தலைப்பு

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

தாயெனும் பரிவோடு திருமணங்கள் புரிந்து வைத்த திருமாங்கல்ய சாயி!

பாபா நிகழ்த்திய திருமண வைபவங்கள் ஏராளம்... மனிதன் நடத்தி வைக்கிற திருமணங்களில் ஆடம்பரம் தலைதூக்கும்.. ஆனால் இறைவன் நிகழ்த்துகிற திருமணத்தில் ஆத்மார்த்தமே சபையேறும் என்பதை உணர்த்தும் அருமைப் பதிவுகள் சுவாரஸ்யமாய் இதோ...


தாயில்லாத ஒரு குடும்பம் அது... பூவோடும் பொட்டோடும் தான் செல்ல வேண்டும் என அந்தப் பெண்மணி வேண்டிக் கொண்டதில் அவ்வாறே அதனை அருளி நேர்காணலில் அதனை அவர்களது குடும்பத்திற்கு வெளிப்படுத்தி...அவர்களை புட்டபர்த்தியிலேயே தங்க வைக்கிறார்.. நேர்காணலில் "நானே இனி உங்களுக்கு அம்மா!" என்கிறார் பாபா. மனித வார்த்தைகள் மாறும்... சமாளிக்கும்.. மறந்து போகும் ஆனால் இறைவனின் வார்த்தைகள் ஒரு நாளும் பொய்த்தது இல்லை... அதை இறைவன் மறந்ததும் இல்லை! மறைந்து போன அந்த தாயின் பிள்ளைகளை ஒயிட் ஃபீல்ட் கல்லூரியில் சேர்த்து பாபா நன்றாக கவனித்துக் கொள்கிறார்! 


ஒருமுறை தரிசனத்தில் வேறு ஒருவரிடம் 

"உன் பையனுக்கு வயதாகி வருகிறதே‌.. காலத்தில் திருமணம் புரிய வேண்டாமா?" என சுவாமி கேட்க.. அவனின் மறுப்பை அந்த தந்தையார் தெரிவிக்க... பாபா அவனை அழைத்து டோஸ் கொடுத்து... "கல்யாணம் வேணாம்னா... பிரம்மச்சர்யம் அனுசரிக்க போகிறாயா? பெரும்பாலான ஜனங்களுக்கு கல்யாணமே கர்மாவை தீர்க்கிற உபாயம்... சுவாமி சொல்றேன் .. சுவாமியே பெண் பார்த்து வைக்கிறேன்.. ஒழுங்காக திருமணம் செய்!" என்கிறார்! அசையாமலிருந்தவன் தண்ணீர் தெளித்த ஆடாய்  பாபா சொல்லுக்கு தலையாட்டுகிறான்!


அனந்தப்பூரில் படித்துக் கொண்டிருக்கும் தாயில்லாத அந்தப் பெண்ணை.. எப்போது நானே உன் தாய் என பாபா சொன்னாரோ.. அந்த சத்திய வார்த்தைக்கு மிக உண்மையாய் அந்தப் பெண்ணை பற்றி சொல்ல.. அந்தப் பெண்ணின் தகப்பனாரை தனக்கு தெரியும் என அந்தப் பையனின் தந்தை மகிழ... ஜாதக ஏற்பாட்டை இரு தகப்பனார்களையும் பாபாவே பார்க்க அனுமதிக்க... பாபாவின் பாதங்களில் நவகிரகங்கள் அடிமை என்ற போதும் அவரவர் வழக்கத்தை பாபா அனுமதிக்க... பெண்ணின் கல்லூரி படிப்புக்கு இன்னும் ஓராண்டு இருக்க... திருமணத்திற்கு பிறகு பெண்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதிலேயே பாபா எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருப்பவர் (ஆதாரம் : 1979 பிருந்தாவன் சம்மர் கோர்ஸ் தெய்வத்திரு உரையாடல்)

வீட்டில் வேலை செய்யும் அம்மாக்களே குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தால் வேலைக்குப் போகும் தன் அம்மாக்களை குழந்தைகள் ஆன்ட்டி என அழைக்கத் தான் செய்யும்.. உணர்தலும் ஒட்டுதலும் வருவது அவ்வளவு எளிதல்ல... என்பதையே பாபா மிகவும் வலியுறுத்துகிறார்! அதிகப் பணம் அல்லது பரஸ்பரம் ஏதாவது ஒன்றுதான் மனிதனுக்கு வாய்க்கும்...


பாபாவின் தலைமையிலேயே வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனத்திலேயே திருமணம் நிகழ்ந்தது! பாபா தனது தெய்வத்திரு கரத்தை அசைத்து திருமாங்கல்யம் வரவழைத்து அளிக்கிறார்... சிருஷ்டி மஞ்சள் அட்சதை தூவுகிறார்... யாரார் தனது எந்த குல வழக்கப்படி தாலி அணிவார்களோ அதே டிஸைன் தாலியையே அவர்களுக்கு சிருஷ்டித்து பாபா அளிப்பார்.. பாபாவுக்கு தெரியாதவை ஒன்றுமே இல்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது! கூறை வேட்டி, புடவை என எல்லாம் அளித்து தலைவாழை இலையோடு தடபுடல் விருந்து வைத்து தானும் அவர்களோடு சேர்ந்து உண்டார்...

"நான் தான் அம்மா என்றார் அன்றைக்கு.. எந்த அம்மா இப்படி. எல்லாம் செய்வாள்? என பெண்ணை பெற்ற தகப்பனார் விம்மி அழுதுவிடுகிறார்!

திருமருகல் டாக்டர் மயூரநாதனுக்கு ஒருமுறை நேர்காணல் அளித்து "பெண் திருமணம் பற்றி கவலைப்படாதே ! நீ திரும்பி ஊருக்குப் போகிற போது... வீட்டிலேயே பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்திருப்பார்கள்!" என்கிறார்... அப்படியே ஆச்சர்யமாய் அவர்களாகவே வர... மளமளவென திருமணம் அரங்கேறுகிறது... 


பத்து வருடமாக தனது மகளுக்கு தேவகி ரங்கசாமி வரன் பார்த்தும் எதுவும் அமையவில்லை... கர்மக்கணக்கு கொஞ்ச காலம் அலைக்கழிக்கிறது... அந்த அலைச்சலும் கர்ம கரைதலே... அந்த சமயத்தில் பாபாவிடம் நேர்காணல் பெறுகிறார்...  "இப்போது ஒரு வரன் அமையும்.. அதை பேசி நடத்திவிடு!" என்கிறார்... தேவகி காதுகளுக்கு பெங்களூர் வரன் என சுவாமி சொன்னதாக விழுகிறது! அதை பாபாவிடமே இன்னொருமுறை கேட்கிறார்.. "மக்கு..‌பெங்களூரில் நீ எங்கே வரன் பார்த்தாய்... அது பேளூர் வரன்... 2 வருஷம் முன்பு பார்த்தாயே... உனக்கு மறந்து போயிருக்கும்.. எனக்கு நினைவிருக்கிறது! அதுவே மீண்டும் வந்து கைகூடும்" என்கிறார்... பாபா சொல்படியே 2 வருடம் முன்பு பார்த்த வரனே தெய்வாதீனமாக ஆம் பாபாதீனமாக கைகூடி மணம் நிகழ்கிறது! 

ஒரு வயதானவர்... அவர் துவைத மார்க்கம் சேர்ந்த மாத்வர்... பரம ஏழ்மை... பாபாவை நேரிலேயே தரிசிக்காத போதிலும் பரம பக்தியோடு இருக்கிறார்... உன் மகள் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன் என்கிறார் அவரது கனவில் பாபா... அப்படியே அமைந்தது... அந்த மாத்வர் 10 பைசா செலவில்லாமல் பாபாவின் சொல்படி தனது மகளுக்கு திருமணம் புரிகிறார்! ஒரு அன்பர் புடவை வேட்டி அன்பளிப்பு அளிக்கிறார்... இன்னொருவர் தன் வீட்டையே திருமண மண்டபமாய் நடத்த முன்வருகிறார்... மளிகை இத்யாதிகள் கொடையாக நிரம்பின.. சமையல் வல்லுநர் முதல் நாதஸ்வர கலைஞர் வரை இலவசமாகவே தனது சேவைப் பங்கை ஆற்றிவிட்டுச் செல்கின்றனர்... பாபாவை நினைந்து அந்த ஏழ்மை மாத்வர் கண்கலங்கியதில் திருமணத்திற்கு அனைவரையும் வரவேற்ற அந்த சந்தனக் கின்னம் சந்தனத்தோடு நிரம்பி வழிந்தது!


(ஆதாரம் : லீலா நாடக சாயி/ பக்கம் : 399 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


தற்காலத்தில் திருமண நிகழ்வு ஒரு வணிகமாகிவிட்டது... தனது அந்தஸ்தை காட்டுவதற்கான ஊடகமாக செயல்படுகிறது! ஆடம்பரத் திருமண நிகழ்வில் பத்து ஜோடிகளுக்காவது இலவச திருமணம் நடத்தி வைக்கும் அளவிற்கு ஒரே திருமண நிகழ்விலேயே பணமும் உணவும் தேவையின்றி விரயமாகிறது! இதில் தெய்வ அனுகிரகம் நிரம்ப சாத்தியமே இல்லை... 

பாபா சிக்கனத்தையே விரும்புகிறார்... கௌரவம் ஒரு போலியான முள்வேலி! எளிமை நிறைந்த திருமணத்திலேயே பாபா நிறைந்திருந்து வாழையடி வாழையாய் ஜோடிகளை வாழ்வாங்கு வாழ வைக்கிறார்! "சிக்கன வாழ்வினை தந்து நீ காக்க" என்பதாகவே பாபா நிகழ்த்திய திருமணங்கள் போல் இனி நிகழப்போகும் எளிமைத் திருமணங்கள் சுவாமி அருளை பெறட்டும்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக