தலைப்பு

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

பஹ்ரைன் இஸ்லாமிய டாக்டர் தன் பாக்கெட்டில் இருந்து காட்டிய சத்ய சாயி படம்!


பஹ்ரைனில் இருந்த அன்பருக்கு உறவினர் மூலம் சத்ய சாய்பாபாவின் அற்புதங்கள் பற்றி தெரிய வர அவரும் அவரது பக்தர் ஆனார். இப்படித்தான் சுவாமி ஒருவரை தனது பக்தராக்க பல்வேறு விதங்களில் அருள்புரிகிறார். அதற்கு பூர்வ பிறவிப் புண்ணியங்களும் மிக முக்கிய காரணமாக அமைகின்றன.. சுவாமி பக்தராக இருப்பவர்கள் தனது இதயத்தை அப்படியே கொடுத்து அதற்குப் பதிலாக சுவாமியையே முழுதாய் வாங்கிக் கொள்பவர்கள்... அப்படிப் பெற்றவரில் இந்த பஹ்ரைன் பக்தரும் ஒருவர்!!
        
ஒரு சமயம் அவருக்கு இதய நோய் வர ஆஞ்சியோகிராம் செய்யும் போதே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. A1B நெகட்டிவ் ரத்த வகை தேவைப்பட்டது. இது அரிதானது!

அப்போது வெள்ளை சீருடை அணிந்திருந்த இரண்டு நபர்கள் தாங்கள் புட்டபர்த்தியில் இருந்து வருவதாகவும் அவர்களிடம் ஒரு பெயர் பட்டியல் இருப்பதாகவும் அதில் உள்ளவர்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவி கிடைக்கும் என்றும் கூறிவிட்டு சென்றனர். அவரும் அவ்வாறே தொடர்பு கொண்டதும் ரத்த தானம் தர ஆட்கள் ஏற்பாடானார்கள்...
இப்படியும் சுவாமியின் அருள் வளைய அரவணைப்பு நிகழ்கிறது. பொதுவாக இறைவன் சத்ய சாயி மனித யூகத்திற்கு அப்பாற்பட்டவர்.. நம் யோசனையை கடந்தவர் அவர். இப்படி இருக்க...


மறுநாள்,
இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் என நிறைய பேர் வந்து ரத்ததானம் செய்தார்கள்.. சுவாமியின் சர்வதர்ம ஸ்தூபி போல இந்த ரத்த தான மகிமை காட்சி அளிக்கிறது!
அறுவை சிகிச்சையன்று அவரது மனைவி மிகவும் மனக்கலக்கம் அடைந்திருந்த போது, அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் அவர் சட்டைப்பையில் இருந்து புகைப்படத்தை எடுத்து அவர் மனைவியிடம் காட்டி "இவர் இருக்க பயமேன், தன்னை வணங்கும் பக்தர்களை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை" என தைரியம் ஊட்ட, அவர் மனைவி சமாதானம் ஆனாள்.
மருத்துவர் காட்டிய புகைப்படத்தில் இருந்தது வேறு யாரும் அல்ல சாட்சாத் ஸ்ரீ சத்ய சாயி பாபா தான்!!


அந்த மருத்துவர் சாயி பக்தர் அல்ல. அவர் பக்ரைனை பூர்வீகமாக கொண்ட ஒரு இஸ்லாமியர் டாக்டர் ஆவார். அவர் பாக்கெட்டில் படம் எப்படி வந்தது, நானா அப்படி சொன்னேன் என்று அவருக்கே ஆச்சரியமாய் இருந்ததாம்!!
 சுவாமி தனது பக்தர் மூலமாக மட்டும் பிற பக்தர்களுக்கு அனுகிரகம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.. தனது பக்தர் அல்லாதவரையும் சுவாமியால் கருவியாகப் பயன்படுத்தி பிறருக்கு நம்பிக்கையையும் ... தெம்பையும்... அருளையும் பொழிய முடியும்.
 தான் படைத்த உயிரையே தன் கருவியாகப் பயன்படுத்துவது ஒன்றும் சுவாமிக்கு பெரிய விஷயமே அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது‌.
 இப்போது பாபாவின் கருணையில் பஹ்ரைன் அன்பர் சாயி நாமம் கூறி ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

🌻 பகவானுக்கு மதம் பெரிதில்லை. அன்பர்களிடம் அழையாமலேயே சென்று அல்லலில் இருந்து மீட்பார்..
ஆம் மதவெறியை சுவாமி வெறுக்கிறார். பரப்பிரம்மம் ஒன்றே .. அது சுவாமி ஒன்றே எனும் அனுபவத் தெளிவு வந்துவிட்ட பிறகு என் மதம் தான் உயர்ந்த மதம்.. நானே உயர்ந்த இனம் எனும் மனக் கோளாறுகள் எல்லாம் தெளிவடைகிறது.
அக மாற்றமே ஆன்மீக ஏற்றம்.. சுவாமியின் பார்வை பாரபட்சம் இல்லாதது... சுவாமியின் கருணைக்கு இந்தப் பிரபஞ்சம் கூட ஈடு இணை இல்லாதது!! 🌻


ஆதாரம்: Bhagawan Sri Sathya Sai Satcharitram, published by Giri Publications.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக