தலைப்பு

திங்கள், 5 செப்டம்பர், 2022

உடுமலை R பாலபட்டாபி | புண்ணியாத்மாக்கள்


வெகுஜனங்களின் மத்தியில் பிரபலமாகத் தெரிந்த பக்தர்களை விடவும், வெளியில் தெரியாமல் உன்னத வாழ்க்கை மேற்கொண்ட பக்தர்கள் எத்தனையோ பேர்களுண்டு. உதாரண  புருஷர்களாக, பக்திக்கு இலக்கணமாக வாழ்ந்த பல புண்ணியாத்மாக்களை காலப்போக்கில் மக்கள் மறந்து விடுவதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். உத்தம பக்தர்களாக தம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற லட்சியமுடையோர், நமக்கு முன் வாழ்ந்த பக்தர்களின் அனுபவங்களைபடிப்பினைகளைத் தேடிப்பிடித்து  படித்தறிந்து ஜீரணிக்க முற்பட வேண்டும்!. அந்த வரிசையில், ஒவ்வொரு சாயி பக்தரும் அறிந்து படித்துணர வேண்டிய ஒரு உன்னத பக்தர் உடுமலை திரு. R பாலபட்டாபி அவர்கள். அன்னாரின் வாழ்க்கைச் சரிதம்  "சாயி லீலாம்ருதம்" என்ற தமிழ் புத்தகத்தில் முழுமையாக உள்ளது. எனினும் சுருக்கமாக அறிமுகம் தரும் வகையில் இங்கே புண்ணியாத்மாக்கள் வரிசையில் தருகிறோம்.

 







🌷17 வயதுக்  கடவுள்:

தமிழகத்தின் பொள்ளாச்சியை அடுத்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலபட்டாபி அவர்கள் கடவுளின் பரிபூரண கிருபையில், எந்தவித குறைவுமின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். நல்ல உத்தமமான இடத்தில் மணம் புரிந்தும், திருமணமாகி 18 ஆண்டுகளாக புத்திர பாக்யம் இல்லாத ஒரேயொரு மனக்குறை உண்டு; அதனால் மனநிம்மதி இல்லாதிருந்தார். தனது 34வது வயதில், உடுமலையில் பிளேக் நோய் பரவி வந்ததால், அதனைத் தவிர்க்கவும் மனவமைதிக்காகவும் வடஇந்தியப் பயணம் மேற்கொண்டார். சந்தோஷத்துடன் பல ஊர்களை சுற்றிபார்த்துக் கொண்டிருந்த அவருக்கு  கரூரிலிருந்து ஓர் தந்தி வந்தது.


இளம் சத்ய சாயி -1943

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவைக் குறித்தது அது. பாலபட்டாபியின் சொந்தங்கள் சிலர் புட்டபர்த்தி சென்று சாயிபாபாவைத் தரிசனம் செய்த பின்னர் அவரைக் குறித்து புகழ்ந்து எழுதியிருந்தனர். உடனே ஊர் திரும்பவும், சாயிபாபாவைச் சென்று தரிசிக்கவும் பரிந்துரை செய்து கடிதம் எழுதப்பட்டும் இருந்தது. கடிதம் கண்டு ஊர் திரும்பிய பாலபட்டாபியிடம் அவரது  வடஇந்திய பிரயாணத்தைப் பற்றி யாரும் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. மாறாக எல்லோரும் புட்டபர்த்தி போய்வந்த மகிமைகளைப் பற்றியும் பகவான் பாபாவின் அருமை பெருமைகளைப் பற்றியுமே கூறினர். முக்கியமாக அவரின் மனைவியும் மைத்துனரும் மிகுந்த பூரிப்புடன் சாயிபாபாவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். சத்ய சாயிபாபா 17 வயதே நிரம்பியவர். அவர் தன் வலதுகையை அசைத்து விபூதி, குங்குமம், தின்பண்டங்கள் மட்டுமல்லாது நினைக்கும் பொருட்களை வரவழைத்து தனக்கு இஷ்டப்பட்டவர்களுக்கு கொடுக்கிறார். மேலும் பல வியாதியஸ்தர்களுக்கு மருந்துகளை, விபூதியை சங்கற்பமாத்திரத்தில் சிருஷ்டித்துக் கொடுக்கிறார். இவ்விதமான கண்கண்ட தெய்வத்தைப் பார்த்ததும் தங்களுக்கு தந்தி கொடுத்து வரவைத்தோம் என்றனர்.

 இவற்றை எல்லாம் கேட்டு பாலபட்டாபியின் மனம் நம்பிக்கை கொள்ளவில்லை. வடஇந்தியக்  காட்சிகளைக் கண்டு வெளியுலக பிரம்மிப்பில், அவர்கள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை என எண்ணினார். அவர்களுடன் புறப்பட அவர் சம்மதிக்கவில்லை.

 

🌷முதல் சந்திப்பு:

உடுமலைப்பேட்டையிலிருந்து ஏறத்தாழ 40 பேர் புட்டபர்த்திக்கு, ஓர் திருமணத்திற்குப் பிரயாணம் செல்வதைப் போன்று சமையலாள், பெட்ரோமாக்ஸ் விளக்குகள், தார்பாய்கள் மற்றும் பாத்திரபண்டங்கள் சகிதம் கிளம்பினர். பாலபட்டாபி, தன் மனைவியின் வற்புறுத்தலுக்கு கட்டுப்பட்டு வேண்டாவெறுப்பாக ஒப்புக்கொண்டு அவர்களுடன் சென்றார்.


இளம் சத்ய சாயி - 1944

1944ம் வருடம் ஏப்ரல் 20ம் தேதி, சரியாக காலை 11 மணிக்கு பழையமந்திரத்தில் பாலபட்டாபிக்கு இளம் சத்யசாயி பாபாவைக் காணும் பாக்கியம் அமைந்தது. அவரின் ஒளிமயமான கண்கள் - தலைமுடி - சிகப்பு பட்டுடை, யாவும் கண்களுக்கு விருந்தாக அங்கிருந்த அனைவரும்  உணர்ந்தனர். ஒருவர் பின் ஒருவராக  ஓர் பூமாலையும், ஓர் ஆப்பிள் பழமும் கொண்டு சென்று  சமர்ப்பித்து அவருடைய பாதங்களைத் தொட்டு சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தனர். பாபாவை  இமைக்காமல்   பார்த்தபடி  பாலபட்டாபி அருகில் சென்றார். சுவாமியின் கழுத்தில் மாலையிட லேசான நடுக்கத்துடன் நெருங்கியவரை பாபா தடுத்து... "நீ என்னிடம் வரமாட்டேன் என்று சொன்னவன், மறுபடி ஏன் வந்தாய்? உன் மாலை எனக்குத் தேவை இல்லை” எனத் தெலுங்கு மொழியில், பல நாட்கள் பழகியவர் போல உரிமையுடன் கூறினார்.  மற்றவர்கள் எல்லோரும் மாலையிட்டு முடிக்கும் வரை ஒதுங்கி நிற்கச் செய்துவிட்டு, பின்னர் அன்போடு அருகில் வந்து மாலையை பாபாவே வாங்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார். தாய் குழந்தையை அணைப்பது போன்று சுவாமி தனது வலது கையை பாலபட்டாபியின் கழுத்தைச் சுற்றி அணைத்துக் கொண்டே ஒரு அறிவிப்பைச் செய்தார், “இவ்வளவு பேரும் ஒரு கல்யாணக் கோஷ்டி போல வந்திருக்கிறீர்கள். உங்களில் இருவர் மட்டும் என்னை உறுதியாக நம்பி இருப்பார்கள்.மற்றவர்கள் என்னை விட்டு விலகி விடுவார்கள்”.

 

🌷உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்:

அன்று இரவு, மற்ற அனைவரையும் மந்திரத்திற்கு செல்லும்படி பணித்து விட்டு பாபா தன்னுடன் பாலபட்டாபியை சித்ராவதி வரை நடத்திக் கூட்டிச் சென்றார். ஒரு பள்ளித்தோழன் போல பலபட்டாபியின் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்து நடந்து சென்றார் சுவாமி, அந்த அன்பினால் பாலபட்டாபி மிகவும் நெகிழ்ந்துபோனார். 


இந்த புகைப்படமானது சித்ராவதி ஆற்றங்கரையில் சுவாமியால் கேமராவில் படம் பிடிக்கப்பட்டது (நீலவட்டக் குறிக்குள் இருப்பவர் பாலபட்டாபி) 

அந்த இரவில், சுவாமி வெகுநேரம் பலவிதமான அறிவுரைகளையும் ஆறுதல் வார்த்தைகளையும் வழங்கினார்; அவரின் வாழ்க்கை ரகசியங்கள் சிலவற்றையும் சுவாமி வெளிப்படுத்தினார். தூய தெலுங்கில் சுவாமி பேசியது, பதட்டத்துடன் இருந்த பாலபட்டாபிக்கு முழுவதுமாகப் பிடிபடவில்லை எனினும்  இறுதியில் பாலபட்டாபியின் கைகளைப்பற்றி உள்ளங்கையை சுவாமியின் நெஞ்சில் சேர்த்துப் பிடித்தபடி உறுதியுடன் கூறினார்,"உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்". பின்னர் தனது வலது கையை அசைத்தபோது அதனுள் மின்னல் போன்ற ஒரு சிறிய ஒளிக்கீற்று ஏற்பட்டு  ஈரம் காயாத மஞ்சள் கயிற்றில் கட்டப்பட்ட தங்கத்தாலான  ஒரு ரக்ஷை உருவானது. அதை உடனே சுவாமி பாலபட்டாபியின் கழுத்தில் கட்டினார். “உன்னைக் கைவிடமாட்டேன், இதுவே உன் ரக்ஷை என்றும் கூறினார். சுவாமி, தனது கழுத்தில் ரக்ஷயை அணிவித்த கணம் முதல். திருமணமான பெண்மணி எவ்வாறு தன் கணவனே இனி எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துக்கொள்வார் என்று நம்பி நிம்மதி கொள்வாளோ? அதேபோன்ற நிம்மதியினை உணர்ந்தார் பால்பட்டாபி. அவரையறியாமல் ஓம் ஸ்ரீ சாயிராம் என்று இடைவிடாமல் மனதினுள் கூற ஆரம்பித்தார். ஒரே நாளில், தரிசனம், ஸ்பர்ஷணம். சம்பாஷணம் மட்டுமல்லாது சுவாமியின் திருக்கரத்தால் தன் கழுத்தில் ரக்ஷயும் அணிவிக்கப்பட்டது குறித்து பிரம்மித்துப் போனார் பாலபட்டாபி.

 

🌷மற்றவர்களுக்கு நிகழ்ந்தவை:

அதற்குப்பின் அந்தப் பயணத்தில் மற்றவர்களுக்கும்... பாபா நிகழ்த்திய லீலைகள் பல! ஒரு தட்டு உணவை 60, 70 பேருக்கு பிரசாதமாக விநியோகித்தது, வெள்ளிப் பிள்ளையாரை சித்ராவதி மணலில் இருந்து வரவவழைத்து பாலபட்டாபியின் மைத்துனரின் மாமனாருக்கு கொடுத்தது, ஒவ்வொருவரையும் ஒரு கைப்பிடி மணல் எடுத்து கைமூட சொல்லி, பின்னர் அவரவர் நினைத்த பலகாரமாக (விநாயகர் பிரசாதமாக) அதை மாறச்செய்தது, இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களிடம் இருந்து காப்பாற்றியது, பட்டுப்போன மரத்தை பச்சை மரமாய் பூத்துக் குலுங்கச் செய்தது, உகாதிப் பண்டிகையின்போது 50 பேருக்கு செய்த உணவை 100 பேருக்கும் மேலானவர்கள் சாப்பிடும்படி வளர்ச் செய்தது, ரகசியமாக ஒழித்து வைத்து சிகரெட்டு புகைத்து வந்தவரிடம், அவரின் ரகசியத்தை அம்பலமாக்கித் திருத்தியது என நிறைய அற்புதங்களையும், அருளுரைகளையும் நிகழ்த்தினார்.


யாரிடமும் இதை வெளிப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து கொடுத்த விநாயகர் சிலையை, ரயில் பயணத்தின் போது எல்லோரிடமும் காட்டினார்  (பாலபட்டாபியின்) மைத்துனரின் மாமனார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த சிலை மாயமாய் மறைந்தது. அந்த நிகழ்வு அங்கிருந்த சிலரின் நம்பிக்கையைக் குலைத்தது. மேலும் ஊர் திரும்பியபின் அந்தக் குழுவில் பயணித்த சிலருக்கு பாபாவின் மேலிருந்த நம்பிக்கை கரைய ஆரம்பித்து தூஷிக்கவும் தொடங்கினார்கள்.

 

🌷எண்ணற்ற லீலைகள்:

ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தின் மகிமை காண்டத்தில் (அதாவது சுவாமியின் 16 முதல் 32 வயது வரை) அவரை அறிந்து, தரிசித்து அத்யந்த பக்தராக நெருங்கியிருக்கும் பாக்கியம் பெற்றிருந்த திரு. பாலபட்டாபி அவர்கள் கண்டுமகிழ்ந்த லீலைகள் கணக்கில் அடங்காது.  


1946ம் ஆண்டு சிவராத்திரியன்று சுவாமி லிங்கோத்பவம் செய்கின்றபோது மிக அருகில் தரிசித்தது, காபிபொடி சாகம்மாவிற்கு ஓரடி நீளமும், அரையடி அகலமும் கொண்ட தந்தத்தாலான (கிருஷ்ணார்ஜுனர்களின் குதிரைகள் பூட்டிய) ரதம் மணலிலிருந்து சுவாமி உருவாக்கித் தந்த லீலை, சுவாமி மேல் நம்பிக்கை இல்லாத தனது தாயாருக்கு தலையிலடிப்பட்டபோது மருந்து மட்டும் கட்டுத்துணிகள் அங்கை அசைப்பில் வரவழைத்து சிகிச்சை செய்த லீலை, முந்தையநாள் வெள்ளரிப்பழம் போல் பிளந்திருந்த காயம் மறுநாள் சாதாரண வீக்கமாக மாறிவிட்டிருந்ததில் தாயாருக்கு சுவாமியின் நம்பிக்கை ஏற்பட்டது, அடிபட்ட தாயாருக்கென கொடுக்கப்பட்டிருருந்த  டென்ட்டில் வேறொருவர் ஆக்கிரமிக்க முயலும்போது சுவாமி  நாகசர்ப்பமாய் வந்து அவரை விரட்டிய லீலை


அதே ஆண்டு தசராவின் இரண்டாவது நாள்… அள்ள அள்ளக் குறையாமல் உணவு வளர்ந்து கொண்டேயிருந்த லீலை. மேலும் அதே ஆண்டு தீபாவளி சமயம் வழக்கமாக ஆர்மோனியத்தில் ஸ்ருதி வரவழைக்க காற்றுப்போடும் பாலபட்டாபியின் கைகளை நீட்ட சொல்லி சுவாமி தொட்டார்; பின்பு ஊருக்குத் திரும்பியபின் ஓர்நாள், பாலபட்டாபி தன்னை அறியாமலேயே ஆர்மோனியத்தை இசைக்கத் தொடங்கிய லீலை, பெங்களூரைச் சேர்ந்த அப்பையாவிற்கு, மந்திரத்திலேயே தன் அங்கை அசைப்பினால் வரவழைத்த ஆபரேஷன் கருவிகள் கொண்டு அப்பெண்டிஸ் ஆபரேஷன் செய்து அவரை குணப்படுத்திய லீலை. சேஷமராஜுவின் மைத்துனர் சுப்புராஜ் ( சிறுவர்களாக இருந்தபோது தங்கள் வீட்டு நாற்காலியில் சுவாமி அமர்ந்ததற்காக கடிந்து கொண்டவர்) சுவாமியின் வெள்ளி சிம்மாசனத்தை பிரித்துத் துடைக்க வைத்த லீலை, மந்திரத்திலிருந்த பார்க்கர் பேனாவைத்  திருடியவன் காலில் விஷமுள் தைத்து பின்னர் சுவாமியிடமே வந்து மன்னிப்புக் கேட்டு குணம்பெற்ற லீலை, ராமசர்மாவின் குழந்தைகள் கிணற்றில் விழுந்தபோது தன் உடலை விட்டு சூட்சுமமாக சென்று காப்பாற்றிய லீலை என்று எத்தனையோ லீலைகள்.


பாலபட்டாபியும் அவரது துணைவியாரும் தன் தெய்வத்துடன் - 1947

இன்னும் வேடிக்கையாக சொல்வதானால் 1946ம் ஆண்டில் மட்டுமே இத்தனை லீலைகள். அதிலும் மேற்கூறியவை அனைத்தும் அந்த ஆண்டில் திரு. பாலபட்டாபி அனுபவித்த குறிப்பிட்ட சில லீலைகளே அன்றி அவர் கண்டனுபவித்த மொத்தமும் அல்ல. இன்னும் அவர் நேரில் காணாமல், கேட்டுத் தெரிந்துகொண்ட லீலைகளும் எத்தனையோ உண்டு.

ஒரேயொரு சோதனைக்கே தாக்குபிடிக்காமல் விலகிப்போன சொந்தபந்தகளுக்கு மத்தியில் பகவானை விடாப்பிடியாக இறுதிவரை பற்றி நின்ற உறுதியைப் பற்றியும், பிள்ளைப்பேறு தவிர்த்து வேறெந்த குறைவும் இல்லாதிருந்த போதும், சுவாமி ஏன் மறுபடி மறுபடி "உன்னைக் கைவிடமாட்டேன்!" என்று உறுதி கொடுத்தார் என்ற காரணத்தையும்  பகுதி-2ல் காண்போம்.








🌷 பகவானைக் குளிப்பாட்டும் பாக்கியம்:

பழைய மந்திர நாட்களில்... ஒவ்வொரு உற்சவமும்/பண்டிகையும் முடிந்து பக்தர்கள் அவரவர் ஊர்களுக்குத் திரும்பியபின், சில நாட்களுக்கு சுவாமி தன் அறையை விட்டு வெளியில் வரமாட்டார், சாப்பிடவும் மாட்டார். பக்தர்கள் மேல் அவருக்கிருந்த அன்பு அத்தகையது! மணமான பெண் தன் தாய்தந்தையரை விட்டு ஊருக்கு செல்வதையொத்த  பந்தத்தின் வெளிப்பாட்டைக் காணலாம்.


அதேவண்ணம் 1945ம் வருடம் பகவானின்  பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் ஓர்நாள், சுவாமியை குளிப்பதற்கு சம்மதிக்கவைக்க வேண்டியிருந்தது. பாலபட்டாபியின் மைத்துனர் இந்த நிகழ்வில் ஈடுபட்டிருந்தார்; சுவாமியைக் குளிக்கவைக்கும் தருணத்தில் பாலபட்டாபியையும் சுவாமி குளிக்குமிடத்திற்கு வரச்சொன்னார். பகவானின் தலைக்குத் தைலங்கள் தேய்க்கவும், பாதங்களைத் தன் மடிமீது தாங்கி இரண்டு கால்களுக்கும் எண்ணை தேய்க்கும் பெரும்பாக்கியமும் அன்று அவருக்குக் கிட்டியது. 20 வயதான சாயிகிருஷ்ணனின் உச்சந்தலையையும்  உள்ளங்கால்களையும் கண்டு ஆனந்தத்தில் மெய்மறந்தார் பாலபட்டாபி. குளிப்பாட்டி முடித்து டவலால் சுவாமியின் பொன்னுடலைத் துடைத்தும் விட்டார். அன்று உணர்ந்த ஆனந்தத்தை, உண்மையில் என்றுமே வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பாலபட்டாபி சிலாகித்தார். அதைத் தொடர்ந்து மறுநாள் தம்பதி சகிதமாக பாதபூஜை செய்யும் வாய்ப்பையும் வழங்கினார் சுவாமி.


🌷தமிழகத்திற்கு சுவாமியின் முதல் விஜயம்:

பகவானுடைய மகிமைகளையும் லீலைகளையும்  கேள்விப்பட்டு, திருச்சி கரூர் முதலான இடங்களிலிருந்து  மக்கள் புட்டபர்த்தி சென்று பகவானை கரூருக்கு விஜயம் செய்ய வேண்டினர். 1948ம் ஆண்டு சுவாமி ஒப்புக்கொள்ள, கரூரில் ஒவ்வொரு பக்தரும் அவரவர் சுற்றத்தாரை கல்யாணத்திற்கு அழைப்பதைப் போல் முன்கூட்டியே அழைத்திருந்ததால் எங்கு பார்த்தாலும் அலங்கார தோரணங்களும் கூட்டமும் திரண்டு காட்சி அளித்தனர்.  கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பந்தோபஸ்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் பாபா வந்த தகவல் கேட்டு கூட்டம் சமாளிக்க முடியாதபடி ஸ்வாமியை தரிசனம் செய்ய ரோட்டில் ஒரே கூட்டம். காலை 9, 10  மணிக்கெல்லாம்  வீட்டு மாடிமீது இருந்து யாவருக்கும் தரிசனம் கொடுக்க வேண்டியிருந்தது சுவாமிக்கு. எதிர்வீட்டு மாடி மீது பலரும் ஸ்வாமியை போட்டோ எடுத்தனர். பாபா வேண்டாம் எனக்கூறியும் பல போட்டோக்கள் எடுக்கப்பட்டன.

பாபா தன் கையை  அசைத்ததும் போட்டோ எடுப்பவர் கையிலிருந்த கேமரா பாபா கைக்கு வந்துவிட்டது. இதை யாவரும் பார்த்து வியந்தனர். மறுவினாடி பாபா யாவரும் பார்த்துக் கொண்டிருக்க கேமாராவை தன்னுடைய இடது கையில் வைத்து வலது கையை அசைத்து கேமராவிலிருந்து படங்களை சிருஷ்டித்து ரோடில் பாபாவை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மீது வீசினார். என்ன ஆச்சரியம்! அப்போதே போட்டோ எடுத்ததை டெவலப்பிங், பிரிண்டிங் ஒன்றுமே செய்யாமல் படங்களாக வெளியில் சரமாரியாக வருவதைப் பார்த்த பலரும் சாயிபாபாவிற்கு ஜெய்! சாயிபாபாவிற்கு ஜெய்! என கத்திக் கொண்டே இருந்தனர். 7 வயது ஊமைப்பெண்ணை, சுவாமி பேசவைத்த லீலையும் அங்கே நிகழ்ந்தது!


🌷தாளாத சோதனைகளும் மாறாத பக்தியும்:

பாலபட்டாபி அவர்களும் அன்னாரின் தெய்வீகக் குடும்பமும் சந்தித்த சோதனைகளை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம். 

பாலபட்டாபி அவர்களின் அக்காவும்  அவரது கணவரும் சுவாமியுடன்.... 

அதே சமயம் ஒவ்வொரு சோதனையின்போதும் சுவாமி தவறாமல் கண்காணித்துக் காப்பாற்றினார் என்பதும் பரமசத்தியம். இருப்பினும், ஒரு பக்தனாக அவர் தாண்டி வந்த தடைக்கற்கள் ஏத்தனை என்பதை நாம் அறிந்துஉணர்ந்துஉய்வது சாயி பக்தர்களாகநம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுவதானால் - - - 

சுவாமியிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக வைத்திருந்த  (சுவாமி படத்துடன் வைரக் கற்கள் பதித்த) செயினை அவரிடம் இருந்து எடுத்து இன்னொருவருக்கு சுவாமி

பாலபட்டாபி அவர்களுக்கு சுவாமி  சிருஷ்டித்து கொடுத்த கோதண்ட ராமர் விக்ரஹம்
வழங்கியது!, கோதண்ட ராமர் விக்ரஹத்தை சித்ராவதி நதிக்கரையின் மணல்மேட்டில் சுவாமி வரவழைத்துக் கொடுத்த போது, அதை ஏற்க வேண்டாம் என்று சுற்றத்தார் அறிவுரை கூறியதையும் தாண்டி, பக்தியுடன் அந்த விக்ரகத்தை வீட்டிற்கு கொணர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வழிபடும் சமயம் மனைவி சேலையில்  தீப்பிடித்தது!, 1947ம் ஆண்டு சுவாமி பிறந்தநாளுக்காக பர்த்திக்கு ஆசையாசையாய் சென்றிருந்த பொழுது (முந்தையநாள் இரவு கனமழை பெய்ததால்) ஒதுங்கி நிற்கக் கூட இடமில்லாமல் போனது! , 
பிள்ளையில்லாத குறை போக்க…அவர்கள் ஒரு சொந்தக்கார பெண்குழந்தையை வளர்த்துவந்தனர்… அந்த வளர்ப்புப்பிள்ளையின் தாயார் அகாலமாக மரணமடைந்தது!, நல்ல தயாரிப்பினில் வெல்லமூடைகள் சேர்ந்திருந்தபோது… வெல்லம் விலை வீழ்ச்சியடைந்தது, தேவையற்ற பெரியமனிதர்கள் வட்ட நட்பினால் ஏற்பட்ட சிக்கல்கள்! , வீட்டுவாசலில் பூமிக்கடியிலிடச் சொல்லி சுவாமி வரவழைத்துக் கொடுத்த நவக்கிரகங்கள் காணாமல் போனது!,உடல் உபாதைகள்!, தன்னிடம் வேலை செய்தவர்களே திருட்டுத்தனமும் துரோகமும் செய்ததால் வியாபாரத்தில் பெருத்த நஷ்டங்கள் ஏற்பட்டது!, இவைகளினால்… அவரின் சுற்றத்தார்களே… "போதும் இனி அந்த பாபாவை நம்ப வேண்டாம்" என்று அறிவுரைகள் கூறியது!, ஹிந்துபூரில் சரக்கு வாங்கிய வியாபாரி  சரியான நேரத்தில் அனுப்பவில்லை என்று பெனுகொண்டாவில் பாலபட்டாபி மீது மான நஷ்ட வழக்குப் போட்டது!. - - - இப்படி எத்தனையோ சோதனைகள்.


🌷தற்கொலையைத் தடுத்த தயாபரன்:

மேற்கூறிய ஹிந்துபூர் மானநஷ்ட வழக்கில்  மூன்று நாள் வாய்தா கிடைத்ததும் நேராக புட்டபர்த்திக்குக் கிளம்பி விட்டார் பாலபட்டாபி .மழை காரணமாக சித்திராவதி நதியில் 20 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு  இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . சாய்ராமா என்று உச்சரித்துக் கொண்டே பைத்தியம் பிடித்ததை போல் அங்கிருந்த புளிய மரத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்தார். அடுத்தடுத்து ஏற்பட்ட சோதனைகளின் காரணமாக மனம் தளர்ந்து இருந்தவர், அன்று இரவே உயிரை விட்டு விட வேண்டும் என்று துணிந்து ஆற்றில் இறங்கினார். அந்தக் கணமே, ஓர் குடுகுடு கிழவன் கைத்தடியுடன் வந்து, "நைனா என்ன காரியம் செய்யத் துணிகிறாய்"  என்று கேட்டார்.  நீ எங்கே போகிறாய் என்று கேட்டார் கிழவர்,  பாபாவிடம் என்று சொன்னார் இவர். "சீ... பிச்சி.. அவர் உனக்கு என்ன கொடுத்து விட முடியும்" என்றபோது  அவர் கிழவராக இருந்தாலும் அவருடைய குரல் பாபாவின் குரலாகவே பாலபட்டாபிக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் பாலபட்டாபியின் சிந்தனையை மாற்றுவதற்காக அந்தக்  கிழவர் ஒரு குச்சியை நீட்டி "அதை இறுகப் பிடித்துக் கொள்" என்று கூறி கரையைக் கடந்து மேலேற்றி விட்டார். கடுமையான உளைச்சலில் இருந்த மனது சட்டென்று மாறியதால் சற்று திடத்துடன் நகர்ந்து மந்திரை சென்றடைந்தார் பாலபட்டாபி.

அதே சமயம் மந்திரில்  நடந்தது என்னவென்றால்... அது இரவு ஆரத்தி சமயம்! சுவாமி, ஏழு பேருடன் பஜனை பாடி கொண்டிருந்தவர் அதனை நிறுத்திவிட்டு பாலபட்டாபி வருகிறான் என்று சொல்லியவாறு... அப்படியே சாய்ந்து விட்டார். அரை மணி நேரம் உயிரற்ற உடலுடன் இருந்த சுவாமி, மறுபடி ஆரத்தியின் போது தான் எழுந்து அமர்ந்தார்.

பாலபட்டாபி மந்திரை சென்றடைந்திருந்த சமயம், அங்கே  சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை. ஆகையால் சுவாமி தன் அங்கை அசைப்பில் பூரி மசாலா வரவழைத்ததோடு அவரே அன்புடன் சாப்பிடவும் வைத்தார். அந்த உணவைக் கண்டு அங்கிருந்த மற்றவர்கள் தங்களுக்கும் கேட்க, "அது நீங்கள் சாப்பிடக்கூடியது அல்ல" என்று சுவாமி மறைத்து விட்டார். அன்று சுவாமி அவருக்கென கொடுத்தது வெறும் உணவல்ல, உண்மையான பக்தனுக்காக தெய்வமே பிரத்தியேகமாக படைத்திட்ட அமுதமே அல்லவா! அந்த ஹிந்துபூர் மானநஷ்ட வழக்கில், சுவாமியின் எல்லையில்லா கருணையினால்  வழக்கு பாலபட்டாபிக்கு சாதகமாக முடிந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?

இதைப்போல மற்றொரு சவாலான சமயத்தில்,  "தங்கள் பாதங்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று பாபாவிற்கு கடிதம் எழுதி மந்திரின் வாசலில் வைத்து விட்டு.... ஒரு கிணற்றில் விழ சென்று விட்டார். "ஓம் ஸ்ரீ சாய்ராம்" என்று பலமாக கத்திக் கொண்டே உள்ளே குதித்தார். அவர் அன்றும் இறந்துவிட முடியவில்லை! மாறாக... முழங்கால் அளவு தண்ணீரில் யாரோ தோளில் தூக்கி போட்டு சென்றதை அவர் உணர்ந்தார். பாபாவையே பூரணமாக நம்பி இருப்பவரை அவர் எங்கனம் கைவிடுவார் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபித்து காட்டியிருக்கிறார் சுவாமி!

 
🌷பூரணவாழ்வு கண்ட புண்ணியவான்:

சுவாமியை சந்தித்த சமயத்தில், பாலபட்டாபிக்கு இருந்த ஒரே ஒரு குறையான பிள்ளைபேறின்மையும்  சுவாமியின் அருளால் "சாயி லீலா" என்ற அழகான பெண்குழந்தை பிறந்ததன் மூலம் தீர்ந்தது. உயர்விலும் தாழ்விலும் அன்புமாறாது உடன்வாழ்ந்த தனது மனைவி சரஸ்வதி அம்மையார் 2004ம் ஆண்டு காலமானபின் சற்றே தளர்ச்சியுற்றார் பாலபட்டாபி. 

அதன் பின்னர் வயோதிகத்தால் உடல் வழுவிழந்து வாழ்ந்த சமயத்திலும் கூட சுவாமியின் காரியங்கள் நேர்த்தியாக நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிர உறுதியுடன் இருந்தவர். அதற்கு எடுத்துக் காட்டாக, சுவாமி தொடர்பாக தன்னைப் போட்டி காண வந்தவரிடம், "என்னுடைய குரல் தளர்ந்து விட்டது சரியாக பதிவாகாமல் போகலாம்எனவே விஷயத்தை நான் கூறுகிறேன்ஆனால் திடமான வேறொருவரை பேசவைத்து  பதிவு செய்யுங்கள்" என்றார் பாலப்பட்டாபி. 2009ம் ஆண்டு புனித மஹாசிவராத்திரி தினத்தில், (அன்று தற்செயலாக? ஒருவர்) ஷீரடியிலிருந்து கொண்டுவந்த பாபாவின் தீர்த்தம் பருகியபின்னர் தனது ஜீவனை பகவானின் பாதங்களில் சமர்ப்பித்தார் புண்ணியாத்மா  ஸ்ரீ.பாலபட்டாபி அவர்கள்.


🌷கீதையின் முக்கிய மூன்று சுலோகங்கள்:

ஒருமுறை  கீதையின் முக்கிய மூன்று சுலோகங்களாக, சுவாமி பாலபட்டாபிக்கு சொன்னவை பின்வருமாறு. 

4வது அத்தியாயம் 8ம் சுலோகம் - யுகந்தோறும் சாதுக்களைக் காப்பாற்றி அறத்தை நிலைநாட்டுவது குறித்தது! 9வது அத்தியாயம் 22ம் சுலோகம் - எந்தவிதமான சிந்தனைகளுமில்லாமல் என் பேரிலேயே சிந்தனையுள்ளவர்களை காப்பாற்றுவதே என் குறிக்கோளும் அந்த விதமானரர்களின் யோக சேஷமங்களையும் நானே கவனித்து கொள்வேன் என்றது! 18வது அத்தியாயம் 66ம் சுலோகம் - சகல பற்றுதல்களையும் விட்டு என்னையே சரணம் என உள்ளவர்களை சகல பயங்களிலுமிருந்து விடுவித்து மோக்ஷத்திற்கு வழிகாட்டுவேன் என்றது!

மேலே குறிப்பிட்ட மூன்று சுலோகங்களின் அர்த்தங்களும் பாபா சுட்டிக்காட்டிய வண்ணமே திரு.பாலபட்டாபியின் வாழ்க்கையிலும்  நிகழ்ந்தேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

[…சாயி லீலாம்ருதம் என்ற தலைப்பிடப்பட்ட தமிழ்ப் புத்தகத்தில், புண்ணியாத்மா திரு. பாலபட்டாபியின் சுவாமியுடனான திவ்ய அனுபவங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அப்புத்தகமானது சாயி பக்தர் ஒவ்வொருவரும் போற்றிக் கொண்டாட வேண்டிய தெய்வீகப் பொக்கிஷமே  ஆகும்…]

மூலம் : சாயி லீலாம்ருதம் மற்றும் ஸ்ரீமதி. சாயி லீலா அவர்களின் உரையாடல்களிலிருந்து... 


✍🏻 கவிஞர். சாய்புஷ்கர்



3 கருத்துகள்: