தலைப்பு

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

விஞ்ஞானமே சிலிர்க்கும் அளவிற்கு சாயி அற்புதம் காணும் அமெரிக்க தம்பதிகள்!

சாயி தம்பதிகள் ஜெயந்தி - டாக்டர் மோகன் அவர்களின் பேரனுபவங்கள்... 

கணவன் மனைவி இருவரும் சத்யசாயியின் ஆத்மார்த்த பக்தராக ஒருமித்து இணைந்து வழிபட்டால் எத்தகைய சாயி லீலா விநோதங்களை அனுபவிப்பர் என்பதற்கு இந்தப் பதிவு ஓர் பெரும் சான்று..

டாக்டர் மோகன் மற்றும் ஜெயந்தி மோகன் அவர்களை தெரியாத அமெரிக்க சாயி வட்டங்கள் எதுவும் இல்லை. இருவரும் உருவத்தால் வேறானவர்களே தவிர இதயத்தால் ஒன்றானவர்கள். அந்த இதயத்தில் குடியிருப்பது ஸ்ரீ சத்யசாயி ஒருவரே! சுவாமி அதில் குடியிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் இருப்பது இருவரின் சிறந்த குணநலன்கள்.

டாக்டர் மோகன் ஒரு விஞ்ஞானி. கால்நடை விஞ்ஞானம் கற்று தற்போது புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தியிருப்பவர். இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் அகந்தை உள்ளவரும் அன்பாகி, பக்குவமாகி சுவாமி மேல் பக்தி உள்ளவராகி விடுவர். 

1977 ல் ஒரு ரயில் பயணத்தில் டாக்டர் மோகன் அவர்கள் சுவாமியை குறித்து ஒரு சகபயணி இன்னொருவரிடம் பேசுவதை செவி சாய்க்கிறார். சத்யசாயி மாபெரும் அவதாரம் என்றும் விபூதி பொழிவால் நோய்களை தீர்ப்பவர் என்று கேள்விப்பட்டு  பூரிப்பாகிறார். காலம் உருள்கிறது. கல்லூரி விடுதி காலத்திலேயே சக மாணவருக்கு உதவுவதை (படிப்பு உதவி.. தீய பழக்கத்திலிருந்து மாணவரை வெளியே கொண்டு வருதல் என) கடமையாக கொண்டிருக்கிறார்.‌ அவை தான் சாயி சேவை என்பதை அறியாமலேயே செய்து வருகிறார். 

பூரண கும்பத்தில் தேங்காய் வைப்பது போல் மங்கலகரமாக ஜெயந்தி அவர்களை மணம் முடித்து இரு குழந்தைகள் பெற்று வாழ்க்கை செல்ல .. பணி நிமித்தமாக கனடாவில் உள்ள வான்கூவர் வருகையில் பிள்ளைகளை பாரத கலாச்சாரத்தோடு வளர்க்க கோவிலை தேடுகிறார். அது 1991.   

அந்நிய தேசம் சென்றும் புண்ணிய பண்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்த இவரின் சாயி அடைக்கலம் மிக சிறப்பானது.

1997ல் முதல் பர்த்தி தரிசனம். சுவாமி அருகே உள்ளவர்க்கு விபூதி சிருஷ்டிக்க ஆச்சர்யப்படுகிறார்.

விஞ்ஞானியாக இருக்கும் நீங்கள் இந்த தெய்வச் செய்கையை சந்தேகப்படவில்லையா? என அடியேன் கேட்க.. விஞ்ஞானம் என்பது மெய்ஞானத்தின் சிறு பகுதியே.. சுவாமியின் தரிசன அதிர்வலைகள் சத்தியமாய் அவர் இறைவனே என்பதை உணர வைத்தது என்கிறார். நெஞ்சில் பிறர் குறிக்க வேண்டிய நீதி வாசகம் இவை.

பிறகு தம்பதிகள் இணைந்து கொடைக்கானல் சுவாமி தரிசனம் என இந்தியா வரும்போதெல்லாம் இறைவனை தரிசனம் செய்கின்றனர்.

அமெரிக்கா - மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அவர்களின் இல்லம்

1996ல் பணி நிமித்தமாக அமெரிக்கா வந்து கொலம்பியா - மிசோரி மாகாணத்தில் வாழ ஆரம்பிக்கிறார்... அவர் சங்கமித்த இடம் சாயி சென்டர்.  இவரின் குழந்தைகள் பாலவிகாஸ் குழந்தைகளாகிறார்கள்...

பின்னர் மிச்சிகன் மாகாணத்திற்கு மாறுகிறார்கள். பிறகு 2002'ல் சுவாமியின் அருளில் அங்கே புது வீடு வாங்கி சுவாமியின் அவதாரத் திருநாளில் கிரகப்பிரவேசம் செய்கிறார்கள். அந்த வீடே சுவாமி அற்புதங்களோடு கூடிய மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அவர்கள் இருவருடைய  வாழ்க்கையிலும் புதிய திருப்பமாக.. அவர்களின் பல கேள்விகளுக்கான பதிலாக அந்த அற்புதமான வீடே இன்றளவும் அமைகிறது.  

கனடா கோவிலில் தொடங்கி அமெரிக்காவில் சாயி சென்டரில் பல சாயி சேவைகள். பஜனை நிம்மதியும்.. சத்சங்க பேரானந்தமும் அள்ளிப் பருகுகிறார்.


இவரது மனைவியான திருமதி ஜெயந்தி மோகன் அவர்களின் அனுபவம் எழுத ஆரம்பித்தால் அதற்காகவே தனி பிளாக் நடத்த வேண்டும்.. பெரிய புத்தகமும் வெளியிட வேண்டும்..

அவர்களுக்கும் கொலம்பியா, மிசோரி சாயி சென்டரில் ஆரம்பித்த சாயி பிரேமை ‌.. ஒரு பெண்மணி சுவாமி படமும்... N.கஸ்தூரி எழுதிய Loving God புத்தகமும் வழங்குகிறார். திருமண நாளில் "சுவாமி எங்களை ஆசீர்வதி" என கண்களை மூடி அந்தப் புத்தகத்தை திருப்பி கண்களை திறக்கிறார்..

"இளம் தம்பதியினரை சுவாமி மங்கல அட்சதையால் ஆசீர்வதித்தார்" என்ற‌ வாசகத்தை வாசிக்கிறார். மெய் மறந்து கண் கலங்குகிறார். 

சுவாமியால் எந்த வழியாகவும் தன் பக்தர்களோடு தொடர்பில் வர முடியும்.. அதற்கு முதலில் தேவை நமக்கு சந்தேகமற்ற தூய பக்தி மட்டுமே...

ஒருமுறை அவர்கள் தங்கி இருந்த கொலம்பியா மிசோரி வீட்டின் வெளியே ஒரு மரம் பெரும் சப்தத்தோடு சரிய ஆரம்பிக்கிறது சாயி ராம் என அலறுகிறார் ஜெயந்தி அம்மையார். காரணம் அதற்கு கீழே தான் இவர்களின் புத்தம் புது கார் , சுவாமியின் ஆசியோடு நிழலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஓடிச் சென்று பார்க்கையில் சரியாக ஒரு சென்டிமீட்டர் இடைவெளியில் மரம் காரின் மேல் சரியாமல் பக்கவாட்டில் நிற்கிறது.  ஒரு இலை கூட காரில் விழவில்லை..இயற்பியல் படி மரம் காரின் மேல் தான் விழுந்திருக்க வேண்டும். அத்தனை கனமான மரம் பக்கவாட்டில் விழ வாய்ப்பே இல்லை... ஆனால் சுவாமியின் கட்டுப்பாட்டில் இல்லாதது எதுவுமில்லை என்பது இந்த அற்புத அனுபவம் மூலம் புரிகிறது.

வீட்டின் பொருளாதார பிரச்சனைக்காக பணிக்கு செல்கிறார் ஜெயந்தி அம்மையார். இரவில் பணி.. அதிகாலை காரை வேகமாக ஓட்டி வர அப்படியே தூங்கிப் போய்விடுகிறார்.. பிறகு சுவாமியே இவருக்கு டிரைவராகி காரின் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்.. கண் விழிக்கிறார் ஜெயந்தி. அதிர்கிறார். வேகமாக காரை செலுத்திய பிறகே பிற வண்டிகள் எல்லாம் இவரின் காரை கடந்து சென்றிருக்கிறது.. சுவாமி ஆபத்பாந்தவன் என்பது பக்தருக்கு பக்தர் சத்தியமான அன்றாட அனுபவம்.

ஜெயந்தி அம்மையார் பிறருக்காக உருகுவார். பிறருக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் அழுவார். பிறர் கழிப்பறையை முகம் சுழிக்காமல் சுத்தம் செய்யும் சேவையை மிகுந்த மகிழ்ச்சியோடு செய்வார். இந்த தூய்மையான கோபிகா பக்திக்கே சுவாமி இவர் இதயத்திற்குள் நிரந்தரமாக தங்கி விடுகிறார்.

ஒரு முறை தோழிக்கு உடல்நிலை சரி இல்லை என இவரே அவருக்கும் சமைக்கிறார். 

கணவனுக்கே சோறுபோடாத இன்றைய மனைவிமார் காலத்தில் இவரின் இதயம் எல்லாம் ஆச்சர்யம். 10 லிட்டர் குக்கரில் வெஜிடபிள் பிரியாணி. சாயி பஜனைக்கு நேரமாகிறது என அவசரமாய் கிளம்புவதில் குக்கரை அணைக்க மறந்து போகிறார்.  சாயி சென்டருக்கு சென்ற பிறகே நினைவு வருகிறது. அதைக் கேட்டவர்கள் தாங்கள் சென்று அணைத்து விட்டு வருகிறோம் என்கின்றனர். 

ஜெயந்தி அம்மையாரோ சுவாமி பார்த்து கொள்வார் என்றும்... சுவாமி எனக்கு நெஞ்சில் உணர்த்தி விட்டால் அப்படியே விட்டு விடலாம் என்கிறார். அதைக் கேட்டு புதிராகிறார்கள் அவர்கள். 

இவரின் உத்தமமான பக்தி அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

பஜனையில் அமர்ந்து சுவாமியிடம் வேண்டுகிறார் "சுவாமி நீ தான் அதை கவனிக்க வேண்டும்.. நீ பார்த்துக் கொள்வாய் என்பதை பஜனையிலேயே உணர்த்து" என வேண்டிக் கண்டதும்... இரண்டு பஜனை பாடல்கள் மகிழ்ச்சி தந்தாலும்.. மூன்றாவது முறையாக சுவாமியிடம் "நீீங்கள் வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும். நான் இங்கு உங்கள் பஜனையில் மூழ்க வேண்டும்" எனக்கேட்க... உடனே... 

"We are Blessed... Sai Baba is watching over us.. We are here to sing your sweet name" என்ற பஜனை பாடல் ஒருவர் பாட..

கண் கலங்கி சமாதானம் அடைகிறார் ஜெயந்தி. ஆனால் பிற பக்தர்களுக்கோ பதட்டம் ஏனெனில் அது புத்தம் புதிய வீடு. 

ஏழு மணி நேரம் கழித்து தனது இல்லம் செல்கிறார்.

குக்கர் அணைக்கப்பட வில்லை.. ஆனால் எந்த அசம்பாவிதமும் ஆகவில்லை.. குக்கர் வெடிக்கவோ .. வெஜிடபிள் பிரியாணி சிதறவோ இல்லை.. ஆச்சர்யப்படுகிறார் ஜெயந்தி. ஒருவேளை குக்கரிலேயே சாதம் கறுகி இருக்குமோ என நினைத்து திறக்கிறார்.. ஒரு பருக்கை கூட கறுகி இருக்கவில்லை. 

யோசித்துப் பாருங்கள் ... எரியும் அடுப்பிலேயே 7 மணிநேரம் rice குக்கரை விட்டால் என்ன ஆகும்?

சமைலறையே நாசமாகி விடும். ஆனால் இவரின் சரணாகதி பக்திக்கு சுவாமி அளித்த அருட் காவல் இந்த பேரற்புதம்!!

அன்றைய வெஜிடபிள் பிரியாணி போல நான் என்றைக்கும் சுவையாக சாப்பிட்டதே இல்லை என்கிறார் ஜெயந்தி. அது சுவாமியே சமைத்தது என்றபடியால் அது அமுத சுவையானதில் ஆச்சர்யமில்லை..

பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இறைவன் சத்ய சாயி பஞ்சபூதமான நெருப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை..

ஜெயந்தி மோகன் அவர்களின் அனுபவ விஸ்வரூபம் மிக மிக நீளமும்... ஆழமும் என்பதால் அடுத்த பாகத்தில் சந்திப்போம். 



விஞ்ஞானி மோகன் அவர்கள் சுவாமியே கடவுள் என்றும்.. நன்மை (goodness) என்றும் அன்றாட வாழ்வில் உணர்ந்து வருகிறார். நன்மை என்பது இன்ப துன்பம் கடந்தது எனவும் உணர்த்துகிறார். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் நேரங்கள் பகவத் கீதை வகுப்புகளாகவே அடியேனுக்கு அமைகின்றன... வேலை இழந்த தருணங்களிலும் அவரின் மனசமம்பாடு ஆச்சர்யத்திற்கு உரியது. "எந்த வேதனை வந்தாலும்.. பிரச்சனை வந்தாலும் தன்னால் அதை எளிதாக கடந்து விட முடியும்..காரணம்- என்னோடு சுவாமி இருக்கிறார்" என்கிறார் மோகன். இது தான் அவர் ஒருவரியில் சொல்லும் சுவாமி அனுபவம். 

அறிவதால் வருவது அறிவு.. உணர்வதால் வருவது பக்குவம். அந்தப் பக்குவத்தில் மனித சமூகத்திற்கு சேவை ஆற்றுவதில் முதன் நோக்காக இருக்கிறார் விஞ்ஞானி மோகன். கொஞ்சம் நேரம் ... நிறைய கருணை இருந்தால் போதும் மனித சமுதாயத்திற்கு சுவாமி சேவையை ஆற்றி வரலாம் என கண்களில் ஒளியோடு.. உதட்டில் புன்னகையோடு பேசுகிறார்.

ஜெயந்தி அம்மையாரின் பக்தி அந்நியோன்யமானது.. மிகவும் பரிசுத்தம் வாய்ந்தது.. கள்ளம் கபடமில்லா பிரேமையில் உயர்ந்தது. அவரிடம் சுவாமி ஆரம்பத்தில் தொடர்பு கொண்டதெல்லாம் புத்தகம் வாயிலாகவே.. ஆழமாகவே பிரார்த்தனை செய்து கண்களை மூடி"சுவாமி நீ பதில் சொல்ல வேண்டும்" என மிக உறுதியோடு சுவாமி புத்தகத்தைப் பிரிக்கும் போது அவர்கள் பெற்ற பதில்கள் சிலிர்க்க வைப்பவை...

(Disclaimer : நாமும் கண்களை மூடி  புத்தகம் பிரித்து சுவாமி பதில் சொல்கிறாரா? என பரிசோதனை செய்யலாம் என ஆரம்பித்தால் அபத்தமே ஏற்படும். இவர்களைப் போல் தூய பக்தியோடு அணுகினால் சுவாமி நிச்சயம் பதில் அளிப்பார்)

ஒருமுறை சாலையில் இருவரும் காரில் செல்ல.. ஜெயந்தி அவர்கள் காரை செலுத்த.. அந்த சாலையில் வேக விதிப்பாடு இருக்க ( 25 மைல் வேகத்திற்குள்).. அதை மீறி இவர்களின் எதிர்ப்புறதில் இருந்து ஒரு மெட்டாடோர் வேன் அதி வேகமாக வருகிறது. அந்த வேகத்தால் கவனம் திசை திரும்ப அந்த வேனையே உற்று நோக்குகிறார்கள். அந்த வேனுக்குள்ளே சுவாமியை தரிசித்து சிலிர்க்கிறார்கள். சுவாமியின் காவி உடை.. கருங்கேசம்... என எல்லாமே தெளிவாக இருவருக்கும் தெரிகிறது.. "ஜெயந்தி நீ பார்த்தியா?" என மோகன் அவர்களும்.. அவரை பார்த்து ஜெயந்தியும் ஒருவருக்கு ஒருவர் பேசி பரவசப்படுகிறார்கள். 

சுவாமியும் இருவரை பார்த்தவாறே வேகமாக அந்த வேனில் விரைந்து செல்கிறார். 

ஒருவரின் மனைவி தன் கணவர் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டி ஜெயந்தி அம்மையாரிடம் 500 டாலர் கேட்கிறார். இணையர் இருவரும் தன்னிடமுள்ள 6000 டாலரில் 5000 டாலர் தருகிறார்கள். எப்பேர்ப்பட்ட மனம்..

500 டாலருக்கு 5000 டாலர் கிடைத்த ஆச்சர்யத்தில் அந்த தம்பதிகள் ஆனந்தத்தில் அழுகிறார்கள்.

எச்சில் கையால் காகம் ஓட்டாத சமுதாயத்தில் தன் தசையையே கிழித்து பருந்துக்கு தந்த சிபி சக்கரவர்த்தியாய் இந்த சாயி தம்பதிகளின் மனம் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

சிறு வயதில் தாயிழந்த ஜெயந்தி அம்மையார் தனது பாட்டியிடமே வளர்கிறார். 87 வயது பாட்டியை அமெரிக்கா அழைத்துவர திட்டமிடுகிறார். சுவாமியும் புத்தகம் வழி ஒப்புதல் தர.. 10,000 டாலர் தேவைப்படுகிறது... முன்பின் தெரியாத / முகமும் காணாத ஒரு வெளிநாட்டு பெண்மணியிடம் தொலைபேசியில் பேசுகையில் இதை தெரிவிக்க... தான் தருவதாக ஒப்புக் கொண்டு செக்கும் அனுப்பி.. பாட்டியை நன்றாக கவனிக்கும் படி எழுதியும்.. இன்ன தேதியில் பணம் திருப்பித்தர வேண்டும் என்று ஒரு வரி கூட நிபந்தனையாக எழுதாமல் .. அதைப் பற்றியே குறிப்பிடாமல் மிகவும் அன்போடு தருகிறார். 

இந்த சம்பவத்தை குறித்து வட்டிக்கு பணம் தருபவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும். உண்மையான சந்தோஷம் பணத்தில் இல்லை அது சுவாமியிடம் சரணாகதி அடைவதிலேயே இருக்கிறது.



முன்பு 500 க்கு 5000 டாலர் தந்த நல்வினை.. அவர்களுக்கு 10,000 டாலராக கிடைக்கிறது. சுவாமி பாத்திரம் அறிந்தே யாசகம் தருபவர். ஜெயந்தி அம்மையாருக்கு தனது புத்தகத்திலிருந்தே சூழ்நிலைக்கு அப்படியே பொருத்தமான மிகச் சரியான வாசகமும் தந்திருக்கிறார்.

87 வயது பாட்டியை அமெரிக்காவுக்கு அழைத்துப் போக இருந்த ஜெயந்தி அவர்கள். இந்தியாவிலிருந்து மலேஷியா இறங்கி.. அங்கே உள்ள விடுதியில் தங்கி... கழிப்பறைக்கு பாட்டியை அழைத்துச் செல்லும் போது.. வெளிநாட்டு கழிப்பறையை பயன்படுத்த தெரியாமல் பாட்டி  பின்னால் சரிய.. பின்மண்டையில் பலத்த அடிபட... மயங்குகிறார்கள். ஜெயந்தி அதிர.. சுவாமியை பிரார்த்திக்க.. விமானத்திற்கு செல்ல வேண்டிய பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் எந்த விதமான அபாயமும் இல்லாமல் தூக்கத்திலிருந்து எழுவதாய் கண் திறக்கிறார் பாட்டி.. ஜெயந்தியை பாட்டி சமாதானப்படுத்த தனக்கெதுவுமே ஆகவில்லை என சொல்ல.. சுவாமியின் அற்புதம் உணர்ந்து வியந்து போகிறார் ஜெயந்தி.

தனது பாட்டி கண்ணாயம்மாளுடன் ஜெயந்தி 

அந்தப் பாட்டிக்கு அமெரிக்க வந்தபிறகு 1991 ஆம் ஆண்டு இதயவலி ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். "சாயிராம்" என்ற வார்த்தையை உச்சரித்தபடியே ஜெயந்தி அவர்கள் பதட்டமாய் இருக்கிறார்கள். ICU எடுத்து சென்ற சிலமணி நேரத்தில் உயிர் பிரிகிறது.. ஆனால் மருத்துவர்களும்.. செவிலிகளும் வியக்கும் வண்ணம் 45 நிமிடம் கடந்தபின் இறந்த உடம்புக்கு உயிர் வருகிறது. இதை மருத்துவரே ஆச்சர்யமாய் இருவரிடமும் பகிர்ந்து கொள்கிறார்.

பாட்டி கண்ணாயம்மாள்

சில நாட்கள் கடந்து மிஷிகன் வீட்டில் பாட்டிக்கு உடல்நிலை மீண்டும் சரியில்லாமல் போக மருத்துவமனையில் இரண்டாம் முறை இதயவலி நேர்ந்ததற்கு நவீன மருத்துவ சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட மருந்தின் ஒவ்வாமையால் காலில் புண் ஏற்பட்டு.. ரணமாகி... மருத்துவர் அந்த வலது காலை எடுத்துவிடும் படியும் இல்லை எனில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட.. கதிகலங்கிப் போன மோகன் தம்பதிகள் "சாயிராம்" என்ற சரணாகத நாமத்தையே உச்சரித்தபடி இருக்கிறார்கள்.

பாட்டிக்காக வீட்டில் சுவாமிக்கு பாத பூஜையும் ஏற்பாடாக.. சிறிய டேபிளில் சிறு சிறு விபூதி குன்று ஏற்பட.. ரத்தமும் சதையுமாக சுவாமியின் வலது கால் நிற்பதாய் தோன்ற... விபூதி மணம் பரவ... சுவாமி நிச்சயம் காப்பாற்றுவார் என நம்பிக்கை பிறக்க... பல பக்தர்கள் அதையும் பார்த்து பரவசமடைகிறார்கள். (இதுவே அவரின் வீட்டில் நிகழ்ந்த முதல் விபூதி அனுபவம்) 

காலை முற்றிலும் எடுக்க அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நாள்.. திக் திக் என இதயம் ஜெயந்தி அவர்களுக்கு படபடப்பாக இருக்க...

டாக்டர் (ரத்தநாள சிகிச்சை நிபுணர்) கையெழுத்து வாங்குகையில் கதறிக் கொண்டே ஜெயந்தி அவர்கள் கையெழுத்திட... அந்த டாக்டர் பாட்டியின் கால்களின் துணியைப் பிரிக்க... பதினைந்தே நிமிடத்தில் நர்ஸ் ஓ என்று அலறுகிறார். என்ன சப்தம் என மோகன் தம்பதிகள் அதை கவனிக்க..

அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய அந்த அழுகிய காலை பிரித்துப் பார்க்கையில் அதில் எந்தவிதமான ரணமும் இல்லை என்பதால் நர்ஸ் ஆச்சர்யப்பட்டு சத்தமிட்டிருக்கிறார்.

பெரிய அற்புதம்.. இதைப் போல் எங்கேயும் நிகழ்ந்ததில்லை என பிரம்மிக்கிறார்கள் டாக்டரும்... செவிலிகளும்...

சுவாமியின் அதி அற்புத மகிமையில் உறைந்து போய்விடுகிறார்கள் மோகன் தம்பதிகள்...

பிறகு  ஐந்து வருடம் பாட்டி சுவாமியின் கருணையால் ஆரோக்கியமாக வாழ்ந்து.. 2004ல் பர்த்தியில் சுவாமியின் பல தரிசனங்கள்  ஏற்பட்டு... 2008ல் அவரின் திருவடியில் சேர்ந்துவிடுகிறார்.

விஞ்ஞானி மோகன் -- ஜெயந்தி அவர்களின் மிச்சிகன்  வீட்டில் நிகழாத அற்புதங்களே இல்லை. விபூதி பொழிதல் என்றால் சாதாரண பொழிவல்ல... ஃபிரேம் செய்யாத படத்திலும் விபூதி மழை. சிறு பாக்கெட் சைஸ் படத்திலும்... கதவுகளில் ஒட்டி வைத்த படத்திலும் என... அது சாயி இல்லமாக உருவாகிறது அமெரிக்கர்களுக்கு...! விபூதி, குங்குமம், மஞ்சள் என ஏராள மகிமைகள் நிரம்பி வழிகிறது. கட்டிலின் அடியில் போட்டு வைத்த பழைய சுவாமி காலண்டரில் கூட விபூதி மழை. அந்த வீடே இன்றளவும் கோவிலாக அருள் பாலிக்கிறது.

இவர்களின் எந்த அனுபவத்தை எழுதுவது என நினைக்கும் போது  திகைத்துப் போகிறேன்.. பூக்களில்லா தோட்டத்தில் சுற்றி வரும் வண்டு சற்றென பாரிஜாத பூ கீழே விழ அதன் தேன் சுவையில் ஆச்சர்யப்பட்டு தள்ளாட்டம் காண்கிறபடி மாறுகிறது அடியேன் மனம்.

ஜெயந்தி அம்மையார் தனது அனுபவத்தில் பலவற்றை Souljourns / Parthi Updates என யூடியூப் சேனலிலும் பதிவு செய்திருக்கிறார். அதை கேட்க ஆரம்பித்தால் விடிய விடிய கேட்கலாம்.அவ்வளவு சிறப்பம்சமும்.. பார்ப்பவர்களுக்கு பரவசமும் காத்திருக்கிறது.

இவர்களின் கனவு அனுபவமே பல.. "சுவாமி!... கனவில் வா" என அழைத்தால் அந்த இரவே சுவாமி அபய அஸ்தத்தோடு காட்சியளிப்பார். இத்தகைய கனவுகள் எல்லாம் ஜெயந்தி அம்மையாருக்கு சகஜம்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் கண்ணனை போல் சத்யசாயி கண்ணன் ஜெயந்திக்கு...

சுவாமி கனவில் தமிழிலும் பேசி இருக்கிறார். பலமுறை பாத நமஸ்காரம்...இருவருக்கும் ஒரே இரவில் தனித்தனியாக ஒரேவிதமான கனவுகளும் (கவலைப்படாதே ... பாத நமஸ்காரம் எடுத்துக்கோ என்ற கனவு உட்பட) அரங்கேறி இருக்கின்றன... புராணத்தில் வாசித்ததெல்லாம் சத்தியம் என இவர்களின் அனுபவங்களே நமக்கு சாட்சியமாகின்றன...

ஒருமுறை கனவில் தோன்றி சுவாமி புட்டபர்த்தி அழைக்கிறார். ஜெயந்தியும் தனியே கிளம்புகிறார்.

குல்வந்த் ஹாலில் அமர்கிறார் ஒரு கூட்டத்தோடு... Zone coordinators வரிசை என தெரியாமல் சுவாமியை அருகே தரிசனம் செய்ய சரியான இடம் என அமர்கிறார். அந்த குரூப் பெண் லீடர் யாரோ ஒருவர் மட்டும் இந்த கூட்டத்தில் அந்நியர் என சொல்ல.. "அய்யோ சுவாமி.. அது நான் தான் என இப்போது புரிந்து கொண்டேன்.. தயவு செய்து யாரும் எழுப்பாமல்.. நீங்கள்தான் என்னை உங்கள் அருகே தரிசிக்க வைக்க வேண்டும்.. பிறர் கண்களில் படாமல் என்னை மறையச் செய்து விடுங்கள்!" என சுவாமியிடம் மன்றாட ஜெயந்தி அம்மையாரை யாரும் எழுப்பவே இல்லை..அவரை அந்த மானசீக பிரார்த்தனைக்குப் பிறகு சுற்றி இருந்த எவரும் கண்டு கொள்ளவே இல்லை...

சுவாமி வருகிறார். அவரின் ஒளியில் மூழ்குகிறார் ஜெயந்தி... சுவாமியின் கண்களும் பரம பக்தையின் கண்களும் சங்கமித்துக் கொள்கின்றன... மனதில் உள்ள பிரார்த்தனையும்.. அதில் ஏராளமான பிரார்த்தனைகள் பிறருக்காக மட்டுமே.. இது தான் ஜெயந்தி அம்மையார்! தனக்காக அவர் எதையுமே கேட்பதில்லை.. சுவாமி நீ மட்டும் போதுமென்பார். சரியாக எல்லா வித வேண்டுதல்களும் முடிய‌... "அவ்வளவுதான் சுவாமி.. வேண்டிக்க ஒண்ணுமே இல்ல" என இவரின் மனதின் வார்த்தைகள் நிற்க..அந்த நொடி...அதே நொடி.. சுவாமியின் நாற்காலி நகர்கிறது..

அமெரிக்க பேபி தக்காளி போல் சுவாமியின் கட்டை விரல்களையும்.. அமெரிக்க பேபி Carrotகளாக இருக்கும் பாத விரல்களையும் கண்களால் உண்டு பரவசப் பசியாற்றுகிறார் ஜெயந்தி அம்மையார்.

சுவாமி இதயவாசி... அவரே பரப்பிரம்மம். அவர் அறியாதது ஏதுமில்லை. அவரின் கட்டுப்பாட்டில் இல்லாதது எதுவுமில்லை. பிறரின் அனுபவங்களை வாசிக்கையில் நாமும் இத்தகைய பக்தியை அடைந்து சுவாமியை அனுபவிக்க வேண்டும் என்று தான் தோன்ற வேண்டுமே தவிர அகந்தையில் சந்தேகப்படுவது நம் கண்களையும்...ஆன்ம முன்னேற்றத்தையும் கட்டிப்போட்டுவிடும்!

ஜெயந்தி அம்மையாரின் விஸ்வரூப சுவாமி அனுபவங்கள் அடுத்த பாகத்தில் நிறையும்.. பரவசங்கள் பல... அவரின் தொடரும் தூய பக்தியாய் தொடர்கிறது அனுபவங்கள்..






விஞ்ஞானி மோகன் அவர்களுக்கும் சுவாமி தனது அனுக்கிரகத்தை பல கனவுகள் வழி வழங்கி இருக்கிறார். ஒரு முறை கனவில் மோகன் அவர்கள் சோர்வாக நடக்கிறார்.. மழை லேசாக தூறுகிறது... மங்கிய மாலை நேரம்... எதிர் திசையில் சுவாமி ஆறடி உயரமாய் தோன்றி.. உயரத்தில் ஷிர்டி சாயியாகவும்.. தோற்றத்தில் சத்யசாயியாகவும் காட்சி தந்து கை அசைத்து அருகே அழைத்திருக்கிறார்... இவரும் சோர்ந்த படி நடக்க..

அன்போடு சுவாமி இவரின் தோளில் கை வைத்து "நான் இருக்கேன் உனக்கு.. ஒண்ணும் கவலை இல்ல... No need to worry" என்று அக்கறையோடு சொல்லி.. மோகன் அவர்களின் தோளைப் பற்றியபடி நெடுந்தூரம் நடந்திருக்கிறார்.. இதை அவர் பகிரும் போது சுவாமி சொன்னது தன்னை நம்பும் பக்தர்களுக்கான சாசன வாசகமாக தோன்றியது..

மோகன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தால் இவர் உண்மையில் விஞ்ஞானி தானா? என சந்தேகம் ஏற்படும்... காரணம் பொதுவாக அதிகம் படித்தவர்களுக்கு வித்யா கர்வம் இருப்பது அடிப்படை சுபாவம்.. ஆனால் அதைப் போல் எள்முனை அளவிலும் அப்படி ஒரு சிறு கர்வம் கூட இவரிடம் இல்லவே இல்லை.. தான் சுவாமி பக்தர் என்று ஒருவர் நினைப்பதாலோ.. சொல்வதாலோ அவர்கள் பக்தராகி விடுவதில்லை.. பவ்யம்.. விநயம்.. பக்குவம்.. அன்பு இந்த குணங்களை எப்போது ஒருவர் வெளிப்படுத்துகிறாரோ அப்போதே அவர்கள் சுவாமி பக்தர்கள் என்பது இவரிடம் பழகும் போது புரிகிறது.

ஜெயந்தி அம்மையாரின் பேரனுபவங்கள் அற்புதமானவை.. உருக்கமானவை.. மிகவும் நெகிழ்ச்சி தரக்கூடியவை.. ஒருமுறை சாயி சென்டர் பஜனையில் ஜெயந்தி அம்மையாரை சுவாமி தன்னுடைய திவ்யமான பேரதிர்வலைகளால் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்று ஆச்சர்யப்பட வைத்து விஸ்வரூப தரிசனம் காட்டி இருக்கிறார். அன்யதா சரணம் நாஸ்தி புத்தகம் படித்தது போல் சிலிர்த்தது.. இவரின் உறுதியான நம்பிக்கையையும் ... விடாப்பிடியான பக்தியையும் பார்த்து இது சத்தியமே என அடியேன் உள்மனசு முரசு கொட்டியது.

இருவரைப் போலவே இவர்களின் இருவர்.. அதாவது புதல்வர்கள்.. சதீஷ்..‌சுரேஷ்.. இமாலய மகான்களைப் போலவே சமர்த்துப் பிள்ளைகள்‌. தாய் தந்தை இட்ட கோட்டைத் தாண்டாதவர்கள். தாய் தந்தை கட்டிய கோட்டையில் இப்போது மருத்துவராய் உருமாறி மனித சேவை ஆற்றுபவர்கள். இந்த கொரோனா காலத்தில் பிற மருத்துவர்களைப் போல இவர்களது சேவையாலும் அமெரிக்க தேசம் பெறும் பயன் பெற்று வருகிறது. குடும்பத்தில் ஓரிருவர் பக்தர் என்றாலே பிற பக்தர்க்கு ஆனந்தம் ஏற்படும்.. அதிலும் ஒரு குடும்பமே சுவாமி பக்தியோடு இருந்தால் அது சுவாமிக்கே ஆனந்தம் ஏற்படுத்தாமல் என்ன செய்யும்!!

ஒருமுறை இளைய மகன் சுரேஷ் பள்ளி விளையாட்டின் ( Red Rover game) போது தலை குப்புற விழுந்து விடுகிறார். மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். நரம்பியல் நிபுணர்கள் உட்பட்ட 14 மருத்துவர்கள் 24 மணிநேரம் கடந்தே பதில் சொல்ல முடியும் என்று கை விரித்து விடுகின்றனர். அப்பா மோகன் மருத்துவமனையிலும்.. அம்மா ஜெயந்தி விடிய விடிய கண்ணீர்ப் பிரார்த்தனையிலும்.. அந்த வாரம் இவர்களுடைய இல்ல பஜனை முறை.. "இந்த வியாழனுக்குள் சுரேஷ் என் மடியில் அமர்ந்து பஜனையில் கலந்து கொள்ள வேண்டும் சுவாமி" என கதறியபடி சுவாமியிடம் முறையிடுகிறார். தூய பக்திக்கு ஓடி வரும் சுவாமி.. அடுத்த நாள் அம்மா ஜெயந்தி அதிகாலை மருத்துவமனை வந்து மகனைப் பார்க்க திடுக்கென எழுந்திருக்கும் மகன் "அம்மா பசிக்கிறது.. ஏதாவது சாப்பிட வேண்டும்?" என சாதாரணமாக கேட்கிறார்.. போன மூச்சு திரும்பி வந்தது ஜெயந்திக்கு.. வந்த மூச்சு சுவாமி ஆபத்பாந்தவர் என்பதை சேர்த்தே உணர்த்தி நிம்மதிப் பெருமூச்சை ஏற்படுத்தியது.

இரண்டு மகன்களும் சுவாமி கல்லூரியில் சேர்வதற்கு முயற்சிக்க அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.. சுவாமி உனது வழிகாட்டுதலை அவர்களுக்குக் கொடு என ஜெயந்தி உருகி வேண்டி கண்கள் மூடி சுவாமியின் ஒரு புத்தகம் பிரிக்க அதில் உள்ள வாசகத்தை வாசித்து கதறி அழுகிறார்கள். அந்த சுவாமி புத்தகத்தில் இவர்களின் இரண்டு மகன்களின் பேர் இடம் பெற்றிருக்கிறது. சுரேஷூம் சதீஷூம் வெற்றுக் கையோடு திரும்பினர் என்ற அந்த வாசகம் சுவாமி கல்வி கூடத்தில் இடம் கிடைக்கவில்லை என்பதையும் உணர்த்தி.. அவர்களை தான் பார்த்துக் கொள்கிறேன் என சுவாமி உணர்த்தியது இன்றளவும் பசுமரத்து ஆணியாய் அவர்களின் இதயத்தில் பதிந்திருக்கிறது.

சட்டென ஒரு சுவாமி புத்தகம் எடுத்து கண்களை மூடி சுவாமி நீ எனக்கு பதில் சொல் என வேண்டி புத்தகம் திருப்பி கண்களை திறந்து.. அந்தப் பார்வை எதில் படுகிறதோ அந்த வாசகத்தில் அவர்களின் கேள்விக்கு.. அவர்களின் மனநிலைக்கு ஏற்ப மிக சரியான பதிலை சுவாமி தந்திருக்கிறார் என்றால் ஜெயந்தி அவர்களின் பக்தி சாதாரண பக்தி இல்லை.. 

சுவாமி எந்த ஊடகம் வழியாகவும் தொடர்புக்கு வரலாம்.. காரணம் அவர் கடவுள்.. ஆனால் அவர் வருவதற்கான சரணாகத பக்தி நம்மிடம் இருக்கிறதா? என்பதே கேள்வி.. இவர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் கம்சனும் கிருஷ்ண பக்தன் ஆகிவிடுவான் என்பதில் சந்தேகமே இல்லை!!

புதல்வர்கள் சதீஷ் மற்றும் சுரேஷ் இருவரும் மருத்துவ விஞ்ஞானிகள் மட்டுமல்ல சிறந்த நடன கலைஞர்கள். அந்த இரண்டு ஆண்மயில்களின் நர்த்தனத்தை சுவாமி 2007ல்அ கண்டு களித்து மூத்தவருக்கு வைர மோதிரமும்.. இளையவருக்கு தங்கச் சங்கிலியையும் சிருஷ்டி செய்து வழங்கி இருக்கிறார்.

இவர்களின் இரண்டு மகன்களுக்கும் சுவாமியே வரன் பார்த்து திருமணம் நிகழ்த்தி வைத்திருக்கிறார். அதிலும் ஜெயந்தி அவர்களின் திருமணத்துக்கான நிபந்தனைகளை கேட்டால் மணல் கயிறு திரைப்படம் விடவும் தலையையே சுற்றும்... தனக்கு வரப்போகும் மருமகள்கள்.. 

1. சுவாமி பக்தையாக இருக்க வேண்டும். 

2.தமிழ் பேசும் குடும்பமாக இருக்க வேண்டும். 

3. சிறந்த கர்நாடக சங்கீதம் பயின்றவராக இருக்க வேண்டும்.

4. பரத நாட்டியம் ஆடுபவராக இருக்க வேண்டும்.. 

ஒரே பையன் எப்படி நான்கு பெண்களை மணம் முடிக்க முடியும்?! அப்படித் தான் இருந்திருக்கிறது ஜெயந்தியின் திருமண கட்டளைகள்.. காரணம் ஒரு பெண்ணுக்கு ஒரு திறன் இருந்தால் இன்னொரு திறன் இருக்க வாய்ப்பில்லை.. அப்படியே இருந்தாலும் சுவாமி பக்தையாக இருக்க வேண்டும்.. அதுவும் இத்தனை தரங்களோடு தமிழ் குடும்பம் வேறு... அப்பப்பபபா... ஆனால் எல்லா கட்டளைகளையும் ஏற்று சுவாமி இருவருக்கும் மணம் முடித்து வைக்கிறார். முதல் மகனுக்காகக் கிட்டிய பெண்ணை மணமுடிக்க ஜெயந்தி சுவாமியிடம் அனுமதி கோரி 'சத்ய சாயி ஆனந்த தாயி' புத்தகத்தைத் திறக்க "என் மருமகள் சரஸ்வதி" என்று பதில் வந்தது. 

இதேபோல் இரண்டாவது மகனுக்குப் பெண்ணை மணம் புரிய ஜெயந்தி சுவாமியிடம் அனுமதி கோரியபோது சுவாமி தபோவனம் புத்தகத்தில் கீழ்க்கண்ட வரிகள் வந்தன: "சுவாமியிடம் அனுமதி கோரினர். ஸ்வாமியும் அனுமதி வழங்கினார்."

சுவாமியால் முடியாதது எது? அதுவும் தனது பிரியமான மகள் கேட்கும் போது எவ்வாறு மறுப்பார் சுவாமி! சாயி சென்டர் வழியாக வரன் அமைய வைத்து ஒரு சுவாமி குடும்பம் இப்போது மூன்று சுவாமி குடும்பமாக இணைந்திருக்கிறது.

2003ல் ஒருமுறை சுவாமி ஜெயந்தியின் கனவில் தான் அமெரிக்கா வரும் போது வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்கிறார். அந்த கனவுக்குப் பிறகு அவர்களின் வாழ்வில் நிகழ்ந்ததெல்லாம் பேரற்புதங்கள். சுவாமியின் அமெரிக்க விஜயம் குறித்து புத்தக வாசகம் வழியாகவும் ... பலவகையில்.. சுவாமியிடம் அவர்கள் "நீ நிச்சயம் வரப்போகிறாயா சுவாமி?" என கடந்த 15 வருடங்களாக கேட்ட கேள்விக்கு 50 முறைக்கும் மேலாக ஆம் என்றே பதில் அளித்திருக்கிறார் சுவாமி. இந்த பரவச அனுபவத்தை Parthi Updates எனும் யூடியூப் சேனலில் காணொளி பாகம் 9ல் பேசி பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தி. மேலும் சில கனவுகள் வழியாகவும் சுவாமி அதை ஆணித்தரமாய் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே வருகிறார்.

அவர்களின் 21வது திருமண நாளில் சுவாமியின் ஆசீர்வாதத்தை வேண்டியபோது  அறிமுகமில்லாத நபர் மூலம் 21 சனாதன சாரதி இதழ்கள் வந்து சேர்ந்தது பெரும் ஆச்சரியம்! அதே முறையில் ஜெயந்தி சுவாமி "அமெரிக்காவிற்கு வருவாரா??" என ஏங்கி கேட்டபோது from address இல்லாத கவரில் சுவாமியின் இரண்டு பாக்கெட் நிறைய டாலர்கள் பார்சலாக வந்து பரவசப்படுத்தி இருக்கிறது.

சரியான முகவரி இருந்தாலே நேரத்திற்கு தபால் வராத இந்த காலத்தில் from address இல்லாமல் பொதுவாக அமேரிக்கத் தபால் நிலையத்தில் தபால்கள் முடங்கும் விதியையும் மீறி இவரிடம் பார்சல் வந்து சேர்ந்திருப்பதில் மனிதன் வகுத்த விதி ஒன்றுமில்லை..

சுவாமி எல்லா விதிக்கும் அப்பாற்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்கா வரும் போது நான் உன் வீட்டிற்கு வருவேன் என்று சுவாமி சொல்லிய அந்தக் கனவில் இருந்து  அற்புதங்கள் நிகழும் அவர்களின் மிச்சிகன் வீட்டில் சுவாமிக்காக இவர்கள் வாங்கி சேர்க்காத பொருட்களே இல்லை.. ஏதாவது ஒரு புதுப் பொருளைப் பார்த்தாலோ அல்லது கொடுத்தாலோ அது சுவாமி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என காலணி .. குடை.. பாத்திரங்கள்.. புது டேபிள் .. நாற்காலி, vacuum cleaner , உணவு சமைப்பதற்கான பொருட்கள்.. சுவாமிக்கு பிடித்த perfume, சுவாமியின் அன்றாட வாழ்க்கைக்கான அனைத்தும் அடங்கியவைகள்  இப்படி நூற்றுக்கணக்கான புத்தம் புதிய உயர் ரக பொருட்கள் தனியறையில் சுவாமிக்காக காத்திருக்கின்றன... எல்லாவற்றையும் புத்தம் புதிதாய் பத்திரப்படுத்தி இன்றளவும் பாதுகாத்து .. சுவாமியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். 


சத்தியமாக இப்படி ஒரு பக்தையை பார்த்ததே இல்லை..

ராமர் வருவார் என  சபரி பல ஆண்டுகளாக காத்திருந்ததை வாசித்திருக்கிறேன். ஆனால் ஜெயந்தி அம்மையாரின் அனுபவங்களை உள்வாங்கியபோதே அந்தக்காத்திருப்பை உணர்கிறேன். இது சாதாரண பக்தியல்ல.. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என சொல்லியதும் தூணிலிருந்து வெளிவந்த சாயி நரசிம்மர் எத்தகைய பிரகலாத பக்தியால் கட்டிப்போடப்பட்டிருந்தார் என்பதும் இவர்களின் பக்தி மூலமாக அடியேனுக்கு புரிந்தது.. 

சாயி வாக்கு சத்திய வாக்கு என்பதால் சுவாமி நிச்சயம் அமெரிக்கா வருவார்... வருகையில் தன் இல்லத்திற்கும் விஜயம் செய்வார் என மிக உறுதியாக இருக்கிறார்கள் இருவரும்.

அது தான் வீட்டில் விபூதியே பொழிகிறது.. சுவாமி வேறு உடல் எடுத்து வர வேண்டியது அவசியமா? என சுற்றியிருக்கும் பக்தர்கள் சந்தேக வினாக்கள் எழுப்பிய போதிலும் .. இல்லை சுவாமி தன் கனவில் சொல்லியிருக்கிறார் ஆகவே அவர் வருவார் என மிக உறுதியாக இருக்கிறார்கள்.

சுவாமியின் 'அமெரிக்க வருகை' குறித்து மேலும் சில செய்திகளை ஆச்சரிப்படும் அளவிற்கு ஜெயந்தி அம்மையாரின் கனவுகளில் சுவாமி பகிர்ந்திருக்கிறார். அவற்றை நேரம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.. அடியேனின் கால்கள் தரையில் இல்லை.. அந்த நேரம் நெருங்கி வரவேண்டும் என அடியேனும் சுவாமியை பிரார்த்தனை செய்கிறேன். 

தசாவதாரங்களில் நரசிம்மர் / ராமர் / கிருஷ்ணர் எனும் அவதாரங்கள் நம் வழிபாட்டு கோவில்களில் வழிபடும் பிரதான தெய்வங்களாக இருக்கிறார்கள். அதைப் போலவே இந்த கலியுகத்தின் மூன்று அவதாரங்களான ஷிர்டி சாயி / சத்யசாயி / பிரேம சாயி தெய்வங்களும் உலகளாவிய வகையில் வழிபடப்படுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை அடியேனுக்கு உண்டு. வழிபடுவதோடு மட்டுமன்றி அவதாரங்கள் சொல்லிய சத்திய வாசகத்தை வழித்தடமாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.. அதற்கு ஜெயந்தி அம்மையார் போல திடமான பக்தியையும் .. விஞ்ஞானி மோகன் அவர்களைப் போல பக்குவத்தோடு கூடிய  சாந்தமான குணத்தையும் பெற்றிருப்பதே அதற்கான தகுதி என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அமெரிக்கா நிச்சயம் ஆன்மீக பூமி ஆகும் இவர்கள் இருவரால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக