தலைப்பு

வியாழன், 2 செப்டம்பர், 2021

தன் பக்தர்களை கருவியாகக் கொண்டு சுவாமி குணமாக்கிடும் கொடூர நோய்கள்!


சுவாமி பக்தராய் இருப்பது பூர்வ புண்ணியம். சில பக்தரை சுவாமி கருவியாய் பயன்படுத்துவது சுவாமி கருணையே!! பரஸ்பரம் ஒரு பக்தர் வழியாக இன்னொரு பக்தருக்கு தன்னுடைய சத்திய போதனைகளை கொண்டு செல்கிறார்.. இதில் பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திரா தேவி அம்மையாரையும்... பிரபல கண் மருத்துவர் மோடியையும் எவ்வாறு சுவாமி தன் கருவியாக பயன்படுத்திக் கொண்டார் என்பதை வாசிக்கப் போகிறோம்!!


சுவாமி தன் பக்தர்களை கைவிடுவதே இல்லை.. அவர்களின் ஒவ்வொரு தேவைகளையும் சுவாமியே கவனித்துக் கொள்கிறார். அவர்களின் இறுதி பயணத்தில் தரிசனம் தந்து சுவாமி தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொள்கிறார். ஒருவருக்கல்ல.. இருவருக்கல்ல.. பல பக்தரை உதாரணமாக சொல்லலாம். பரம பக்தை சுப்பம்மா என வரிசை மிக நீளமானது.  இவ்வாறே ஆந்திரப்பிரதேசத்தில் கவர்னராக இருந்த ராமகிருஷ்ண ராவ்...பிரேம சுவாமி தாயாகும் பேறு பெற்ற கஸ்தூரி அவர்களின் தாய்.. அவரின் இறுதி நொடிகளில் சுவாமி தரிசனம் தந்து தீர்த்தம் வழங்கி இருக்கிறார்.. அவரும் நான் போய் வருகிறேன் எனச் சொல்ல.. அப்படியே கண்களை மூடி இருக்கிறார்.. சுவாமி வந்ததையோ சென்றதையோ அந்த தாயாரை தவிர யாரும் தரிசிக்கவில்லை..

இது இறுதி நாட்களில் சுவாமி காட்டும் கருணை.. நமது வாழ்நாட்களிலோ சுவாமி காட்டும் கருணை பக்தர்களுக்கு வருகின்ற நோய்களை குணமாக்குவது! இது அளப்பரிய பரிவு. பிரபஞ்சமான சுவாமியின் பேரிதய விரிவு!

இந்திராதேவி அம்மையாருக்கு ஒரு சிருஷ்டி மாலை வழங்கி அதனை தியானத்தில் பயன்படுத்தச் சொல்கிறார். அது முத்துக்களால் கோர்க்கப்பட்ட முத்தான மாலை.. நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த சத்தான மாலை.  "இது உன்னுடைய தியானத்திற்கு மட்டுமல்ல... உன்னை நாடிவரும் எளிய மக்களின் நோயை தீர்க்க பயன்படுத்து! அப்போது நீ என்னை நினைத்துக் கொள்! நான் அங்கே இருப்பேன்! " என்கிறார் மிக தீர்க்கமாய் சுவாமி.

        "எந்தவித நோயானாலும் குணமாக்குமா? சுவாமி ..." என அம்மையார் கேட்க.. சுவாமி சொன்ன பதில் ஆகாயத்தில் எழுதி தினந்தோறும் அண்ணார்ந்து பார்த்து வாசிக்கப்பட வேண்டியவை... 

        "நோய் எத்தகையது என்பதைப் பற்றி கவலைப்படாதே! ஆனால் முற்பிறவிகளில் ஒருவர் செய்த பெரும் தவறுகளின் கர்ம பலன்களை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்... அப்படி துன்பப்படுபவர்கள் தங்கள் கடனை கழித்தே ஆக வேண்டும்.. அப்படிப்பட்டவர்களுக்கு நீயும் எதுவும் செய்யமுடியாது!" எனும் பரம ரகசியத்தை மொழிகிறார். 

இந்திராதேவி அம்மையார் சுவாமியின் கருவியாக இருந்து... சுவாமி தந்த சிருஷ்டி மாலையை வைத்து பலரின் நோய்களை குணப்படுத்தி இருக்கிறார்.. இதில் மெக்ஸிகோவை சேர்ந்த ரோஸாடேவின் புற்றுநோய்...‌பிரபல இந்தித் திரைப்பட நடிகையான தேவிகா ராணி மற்றும் அவரது கணவரின் சுகவீனங்களையும் குணப்படுத்தி இருக்கிறார்.. பட்டியல் மிக நீளம். 

சுவாமி பல ஏழை எளிய மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடத்தி இருக்கிறார். முக்கியமாக இதில் "காட்ராக்ட்" அறுவை சிகிச்சை செய்யப்படும். பிரபல டாக்டர் மோடி அங்கு வந்து தங்கி பல அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். 

சுவாமி இவரிடம் "ஒரு நாளைக்கு எவ்வளவு பேருக்கு இவ்விதம் செய்ய முடியும்?" எனக் கேட்கிறார். அதற்கு இவர் "150 பேருக்கு..." எனச் சொல்ல.. "நல்லது... நாளை நான் உன்னுடன் இருக்கிறேன்" என சுவாமி சொல்லிச் செல்கிறார். மோடிக்கு எதுவும் புரியவில்லை...  மறுநாள் நூற்றுக்கணக்கான நோயாளிகள் காட்ராக்ட் அறுவை சிகிச்சைக்காக வந்து குழுமுகின்றனர். ஆசிரமத்தில் உள்ள முதிர்ந்த மாணவர்களும் டாக்டருக்கு உதவி புரிந்தனர்.. சுவாமி அவர்களுடன் இருந்து எல்லோருக்கும் வழிகாட்டுகிறார்.  அறுவை சிகிச்சை முடிந்ததும் ஒவ்வொருவரையும் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைப்பார்கள். அந்த முகாமில் சுமார் 3000 பேர் சிகிச்சை பெற்றனர். முதல் நாள் சிகிச்சை இரவு 8 மணி வரை நிகழ்ந்தது.. 

"இன்று எவ்வளவு பேர் அறுவை சிகிச்சை பெற்றனர்?" என சுவாமி கேட்க.. தனக்கு தெரியாது என்கிறார் டாக்டர் மோடி. சுவாமி "516 பேருக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறாய்" என சொல்ல.. சோர்வும் எந்த வித களைப்புமே இல்லாத டாக்டர் மோடி.. சுவாமி இதை நான் செய்யவில்லை.. தங்கள் அருளே செய்தது.. கிணற்று நீருக்குள் இருக்கும் வாளியை இழுத்தால் கனம் தெரிவதில்லை.. அதைப் போலவே சுவாமி அருளில் தோய்ந்திருக்கும் போது நமக்கு சிரமமே எதிலும் தெரிவதில்லை...

முகாம் தொடர்ந்து நடைபெற்றது... பலர் சுவாமியை வணங்கி கண்கலங்கியபடி நன்றி உணர்வோடு பயனடைந்து சென்றனர். சத்தான பழச்சாறுகளும் .. பிஸ்கட்டுகளும் வழங்கப்பட்டன .. இதைப் போல் எங்கேயும் நிகழாது என வியந்தார்கள் பயனாளிகள்.. இலவச சிகிச்சை மட்டுமில்லை சுவாமி முகாம் என்பதால் பரவச சிகிச்சையாகவும் திகழ்ந்தது... "நீ என் வேலையைச் செய்தால்... எப்போதும் நீ சோர்வாகவே மாட்டாய்.. இது நிச்சயம்" என சுவாமி பகவத் கீதையில் (அத்தியாயம் 12) பொழிந்தது எத்தனை சத்தியம். அந்த சத்தியத்திற்கு சான்றாக இருக்கிறார் டாக்டர் மோடி. 

மோடியிடம் மணி என்ன? என்று சுவாமி விசாரிக்க.. கைக் கடிகாரம் கட்டாத மோடி தெரியாது எனச் சொல்ல... 8.15 என சுவாமி சொல்லி ஒரு சிருஷ்டி கடிகாரம் அளிக்கிறார்.. சுவாமியே கட்டிவிடுகிறார் .. மணி பார்த்த மோடிக்கு ஒரே ஆச்சர்யம். சுவாமி சொன்ன அதே துல்லியமான நேரம்.. டிக் டிக் எனும் கடிகார முள்ளசைவுகள் லப் டப் என தனது இதய அசைவாய் மோடிக்கு கேட்கிறது..

சுவாமியின் சிருஷ்டி கடிகாரத்தின் உள்ளிருப்பவை கடிகார முள் என்று எவ்வாறு சொல்ல முடியும்? அது காலத்தையே நிர்ணயிக்கும் கடிகார மலர் அல்லவா!!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 151/ ஆசிரியர் : எஸ். லட்சுமி சுப்ரமண்யம்)


தாங்கள் சுவாமி கருவிகளாக இருக்கிறோம் என தங்களுக்கே தெரியாமல் இருப்பார்கள் சுவாமியின் கருவிகள். காரணம் சுவாமி எவரையும் தனது கருவியாக மாற்றுபவர். சுவாமி கருவிகள் என்பவர்கள் சுவாமி மகிமையை விளம்பரப்படுத்தவோ.. வியாபாரம் செய்யவோ நினைக்க மாட்டார்கள். சுவாமி Sri Sathya Sai Speaks'சில் மொழிந்ததற்கு மாற்றாக எதையும் கூறமாட்டார்கள். ஆக தான் எதையும் செய்யவில்லை நீயே அனைத்தும் செய்கிறாய் சுவாமி என்ற சத்தியம் புரிகிற போதே சரணாகதி நிகழ ஆரம்பிக்கிறது எனப் பொருள்!!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக