்கிறது... வீட்டிற்கு சென்று தனது தாயிடம் "நான் ரௌடியின் மகனா உம்மா" என அதிர்ச்சியாக கேட்கிறான்.. "ஆம்" என்கிறார்கள்... "வாப்பா நல்லவராக எப்போ மாறுவார்?" எனக் கேட்கிறான்.. "நீ அல்லாவிடம் பிரார்த்தனை செய்து கொள்" என்கிறார் தாய். தாய் சொல்படியே மிக மிக உருக்கமாக "அல்லா அல்லா அல்லா" என பிரார்த்தனை செய்கிறான்! அவனின் தொடர் பிரார்த்தனை உடம்பில் சூட்டைக் கிளப்பி முகத்தில் அரை நெல்லிக் காய் அளவு கட்டியை வரவழைக்கிறது... பெரிதாக வலிக்கிறது...பாவம் அதை எல்லாம் அவன் பெரிதுபடுத்தாமல் தனது வாப்பா நல்லவராக மாற வேண்டும் என்ற ஒரே திட எண்ணத்தில் தனது தொழுகையை நிகழ்த்துகிறான்!


ஒருநாள் அந்த ரௌடி தந்தைக்கு கனவு வருகிறது... கனவில் சுவாமி "நீ உடனே புட்டபர்த்திக்கு கிளம்பி வா!" என அழைக்கிறார்... மகனின் தொழுகைக்காக அவனது தந்தைக்கு ஸ்ரீ சத்ய சாயி  அல்லா விடுத்த தூது அது! ஆனால் அவரோ அதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை... சுவாமியோ தொடர்ந்து கனவில் தோன்றி அழைக்கிறார்... திடுக்கிட்ட அவர் அக்கம் பக்கத்தில் விசாரித்து குடும்பத்தோடு புட்டபர்த்திக்கு வருகிறார்... தரிசன வரிசையில் திருதிருவென முழித்தபடி அமர்ந்திருக்கிறார்கள்... சுவாமியோ பிறை நெற்றியோடு... காற்றில் அசையும் திருக்குரான் பக்கங்களாய் புன்னகைத்து நடந்து வருகிறார்... அந்த சிறுவனின் அருகே வந்த உடன் அவனை ஆரத்தழுவிக் கொள்கிறார்... அவன் கன்னத்தில் தனது தெய்வத் திருக்கரத்தைப் பதிக்கிறார்...அந்த கன்னத்து கட்டியை தனது திருவிரலால் தீண்டிய உடனேயே அது சுவாமியின் கைகளில் வந்துவிடுகிறது.. அவன் கன்னத்தில் அதன் தடம் கூட பதியவில்லை...  அந்த கட்டியை உருட்டுகிறார் சுவாமி.. உருட்டுகையில் அது முத்தாக மாறுகிறது.. மேலும் அந்த முத்தை உருட்டுகிறார் முத்துமாலையாக தோன்றிய அந்த சிருஷ்டி மாலையை அந்த சிறுவனின் கழுத்தில் அணிவிக்கிறார்... கண்கலங்குகிறார்கள் பெற்றோர்கள்... 


"உன் வாப்பா நல்லவனாக மாறிவிட்டார்.. இனிமேல் நீ வருந்தவே கூடாது.. மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும்.. சரியா?" என சுவாமி கேட்க...

சரி என்றவாறு தலை அசைக்கிறான்...

புன்னகைத்து சுவாமி அவனது கன்னத்தை தட்டிவிட்டு கடந்து போகிறார்.. அந்தச் சிறுவன் சுவாமி போகும் திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறான்... தொழுகைக்கும் அழுகைக்கும் கிடைத்த பயனாய் அவன் சுவாமியையே பார்த்துக் கொண்டிருக்க... அந்த நொடி அவனது இதயம் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது!


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 126/ ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு)


இறைவன் மிகப் பெரியவன்.. எல்லாம் வல்லவன் என்கிறது திருக்குரான்... அப்படிப் பெரியவனான இறைவனை அதுவே கருணையாளன் என்கிறது... திருக்குரானில் எவை எல்லாம் இறை குணம் என குறிப்பிடப்படுகிறதோ அவை எல்லாம் சுவாமிக்கே கன கச்சிதமாய் பொருந்துகிறது... எதையும் நடத்தும் இறைவன் மகா வல்லவன் என்கிற போது அவனால் மனித வடிவம் எடுத்தும் வர முடிகிறது என்பதே எதார்த்தம்... காரணம் மனிதனை பண்படுத்த வேண்டிய கருணையாளராக இறைவனாகிய சுவாமி திகழ்கிறார்! பொறுமையுடன் கேட்டுப் பார்த்த அவனுக்கு சுவாமி பொக்கிஷத்தை மூடவே இல்லை... அது முத்துமாலையாக அவனது கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தது!

இறைவனிடம் கையேந்துபவர்களே மனிதர்கள்.. அதை நாம் உணர்ந்து கொண்டுவிட்டால் எங்கிருந்து நமக்கு அகந்தை கிளம்பி வரப்போகிறது? சுவாமியிடம் சரணடைவதே ஆகச்சிறந்த தொழுகையும்... அகம் கசியும் அழுகையும்...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக