தலைப்பு

திங்கள், 25 ஏப்ரல், 2022

வக்கீல் மாணிக்கவாசகத்தின் வறட்டு மனதை வென்ற பிரபஞ்ச நீதிபதி சாயி!

பாபா மேல் நம்பிக்கையே இல்லாத ஒரு வக்கீலை எவ்வாறு தன்னை உணர வைத்து... தன்மை உணரவைத்து தன் பக்தராய் பாபா ஆட்கொண்டார் எனும் அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...


அவர் பெயர் மாணிக்கவாசகம்... அந்த மாணிக்கவாசகத்திற்கு மகான்களின் வாசகம் மேல் எந்த நம்பிக்கையுமே இல்லை...  மகான்கள் மேல் மட்டுமல்ல சாயி அவதாரத்தின் மேலும் துளி நம்பிக்கை இல்லை! ஒருமுறை நண்பர்களோடு சேர்ந்து சுற்றுலா செல்கிறார்... இடம் சிவனே மலையான திருவண்ணாமலை! அவரின் நண்பர்கள் ஸ்ரீரமணாசிரமத்திற்கு உள் செல்ல..‌. "இப்படி கௌபீனம் கட்டிக் கொண்டு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. இவருக்கு மட்டும் அப்படி என்ன பவுசு - மவுசு...?!" என யோசிக்கிறார் மாணிக்கவாசகம்! பெரும் அறியாமையால் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியை அப்படி நினைக்கிறார் அவர்.. அதுவும் ஜன்னல் வழியே பகவானை பார்த்துக் கொண்டே... பகவான் அறியாதது என்ன இருக்கிறது... ஜன்னலிலிருந்து கழுத்தைத் திருப்பி தீட்சண்யமாய் ஒரு பார்வை பார்க்கிறார் பகவான்.. அந்த பார்வையின் தேஜோ மயம் தாங்காமல் உடல் நடங்குகிறது மாணிக்கவாசகத்திற்கு... அப்போதும் ஓடிப் போய் பகவானின் காலடியில் விழாமல்... பயந்து ஒதுங்கிவிடுகிறார்! 


காலம் நகர்கிறது.. படித்து பெரிய வக்கீலாகிறார்... டிரஸ்ட் சார்பான பிரச்சனைகளை எல்லாம் திறமையோடு வாதிட்டு நல்ல வழக்குரைஞர் என பெயரும் புகழும் பெறுகிறார்! ஒருமுறை பாபா அறக்கட்டளை சார்ந்த கோவில் ஒன்றுக்கு பிரச்சனை வருகிறது... அதை பாபாவின் ஒரு பரம பக்தை கவனித்துக் கொள்ள... பெயரை கேள்விப்பட்டு மாணிக்கவாசகத்திடம் வருகிறார்.. பிரச்சனைகளைப் பேசுகிறார்.. "அறக்கட்டளைகளுக்கு வாதாடி இருக்கிறேன் தான்.. ஆனால் பாபா சார்ந்தது என்பதால் என்னால் அது இயலாது... எனக்கு அப்படிப்பட்டவர்களின் மேல் நம்பிக்கையே இல்லை.. நீங்கள் கிளம்பலாம்!"  என வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசி அனுப்பிவிடுகிறார்! அந்த பக்தைக்கு பாபாவே எல்லாம்.. சரி பாபாவிடமே இதற்கு ஒரு தீர்வு கேட்போம் என விரைகிறார்... அப்போது பாபா வேங்கடமுனி இல்லத்திற்கு தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்... பாபாவிடம் நடந்ததை அந்த பரம பக்தை சொல்வதற்கு முன் "கோவில் பிரச்சனை தானே! நீ இப்போது அவனுக்கு தொலைபேசி செய்! ஒத்துக் கொள்வான்.. என்னை தரிசிக்க அழைத்து வா.. முதலில் மாட்டேன் என்பான்... உன் உணர்வை மதிப்பதற்காகவாவது வரவேண்டும் எனச் சொல்... சரி எனச் சொல்வான்.. வந்தால் அவரை நமஸ்காரம் எல்லாம் செய்ய மாட்டேன் என்பான்... பரவாயில்லை என்றே சொல்... வேறெதையும் சொல்லிவிடாதே... அவன் மனைவி என் பக்தை ... அவன் தரிசிக்க வந்தால்தானே அவளுக்கு என் தரிசனம் கிடைக்கும்!" என்கிறார் எல்லாம் அறிந்த இறைவன் பாபா!


அந்த பரம பக்தையும் தொலைபேசியில் அவரை அழைக்க.. வக்கீல் மாணிக்கவாசகமோ "நானே உங்களைப் பற்றி யோசித்தேன்.. பேச வேண்டும் என நினைத்தேன்... உங்கள் நம்பர் இல்லை.. நிச்சயமாக உங்கள் வழக்கை எடுத்துக் கொள்கிறேன்!" என்கிறார்... பாபாவை தனக்கு பிடிக்காவிட்டாலும் தன் திறமை வாதத்தால் வந்த அந்த கோவில் சார்ந்த வழக்கை வெல்ல வேண்டும் என நினைத்ததால் அப்படிப் பேசுகிறார் அவர்.. "வழக்கு சார்ந்த அனைத்து விஷயமும் பாபாவுக்கே தெளிவாக தெரியும்... ஆகவே நீங்கள் அவரை பார்க்க வர வேண்டும்!" என்கிறார் அந்த பரம பக்தை... "பாபாவை பார்க்கவா அதெல்லாம் முடியாது!" என்கிறார்.. "தயவு செய்து என் உணர்வுக்கு மதிப்பளித்தாவது நீங்கள் ஒரே ஒருமுறை வர வேண்டும்!"  என மென்மையாய்ப் பேசுகிறார் அந்த பரம பக்தை... "சரி சரி வருகிறேன்.. ஆனால் வந்த உடன் அவரை நமஸ்காரம் கிமஸ்காரம்  எல்லாம் செய்ய மாட்டேன்!" என்கிறார் கறாராக... "வரும் போது என் மனைவியையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்.. அவர் மேல் மனைவிக்கு ஒரே பக்தி... " என வேண்டா வெறுப்பாக சொல்கிறார்!

பாபா சொன்னது இம்மி அளவு கூட பிசகாமல் அவ்வாறே நிகழ்வதில் பேராச்சர்யப்படுகிறார் அந்த பரம பக்தை!


மனைவியோடு வேங்கடமுனி இல்லத்திற்கு மனைவியோடு வரும் வக்கீல் மாணிக்கவாசகம்... பாபா அவரை ஒரு ஆழ்ந்த பார்வை பார்க்கிறார்.. உடனே உள்ளம் பரவசப்படுகிறார்.. கண்ணீர் கட்டிக் கொள்கிறது! அனைவருக்கு முன்னும் அனைவரின் முன்னும் அப்படியே பாபாவை சாஷ்டாங்கமாய்.. தன் நெற்றி தரையில் விழுந்துவிடுகிறார் வக்கீல் மாணிக்கவாசகம்! மாணிக்கவாசகத்திற்கு உருகார் ஒரு வாசித்திற்கும் உருகார்... ஆனால் அந்த மாணிக்கவாசகமோ பிரேமை தோய்ந்த பாபாவின்  மௌன வாசகத்தின் முன் அப்படியே சரணடைந்தது பாபா இந்த பிரபஞ்சத்திற்கே நீதிபதி என்பதையேக் காட்டுகிறது!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 151 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


பகைமையை தனது பேரன்பால் வெல்பவர் பாபா! துரோகத்தை தனது தாய்மையால் துடைத்தெறிபவர் தெய்வ சாயி! பாபாவை வழிபடுவது என்பது பாபா வகுத்த நெறிப்படி வாழ்வதே! பாபாவின் சொல்லே முக்கியம்... அச்சொல்லை வாழ்க்கையாக்குபவரே பாபா பக்தர்! அப்படி வாழ்க்கை ஆக்குகிற போது பாபாவின் கல்யாண குணங்கள் பாபாவின் பக்தர்களுக்கும் வந்து சேர்கிறது! அப்படி சேர்ந்துவிட்டால் வெறுப்பு எனும் நெருப்பால் இதயங்கள் தனக்குத்தானே பொசுங்கிப் போவதே இல்லை...! அந்த மனப்பக்குவமே பாபா காட்டும் ஆன்ம விடுதலை எனும் இலக்கிற்கான பிரகாசப் பாதை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக