தலைப்பு

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

"அன்பையும் பக்தியையும் தவிர வேறெதையும் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை!" --பாபா

இறைவன் பாபாவின் இதயப்பூர்வ மொழிகள் வெறும் மொழிகள் அல்ல.. நம்மை நமக்குள் கொண்டு சென்று கோடான கோடி ஆனந்தத்தை கொட்டிக் தரக் கூடிய பேராத்ம வழிகள் மிக சுவாரஸ்யமாய் இதோ...


"வாருங்கள்... வந்து என்னிடமிருந்து பேரானந்தத்தை அனுபவியுங்கள்! அன்பையும் பக்தியையும் தவிர நான் எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதே இல்லை! நம்பிக்கை , பக்தி, அன்பு இதையே எனை நோக்கி வருபவர்கள் எனக்கு அரிய செல்வமாக பல ஆண்டுகளாகவே வழங்கி வருகிறார்கள்... பிரச்சனைகளும் வலிகளும் மேலும் உங்களை பக்குவமானவர்களாக, அகந்தை அற்றவர்களாக மாற்றுகிறது! அதுவே உங்களை எனை நோக்கி அழைத்து வருகிறது! உங்களை அப்படியே அழைக்கிறேன்.. உலகப் பொருட்களைக் கூட வழங்குகிறேன்... வழங்கி உங்களின் ஆன்மப் பொருளை நீங்களே எடுத்து அனுபவிக்கும்படி உங்களை உள்நோக்கி அழைத்துப் போகிறேன்! 

பெருந் திரளான மக்களோடு நடந்து, குறைகளைக் கேட்டு, ஆறுதலளித்து, வழிகாட்டி , ஆன்ம முன்னேற்றமளித்து, சத்திய தர்மத்தின் சாலையில் நடப்பதற்கு உங்களைப் பழக்க எந்த அவதாரமும் இதற்கு முன் இப்படி செய்ததே இல்லை! நீங்கள் சரணடைந்தால் உங்களுக்கான காவலும் வழிகாட்டுதலும் நிகழவே செய்யும்!


எனது இந்த பெயரை மட்டுமே வடிவத்தை மட்டுமே நீங்கள் ஆராதிக்க வேண்டும் என நான் ஒருபோதும் சொன்னதே இல்லை... மக்களை எல்லாம் எனை நோக்கி திருப்ப நான் முயன்றதே இல்லை! எனது (கடவுளது) வேறு பெயர்களையோ வடிவத்தையோ வழிபடவிடாமல் உங்களை நான் தடுத்ததே இல்லை! நான் அற்புதங்கள் புரிவது இந்த நாம/ரூபத்தோடு மட்டுமே நீங்கள் கவர்ந்திழுக்கப் படவேண்டும் என்பதற்காக அவை நிகழவில்லை! இறைமையின் மகத்துவத்தை உணர்த்தவே என்னால் அற்புதங்கள் நிகழ்த்தப்படுகின்றன... நீங்கள் என்னை தரிசித்த உடன் ஏற்கனவே நீங்கள் வழிபட்டு வந்த கடவுளரின் உருவங்களையோ நாமங்களையோ மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.. உங்களின் அனைத்து வழிபாடுகளும் என்னிடமே வந்து சேர்கிறது என்பதை நீங்களே எப்படியும் உணர்வீர்கள்!


அவதாரத்தை அறிந்து மட்டும் வைத்துக் கொண்டு அதனால் எந்த நன்மையும் நீங்கள் அடையவில்லை எனில் அறிவதால் மட்டும் எந்த பயனும் உங்களுக்கு வரப்போவதில்லை! ஜென்ம ஜென்மமாய் நீங்கள் சேர்த்து வைத்த புண்ணியமே என்னை நீங்கள் கண்டறிந்தது! யுக யுகமாய் தோன்றிய அவதாரங்களை கூட சில தவசிகள் தங்களின் தவவலிமையால் கண்டுணர்ந்தார்களே அன்றி அவதாரத்தோடு அணுக்கமாய் பயணித்தவர் கூட முழுதாய் அவதாரத்தை உணரவில்லை... நீங்கள் ஜென்ம ஜென்மாய் சேகரித்த புண்ணியத்திற்கே நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்...! உங்களின் மத்தியில் நடமாடுகிற இந்த தற்போதைய அவதாரத்தை நீங்கள் அறிந்திருப்பது அவ்வளவு சுலபமாக உங்களுக்கு நிகழவில்லை! உங்களுக்குள்ளேயே.. உங்கள் இதயத்துக்குள்ளே நான் உறைந்திருப்பதை உணருங்கள்! அப்படி உணர முற்பட்டால் என்னுடைய தெய்வீக பேரன்பையும் உங்களால் உணர முடியும்! நீங்கள் நிச்சயம் ஆன்ம விடுதலை பெறுவீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்! நீங்கள் என்னால் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை முதலில் உணருங்கள்! உங்களின் நிலை மாறும்... வாழ்க்கை ஆனந்தம் மிக்கதாக மலரும்! தங்கமயமான சத்திய யுகம் நிச்சயம் உதயமாகும்! அதில் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்!

நீங்கள் பேருந்திலோ ரயிலிலோ விமானத்திலோ பிரசாந்தி நிலையம் வருகிறீர்கள்.. வந்தவுடனேயே "எப்போது வந்தீர்கள் ?என நான் கேட்கிறேன்.. எனக்கு தெரியாதா ? நீங்கள் எப்போது வந்தீர்கள்... எப்படி வந்தீர்கள்... எதற்காக வந்தீர்கள் என... எதற்காக அப்படி கேட்கிறேன்? "நாங்கள் வந்ததுமே சுவாமி எங்களோடு பேசிவிட்டார்!" எனும் பரம சந்தோஷத்தை உங்களுக்கு வழங்கவே நான் அவ்வாறு விசாரிக்கிறேன்! அன்பே எனது உபதேசம்! அன்பே எனது திருச்செய்தி! அன்பே எனது திருச்செயல்! அன்பே எனது நடைமுறை வாழ்வியல்! அன்பை விட மிதிப்பு மிகுந்தது இந்த மனித குலத்தில் எதுவுமே இல்லை!


(ஆதாரம் : Is SaiBaba God Page : 227 / Author: M. R. Kundra)


இப்படி ஒரு இறைவனை பெற பக்தர்கள் நாம் உண்மையில் அப்படி என்ன புண்ணியம் செய்திருக்கிறோம்?! என வியக்கவே தோன்றுகிறது! ஆத்மானுபவத்திற்கு அழைத்துச் செல்வதற்கான வரவேற்புத் தோரணங்களே பாபாவின் அற்புதங்கள்! அவரின் பேரன்பே அக வீட்டுப் படிகள்...! அதில் ஏறிச் செல்கின்ற மனித ஆன்மாக்கள் தங்களின் உள்ளே சென்று பழைய கற்பனைச் சட்டைகளைக் களைந்து... புத்தொளி பெறுவதும்... ஆன்மாக்களின் இறுதி இலக்கான ஆன்ம விடுதலையை அடைவதற்காகவுமே பாபாவின் மும்முறை அவதாரம் என்பதில் ஒவ்வொரு மந்திரங்களின் முடிப்பான "ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!" என்பதாகவே மும்முறை நம் இதயத்தில் இறைவன் பாபாவின் அகதரிசன மொழிகள் அன்றாடம் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன...! ஸ்ரீ ஷிர்டி சாயி ஒரு சாந்தியாகவும்... ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி யாகவும்... ஸ்ரீ பிரேம சாயி யுக சாந்தியாகவும்... மும்முறை சாந்தி மந்திரம் ஒலிக்க பூமி தனது இருளை அகற்றி அருளை வாரிக் கொள்ளும் வசந்த காலம் மிக விரைவாக நெருங்குகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக