தலைப்பு

திங்கள், 19 ஏப்ரல், 2021

காற்றை விடவும் பரந்தது கடவுள் சாயி பாதம்!


"என் பாதங்கள் உங்களுக்கு மிக அருகாமையில் நீங்கள் எளிதில் அடையும் வகையில் எப்போதும் உள்ளது." 

-இறைவன் ஸ்ரீ சத்ய சாயி

சூரியன் உதிக்கும் போது ஏரியில் உள்ள தாமரை மொட்டுக்கள் அனைத்தும் நறுமணம் வீசி மலர்வதில்லை.  எவையெல்லாம் முழு வளர்ச்சி பெற்று மலர்வதற்கு தயாராக உள்ளதோ, அவை மட்டுமே மலர்கிறது. ஏனைய மொட்டுக்கள், தாங்கள் மலர்வதற்க்கான நேரம் வரும் வரையில் பொறுமையாகக் காத்திருக்க தான் வேண்டும். அவ்வண்ணமே இறைவனது கருணையைப் பெறுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருந்தாலும், ஆன்மீக ஒழுக்கத்தினால் மட்டுமே அதை அடைய முடியும்.



வெறுப்பு மற்றும் கோபம் போன்ற கலவைகள் என்னிடம் கிடையாது.  அன்பு ஒன்றே என் உயிர் மூச்சு.   நான் "இரக்கம்" என்ற ஸ்வபாவத்தின் களஞ்சியம்.  என்னுடைய  இயல்பை சரியாக புரிந்து கொள்ளுங்கள்.

நிலவின் ஒளியில் ஒரு ஏரியை கவனித்துப் பார்த்தால், அதன் அடிப்பகுதியில் அலைகளினால் ஏற்படும் அசைவும், சலனமும் ஏரியின் நீரிலே இருக்கும். அப்படியே மேலே நிமிர்ந்து பார்த்தால், நிலவு சலனமற்று இருக்கும்.   அதைப்போலவே,  நான் எப்போதும் சமநிலையில் இருக்கிறேன். என்னுடைய கருணை எல்லோருக்கும் எப்போதும் பொதுவானது. வெளிப்பார்வைக்கு என்னுடைய செய்கைகள் எல்லாம் அற்புதங்களாகவும், மாயாஜால வித்தைகளாகவும் உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால், உள்முகமாகப் பார்த்தால் அவை அனைத்தும் என்னுடைய தெய்வீக நாடகத்தின் லீலைகள்.



நல்லது... உருவாக்கும் கரமே கொடுக்கவும் செய்கிறது. அதற்கு  எதையும் தன்னிடமே வைத்துக் கொள்ளத் தெரியாது. எப்போதும் இவை அனைத்தும் உங்களுடையது... உங்களுக்கு மாத்திரமே உரியது.  இது என் சத்தியவாக்கு. இதை உணர்ந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் வந்த நோக்கத்திற்கான வேலை ஆரம்பமாகி விட்டது.  இதற்கு தேவையான உபகரணங்களாகிய கற்கள், மண், கம்பிகள் மற்றும் செங்கல் இவற்றை சேகரித்து விட்டேன். அஸ்திவாரத்திற்கான அகழிகள் தோண்டப்பட்டு விட்டது. அதன் மேல் கட்டிடம் மிக விரைவில் எழுப்பப்படும். இதற்கு எந்தவித குறுக்கீடும் இருக்க முடியாது.

வெகுவிரைவில் ஆயிரக்கணக்கான மக்கள் இச்சாலையின் வழியே நடந்து செல்வதைக் காண்பீர்கள். அருகிலுள்ள குன்றில் இருக்கும் ஒவ்வொரு பாறையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் அமர்ந்திருப்பர். ப்ரசாந்தி நிலையத்தில் இருக்கும் பக்தர்கள் கடந்த மூன்று மாதங்களாக தாங்கள் பெரிதும் விரும்பி மதிக்கும் பாத நமஸ்காரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறார்கள்.  அத்தகைய பக்தர்கள், தூரதேசத்திலிருந்து வந்து சில நாட்கள் தங்கி விட்டு செல்பவர்கள் மாத்திரமே அதிர்ஷ்டசாலிகள் என நினைக்கிறார்கள். இத்தகைய எண்ணங்களினால் பக்தர்கள் ஏமாறுகிறார்கள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.


எதற்காக என் பாதங்களைத் தொட முடியவில்லையே என்று வருத்தப்பட வேண்டும்??

என் பாதங்கள் உங்களுக்கு மிக அருகாமையில் எளிதில் தொடும் வகையில் தான் எப்போதும் உள்ளது.

"கரங்களும் பாதங்களும் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளது (ஸர்வதாஹ் பாணி பாதஹா)". வேதனையில் நீங்கள் அழும் போது உங்கள் கதறல்களை நான் கேட்பதில்லையா? என் காதுகள் எப்போதும் நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருக்கிறது.  ஆழ்மனதில் இருந்து நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளை செவிமடுத்து உங்கள் துயரத்தை நான் துடைப்பதில்லையா. என் கண்கள் இருப்பது உங்கள் மீது கருணையைப் பொழிவதற்காகவே. *தயவுசெய்து நீங்கள் மாயையிலிருந்து வெளிவந்து அன்பிலே மூழ்குங்கள். அப்போது  தான் என் அன்பை நீங்கள் பெற முடியும்.

ஸமஸ்த லோகா சுகினோ பவந்து🙌

Sathyasai speaks Volume 2 Chapter 18.

தமிழாக்கம்:- R  வரலட்சுமி,  குரோம்பேட்டை, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக