தோற்றமும் முடிவும் இல்லாத தூய பரஞ்ஜோதியாம் சாயிராமன், நிகழ்த்திய அற்புதலீலைகள் ஆயிரம் ஆயிரம். அவ்வகையில், எங்கோ, எப்போதோ, எந்த யுகத்திலோ , கால வெள்ளத்தில் மூழ்கி, கண் மறைந்த அரிய பொக்கிஷங்களை, கை அசைவில் வரவழைத்து, பக்தர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துவது பகவான் பாபாவின் வாடிக்கை. அதில் ஒன்றுதான் இங்கு நாம் காணப்போகும் தெய்வீக வேடிக்கை...
🌷முத்துதான் கசந்ததோ மூர்த்தி உள்ளே இல்லாததால்:
"சிருஷ்டிக்கப்படும் அற்புதப் படைப்புகளைக் கண்டு பிரமிக்காதீர்கள். அவற்றை சிருஷ்டிப்பவரின் தெய்வீக சக்தியை வியந்து போற்றுங்கள்" என பாபா கூறுவதுண்டு. ஆயினும் நம்புதற்கரிய வகையில், பேசிக் கொண்டே இருக்கும் போது, பாபா கை அசைவில் வரவழைத்த ஒருஅற்புத முத்து மணி மாலையைக் கண்டு வியக்காதவர் யார்.
ஒரு சமயம்..கொடைக்கானலின் குளுகளு காற்றுடன் பாபாவின் கருணைச் சாரலிலும் நனைந்த சில பாக்கியசாலிகள், பாபா அனுமனின் அற்புதக் கதையைக் கூறக் கேட்டபடி அமர்ந்திருந்தனர். இடையே தமது திருக்கரத்தை அசைத்த பாபா,
அமரந்தவர்கள் அதிசயிக்கும் வண்ணம் பளபளப்பான பெரிய அளவுள்ள 108 முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஒரு மாலையை வரவழைத்தார். அனுமனின் ஆத்மார்த்த சேவைக்காக மாதா சீதாதேவி அளித்த பரிசாகும் அது. மாலையை வாங்கிய அனுமன் அகமகிழ்தாலும், ஐயன் ராமனோடு ஒன்றியதன் காரணமாக, ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து அதில் ஸ்ரீராமனின் திரு உருவைத் தேடினார்,ஸ்ரீராமரின் உருவம் அந்த முத்துகளில் இல்லாதது கண்டு விலையில்லா முத்து மணி மாலையை, உபயோகமற்றதென வீசி எறிந்தார். ஸ்வாமி கூறினார் " அனுமன் தமது இதயபூர்வ பக்தியை ஸ்ரீராமரிடமே வைத்திருந்தார், அந்த அற்புதப் பரிசில் அல்ல." பிறகு பாபா அந்த மாலையை அனைவரும் காணத் தூக்கிப் பிடித்தார். அதில் சில முத்துக்களில் அனுமன் கடித்த பல் தடம் படிந்தும், சிலவற்றில் அனுமனின் முகப் பதிவும் காணப்பட்டன.
🌷நான் சங்கல்ப சித்த புருஷர் சித்த சங்கல்ப புருஷர் அல்ல:
மற்றுமொரு சமயம். திரு. சுப்பாராவ், பாபா அவர்களை சித்த சங்கல்ப புருஷர் எனக் குறிப்பிட்டார். பாபா உடனே அதை மறுத்து கூறியதாவது:
"இல்லை... இல்லை.. நான் சங்கல்ப சித்த புருஷன்." சித்த சங்கல்பம் என்றால், சித்த புருஷர்கள் தமது தவ வலிமையால் சேகரிக்கும், குறையக் கூடிய சக்தி, ஆனால் சங்கல்ப சித்தி என்றால் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டிக்கும் தெய்வீகப்பேராற்றல். ஆகவே என்னுடையது சங்கல்ப்ப சித்தி.
சாயிராம்... அண்ட பேரண்டங்கள் அனைத்தும் பகவான் பாபாவின் சங்கல்ப்ப சிருஷ்டி கள்தான். நம்மிடையே அவர் தெய்வீக சக்தியால் நிகழ்த்தும் அற்புதங்களை, பாபா தமது விசிட்டிங் கார்ட் என்கிறார். விசிட்டிங் கார்டை வியப்பதுடன் பார்த்து நின்று விடாமல் , வேணுகோபாலனாகிய பகவானின் மகிமையில் திளைத்து, நாம சங்கீர்த் தனத்தில் மூழ்கி நலமடைவோமாக.
ஆதாரம்: Sri G V Subba Rao’s article “Mind-boggling Miracles of Sathya Sai” in the book “Sathya Sai -The Avatar of Love”, Page: 79-80.
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக