தலைப்பு

சனி, 30 ஏப்ரல், 2022

தெய்வதரிசனம் பெறுவது எப்படி?


எவர் குரு? எவர் தெய்வ தரிசனம் பெற்றவர்? எவர் நம்மை ஆன்மீகத்தில் மீட்டெடுக்க முடியும்? எனும் பல வினாக் கொக்கிகள் நம்மை சந்தேகக் கடலில் தள்ளிவிடுகின்றன... அதற்கு எவரால் பதில் சொல்ல முடியும்? இருளில் திளைப்பவர் எப்படி வெளிச்சத்தை உற்பத்தி செய்ய முடியும்? அதனால் இறைவனே பதில் எனும் வெளிச்சம் வீசுகிறார்... தவறான வழிகளில் நாம் தவறி விழாத வண்ணம் இறைவன் பாபாவே நம்மை தடுத்தாட் கொள்கிறார் தனது ஞானப் பிரகாசத்தினால் இதோ...

ஹிஸ்லாப்: இன்றைய உலகில், இறை உணர்வில் நேரடியாகவும், ஆழ்ந்தும் திளைத்த சாதுக்கள் இல்லையா?

பாபா: 
இன்றும் கூட தெய்வ தரிசனமும் தன்னை அறிதலும் ஆகியவற்றை உண்மையான அனுபவமாக உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உலகில் இங்குமங்கும் செல்வதும், தங்களை தொடர வேண்டி சீடர்களை சேர்ப்பதும் இல்லை. அவர்கள் மக்கள் மத்தியில் இருந்து விலகி மிகவும் அமைதியாக சாதனாவில் ஈடுபட்டிருக்கிறார்கள். அம்மாதிரி ஒருவரை நீ பார்க்க நேர்ந்தால், அவரை உனக்கு வழிகாட்ட கோரினாலும், அவருக்கு உன் மீது எந்தவிதமான சிரத்தையும் இராது. 

இப்போது உலகில் உலாவி வரும் குரு ஒருவரின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால், அவருக்கு விருப்பங்களும் பிரச்சினைகளும் இருப்பது தெரியவரும். அவருடைய ஞானம் புத்தகங்களிலிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் பெறப்பட்டதாகும். தெய்வத்தைப் பற்றி பேசும் அவருக்கு, முழுமையான உண்மையான தெய்வ அனுபவம் கிடையாது. உன்னை போலவே அவர்களும் சம்சாரம் என்ற சேற்றில் சிக்கியவர்கள். அவர்கள் உன்னை உறுதியான தரைக்கு எப்படி இழுக்க முடியும்? இந்த நாட்களில் இறைவன் ஒருவனே உண்மையான குரு. அவரை அழைத்தால் அவர் உனக்கு வழி காட்டுவார். அவர் உனக்கு உதவ, உன்னை காக்க, உனக்கு வழிகாட்ட, தயாராக உன் இதயத்தில் இருக்கிறார்.

ஹிஸ்லாப்: இந்த மாதிரி மனிதர்கள் தெய்வ தரிசனம் பெற்றவர்கள் என்று சுவாமி சொல்கிறார். ஒருவனால் அம்மாதிரி தரிசனம் பெறுவது எப்படி?

பாபா: 
நிலையற்றவற்றை பார்ப்பதை மனதிலிருந்து தெய்வதரிசனம் அழிக்கிறது. காலகதியில் நாமம், ரூபம், மற்றும் குண விசேஷங்கள் மறைகின்றன. பின் எதற்காக காத்திருக்கிறாய்? உன் பார்வையில் இருந்து இப்போதே அவற்றை அழித்து விடு. அவற்றை உன் மனதிலிருந்து அழித்துவிட்டு, எது சத்தியமோ, அதையே நோக்கு. மறைந்து போகக்கூடிய மாயையை பற்றி ஏன் வருத்திக் கொள்கிறாய்? ஒருவனின் காலத்தையும் கவனத்தையும் சத்தியத்திற்காக கொடுப்பது சாலசிறந்தது. தெய்வ தரிசனம் என்பது மறைந்து போகக் கூடியதும், மாயையான வற்றை கண்டு கொள்வதும், உண்மையுடன் நிரந்தரமாக அந்த உண்மைக்குள்  உறைவதாகும். இறைவனே என்றும் உள்ள உண்மை. ஒவ்வொரு காட்சிக்கும் அடிப்படையாக இருப்பது, என்றும் மாற்றமில்லாத அவராகும். ஜனகராஜன் தெய்வ தரிசனம் பெற்று அதில் உறுதியாக நிலை பெற்றவரானார். நாமம், ரூபம், பிரத்தியேக குணவிசேஷம் மற்ற விசேஷ அம்சங்கள் இவற்றின் அனைத்தையும் நன்கு கண்டறிந்ததனால், அவரின் எஞ்சிய வாழ் நாட்களில் அவை அவருடைய பார்வைக்கு வரவில்லை. தெய்வநோக்கு சாதகம் செய்வதாலும், இறைவன் அருளாலும் கிட்டுவது .சில சமயங்களில் தெய்வ நோக்கு இயல்பாக தானே எழுவதாக தோன்றும். ஆனால் அது ஒருவன் தனது முன்பிறவியில் செய்த பணியின் விளைவாகும்.

ஆதாரம்:  'பகவானுடன் உரையாடல்' என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக