தலைப்பு

புதன், 7 ஏப்ரல், 2021

பூக்காரரின் நேர்மைக்குப் பரிசாக பாபா அளித்த தங்கச் சங்கிலி!

ஏராள அற்புதம் நேர்கின்றன.. அதிலும் தாராள சுவாமி அருள் சேர்கின்றன.. சுவாமியின் அற்புதங்கள் எல்லாம் இதயம் மணக்கச் செய்பவை...பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன் என்பார்கள். ஆனால் பூ வைத்தவருக்கு பொன் சங்கிலி சிருஷ்டித்து ஆசீர்வதித்தார் பாபா.


பேராசிரியர் ஜெயராமன் சாயிராம் அவர்களின் பிரசாந்தி நிலைய சத் சங் கூடத்தில் ஆற்றிய உரை.


🌹எளிமையும் நேர்மையும்.. இறைவனை ஈர்க்கும்:

மிட்டா மிராசுகள், ஜொலிக்கும் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் இப்படி மேல் தட்டு மக்கள் பலரும் பாபாவின் கருணைக்காக காத்திருக்கையில், பாபாவின் மனம் வெண்ணை என உருகுவது, தீனர்களையும் திக்கற்றவர்களையும் கண்டுதான். பகட்டான மேல்பூச்சு பக்தியை இனம்கண்டு, புறம் தள்ளும் பாபா, எளிய மக்களின் கள்ளமற்ற இதயபூர்வ பக்தியால் ,மெழுகென உருகி அவர்களுக்கு கருணைமழை பொழிகிறார். இவ்வகையில் ஒரு ஏழை பூக்காரருக்கு, இறைவன் பாபா செய்த இன்னருளை இங்கே காண்போம்.

அது அந்தக் காலம். ஸ்வாமியின் அருகாமையில் ஒருசில பக்தர்களே இருந்தனர். மணம் வீசும் மல்லிகை குணம் அறியாமல், பலரும் விலகி இருந்தனர். அல்ல அல்ல. அவர்கள் அவதாரத்தின் அருகில்வர இயலாமல் அவர்களின் வினைகள் தடுத்தன. பாக்கியசாலிகள் சிலர்மட்டும் பகவானின் பாத சேவையில் ஈடுபட்டு பரமானந்தம் அடைந்தனர்.

ஸ்வாமி அப்போது ஒரு சமயம் சென்னை வந்தார். பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் ஸ்வாமி தரிசனம் தரும் வளாகத்தின் வாயில்கேட் அருகே காத்திருந்தார். ஸ்வாமியின் கார் நெருங்கிவிட்டது, 3 நிமிட நேரத்தில் அங்கு இருப்பார் என்ற செய்தி வந்தது. அப்போது கையில் ஒரு மூங்கில் தட்டில் ரோஜா மலர்களை ஏந்தியபடி ஒரு எளிய பூக்காரர் சாலையைக் கடக்க முற்பட்டார். இதைக்கண்ட ஜெயராமன் அவர்கள் அந்தப் பூக்காரரைத் தடுத்து நிறுத்தினார். அங்கு வரப்போவது யாரென்று தெரியாத அந்த எளிய பூக்காரர், தமது வியாபாரம் கெட்டுவிட்டதாக  தமிழில் கூக்குரல் இடத் தொடங்கினார்.


🌹தரிசன், சம்பாஷன், ஸ்பரிஷன் மற்றும் தங்க செயினும் தந்த தயாநிதி பாபா:

இந்த நேரத்தில் ஸ்வாமியின் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பாபா மந்தஹாஸ வதனத்துடன் பூக்காரரை அருகில் அழைத்தார். தேவர்களும் முனிவர்களும் பகவானின் தரிசனத்திற்காக காத்திருக்க ஒரு தீனனை நாடி பகவான் சென்ற பாங்குதான் என்னே? "பங்காரு! இந்த கூடைப் பூக்களை விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்" கனிவுடன் பாபா கேட்டார். பூக்காரர் கூறினார். "ஐயா 50 ரூபாய்க்கு வாங்கிய  இந்தப் பூக்களை 10 ரூபாய் லாபம் வைத்து , 60 ரூபாய்க்கு விற்பேன்." ஸ்வாமி உடனடியாக அவருக்கு 60 ரூபாய் கொடுக்க, அவர் உடனே பாபாவின் கையைப்பிடித்து 3 ரூபாய்களை அதில் வைத்தார். "ஐயா , நான் ஏற்கெனவே சில ரோஜாக்களை 3 ரூபாய்களுக்கு விற்றுவிட்டேன் ஆகவே அந்த பணம் தங்களை சேர்ந்தது." இந்த நிகழ்வுகளை எதிர்பாராத சேவாதள் தொண்டர்கள் திகைத்து நின்றிருக்க, அந்த கூடை ரோஜாப்பூக்களை  பாபாவின் தலைமேல் "புஷ்பாஞ்சலி" செய்வது போல கவிழ்த்து தூவினார் அந்த பூக்காரர். மனம் நெகிழ்ந்த கருணைக் கடல் பாபா, அப்போதே ஒரு தங்கச் சங்கிலியை சிருஷ்டித்து, பூக்காரரின் கழுத்தில் சூட்டிவிட்டு  நடக்கலானார். திக்பிரமை அடைந்த பூக்காரர் திரு ஜெயராமனிடம் கேட்டார். "இது உண்மையான தங்கத்தால் ஆனதா?" இதைக்கேட்ட பகவான், தன் அழகிய முகத்தைத் திருப்பி "ஆமாம். இது சொக்கத் தங்கத்திலான செயின்தான்." என்று கூறி முறுவலித்தார்.

🌻 வறுமையான வாழ்க்கையிலும்  நேர்மையை கடைபிடித்தார் அந்த எளிய பூக்காரர். நாமும் பகவானின் கருணையை  அடைய , இம்மாதிரி நற்குணங்களளைக் கடைபிடிக்க வேண்டும் என பாபா நமக்கு போதிக்கும் ஒரு பாடம்தான் இந்த நிகழ்வு. Love All Serve All என்பதின் விளக்கமும் இதுவே. 🌻

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக