தலைப்பு

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ஒரு கைக்குட்டையில் தானாகவே சிருஷ்டியாகி இருந்த பாத மணலும்... பாபாவின் கேசமும்!

ஒரு பக்தரின் நியாயமான மிக ஆழமான பொறாமையற்ற பிரார்த்தனைகளை பாபா எவ்வாறு நொடிப்பொழுதில் நிறைவேற்றுகிறார் எனும் சத்தியப் பதிவு சுவாரஸ்யமாய் இதோ...


அவர் பெயர் எஸ்.என் சிங்.. முழுப் பெயர் சிவ்நாத் சிங்... வெற்றிகரமாக பெங்களூரில் வியாபாரம் செய்து வருபவர் அவர்... பாபாவின் பரம பக்தர்.. 

அவர் கல்கத்தாவில் வாழ்கிற சமயத்தில் பம்பாயில் முதன்முதலாக பாபா தரிசனம் தரப்போவதை அறிந்து அங்கே செல்கிறார்.. அரபிக் கடலாய் மக்கள் வெள்ளம்... அந்தக் கடலை நேர்க்கோட்டில் கிழிக்கும் அன்னப்படகாய் பாபா மெது மெதுவாய் நடந்து வருகிறார்.. பூக்களைப் பரிவோடு விசாரிக்கும் பட்டாம்பூச்சிப் பார்வையை வீசுகிறார்... ஆனால் சிங்'கை முதல் தரிசனத்தில் பாபா கண்டு கொள்ளவே இல்லை... மனம் தாளாது நேராக ஷிர்டிக்கு சென்று பாபா சமாதி முன்பு "ஏன் உனக்கு என் மேல் பாராமுகம் பாபா?" என கண்கலங்கி முறையிடுகிறார்... எவ்வளவு பக்தி.. முதன்முதல் தரிசனத்திலேயே பர்த்தி பாபா தான் ஷிர்டி பாபா என உணர்ந்து கொண்டு விடுகிறார்! 2 மாதம் கடந்து வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனில் பாபாவை 2 ஆவது முறை தரிசிக்கிறார்.. 


ஷிர்டியில் வேண்டிய பிரார்த்தனைக்காக உடனே அவருக்கு நேர்காணல் வழங்குகிறார் பாபா... அதுமட்டுமில்லை... ஒரு சிருஷ்டி மோதிரமும் அளிக்கிறார்! ஷிர்டியில் செய்கிற பிரார்த்தனை புட்டபர்த்தியில் நிறைவேறுகிறது! இரு பாபாவும் ஒன்றே... எந்த பாபா வடிவத்திடம் பிரார்த்தனை செய்தாலும் அது இரு பாபாவிடமும் போய் சேர்கிறது என சிங் தெள்ளத் தெளிவாய் உணர்கிறார்! தேன் கலந்த பாலில் நாட்டுச் சக்கரையை கலக்கிற போது அது தேனோடும் கலக்கிறது அதே சமயத்தில் பாலோடும் கலந்து ஆனந்த ருசி தருகிறது அல்லவா.. அது போல் இரு பாபாவும்!

பிறகு முதன்முதலாக புட்டபர்த்தி புனித தலத்தை மிதிக்கிறார்..பாபா தரிசனம் பெறுகிறார்! ஆசிரம வளாகத்தில் நின்று இருந்த சிங்'கிற்கு திடீரென ஒரு எண்ணம் உதிக்கிறது.. இந்த உலகத்தில் புனிதம் எதுவுமில்லை... பாபா பாதம் பதித்த மணலும்‌... அவரின் கேச விழுதுகள் மட்டுமே புனிதம்... வேறென்ன புனிதம் இருக்கிறது இந்த பூமியில் என நினைத்துக் கொண்டே கல்கத்தாவிற்கு பயணிக்கிறார்! அடுத்த நாளே திடீரென ஒரு குங்கும வாசனை முகத்தில் குப் என அடிக்கிறது ... எங்கிருந்து வருகிறது என அவர் சோதனை இடுகையில்.. அது அவரின் சொந்த கைக்குட்டையிலிருந்தே வருகிறது... முகர்ந்து பார்க்கிறார்.. ஆஹா ஒரே குங்கும வாசனை... பிரிக்கிறார்.. பிரம்மிக்கிறார்... சில மணல் துகளும்... பாபாவின் கேச விழுதும்... எதை தான் பிரசாந்தி வளாகத்தில் யோசித்தாரோ அதே அதே பாத மணலும்... பாபா கேசமும்... பரவசப்பட்டுக்  கண்கலங்குகிறார்!


ஒருமுறை சிங்'கின் தாய்க்கு உடல்நலம் இல்லை என்பதற்காக பாபாவை தரிசிக்கிறார்.. பாபாவோ மூன்று பாக்கெட் விபூதி வழங்குகிறார்.. ஒன்று கிட்னி பிரச்சனையும் கால் வீக்கமும் கொண்ட அவர் தாய்க்கு...ஒன்று அவர் மனைவிக்கு.. ஒன்று லண்டனில் இருக்கும் அவர் மகள் ஷீலாவுக்கு... தாய்க்கு அந்த விபூதியை எடுத்த உடனேயே பூரணமாக சரியாகிவிடுகிறது... மகள் தொலைபேசி செய்து தான் கீழே விழுந்து விட்டதாக.. டிஸ்க் பிராப்ளம் எனச் சொல்கையில்.. அவருடைய மகளுக்கும் ஏன் கூடுதலாக ஒரு பாக்கெட் விபூதியை பாபா அளித்தார் என புரிந்து கொள்கிறார் சிங். பிரச்சனை உள்ள பூசச் சொல்லி லண்டனுக்கு விபூதியை அனுப்புகிறார்.. மகள் ஷீலா அங்கே பூசியும் வாயில் இட்ட உடனேயும் நல்ல நிவாரணம்...எக்ஸ்.ரே எடுத்து பார்க்கிற போது ஆச்சர்யகரமாக டிஸ்க் பிரச்சனையின் சுவடே காணாமல் போய்விடுகிறது!

1991 ஜனவரியில் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்கிறார்! இரு கிட்னியும் பழுதாகிவிட்டதென மருத்துவர்கள் கை விரிக்கிறார்கள்... வீட்டிற்கு கூட்டிப் போகும் படி சொல்லிவிடுகிறார்கள்... சிங் தனது மகள் ஷீலா , மருமகன் ஆனந்த் ஜௌஹர் இருவரிடமும் பாபாவிடம் நீங்கள் சென்று எனக்கு தரிசனம் தர அவரை இங்கே அழைத்து வாருங்கள் என மன்றாடுகிறார்... அப்படி எல்லாம் பாபா வரமாட்டார் என இருவரும் தயங்குகிறார்கள்... சிங்'கோ ஆழமாக பாபாவிடம் வேண்டிக் கொள்கிறார்... அது ஆத்மார்த்தமான பிரார்த்தனை... "அவர்களிடம் அப்படி எல்லாம் நடந்து கொள்கிறாய்.. அதைத் தருகிறாய்... என்னிடமும் அப்படியே நடந்து கொள்.. அதையே தா!" என பாபாவிடம் பிறரோடு தன்னை ஒப்புமைப்படுத்தி வேண்டுவது தான் முதிர்ச்சியற்ற மிக கடைநிலை பிரார்த்தனை... ஆனால் சிங்'கால் எங்கும் பயணிக்க முடியாத காரணத்தினால் பாபா தரிசனத்திற்கு பாபாவையே மனதோடு மனமாற மனதுக்குள் அழைக்கிறார்!


பாபா எப்போதுமே இதயவாசி ஆகையால் ஒரு நாள் இந்திராநகர் சிங் வீட்டிற்கு அவராகவே வாசல் திறந்து வருகிறார்! பரவசப்படுகிறது சிங்'கின் குடும்பம்... பாபா நேராக சிங்'கின் படுக்கைக்கு வந்து சிருஷ்டி விபூதி அளித்து...சில மந்திரங்களைச் சொல்லி... சிங்'கை தொட்டு ஆசீர்வதிக்கிறார்! ஷீலா பழ வகைகளையும் பழரசங்களையும் பருகும் படி வேண்ட பாபாவோ மறுத்து விடுகிறார்! "வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி!" என்று சொல்லி அங்கிருந்து விடை பெறுகிறார் பாபா... புரிந்து கொள்கின்றனர் குடும்பத்தினர்... ஒரு சில நாளிலேயே தனது இறுதி நொடியையும் பாபாவையுமே எண்ணியபடி பாபாவின் பாதத்திலேயே கலந்து போகிறார் சிங்! அந்த இறுதி தரிசனம் பாபாவின் கருணைக்கான உறுதி தரிசனம்! அனைத்தும் அறிந்தவர் பாபா என்பதற்கான சங்கல்ப தரிசனம் அது! 

மனித உடம்பிற்கு இறுதி என்பது இன்றியமையாதது... அந்த இறுதியை பாபா பக்தர்களாலேயே அமைதியாக புன்முறுவலோடு வரவேற்க முடிகிறது! பிறரோ இறுதியோடு யுத்தமிட்டு இறுதியை மனதால் ஏற்க முடியாமல் இறுதியாகிவிடுகின்றனர் இறுதியில்...


(ஆதாரம் : Is SaiBaba God Page : 205 / Author: M. R. Kundra) 


"வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி!" என்பது சிங்'குக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமான பாபாவின் திருச்செய்தி அது! பாவ மூட்டைகளை அதிகரித்துக் கொண்டே போனால் அந்த நீர்க்குமிழி இறுகி பாறையாகி உடைந்து போகையில் பெரிய சப்தம் ஏற்படுகிறது! ஆன்மீகம் என்ற போர்வையில் மனிதர் செய்து வருகிற பாவங்களின் கனம் பூமியை மேலும் நசுக்குகிறது.. சிங் போன்ற பரமபக்தர்களே இந்த பூமிக்கான பிராயச் சித்தமாகவும்... உலகக் கறைகளுக்கான சுத்தீகரிப்பாகவும் திகழ்கிறார்கள்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக