உலகில், மாண்டவர் எவரும் மீண்டதில்லை. இது இவ்வுலக வாழ்வின் மாற்ற இயலாத விதியாகும். ஆனால் விதிகள் அனைத்தையும், தமது சங்கல்பத்தால் மாற்றும் வல்லமை படைத்த பாபா, இறந்த பக்தர்களை மீண்டும் உயிர்பித்த நிகழ்வுகள் பல. அதில் ஒன்று, தமது மாணவரின் இறந்த அன்னையை மீண்டும் உயிர்ப்பித்த அற்புதக் கருணைநிகழ்வு...
🌷 அனைத்தும் அவர் அறிவார்:
அது 1986 ம் ஆண்டு. V. குமார் புட்டபர்த்தியில் M.B.A. பயின்று கொண்டிருந்தார். ஸ்வாமி அவரது பெற்றோர்களுக்கு, குல்வந்த்ஹால் அருகிலேயே (கிழக்கு பிரசாந்தியில்) ஒரு இருப்பிடத்தை அளித்திருந்தாலும்,
கல்லூரி விதிகளின்படி, குமார் ஹாஸ்டலிலேயே தங்கி இருந்தார். சிறந்த பஜன் பாடகராக இருந்த அவர், தினமும் பாபா தரிசனம் காண பிரசாந்தி நிலையம் வருவார். அப்படியே ஒருநாள் மாலை, அவர் பாபா தரிசனத்திற்காக பிரசாந்தியில் நுழையும் போது, அவரது தந்தை தமது வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகத்துடன் நிற்கக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, அவரது அன்னை கண்கள் முடியபடி கட்டிலில் படுத்திருக்க , சுற்றிலும் மருத்துவர்கள் பலர், அவர்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் "குமார்.... உன் அம்மாவின் நாடித்துடிப்பு மிகவும் குறைந்துவிட்டது. எங்கள் முயற்சியில் அதை சரி செய்ய இயலவில்லை. இப்படியே தொடர்ந்தால் அவர்கள் சிறிது நேரமே உயிருடன் இருப்பார்கள். நமக்குள்ள ஒரே வழி பகவான் பாபாவிடம் முறையிடுவதுதான்" என்றார். இதைக்கேட்ட குமார் மனம் வருந்தி, பாபாவிடம் முறையிட வேண்டி உடனே மந்திருக்குள் விரைந்து சென்று பஜன் ஹாலில் அமர்ந்தார்.அச்சமயம் பாபா தரிசனம் கொடுத்து முடித்து, இன்டர்வியூ அறைக்குச் சென்றுவிட்டார். எந்நேரமும் அவர் பஜன் ஹாலுக்குள் வரலாம் என எதிர்பார்த்ததில், சுமார் 50 நிமிடங்கள் கழித்துதான் பாபா வந்தார்.
🌷பாராதது போல் இருந்து பாதுகாத்த பக்தவச்சல சாயி:
ஓம்காரம் முடிந்து, விநாயகர் பாடலும் முடிந்தது. பாபா உள்ளே நுழைய, தனது நெஞ்சத்தின் கதறலை, கெஞ்சும் பஜனையாக்கி, குமார் பாட ஆரம்பித்தார். 'த்வமேவ மாதாச பிதா த்வமேவ' என்கிற தொகையறாவில் ஆரம்பித்து , மனதை பிழியும் பாடலாக சாயி பிதா அவுர் மாதா சாயி என்ற பாடலை பாடுகிறார். கைகளால் தாளம் போட்டுக்கோண்டு ரசித்த பாபா,
திடீரென எழுந்து தரிசன் ஹால் பக்கம் சென்றுவிடுகிறார். பிறகு மற்ற பாடல்கள் பாடப்பட்டுபஜன் முடியும் தருவாயில் ஸ்வாமி வந்து, மங்கல ஹாரத்தி பெற்றுக் கொண்டு திரும்பச் சென்றுவிடுகிறார். அழும் குழந்தையை அள்ளி அணைக்காத தாய் போன்று, ஸ்வாமி தன்னை கைவிட்டு விட்டதாகவே குமார் நினைத்தார்.
வாடிய உள்ளத்துடன் அவர் தமது இல்லம் திரும்ப, அங்கு சேவாதள தொண்டர்கள் தமது தாயின் உடலை ஸ்டெச்சரில் சுமந்தபடி செல்வதைக்கண்டு மனம் பதைபதைக்கிறார். அன்னையின் உடல் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட, சிறிது நேர இடைவெளியில் அவர் அங்கு சென்று தன் அன்னையின் உடலைத் தேட, காவலாளி அவரை முதல் மாடிக்கு சென்று பார்க்கச் சொல்கிறார். அங்கு அவரது தந்தை ஒரு தாற்காலிக I.C.U அறையின் வாயிலில் ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, என்னவாயிற்று அம்மாவுக்கு என குமார் வினவினார். கண்கள் பெருக, நா தழுதழக்க அவரது தந்தை கூறினார். "உனக்கு தெரியாதா குமார். ஸ்வாமி பஜனைக்கு நடுவே வீட்டிற்கு வந்து அம்மாவின் உயிரைக் காப்பாற்றிவிட்டார்."
🌷சுவாமியே விவரித்த நிகழ்வு:
இதற்கு இரண்டு நாட்களூக்குப் பிறகு இந்நிகழ்ச்சியை பஜன் ஹாலில் அமர்ந்து மாணவரிடையே ஸ்வாமி விவரித்தார்....
அன்று குமார் பாபாவை மன்றாடி பிரார்த்தித்து, பஜன் பாடிக் கொண்டிருந்தபோதே, பாபா அவர்களது இல்லம் நோக்கிச் சென்றார். அங்கு குமாரின் தாய் இதயச் செயலிழப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஸ்வாமி அவள் அருகில் வந்து "சீதம்மா கண்ணைத் திற, யார் வந்திருக்கிறேன் பார்" எனக்கூறியும் அவள் எழவில்லை.பிறகு ஸ்வாமி அங்கிருந்த ( தான் ஸ்ருஷ்டித்துக் கொடுத்திருந்த) லிங்க அபிஷேக நீரை ஒரு ஸ்பூனால் அவளது வாயில் இட, இரண்டு முறை அந்த நீர் உள்ளே செல்லாமல் வழிந்துவிட்டது. ஆனால் மூன்றாம் முறை பாபா அபிஷேக நீரை வாயில்விட ஒரு சிறிய "க்ளக்" சப்தத்துடன் அந்த நீரை அவள் பருகினாள். இணைப்பிலிருந்த E.C.G
கருவியும் உடனே இயங்கத் தொடங்கியது. அத்துடன் ஸ்வாமி விபூதியை ஸ்ருஷ்டித்து, சீத்தம்மாவின் நெற்றில் இட்டு, கால்களிலும் தேய்த்தால். பிறகு டாக்டரைகளை அழைத்த பாபா, அந்த அன்னையை மீண்டும் பரிசோதிக்குமாறு கூற, அனைவரும் வியக்க அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர். அதன்பின் பாபா சீதம்மா அவர்களை I.C.U.வில் வைத்து கவனமாக ஓருமாத காலம் பராமரிக்கும் படி கூறினார்.சாய்ராம். ஸ்வாமியின் அதீத அன்பைப்பற்றி மேலும் ஒரு விஷயத்தைப் பகிராமல் இந்த பதிவு நிறைவுபெற்றது. இந்த சம்பவம் நடந்த மறுநாள். குமார் ஆஸ்பிடல் மாடிப் படியிலிருந்து கீழேஇறங்கும்போது, சாட்சாத் பகவான் பாபா படிகளில் ஏறி மேலே வந்து கொண்டு இருந்தார். செல்லமாக அவரை அணைத்த பாபா தம்முடன் திரும்பவும் மாடிக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு இருந்த ஒரு பழைய இரும்பு நாற்காலியில் அமர்ந்து "சீதம்மா எப்படி இருக்கு" எனத் தமிழில் கேட்டார். ஸ்வாமி உங்கள் ஆசியால் நான் உயிருடன் இருக்கிறேன் என்று அன்னை கூற, பாபா டாக்டர்களுக்கு சில மேல் சிகிச்சை விவரங்களைக் கூறிவிட்டு, பிறகு குமாரை நோக்கி "எங்கே சாப்பிடுகிறாய்" எனக் கேட்டார். கேண்டீன் ஸ்வாமி என பதில் வர, "அம்மா உடல்நலம் தேறி வரும் வரை என்னுடனே சாப்பிடு. உன் அப்பாவுக்கும் கேண்டீனிலிரூந்து சாப்பாடு வரும்" என்று அன்னைக்கும் அன்னையாக அரவணைக்கும் பகவான் கூறினார். அன்பு, பாசம், பரிவு, அருட்காப்பு அத்தனையின் முழு உருவம் பகவான் பாபா அன்றோ. அத்தகைய பகவானைப் பணிவோம். பரமசுகம் அடைவோம்.
Source: Kumar wins the greatest gift of life from Sri Sathya Sai by Aravind Balasubramanya
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக