தலைப்பு

திங்கள், 5 ஏப்ரல், 2021

இறந்த நாயையும் உயிர்ப்பித்த பாபாவின் பெருங்கருணை!


உயிருள்ள / உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் உறைவது ஆத்மசக்தி.
புல்லாய்,, புழுவாய், கல்லாய் , மரமாய்
பறவையாய் மனிதராய் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில். பகவான் பாபா எல்லா உயிர்களையும் சமமாக நேசித்து, எவ்வாறு ஒரு இறந்த நாயை மீண்டும் உயிர்ப்பித்தார் என்ற அற்புத நிகழ்வை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

🌹 பிறப்பும், இறப்பும்... பகவான் அறியாததா?

பக்தர்களை நாடி, பகவான் பாபா அவர்களது இல்லத்திற்கே பலமுறை சென்றதுண்டு. அப்படி ஒரு நிகழ்வு, 1969ம் ஆண்டு, பாபாவின் கிழக்கு கோதவரி பிரதேச யாத்திரையின் போது நிகழ்ந்தது. பாலாஜி என்கிற சாயி சேவாதளின் உளமார்ந்த சேவையால் ஈர்க்கப்பட்ட பாபா, அவர் இல்லத்திற்கு வருகை தந்தார்..  இந்நிகழ்வை மகிழ்வுடன் கொண்டாட வேண்டிய நேரத்தில், ஒரு சங்கடம் நிகழ்ந்துவிட்டது.பாபாவின் வருகைக்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் தான், பாலாஜியின் வளர்ப்பு நாய் இறந்துவிட்டது. அதன் கடைசி யாத்திரையை அன்புடன் தகுந்தபடி நடத்தி பிரியாவிடை  கொடுக்க எண்ணிய பாலாஜி, நேரமின்மை காரணமாக அதை அப்போது செய்ய  இயலவில்லை. ஆகவே அந்த பிரியமான ஜீவனின் உடலை ஒரு மூங்கில் கூடையில் வைத்து, இடைஇடையே வைக்கோல் மற்றும் துளசி தளங்களை போட்டு மூடி இறந்த உடலிலிருந்து துர்நாற்றம் ஏற்படாமல் பாதுகாத்து, வீட்டின் பின்புறமுள்ள ஒரு மாமரத்தின் அடியில் வைத்தார்.
வீட்டில் நுழைந்த பாபா அனைவரையும் ஆசீர்வதித்த பிறகு, வீட்டின் பின்புறம் சென்றார். எல்லாம் அறிந்த இறைவன் பாபா,, "கூடையில் இருப்பது என்ன" என்று ஒன்றும் தெரியாததுபோல் கேட்டார். பாலாஜி கூறினார் "ஸ்வாமி எங்களது வளர்ப்பு நாய், உடல் நோயுற்று, தாங்க இயலாத வலியுடன் ஒரு மாத காலமாக வேதனையை அனுபவித்தது  பல மருத்துவ சிகிச்சைகள் செய்தும் குணமாகாமல் இன்று காலை இறந்துவிட்டது. அதை அடக்கம் செய்யத்தான் இந்த கூடையில் வைத்துள்ளோம்." என்றார். 


🌹மந்திரமாவது நீரு... வானவர் மேலது நீரு:

"கூடையைத் திற" என்றார் பாபா. 
கூடை திறக்கப்பட்டது. துளசி தளங்களும், வைக்கோலும் அகற்றப்பட்டன. தமது அங்கையை சுழற்றினார் பாபா. பிணி நீக்கும் 
ஔஷதமான விபூதியை சிருஷ்டித்து, இறப்பு என்கிற பெரும்பிணியை தீர்க்க, இறந்து கிடந்த நாயின் உடல்மீது தூவினார். இது போதாதென்று தமது அபய கரங்களால் நாயின் உடலைத் தட்டிக் கொடுத்தார். உடனே ,மூடிக்கிடந்த யமலோகக் கதவுகள் திறந்தன. அனைவரும் அதிசயிக்க, தன் கண்களை மெல்ல திறந்த அந்த நாய், தள்ளாடியபடி எழுந்து, தன் வாலை ஆட்டியபடி நின்றது. இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்து, பாபாவைத் தொழுதனர்.

குறிப்பு:- பிறகு நீண்டகாலம் அந்த நன்றியுள்ள ஜீவன் உடல் நலத்துடன் வாழ்ந்ததாக, பாலாஜி தெரிவித்தார்.

🌻 என்னே ஸ்வாமியின் கருணை. என்னே அவரது அற்புத சக்தி மனிதர்கள், விலங்குகள், அற்ப புழுக்கள் என, அனைத்து ஜீவராசிகள் உள்ளும் உறைவது பிரம்ம ஸ்வரூபமே
என்பதால், பகவான் யாவையும் ஒன்றாக நேசித்து பாகுபாடு இல்லாமல் அருள்  புரிகிறார் என்பதை நாம் அறிவோம். 
சாயிகீதா என்ற யானை பகவானின் பேரன்பைப் பெற்றது. த்ரையீ பிருந்தாவனத்தில் ஒரு எறும்பு பாத நமஸ்காரம்  பெற்றது. மதனபள்ளி குன்றில் தண்ணீர் சுமந்து சேவை செய்த எறுமையை பகவான் போற்றி தடவிக் கொடுத்தார்.. எஜமானியின் கோபத்தால் பிரம்படிபட்ட  பூனைக்கு  விபூதி கொடுத்து அனுப்பினார். இது போன்ற பாபாவின் கருணைப்  பெருக்கை அறியாதார் யார்?ஆகவே எல்லா உயிர்களுக்குள்ளும் உறைபவன் இறைவனே என்று உணர்ந்து அனைத்தையும்  நேசிப்போம்.  சமஸ்த லோகா சுகினோ பவந்து. ஓம் ஸ்ரீ சாய்ராம். 🌻

ஆதாரம்: Resurrection of a Puppy by B V Ramana Rao during East Godavari district trip with Bhagwan

தமிழாக்கம்:  திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக