இறைவன் பாபாவின் தன்னிலை விளக்கம் என்பது தீனர்களுக்கான தெய்வ தரிசனம்.. அந்தராத்மாவுக்கான அக தரிசனம்... அனைவருக்குமான ஆன்மீக தரிசனம்... ஆன்ம சாதனை ஆழப்படுவதற்கான இந்த இதயாலய தரிசனம் மிக சுவாரஸ்யமாய் இதோ...
"என்னால் மனிதனின் எந்தவிதமான பிரச்சனையையும் தீர்க்க முடியும்... அந்த இறைப் பேராற்றல் நானே... மனிதர்களோடு மனிதனாக அந்த இறைப் பேராற்றல் இல்லாதது போல்... எனக்கு எதுவும் தெரியாதது போல் நான் சில சமயத்தில் உங்களோடு வலம் வருகிறேன் என ஏதேதோ எண்ணி எதை எதையோ அனுமானித்து... நான் செய்வது வெறும் மலிவான அற்புதமே என கற்பனை செய்து கொண்டு சிலர் என்னை விட்டு விலகி விடுகிறார்கள்... அது அவர்களின் அறியாமையே அன்றி வேறொன்றுமில்லை...! என்னை சூழ்ந்திருக்கும் மனிதர்கள் என்னுடைய எத்தனையோ இறைப் பெருங்குணங்களை மறந்து போய்விட்டு.. நான் செய்து வரும் அற்புதங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்... அது என் ஒட்டுமொத்த இறை அம்சத்தில் ஒரூ கொசுவே... ஆம் யானை மேல் அமர்ந்திருக்கும் கொசுவாகவே நான் புரியும் அற்புதங்கள்... என்னோடு இரண்டற கலந்திருக்கும் ஒரு புனிதத்துவம் எது தெரியுமா? அது என்னிடமிருந்து பிரவகித்து எழும் எனது பாரபட்சமற்ற பேரன்பே! அதை உங்களால் அளக்கவே முடியாது! எந்த மனிதர்கள் என் பேரன்பை அனுபவித்திருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே "நான் யார்?" என்பதை உணர முடியும்!
அவதாரம் மட்டுமே அவதாரத்தை விளக்க முடியும்! வேறு யாரும் அல்ல...! உங்களால் அவதாரத்தை அனுபவிக்கவே முடியும்!
என்னுடைய பேரன்பு எவ்வகை பரிணாமம் எடுக்கும் என்பதை என்னால் மட்டுமே விவரிக்க முடியும்! அதை எவராலும் அனுமானிக்க முடியாது! சில மனிதர்களின் நோயை நான் உடனே
குணமாக்குகிறேன்.. சிலரது நோய்களை நான் தாமதப்படுத்தியே குணமாக்குகிறேன்.. காரணம் அவரவர் முன்வினை ஜென்மாந்தர பயன்களாலேயே என்பதை புரிந்துணர வேண்டும்! ஏதாவது ஒன்றை எப்போது நான் பக்தர்களுக்கு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் என்னுடைய நிபந்தனை அற்ற பேரன்பு உங்களோடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் எப்போது உணர்கிறீர்களோ... அப்போதே நான் உங்கள் இதயத்தில் வசிக்கிறேன் என்பதையும் உங்களால் உணர முடிகிறது! அப்போதே உங்களுக்கான அக மாற்றமும் ஏற்படுகிறது! நீங்கள் குறைப்பட்டுக் கொள்ளும் வரை அது ஏற்படுவது இல்லை ! முதலில் எனது இந்தப் பேரன்பு என்னை நிரப்பி.. என்னிலிருந்து பக்தர்களை சூழ்ந்து... அவர்களிடமிருந்து சகல ஜீவராசிகளிலே நீக்கமற நிறைகிறது!
ஆக என்னை அளக்க முயற்சிக்காதீர்கள்... தோற்றுத்தான் போவீர்கள்! அதற்கு பதிலாக உங்களுக்குள் நீங்களே உங்களை கண்டுணருங்கள்! அப்போது அளவற்ற எனது அளவுகோள்களையே நீங்கள் ஆன்மாவுக்குள் அனுபவிப்பீர்கள்! நான் எந்த துறவறத்தையும் சார்ந்தவனில்லை... நான் எதனை நோக்கியும் தியானம் செய்வதில்லை... நான் படிப்பவனில்லை... நான் ஆசைப்படுபவனில்லை... நான் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை... இளமையோ முதுமையோ எனக்கு இல்லை...குழந்தைகளிடத்தில் நான் குழந்தையாகவும்... மாணவர்களிடத்தில் நான் மாணவனாகவும்... பெண்களிடத்தில் பெண்களாகவும்... ஆண்களிடத்தில் ஆண்களாகவும்... நான் என்னோடு நிறைந்திருக்கையில் கடவுளாகவும் இருக்கிறேன்! என்னை நீங்கள் பயமின்றி அணுகுவது உங்களுடைய உரிமை! ஒரு தந்தையிடம் கேட்பதைப் போல் பயனுள்ளதை கேளுங்கள்! உங்களில் சிலர் என்னிடம் முதன்முதலாக வந்திருக்கலாம்.. ஆனால் நீங்கள் அனைவரும் ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமானவரே! உங்கள் பிறவிதோறும் நான் உங்களை நன்றாக அறிந்து வந்திருக்கிறேன்! எந்த விதியும் அதன் பின்விளைவுகளும்... மாயையும் என்னை எப்போதும் பாதிப்பதில்லை! நீங்கள் எப்படி பயனுள்ள முறையில் வாழ வேண்டும்... இறப்பை எய்த வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்தவே வந்திருக்கிறேன்... ஓரடி என் முன் நீங்கள் வைத்தால்... நான் மூன்றடி உங்கள் முன் வைத்து உங்களை நெருங்கி... உங்களின் தாங்கமுடியா துக்கங்களை மிக சந்தோஷமாகவே உங்களிடமிருந்து வாங்கி சுமக்கிறேன்! என்னை வழிபடுகிறவர்கள் வழிபடாதவர்கள் என அனைவருமே என்னுடையவர்கள் தான்!
என்னுடைய இறைப்பெருஞ்சக்தி நாளாக நாளாக மங்கிப் போவதே இல்லை! என் சரீரம் அனைவரின் சரீரம் போலவே... ஆனால் என்னுடைய இறைப் பேராற்றல் என் சரீரம் கடந்தும் ஜீவிக்கிறது! உங்கள் அனைவருக்கும் நன்னடத்தை...அனைவருக்கும் தர்ம வாழ்க்கை... இதற்காகவே எனது இந்த சரீரம்... எனது இந்த சரீரம் தண்ணீரில் ஒரு குமிழியே... சரீரத்தை கடந்து நான் போனாலும்... எனது இறைப் பேராற்றல் எப்போதுமே உயிர்ப்போடிருந்து உங்களை வழிகாட்டியபடி ஆன்மீக வாழ்வில் உங்களை மிக உறுதியாக உயர்த்தும்!"
(ஆதாரம் : Is SaiBaba God (சாயிபாபா கடவுளா) / பக்கம் : 223 / ஆசிரியர் : எம்.ஆர்.குந்த்ரா)
இறைவன் பாபாவின் மிகத் தெளிவான பிரகடனம் இது! நான் எதையும் நோக்கி தியானிப்பதில்லை என்கிறார் பாபா! ஆம்! கங்கையே எங்கேயும் போய் குளிப்பதில்லை என்பது போல் தியானமே ஏன் தியானிக்க வேண்டும்...?! அந்த தியானத்தை நாமே தியானிக்க வேண்டும்! அந்த தியானமே இறைவன் பாபா! எங்கும் நீக்கமற நிறைந்த இறைவன் பாபாவின் பாதங்களில் நாம் கண்மூடி விழுந்து இந்த வாழ்க்கைக்கான கரையேற்றுதலை நமக்குள் நிகழ பாபாவின் கருணையையே குறியாகவும் குறிக்கோளாகவும் கொள்வோம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக