தலைப்பு

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

கர்மாவை கழிப்பதற்காக பாபா அளித்த அதிர்ச்சி வைத்தியம்!

ரமண மகரிஷியின் முக்கிய சீடர்களில் ஒருவரான அமிர்தானந்தரின் அதிர்ச்சியூட்டும் சாயி அனுபவம்! 

இறைவன் ஸ்ரீ சத்யசாயி தன் பக்தர்களின் / தன்னை அண்டி வருபவர்களின் கர்மாவை சிறு பார்வையிலேயே கரைத்து விடலாம்.. ஆனால் சில வேளைகளில் அவ்வாறு அவர் செயல்படாமல் அந்த கர்மாவை கரைப்பதற்கான வழிவகைகளை செயல்பட வைத்து கர்ம நிவர்த்தியை தருகிறார்.. விதியை நிர்ணயிக்கும் சுவாமியே அவ்விதியை மீறுவதில்லை என்பதும் இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது! அப்படி ஓர் வழிமுறையை செயல்பட வைத்து கர்மாவை சுவாமி குணப்படுத்திய ஓர் அற்புத அனுபவப் பதிவு இதோ...


அருணை ஜோதி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் மிக முக்கிய சீடரான அமிர்தானந்தர்.. பகவானின் சமாதிக்குப் பிறகு ஒரு உள்ளுணர்வின் உந்துதலால் திருவண்ணாமலையை விட்டு புட்டபர்த்திக்கு நள்ளிரவு வந்து சேர்ந்தார்... குருவை விட்டு கடவுளை நோக்கிய பயணமாக அது அமைந்தது.. குரு நம் வாழ்வில் வருவதே நாம் கடவுளோடு கொண்ட அகத் தொடர்பை நமக்கே ஓர் நாள் உணர்த்துவதற்கே... அப்படி ரமணர் உணர்த்தி சாயி இறைவனிடம் வருகிறார். காலை தனது குருவை நினைத்து தரிசன வரிசையில் அமர்கிறார்.. சுவாமி அவர் அருகே அன்னமாய் மிதந்து வந்து தூயத் துறவி அமிர்தானந்தரை நோக்கி வருகிறார்..


இந்த எதிர்பாரா அருகாமையால் அவர் பரவசப்படுகிறார். பயபக்தியோடு குருவை தன் மனதில் சுமந்து சுவாமியை தன் விழியில் சுமந்து சிலிர்க்கிறார்.. சுவாமி இவரை அமிர்தம் என்றே மிகப் பரிவோடு அழைக்கிறார்.. இவருக்கு மேலும் பரவசம்.. இப்படி அழைப்பது அவரது குரு ரமணர் மட்டுமே.. சுவாமி அறியாதது ஏது! "உன் குரு தான் உன்னை என்னிடத்தில் அனுப்பியது" எனும் சுவாமியின் உள் பொதிந்த சத்தியத்தை அந்த அமிர்தம் என்ற வார்த்தையே அமிர்தானந்தருக்கு உணர்த்தியது.. பின்னர் அவருக்கு தனிப்பட்ட முறையில் சுவாமி நேர்காணல் தருகிறார்.... இந்த நேர்காணலுக்கு முன்னரே அவர் நீண்ட நாட்களாக ஆஸ்துமா பிரச்சனையால் மிகவும் பாதிப்படைந்து இருந்தார். 

பல வருடங்களுக்கு முன்பாக ஹடயோகம் பயிற்சியை திருவண்ணாமலையில் தவறாக செய்ததின் விளைவாக வந்த பிரச்சனை தான் சுவாமி அமிர்தா நந்தாவின் ஆஸ்துமாவிற்கு காரணம் என்பதை பகவான் பாபா வெளிப்படுத்தினார்.


பாபா அவரது எல்லையில்லா கருணையால் அமிர்தானந்தருக்கு சிகிச்சையை ஆரம்பித்தார். முதல் இரண்டு நாட்களுக்கு விபூதி வரவழைத்து கொடுத்தார். பின்னர் பாபா மூன்றாவது நாள் தங்க நிறத்தில் ஒரு பவுடரை அமிர்தானந்தரின் வாயில் போட்டார். பிறகு நான்கு திசைகளிலும் கையை ஆட்டினார். ஒவ்வொரு திசையிலிருந்தும் செம்பு கலரில் பவுடர் அவர் கைகளில் விழுந்தது. அதை அமிர்தானந்தரின் நெஞ்சில் மற்றும் முதுகில் பூசினார். பிறகு விபூதி வரவழைத்து கொடுத்து, மூச்சு வாங்கி சிரமப்படும் போது மட்டும் எடுத்துக் கொள்ளச் சொன்னார். இன்னொரு நாள் சில வேர்களை தானே வரவழைத்து, அமிர்தானந்தரின் வாயில் போட்டு சுவைக்க சொன்னார். வாழைப்பழங்களும், விதையில்லா பேரிச்சையும் கூட வரவழைத்துக் கொடுத்தார்.


சுவாமி அமிர்தானந்தர் ஹிமாலயா உட்பட பல இடங்களுக்கு பரந்து விரிந்து பயணித்துள்ளார். ஆனால் இவ்வளவு ருசியான பழங்களை சாப்பிட்டதில்லை. ஒருநாள் சில மூலிகைகளை கலந்து தன் கைகளிலேயே பிழிந்து சாறு எடுத்து கப்பில் ஊற்றி அமிர்தானந்தரரை பருக செய்தார். ஒருநாள் ஒரு கட்டு சிறு இலைகளை வரவழைத்து---- விஷமமும் விளையாட்டுமாக, அமிர்தானந்தரரை சாப்பிடச் சொன்னார். அமிர்தானந்தர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஏனெனில் அந்த இலைகள் முழுவதும் முட்களாக இருந்தன. அவர் அழவே ஆரம்பித்து, "பாபா உண்மையாகவே இவற்றை நான் சாப்பிட வேண்டுமா?" எனக் கேட்டார். பாபா அமுதம் போன்ற இனிய குரலில் அந்த இலைகளை திரும்பி தரும்படி கேட்டார். பாபாவின் கைகளில் இலைகளை திரும்ப வைத்ததும், முட்கள் எல்லாம் மறைந்துவிட்டன. மீண்டும் அமிர்தானந்தர் இலைகளை வாங்கி மகிழ்ச்சியுடன் உண்டார்.


இன்னும் ஒருநாள் ஹிமாலயாவில் வளரும் மூலிகைகளை தானே வரவழைத்துக் கொடுத்தார். முதலில் ஒரு பாதி அளவு இலைகளை கொடுத்து உண்ணச் சொன்னார். சுவாமியும் உண்டார். பயங்கர கசப்பு! மீண்டும் மீதி இலைகளை கொடுத்து உண்ணச் சொன்னார். மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவரான பாபா சொல்லி மறுக்கமுடியுமா? தயங்கியவாறே மீதி இலைகளை வாயில் போட்டார். ஆனால் என்ன அதிசயம்! அந்த இலைகள் மிகவும் இனிப்பாக இருந்தன. அதைவிட இனிமையானது அமிர்தானந்தரின் மகிழ்ச்சியை பார்த்து சாயி அடைந்த மகிழ்ச்சி!

🌻கர்மாவை கழிப்பதற்காகவே, பாபா அமிர்தானந்தாவை நீண்ட நாட்கள் நோயை கஷ்டப்பட்டு அனுபவிக்க விட்டு பின் குணமாக்கினார். இருப்பினும் பாபாவின் மாறாத அன்பு அமிர்தானந்தாவின் சக்தியை மேலோங்கச் செய்த வண்ணமே இருந்தது. அன்பும் இரக்கமும் கொண்டு திகைப்பூட்டும் மருந்து வகைகளை கொடுத்து குணமாக்கினார்.!!! 🌻


ஆதாரம்: Baba Sathya Sai, Part II, P 95

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக