தலைப்பு

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஏன் இந்த துயரங்கள்?


பக்தன்: கடவுளின் அன்பு எல்லோரிடமும் ஒரே மாதிரி இருக்குமேயானால் ஏன் இங்கே பலவித துயரங்களைக் காண நேர்கிறது?

சாயி: ஆமாம், கடவுளின் அன்பு ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. ஆனால் அது கடவுளிடமிருந்து மட்டுமே செலுத்தப்படும் ஒருவழிப்பாதையல்ல. பக்தனிடமிருந்து கடவுளுக்கும், கடவுளிடமிருந்து பக்தனுக்கும் செல்லும் அன்பு இருவழிப்பாதையாகும்.


ஒவ்வொருவரும் தன் எண்ணங்களைத் தூய்மையாகவும், உண்மையாகவும் வைத்துக் கொள்வதோடு, தான் எனும் அகங்காரத்தை அறவே விட்டொழித்தல் வேண்டும். எல்லா வித எதிர்மறைக் குணங்களும் ஒருவனின் மோசமான ஊழ்வினைப்பயனை மேலும் மோசமாக்குவதோடு கடவுளிடமிருந்து அவனை வெகுதூரத்திற்கு இட்டுச்செல்லும். மேலும் அவன் கடவுளிடம் தனது உலகாதாய நன்மைக்கு மட்டுமே பிரார்த்தனை செய்வான். அவன் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. இவ்வாறாக அவனது செயல்களே தூய்மையான கடவுளின் அன்பைப் பெற தடையாக உள்ளது. அவனே தனது சுயநல எண்ணங்களாலும், சொற்களாலும், செயல்களாலும் துயரங்களைச் சந்திக்க நேரிடுகிறது. 


மாறாக கடவுளின் அன்பை அரிய பொக்கிஷமாகக் கருதுபவனும், தன்னைத் தானே ஒரு சிறந்த மனிதனாக மாற்றிக்கொள்ள விளைபவனும் கடவுளுக்கு அருகாமையில் வருகிறான். அப்போது கடவுளும்  அவனிடம் அன்பு மற்றும் அறிவு எனும் விளக்கினை ஏற்றி, அவன் உலகியல் வாழ்க்கையில் துயரங்களைச் சந்தித்தாலும், அவன் தன் மீது கடவுளிடமிருந்து பொழியப்படும் அன்பையும் ஆசீர்வாதங்களைப் பற்றி மட்டும் சிந்தித்து நிறைவான வாழ்வு வாழ்கிறான்.

-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

ஆதாரம்: பகவானுடன் உரையாடல் என்ற புத்தகத்திலிருந்து..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக