தலைப்பு

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

விண் அளந்த சாயியின்... கண் அளந்த கச்சித அளவு!

ஸ்ரீ சத்யசாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவரின் விநோத அனுபவம்....

கற்றரிந்தவர் கணக்கு வேறு, முற்றும் உணர்ந்த பகவான் பாபாவின் கணக்கு வேறு. வந்தபின் உணர்வான் மனிதன். அதை வாராமல் முன்பே அறிந்து தடுப்பவர் இறைவன். "வேதா சாஸ்த்ராணி விஞ்ஞானம் ஏதத்சர்வம் ஜனார்த்தனாத்" என்கிறது விஷ்ணு சகஸ்ரநாம பலச்ருதி. 


🌹 சாயி வாக்கு சத்திய வாக்கு:

பர்த்தி கல்லூரி படிப்பு முடிந்தது. நான் பிறகு சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டேன். முன்று மணி நேர கார் ஓட்டத்தில், என் இருப்பிடத்திலிருந்து பர்த்தி செல்ல இயலுமாதலால், பகவானின் திவ்ய க்ஷேத்ரமான புட்டபர்த்திக்கு அடிக்கடி சென்று வரலானேன். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், மதுரை ஸ்ரீசுப்ரமண்ய செட்டியார் அவர்கள், பகவானுக்கு ஒரு தங்கத்தேர் செய்து கொண்டிருப்பதாக செய்தி ஒன்றை கேள்விப்பட்டேன். அந்த தேர் பிரசாந்தி நிலைய மேநாட்டவர் தங்கும் விடுதியின் அருகே, இணைக்கப்பட்டு வந்ததாகவும், ஸ்வாமி அங்கு அடிக்கடி சென்று மேற்பார்வை இட்டு வருவதாகவும் அறிந்தேன். 

இது இவ்வாறு இருக்க, அன்று ஒருநாள் நான் ஸ்வாமியின் தரிசன வரிசையில் அமர்ந்திருந்த வேளை. தரிசனம் கொடுத்து முடித்த ஸ்வாமி ஒருவரையும் நேர்க் காணலுக்கு அழைக்கவில்லை. ஏதோ ஒரு மன உந்துதலால் எழுந்த நான், நேராக தேர் இணைக்கும் பகுதிக்கு விரைந்தேன்.என் மனக்கணக்கு, மெய்யானது. பாபா அங்குதான் தமது தெய்வீக ஒளியுடன் நின்று கொண்டிருந்தார். பகவானுக்கு மிக அருகில் நிற்கும் பாக்கியம் பெற்ற நான், நடப்பவைகளை கவனித்தேன். அமைதியாக அந்த ரதத்தின் கட்டுமானப் பணிகளை தமது தாமரைக் கண்ணால் துல்லியமாக அளந்திட்டார் பகவான். அப்போது அங்கு வந்த தலைமைப் பொறுப்பாளர், "ஸ்வாமி தேரின் திருப்பணிகள், தங்கள் சித்தப்படியே நடந்தேறிக் கொண்டிருக்கின்றனவா" என வினவினார். அந்த தேர் நிறைவுப் பணிகள் அனேகமாக முடிந்து, கம்பீரமாக காட்சியளித்தது.


🌹 குடையின் உயரத்தை... ஒரு அங்குலம் குறை..பாபா

அழகான, இரண்டு மாடி உயரம் கொண்ட அந்த கவின்மிகு தேரை உற்று நோக்கிய பாபா, "தேரின்மேல் பொருத்தப்பட்டிருந்த குடையை கண்காணித்தார். பிறகு பாபா கூறினார் "குடையின் உயரத்தை ஒரு அங்குலம் குறைத்துவிடுங்கள்." இதைக் கேட்ட எனக்குள் ஒரு ஏளனமான எண்ணம் தோன்றியது. இரு மாடிகள் உயரம் கொண்ட தேரின் மீது பொருத்தப் பட்டிருக்கும் குடை.. அதில் ஒரு அங்குலம் குறைக்காவிட்டால் என்ன நடந்துவிடும். இந்த நினைப்புக்காக உடனே நான் ஸ்வாமியிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டேன்.


🌹சாயியின் கணக்கு... அதில் இல்லை பிணக்கு:

ஸ்வாமியின் ஒரு அங்குலக் கணக்கு , அதன் மகத்துவம் இவை அனைத்தும் இதன்பின் நிகழ்ந்த அற்புதத்தால் தெள்ளத் தெளிவாக விளங்கியது.

தங்கத்தேர் பூரண ஜொலிப்புடன் தயாராகி விட்டது. அது ஸ்வாமியின் வைகுண்டமான/ பூலோக கைலாசமான யஜுர் மந்திருக்கு எதிரே நிறுத்தப்பட்டது. ஸ்வாமி அதில் ஏறி அமர்ந்தார். பாக்கியவான்களான சீனியர் மாணவர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் தனது புனித யாத்திரையைத் தொடங்கியது. யஜூர் மந்திரத்திலிருந்து, இந்திய உணவகம் அமைந்துள்ள சாலையில் பயணித்த தங்கரதம், சாயி குல்வந்த் வளாகத்தின் நுழைவு வாயிலுக்கு வந்தது.

 நுழைவு வாயில் முகப்பில் ஒரு சிமண்ட் வளைவை தாண்டிதான் தேர், சாயி குல்வந்த் வளாகத்தில் நுழைய வேண்டும். தேரை இழுத்து வந்த மாணவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. தேரோ மிக உயரமானது, அதன்மீது மேலும் உயரம் சேர்க்க ஒரு குடை. நுழைவு வளைவை இடிக்காமல் , தேர் உள் செல்ல இயலுமா? பகவானே இது என்ன சோதனை..மாணவர்கள் தேரை சிறிது நிறுத்தி, திகைப்புடன் நின்றனர்.

பரம கருணாமுர்த்தி பகவான் பாபா மாணவர்களை உற்று நோக்கி கட்டளை இட்டார். "தரிசன் ஹாலுக்குள் தேரை இழுத்துச் செல்லுங்கள். மாணவர்கள் மட்டுமா, தேரும், ஹாலின் வளைவும் பகவானின் கட்டளைக்கு கட்டுப் பட்டன.தேரும் குடையும் கன கச்சிதமாக எவ்வித உரசலுமின்றி சாயி குல்வந்த் வளாகத்தில் நுழைந்தது. ஒரு அங்குலம்.. உயரம் அதிகமாக இருந்திருந்தால் கண்டிப்பாக தேருக்கோ வளைவுக்கோ சேதாரம் ஏற்பட்டிருக்கும். மிக மிக நுண்ணிய இடைவெளியில் வளைவைக் கடந்த தேரின் குடையின் நுணி , வளைவில் கட்டி இருந்த பூச் சரங்களை வெகு லாவகமாகத் துண்டிக்க, தேவர்கள் பூமாரி பொழிந்து பகவானை வரவேற்றது போல இருந்தது கண்களில் நீர் பெருக்கெடுத்தோட பகவானிடம் என் அறியாமைக்காக மன்னிப்பு கோரினேன். பகவானின் தெய்வீக அறிவாற்றலுக்கு ஒரு மறுப்புமில்லாமல் அடி பணிவதுதான், நாம் செய்யும் தலையாய பணியாகும் என அறிந்தேன். 


🌻 உலகம் என்னும் சாலையில் நம் வாழ்க்கை என்னும் தேர் பயணித்து, பகவானின் தரிசன மண்டபத்தினுள் இடையூறின்றி நுழைய வேண்டுமானால் ஆசைகளின் உச்சத்தைக் குறைக்கவேண்டும் . - இந்தக் கருத்தை மேற்கண்ட சம்பவம் நினைவுறுத்துகிறது எனலாமா? 🌻


மொழிமாற்றம்: கவிஞர் குஞ்சிதபாதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக