தலைப்பு

புதன், 13 ஏப்ரல், 2022

இப்படி ஒரு இதிகாச அன்பை இதுவரை எந்த இறை அவதாரமும் பொழிந்ததில்லை!

ஒவ்வொரு பக்தர் மீதும் பாபா காட்டி வரும் பிரியம் அளவிட முடியாதது.. ஆன்மாவினால் அப்புறப்படுத்தவே இயலாதது... மனிதப் பிரியமே ஒருநாள் அல்லது ஒரு நாள் பிரியும்... ஆனால் பாபா பிரியம் எப்போதுமே பொழிந்த வண்ணம் பொலிகிறது...அந்த அப்பழுக்கற்ற அக்கறைப் பிரியத்தை வலியுறுத்தும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...


ஊட்டியை சேர்ந்தவர் திருமதி லஷ்மி ரஞ்சன்.. பரம பாபா பக்தை... அந்த ஊட்டி பக்தையை பாபா எவ்வாறு தனது கரிசன பேரன்பால் ஊட்டி ஊட்டி ரட்சிக்கிறார் என்பதே நெகிழ்வானது... பாபா எத்தனை முறை வருகிற போதும் அத்தனை முறையும் பக்தை லட்சுமி பாபாவுக்கு உணவு பரிமாறி பாக்கியம் சேர்த்திருக்கிறார்! பாபா அவருக்கு சிருஷ்டி விக்ரஹம் அளித்திருக்கிறார்.. அது மஹிஷாசுரமர்த்தினியின் ரூபம்... "ரொம்ப நியமமா பூஜை பண்ண வேண்டும் என்பதில்லை.. தினசரி குளிர் நீரில் அபிஷேகம் செய்து இரண்டு பூ சாற்றினால் கூட போதுமானது" என்கிறார் நியமங்களை கடந்த பரப்பிரம்ம பாபா! பக்தரின் இதயத் தூய்மையையே இறைவன் பாபா இன்றளவும் பார்க்கிறார்.. நியதி நியமும் சடங்கு இத்யாதி எல்லாம் இதயத்தை தூய்மையடையச் செய்யவில்லை என்றால் அவற்றால் எந்த பயனும் இல்லை அல்லவா! பக்தை லட்சுமியோ வீட்டு வேலை எல்லாம் மாங்கு மாங்கென செய்பவர்! ஓய்வு ஒழிச்சலே இன்றி பாங்குடன் வேலை செய்யும் அந்தக் காலத்து ஆகச்சிறந்த இல்லத்தரசி!


ஒருமுறை 1983 அக்டோபர் தொடக்கத்தில் கணவர் ரஞ்சனோடு பக்தை லட்சுமி புட்டபர்த்தி வருகிறார்! அவரின் கணவரோடு பாபா "அவள் இங்கேயே கொஞ்ச நாள் தங்கி இருக்கட்டும்... இங்கே இருந்தால் தான் பாவம் அவளால் ஓய்வே எடுக்க முடியும்!" என்கிறார் பாபா.. அத்தனை பரிவு... அத்தனை அக்கறை... தனது தாய் வீட்டுக்கு வரும் குடும்பப் பெண்மணிகள் எந்த வேலையையும் செய்ய தாய் விடுவதே இல்லை... அதை விட கூடுதல் அக்கறையும் அன்பும் பொழிபவர் பாபா!

இரண்டு வாரம் பக்தை லட்சுமி அருகிலேயே வரவில்லை..லட்சுமியோ அதை எதிர்பார்க்கவும் இல்லை.. அது தான் பக்தி... எப்போதும் பாபா தன்னை கண்டு கொண்டே இருக்க வேண்டும்.. பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும்... தன் பேரிருப்பை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என நிஜ பக்தி நினைப்பதே இல்லை! அவரும் தரிசனம், பஜனை, உணவு, ஓய்வு என மிக நிம்மதியாக இருக்கிறார்!


நவம்பர் தொடக்கத்தில் பாபா பக்தை லட்சுமியோடு பேசுகிறார்! "உன் கர்ப்பப் பையில் கொஞ்சம் கோளாறு இருக்கிறது! வொயிட் ஃபீல்ட் போ... ராஜேஸ்வரியிடம் சொல்லியிருக்கிறேன்.. டெஸ்ட் பண்ணிக்கோ!" என்கிறார்! சோதனையிடச் செல்கிறார் லட்சுமி! மறுநாளே பாபாவும் வொயிட் ஃபீல்ட் வர... அவரிடம் லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்கிறார்... டாக்டர் ஹெக்டே'விடமும் ஆலோசனை கேட்கும் படி பாபா ராஜேஸ்வரியிடம் கூற... அந்த டாக்டரும் அதையே முன்மொழிய...

பாபா பக்தை லட்சுமியிடம் வந்து "ஒரு சின்ன ஆப்ரேஷன் தான்.. கவலைப்படாதே.. எந்த பயமும் வேண்டாம் .. செய்து கொள்கிறாயா?" என மிக மெதுவாக பக்குவமாக எடுத்துக் கூறுகிறார்... "நீங்கள் சரி என்று சொன்னால் செய்து கொள்கிறேன் சுவாமி!" என்கிறார்! "ஒன்றும் பயப்படாதே!" என்கிறார் பரிவோடு பாபா.. "நீங்கள் இருக்கும் போது எனக்கு எந்த பயமும் இல்லை சுவாமி !" என்கிறார் பக்தை லட்சுமி! அது தான் பக்தி! "நாளைக்கு ஆப்ரேஷன் !" என்கிறார் பாபா.. கணவர் ரஞ்சனையும் அழைக்கிறார் இறைவன் எனும் ஈடு இணையற்ற நெஞ்சன் சாயி! 


ஆப்ரேஷன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது... பாபா தனது அன்றாட ஆன்மீக கடமைகளை எல்லாம் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு லட்சுமி கணவர் ரஞ்சனோடும்... அவர்களது இரண்டு குழந்தைகளோடும் வருகிறார்.. அறுவை சிகிச்சை நடக்கும் அறையின் பக்கத்து அறையில் அவர்களோடு நேரம் செலவழிக்கிறார்... அவர்களின் மனதை திசை திருப்ப வேடிக்கைக் கதைகள் பேசி அந்த இறுக்கமான சூழ்நிலையை இளக வைக்கிறார்... அவ்வப்போது எழுந்து தனது கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மூடிக் கொண்டு பக்கத்து அறை டாக்டரிடம் பாபா அறுவை சிகிச்சைக்கான அப்டேட் பெறுகிறார்! பாபாவுக்கு தெரியாததோ பாபா அறியாததோ ஏதுமில்லை என நன்கு நாம் தெளிவு பெற்றிருந்தாலும் ஒரு தகப்பன் நிலையில் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு ஆறுதல் அளிக்கிறார் பாபா! அது தான்  இறைவன் பாபா... அதனால் தான் பாபா இறைவன். 


"இப்போ இந்த ஆப்ரேஷன் நடக்காட்டி.. அது கேன்சரா மாறி இருக்கும்!" எனும் உண்மையை சொல்லி.. அது சின்ன அறுவை சிகிச்சை அல்ல மேஜர் சர்ஜரி என்பதையும் அது நிகழ்ந்த பிறகு பகிர்ந்து கொள்கிறார் ரஞ்சனிடம் பாபா! பாபா பக்தை லட்சுமியை உள்ளே சென்று பார்க்கிறார்.. "நாளைக்கு எழுந்திருக்கலாம்! " எனச் சொல்லிவிட்டுச் செல்கிறார்! அடுத்த நாள்..‌ எழுந்த பக்தையை மீண்டும் வந்து பார்க்கிறார்... இன்னும் 13 நாளே அவதார ஜெயந்திக்கு.. எப்படி கலந்து கொள்வது? என பக்தை யோசிக்கும் போதே.. பாபா "பெர்த் டே'க்கு நீ வந்து உக்காரலாம்!" என்கிறார் புன்னகைப் பரிவோடு! "லட்சுமி ஏதாவது சாப்பிட்டாளா?" என பாபா மூன்றாம் நாளும் மருத்துவமனைக்கு வருகிறார்! தொண்டர்களிடம் நினைவுப்படுத்தி ஒரு நாற்காலியை இடச் சொல்லி அங்கே அவதார ஜெயந்தி வைபவத்தில் அமர வைக்கிறார்! பக்தை லட்சுமி டிஸ்சார்ஜ் ஆன அன்றே பாபா பல பரிசுப் பொருட்களை அளித்து அதை பக்தை லட்சுமியின் மூத்த மகன் மற்றும் கணவன் மூலமாகவும் வழங்கச் செய்து மகிழ்கிறார்! மருத்துவ ஊழியர்களும் அதைப் பெற்றுக் கொண்டு பக்தை லட்சுமி குடும்பமே வழங்கிய பரிசுப் பொருளென நினைத்து மகிழ்கிறார்கள்! "மகிழ்வித்து மகிழ்!" என்பது வெறும் வாசகம் அல்ல இறைவன் பாபாவின் நடைமுறை ஆன்மீகம்!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 84 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


இப்படி பல லட்சம் பக்தர் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது! சம்ஹாரம் சுலபம் சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றுவதும்.. அதற்கான மனப்பக்குவத்தை அளிப்பதுமே கடினம்... ஆனால் அவற்றை மிக நேர்த்தியாக, சுலபமாக... லாவகமாக புரிபவர் இறைவன் பாபா! கலியுகத்தில் இறைவன் அவதரிப்பதற்கான முக்கிய நோக்கமே அவை தான்! இப்படி ஒரு அவதாரம் எந்த யுகத்திலும் இதுவரை நிகழ்ந்ததில்லை... தனது நீட்சியாக பிரேமாவதாரமாய் இன்னமும் கூடுதல் கரிசனத்தோடு உலகக் கருணையோடு வலம் வருவார் என்பதும் இறைவன் பாபா முன்பே சொன்ன சத்தியக் கூற்று தான்! இறைவன் தொடர்வார்.. காரணம் இறைவன் மட்டுமே நம்மை தொடர்கிறார்... வேறு எவரும் அல்ல..  இறைவன் பாபா மட்டுமே நமக்கு தொடர் கருணை புரிய முடிகிறது!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக